பிராந்தியத்தையே நிலைகுலைய வைத்த, சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –20)

Read Time:10 Minute, 27 Second

timthumbஹரிபாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார்.
இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மேலும் முன்னால் வந்து குனிந்து படமெடுக்கப் பார்க்க, அந்தக் கணமே குண்டு வெடித்தது.

பிராந்தியத்தையே நிலைகுலையவைத்த சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ். ராஜிவ் காந்தி உள்பட பதினெட்டு பேரின் உயிரை வாங்கிய குண்டு. என்னவென்று புரியாமல் கூட்டம் பதறி ஓடத் தொடங்கியது.

மேடையில் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, மற்றும் அருகிருந்த ஜி.கே. மூப்பனார் போன்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவரத் தொடங்கினார்கள்.

என்ன நடக்கிறது என்பதே தெரியாத புகை மண்டலம். கால் வைக்கும் இடங்களில் எல்லாம் சதைத் துண்டுகள், ரத்தம், அதிபயங்கர ஓலம், மரண ஓலம். நளினியும் சுபாவும் அப்போது ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இந்திரா காந்தி சிலை வரை ஓடி, மூச்சு வாங்கி அவர்கள் நிற்க, சொன்னபடி பத்து நிமிடங்களில் சிவராசன் தலைதெரிக்க ஓடிவருவது தெரிந்தது.

அருகே வந்தவர், ‘ராஜிவும் தணுவும் இறந்துவிட்டார்கள். துரதிருஷ்டவசமாக ஹரி பாபுவும் இறந்துவிட்டார்’ என்று சொன்னார்.

அவர் தன்னிடம் ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருந்த பிஸ்டலை நளினியிடம் கொடுத்து, சுபாவிடம் பிறகு தந்துவிடும்படி சொன்னார்.

மூவரும் வேகமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து பேருந்து நிலையத்துக்கு வந்தார்கள்.

சென்னை செல்லும் பஸ் ஒன்று நின்றிருந்தது. ஆனால் அது கிளம்பாது என்று யாரோ சொன்னார்கள்.

என்ன செய்வதென்று புரியாமல் மேலும் வேகவேகமாக நடந்தார்கள். வழியில் ஒரு வீட்டருகே நின்று, அங்கே வாசலில் இருந்த பெண்மணியிடம் கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடித்தார்கள்.

மெயின் ரோடுக்கு வந்து ஓடத் தொடங்கினார்கள். சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரம். ஏதாவது ஒரு வண்டி கிடைத்தால் நல்லது.

யோசித்தபடி அவர்கள் ஓட, ஓரிடத்தில் இருளில் காத்திருந்த இன்னொரு மனிதர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

நால்வருமாக ஒரு ஆட்டோவை நிறுத்தினார்கள். ‘சென்னைக்குப் போகவேண்டும். பஸ் கிடைக்கவில்லை.’ ‘இது திருவள்ளூர் வண்டி சார்.

மெட்ராஸ் வரைக்கும் போறது கஷ்டம். எவ்ளோ தூரம் முடியுதோ, போகலாம்’ என்று சொல்லி ஏற்றிக்கொண்டான்.

சிவராசன், சுபா, நளினி மூவரும் பின்னால் ஏறிக்கொள்ள, அந்தப் புதிய மனிதர் டிரைவருக்கு அருகே ஒட்டிக்கொண்டார்.

ஆட்டோ புறப்பட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்கள்.

பிரச்னையேதும் இல்லாமல் ஆட்டோ சென்னை நகர எல்லையை அடைந்தது. கத்திப்பாரா சந்திப்பு வந்தபோது, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, அந்தப் புதிய மனிதர் மட்டும் இறங்கிக்கொண்டார்.

மற்ற மூவருடன் ஆட்டோ மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

தேனாம்பேட்டை சிக்னல் அருகே அவர்கள் இறங்கிக்கொண்டு, டிரைவருக்குப் பணம் கொடுத்தார்கள்.

இன்னொரு ஆட்டோ பிடித்து பாரீஸ் கார்னர் சென்று, அங்கே வேறொரு ஆட்டோ பிடித்து கொடுங்கையூர் போய்ச் சேர்ந்தார்கள்.

நளினி அதுநாள் வரை சந்தித்தே இராத அந்தப் புதிய மனிதர் ஸ்ரீபெரும்புதூர் சம்பவ இடத்தில் இருந்த ஆறாவது மனிதர், விடுதலைப் புலியின் பெயர், சின்ன சாந்தன்!

வழக்கெல்லாம் முடிந்து நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிகத் தற்செயலாக இதனைக் கண்டுபிடித்தேன்.

ஹரி பாபு எடுத்திருந்த பத்து புகைப்படங்களுள் ஒன்றில் ராஜிவுக்கு நெருக்கமாக நின்று மாலை அணிவிக்கும் ஒரு அதிமுக கரை வேட்டித்துண்டு மனிதரின் படமும் இருந்தது.

அவர் யாரென்று எங்களால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடிந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பு அவசியமற்றதாகிவிட்டது.

சின்ன சாந்தனை நாங்கள் ஏற்கெனவே கைது செய்து, விசாரித்து, அவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

ஒற்றைக்கண் சிவராசன். ஹரி பாபு எடுத்த போட்டோக்களில் இருந்து அவரை நாங்கள் அடையாளம் கண்டதும் சிவராசன் தான் முந்தைய பத்மநாபா கொலை வழக்கிலும் தேடப்பட்டுக்கொண்டிருந்த குற்றவாளி என்பது தெரிந்ததும் சி.பி.ஐ. ஒரு காரியம் செய்தது.

எங்களிடம் இருந்த சுபா மற்றும் சிவராசனின் புகைப்படத்தை முடிந்தவரை பெரிதாக அச்சிட்டு, இந்தியாவெங்கும் போஸ்டர்களாக ஒட்டினோம்.

தேடப்படும் குற்றவாளி. கண்டுபிடித்துக் கொடுப்போருக்குப் பரிசு. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று அனைத்து ஊடக சாத்தியங்களையும் பயன்படுத்தி, சிவராசனைப் பற்றிய தகவல்களுக்காக சி.பி.ஐ. காத்திருப்பதை அறிவித்துக்கொண்டே இருந்தோம்.

யாருக்கு என்ன தகவல் கிடைத்தாலும் சொல்லலாம்.

தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம்கூட இல்லை. மல்லிகையில் தகவல் பெறுவதற்கென்றே ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது.

சில பிரத்தியேக தொலைபேசி எண்கள் அதற்கென்றே தரப்பட்டன. யாரும் போன் செய்யலாம். தமக்குத் தெரிந்த தகவலைச் சொல்லலாம்.

சில உருப்படியான தகவல்கள் வரத்தான் செய்தன என்றாலும் பலபேர் அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என்று யார் யாரையோ பார்த்து சிவராசன் என்று கற்பனை செய்துகொண்டு உடனே போன் செய்துவிடுவார்கள்.

நாங்களும் சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட இடங்களுக்கு ஓட்டமாய் ஓடுவோம். ஏமாற்றமுடன் திரும்ப நேர்ந்தாலும் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பும் அவர்கள் காட்டிய ஆர்வமும் முக்கியமானவை.

இதனிடையே தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் வயர்லெஸ் சங்கேதத் தகவல்களை இடைமறித்துக் கேட்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்து கொள்ளச் சிரமமான தகவல்களாகத்தான் அவை பெரும்பாலும் இருந்தன என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, பரிச்சயம் ஏற்பட்டு (ஐ.பி. மூலம்) ஓரளவு விடுதலைப் புலிகளின் சங்கேதங்களை உடைக்கக் கற்றுக்கொண்டு விட்டோம்.

தமிழகமெங்கும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தோம்.

கிட்டத்தட்ட மாநிலம் முழுதும் சி.பி.ஐ குழுவினரும் மாநில காவல் துறையினரும் சிவராசனுக்காகப் பதுங்கிக் காத்திருந்தனர்.

படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு திருப்பதி பயணம் வரை அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள்.

அதன்பின் முருகனும் நளினியும் தனியே போக, சிவராசனும் சுபாவும் தனியே போய்விட்டார்கள்.

எப்படியாவது தமிழகத்திலிருந்து தப்பித்து இலங்கை செல்வதே அவர்களது இலக்கு என்பது எங்களுக்குத் தெரியும்.

எனவே தமிழக, கடலோரக் காவலை வெகுவாக பலப்படுத்தினோம்.

புலிகள் பொதுவாகப் படகு ஏறக்கூடிய இடங்கள் என்று சொல்லப்பட்ட அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் ஆள்கள் போடப்பட்டிருந்தார்கள்.

இதனால் சிவராசனும் சுபாவும் வெளியே வருவதே சிரமம் என்னும் நிலை உண்டாயிற்று.

ஆனால் தொடர்ந்து அவர்கள் வயர்லெஸ் மூலம் பொட்டு அம்மானுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். அத்தகைய ஒரு குறிப்பிட்ட வயர்லெஸ் தொடர்பை ஐ.பி. இடைமறித்துக் கேட்டதில் ஒரு தகவல் கிடைத்தது.

தொடரும்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அடிக்கப் போன ஆவேச குஷ்பு…!! வீடியோ
Next post மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் இன்று அதிரடி சோதனை…!!