நெல்லிக்குப்பத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை கொள்ளை…!!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி சற்குரு நகரை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 62). மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மல்லிகா(53), இவரது மகள்கள் சுதா(29), பிரித்தி(25) நேற்று இரவு 10 மணியளவில் ராஜாராம் தனது வீட்டில் மனைவி மற்றும் மகள்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர் வீட்டின் கதவை தட்டினார். ராஜாராம் எழுந்து சென்று கதவை திறந்தார். அந்த வாலிபர் ஒரு குறிப்பிட்ட இடத்தின் முகவரியை கேட்டார். அந்த நேரத்தில் 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை ராஜாராம் தடுத்தார்.
உடனே அவர்கள் கையில் இருந்த தடியால் ராஜாராமை தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து மல்லிகா வெளியே வந்தார். அவரை மர்ம வாலிபர்கள் மிரட்டினர். அவரது வாயில் துணியை திணித்தனர். வீட்டின் முன்கதவை பூட்டி உள்தாழ்பாள் போட்டனர்.
பின்னர் மர்ம மனிதர்கள் ராஜாராமை மிரட்டி அவர் கையில் இருந்த மோதிரத்தையும், மல்லிகாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதைப்பார்த்ததும் சுதாவும், பிரித்தியும் வீட்டின் உள்அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அங்கிருந்து செல்போன் மூலம் நெல்லிக்குப்பம் போலீசாருக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். கதவை தட்டி மர்ம மனிதர்களை கதவை திறக்கும்படி கூறினர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்தனர். உடனே நீங்கள் வெளியே வர மறுத்தால் துப்பாக்கி சூடு நடத்துவோம் என்று போலீசார் எச்சரித்தனர். அப்போதும் அவர்கள் வெளியே வரவில்லை.
இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் நின்ற மர்மமனிதர்கள் 4 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மேலும் 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். இதையொட்டி புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த விமல்(19), சாலமன்(17), விக்னேஷ்(17), கணேஷ்(28), பாலாஜி(20), முத்தியால்பேட்டையை சேர்ந்த அஜித்(17), புதுவை முத்தமிழ் நகரை சேர்ந்த கோபிநாத்(29) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கொள்ளை தொடர்பாக திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த சிவக்குமார், அரியாங்குப்பத்தை சேர்ந்த மற்றும் ஒரு வாலிபர் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கைதான கோபிநாத் ஆட்டோ டிரைவர் ஆவார். கோபிநாத்தும், சிவக்குமாரும் கொள்ளையர்களுக்கு எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து தகவல் கொடுத்தது தெரியவந்துள்ளது.
கைதான 7 பேருக்கும் வேறு கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating