தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –21)
‘எப்படியாவது தமிழகத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். ஆனால் வெளியே வரமுடியாதபடி சி.பி.ஐ. எல்லா இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாகக் காத்து நிற்கிறது.
“தப்பித்தே தீரவேண்டும், ஒரு வழி சொல்லுங்கள்.”’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் இது.
இதற்கு வந்த பதில்: திருச்சி சாந்தன் உதவுவார். காத்திருக்கவும். இந்த திருச்சி சாந்தன் என்பவர், நாம் முன்னர் பார்த்த சின்ன சாந்தன் (என்கிற சுதேந்திர ராஜா) அல்ல.
இவர் வேறு.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்த இவர், வெகு காலமாகத் தமிழகத்தில் புலிகள் இயக்கத்துக்காக உழைத்து வந்தவர்.
தி.மு.க தலைமையிலான தமிழக அரசு கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமடைந்தபோது (பல புலிகள், புலி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது) தலைமறைவானவர்.
ஆயினும் அன்றைய தேதியில் தமிழகத்தில் இருந்தபடி புலித் தலைவர் பிரபாகரனுடன் நேரடி வயர்லெஸ் தொடர்பு வைத்துக்கொண்டிருந்த ஒரே நபர் அவர்தான்.
ஆனால், ஒரு வினோதம் சிவராசனுக்குத் திருச்சி சாந்தனை அதற்கு முன்னால் தெரியாது.
ஒருமுறை கூடப் பார்த்ததோ, பேசியதோ இல்லை. கேள்விப்பட்டதுகூட இல்லை.
இருவரும் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்றாலும், ஒருவரையொருவர் அறிந்தவர்களில்லை.
ராஜிவ் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு சிவராசன் தமிழகத்திலிருந்து தப்பித்து இலங்கை செல்ல திருச்சி சாந்தன் மூலம் பொட்டு அம்மான் நடவடிக்கை எடுக்கிறார் என்கிற தகவலை அந்த சங்கேதச் செய்திக் குறிப்பிலிருந்து உடைத்துத் தெரிந்துகொண்டோம்.
எனவே எங்களுடைய உடனடி இலக்கு, திருச்சி சாந்தனைப் பிடிப்பதுதான்.
என்ன பிரச்னை என்றால், திருச்சி சாந்தனின் இருப்பிடம் சிவராசனுக்குத் தெரியாது. சிவராசனின் இருப்பிடம் யாருக்குமே தெரியாது.
இவர்கள் எப்போது, எங்கே சந்திப்பார்கள்? எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் இருந்த ஒருவீட்டில் அந்தச் சந்திப்பு நடந்ததைப் பின்னால் தெரிந்துகொண்டோம்.
முன்னதாக, சிவராசன் கொடுங்கையூரில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் விஜயன் என்பவரைக் கைதுசெய்து விசாரித்ததில் சிவராசனின் டைரி உள்ளிட்ட சில முக்கிய ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருந்தன.
விஜயன் உதவியுடன் அவரது வீட்டுச் சமையல் அறையிலேயே ஒரு குழிவெட்டி வயர்லெஸ் செட்டைப் புதைத்து, அதன்மூலமாகத்தான் அவர் இலங்கையைத் தொடர்புகொண்டிருக்கிறார் என்கிற விவரமும் தெரிந்திருந்தது.
அவை அனைத்தையும் கைப்பற்றி இருந்தோம். மிச்சமிருப்பது சிவராசன்தான்!
அவரைப் பிடிக்க நாங்கள் மாநிலமெங்கும் இரவு பகல் பாராமல் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் எல்டாம்ஸ் ரோடில் வசித்து வந்த ஓர் இலங்கைத் தமிழர் வீட்டில் சிவராசன் சார்பில் சின்ன சாந்தனும் திருச்சி சாந்தன் சார்பில் டிக்சன் என்ற இன்னொரு விடுதலைப் புலியும் சந்தித்திருக்கிறார்கள்!
எப்படித் தப்பிப்பது என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு எங்களுக்கு இத்தகவல் கிடைக்க, மேற்கொண்டு துருவியதில் கோடியக்கரை கடத்தல்காரர் சண்முகத்தைப் பிடித்தால் இவர்கள் தப்பும்போது பிடித்துவிட முடியும் என்று தோன்றியது.
மாநில போலீஸ் உதவியுடன் சண்முகத்தைக் கைது செய்ய நாங்கள் முயற்சி செய்தபோது, அவர் விஷயம் அறிந்து தமிழக காவல் துறையின் மூலம் சி.பி.ஐயிடம் சரணடைந்தார்.
முதலில் சற்றுத் தயங்கினாலும் பிறகு அவர் நிறையவே பேசினார்.
புலிகளுடனான தொடர்புகள். இலங்கையிலிருந்து வருகிற பெரும்பாலான விடுதலைப் புலிகளுக்கு அவரது வீடுதான் முதல் வரவேற்பரையாக இருக்கிற விஷயம்.
காட்டுப் பகுதியில் புலிகளுக்காகக் கடத்தப்படும் பெட்ரோல், டீசல், போன்ற பொருள்களைப் பதுக்கி வைத்து படகு வரும் வேளை பத்திரமாக அனுப்பிவைக்கிற அவரது உதவிகள்.
புலிகளுக்காகத் தனது நிலத்தில் அவர் வசதி மிக்க காட்டேஜெல்லாம் கட்டி வைத்திருந்தார்.
தவிரவும் தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் புலிகளுடனும் அவர் வயர்லெஸ் தொடர்பு வைத்திருந்தார்.
சண்முகத்தை அவரது வேதாரண்யம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பதுக்கி வைத்திருக்கும் பொருள்களை அடையாளம் காட்டச் சொன்னோம்.
நிறையவே காட்டினார்.
குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் கேன்கள், புலிகளுக்குத் தேவையான பேட்டரிகள், பிற பொருள்கள். அனைத்திலும் முக்கியம், முருகன் இடையே இலங்கை திரும்புவதாகப் புறப்பட்டு, போகாமல் திரும்பவும் சென்னை திரும்பிய சமயம் அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருந்த சில பொருள்கள்.
ஏற்கெனவே முருகன் தனது வாக்குமூலத்தில் இது பற்றிச் சொல்லியிருந்ததால் சண்முகத்திடம் அதனைக் குறிப்பிட்டு, முருகன் கொடுத்துவிட்டுப் போன பைகளைக் கேட்டோம்.
அதையும் புதைத்துவைத்திருந்தார்.
பைகள் மட்டுமல்லாமல் ஒரு சூட்கேஸும் கூட! அந்த ஜூன் 18ம் தேதி இரவு முழுவதும் வேதாரண்யம் காட்டுப்பகுதியில் சண்முகம் சுட்டிக்காட்டிய இடங்களில் எல்லாம் தோண்டத் தோண்ட என்னென்னவோ பொருள்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.
வெடி பொருள்கள், பேட்டரிகள், பெட்ரோல், டீசல் கேன்கள், வயர்லெஸ் செட்டுகள் என்று பூமிக்குள்ளிருந்து வந்துகொண்டே இருந்தன.
இரவு சண்முகத்தை அவர் வீட்டிலேயே சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றோம்.
ஏற்கெனவே நான் குறிப்பிட்டது மாதிரி, அது ஒரு வழக்கம். சாப்பிடவைத்து, அன்பாகப் பேசி, கைது நடவடிக்கையை அதிர்ச்சி தராமல் செய்வதன்மூலம் தகவல் பெறுவதில் தடங்கல்கள் இராது.
வேதாரணம் பயணியர் விடுதியில் சி.பி.ஐ. முகாமிட்டிருந்த இடத்துக்கு சண்முகத்தின் உறவினர் ஒருவர் வந்தார்.
சீதாராமன் என்ற பெயருடைய அந்த மனிதரும் கடத்தல் தொழில் செய்பவர்தாம்.
கொஞ்சநேரம் சண்முகமும் அவரும் தனியே பேசிக்கொண்டிருக்க, சீதாராமன் சண்முகத்தைக் கண்டபடி திட்டினார்.
செய்த காரியம், செய்துகொண்டிருக்கும் காரியம் குறித்த அவரது கண்டனமாக இருக்கக்கூடும்.
அவர்கள் தனியே பேசியதால் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. முதல் முதலில் சண்முகம் அச்சத்தின் பிடியில் அகப்பட்டது அப்போதுதான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தனது செயல்கள் போய்க்கொண்டிருப்பது குறித்த அச்சம். மாட்டிக்கொண்டாகிவிட்டது.
இனி என்ன செய்து மீள்வது? அப்போதுதான் அவர் தப்பிக்க முயற்சி செய்தார். கைகழுவச் செல்வது போல் விருந்தினர் விடுதியின் பின்புறம் சென்றவர் அப்படியே திரும்பிப் பாராமல் ஓடத் தொடங்கினார்.
இத்தனைக்கும் அவருடன் ஒரு கான்ஸ்டபிள் இருந்தார்.
ஓடிய நபரைத் துரத்திச் சென்று பிடிக்காமல், பதற்றத்தில் அவர் உள்ளே ஓடிவந்து எங்களிடம் தகவல் சொல்ல, இடைப்பட்ட நேரத்தில் சண்முகம் அந்த அடர்ந்த புதருக்குள் காணாமல் போயிருந்தார்!
அதிகாரிகள் துரத்திக்கொண்டு போக, பழக்கமில்லாத பகுதியில் முன்னேறுவது மிகவும் சிரமமாக இருந்தது.
ஆனால், சண்முகத்துக்கு அது பழகிய இடம். அடர்ந்த இருளில் புதைத்து வைத்திருந்த பொருள்களையே அவர் அநாயாசமாக ஒரு விளக்கு வெளிச்சம்கூட இல்லாமல் அடையாளம் காட்டக்கூடியவராயிற்றே.
தப்பியோடுகிறபோது தனது வெள்ளை வேட்டி, சட்டையை அவிழ்த்து எறிந்துவிட்டு அவர் ஓடியிருந்தார்.
அது மட்டும் காவலர்களிடம் கிடைத்தது.
மறுநாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சண்முகத்தின் உடலைத்தான் கைப்பற்ற முடிந்தது.
ஓடும்போது நண்பர் ஒருவர் (மின்சார வாரியத்தில் வேலை பார்ப்பவர்) வீட்டிலிருந்து லைன்மேன்கள் பயன்படுத்தும் கனமான கயிறைக் கேட்டு அல்லது எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்.
தவிர, அவரது மகனது லுங்கி ஒன்றையும் வாங்கிக் கட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் என்பது பிறகு விசாரணையில் தெரியவந்தது.
வழக்கு, விசாரணை, குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீது அவதூறுகள் என்று அந்த வாரம் முழுதும் அமளிதுமளிப்பட்டது.
அது தற்கொலையே அல்ல, சண்முகத்தைக் கொன்றுவிட்டார்கள் என்றுகூடப் பேசினார்கள், பத்திரிகைகளில் எழுதினார்கள்!
ஆனால் நடந்தது இதுதான்!!….
தொடரும்..
Average Rating