முதல்முறையாக சுதுமலையில் பிரபாகரன், மக்கள் முன் தோன்றினார்!: பல்லாயிரக் கணக்கான மக்கள், சுதுமலையில் கூடினர்!!.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -95) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது.
• ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
•சுதுமலையில் பிரபா
பிரபாகரன் சுதுமலையிலிருந்து தான் ஹெலிகொப்டர் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே சுதுமலையில் ஆகஸ்ட் 2ம் திகதி பிரபாகரனை கொண்டுவந்து இறக்கியது இந்திய ஹெலிகொப்டர்.
சுதுமலையில் பிரபாகரன் இறங்கியபோது யாழ் குடாநாடெங்கும் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சந்திகள் தோறும் ஆயுதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புபுக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஊடங்கு உத்தரவை அமுல்படுத்தும் பொறுப்பு சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டிந்தது.
சுதுமலையில் இறங்கிய பிரபாகனை இந்தியப் படையினர் தமது கவசவாகனமொன்றில் ஏற்றிச் சென்றனர். பிரபாகரனோடு அப்போது தமிழ்நாட்டிலிருந்து கிட்டுவும் வந்திருந்தார்.
புலிகள் இயக்க அலுவலகத்தில் பிரபாகரனை மாத்தையா வரவேற்றார்.
ஆயுதங்களை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு புலிகள் இயக்கத்திற்குள் அதிருப்திகள் ஏற்பட்டிருந்தன.
திருமலை மாவட்டத் தளபதி புலேந்திரன் ஆயுத ஒப்படைப்புத் தொடர்பாக மனச் சோர்வடைந்தவராகக் காணப்பட்டார்.
திருமலையில் உள்ள நெருக்கடிகள் தீரவில்லை. இந்நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது சரியாக இருக்காது என்றார் புலேந்திரன்.
ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் பிரபாகரனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆயினும் இந்தியாவோடு பேச்சில் உடன்பாடு தெரிவித்தாயிற்றே.
எனவே முதல் கட்டமாக ஒரு தொகுதி ஆயுதங்களை ஒப்படைக்கலாம். அதன்பின்னர் சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தார் பிரபாகரன்.
ஆயுத ஒப்படைப்பு
ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
ஏனைய இயக்கங்களை தடைசெய்த போது கைப்பற்றிய ஆயுதங்களில் பாவனைக்கு உதவாதவை பல இருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
இயக்கத்திடம் கைப்பற்றிய மோட்டார் ஷெல்கள் பார்வைக்குப் பொலிவாக பெருமளவில் இருந்தன. அவை உத்தரவாதம் இல்லாதவை என்பதால் பாவிக்கப்படாமல் கிடந்தன. புலிகள் இயக்கத்தினரிடமும் பாவனைக்கு உதவாக ஆயுதங்கள் இருந்தன.
அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி அவற்றோடு சில நல்ல ஆயுதங்களையும் கலந்து ஒப்படைக்கத் திட்டமிட்டனர் புலிகள்.
ஆகஸ்ட் 6ம் திகதி பலாலி இராணுவத் தளத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கச் சென்றார் யோகி.
புலிகள் இயக்க முக்கிய தளபதிகள் எவரும் செல்லவில்லை. யோகியைத்தான் அனுப்பி வைத்தனர்.
ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக தனது பிஸ்டலை ஜெனரல் சேபால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார் யோகி.
அதனைத் தொடர்ந்து கொண்டு சென்ற ஏனைய ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தொலைக்காட்சிக்காரர்களும், புகைப்படப்பிடிப்பாளர்களும் ஆயுத ஒப்படைப்பைப் படமாக்கினார்கள்.
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் ஆயுத ஒப்படைப்புப் பற்றிய செய்திகளை பத்திரமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
ஆயுதங்களை மேலோட்டமாகப் பார்வையிட்ட செய்தியாளர்களுக்கு ஆச்சரியம். முதல் தொகுதியாக ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களே இத்தனையா?
‘கிட்டத்தட்ட பெரும்பாலான ஆயுதங்களையும் ஒப்படைத்து விட்டார்கள் போலத் தான் இருக்கிறது’ என்றெல்லாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆயுதங்களைப் பொறுப்பெடுத்தவர்களுக்கும், ஒப்படைத்த புலிகள் இயக்கத்தினருக்கும் தான் அந்த ஆயுதங்களின் தரம் பற்றிய இரகசியம் தெரியும்.
இலங்கை அரசாங்கத்துக்கு புலிகள் முதற்கட்டமாக ஒப்படைத்த ஆயுதங்களின் தரம் தெரிந்தாலும் அதுபற்றி வெளியே சொல்ல முடியாத தர்மசங்கட நிலமை.
வெளியே சொன்னால் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு மெல்ல அவல் கொடுத்த மாதிரியாகி விடுமே.
படமெடுக்க பொலிவாகத் தெரிகிறதே இப்போதைக்கு அது போதும் என்ற நிலையில் தான் இருந்தது அரசாங்கம்.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்ததைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைக்க தமது பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
ஆயுத ஒப்படைப்போடு வடக்கு-கிழக்கில் காலூன்றிவிட வேண்டும் என்பதுதான் ஏனைய இயக்கங்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தை எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்பதில் புலிகள் இயக்கத்தினரும் கவனமாக இருந்தனர்.
இந்தியப் படையினரின் வருகையோடு படையினர்‘ஒப்பரேசன் லிபரேச’னில் நிலை கொண்ட பகுதிகளில் இருந்து வெளியேறி முன்னைய முகாம்களுக்குத் திரும்பினர்.
சுத்தப்படுத்தல்
யாழ் கோட்டை இராணுவ முகாம் முன்பாக இருந்த மிதிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியப்படையினர் ஈடுபட்டனர்.
அந்தப் பணியில் இந்தியப் படைவீரர்கள் சிலர் மிதிவெடியில் சிக்கிப் பலியானார்கள்.
அந்தச் செய்தி இந்தியப் படை மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் காயமடைந்த இந்தியப் படை வீரர்கள் யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பிக்கப்பட்டனர்.
விபரம் அறிந்து பொதுமக்கள் பலர் மருத்துவமனைக்கு முன்னர் திரண்டு விட்டனர்.
காயமடைந்த படைவீரர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காகவே மக்கள் தாமாக முன்வந்து சென்றிருந்தனர்.
இத்தனைக்கும் இரத்தம் தேவையென்று வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை. மக்களின் கரிசனை இந்தியப் படையினரை நெகிழ வைத்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு இலங்கையில் தென் பகுதியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
ஒப்பந்தம் தமிழ் மக்களுக்குச் சாதகமானது என்ற எண்ணம்தான் எதிர்ப்புக்கான முக்கிய காரணமாக இருந்தது.
இதே சமயம் தமிழ் நாட்டிலும் ஒப்பந்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.
ஒப்பந்த்துக்கு எம்.ஜீ.ஆரும் ஆதரவு என்பதால், ஒப்பந்தம் அநீதியானது என்று பிரசாரம் செய்வது தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு – அவரது சொந்த அரசியல் நலனுக்கு ஏற்றதாக இருந்தது.
பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது.
தீக்கிரையான பிரதிகள்
தமிழ் நாட்டில் ஒப்பந்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை புலிகளும் விருமிபினார்கள்.
கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்துக்கும் பிரபாகரனின் தெரியப்படுத்தப்பட்டது. திராவிடர் கழகத்தோடு நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவர்தான் புலிகள் இயக்க அரசியல் செயலாளராகவும் இருந்தவர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப் பிரதிகளை தீக்கிரையாக்கும் போராட்டம் ஒன்றை நடத்தியது திராவிடர் கழகம். மதுரையில் நெடுமாறனும் ஒப்பந்தப் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. எடுத்த நிலைப்பாடு கொஞ்சம் சுவாரசியமானது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து பண்டிருட்டி ராமச்சந்திரனும், நெடுஞ்செழியனும் கருத்து வெளியிட்டனர்.
அ.தி.மு.க. அமைச்சரவையில் இருந்த காளிமுத்து ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டங்களில் பேசினார். இரண்டு கருத்துக்களையும் எம்.ஜி.ஆர். அனுமதித்தார்.
மத்திய அரசை திருப்திப்படுத்த பண்டிருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரின் கருத்து பயன்பட்டது. தி.மு.க.வுக்கு ஈடுகொடுக்க காளிமுத்துவின் பேச்சுக்கள் பயன்பட்டன.
இதனைக் கிண்டல் செய்து ‘துக்ளக்’ சஞ்சிகை ஒரு கார்டூணை வெளியிட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்கு ஆறு முகங்கள். அந்த ஆறு முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் செய்வது போல கிண்டலடித்திருந்தார் சோ.
ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர் எதிர்க்கவில்லை. ஆனாலும் பிரபாகரனுடன் இருந்த தனது நல்லுறவை எம்.ஜி.ஆர். துண்டிக்கவுமில்லை.
சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராஜீவ் காந்தியும்-எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் ராஜீவ் எம்.ஜி.ஆரைப் பற்றி போற்றிப் பேசினார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக எம்.ஜி.ஆர்தான் காரணம் என்று பாராட்டினார் ராஜீவ்.
தமிழகத்தில் ஒப்பந்தத்துக்கு எதிரான எதிர்ப்புக்களைப் பலவீனப்படுத்தவும், நெருங்கிவந்த தேர்தலுக்கு ஒப்பந்தப்பலனை வைத்து தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டவுமே அக்கூட்டம் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் கரத்தோடு தனது கரத்தைக் கோர்த்து, கூட்டத்தின் முன்னர் கரங்களை உயர்த்துக்காண்பித்தார் ராஜீவ் காந்தி.
சுதுமலையில் கூட்டம்
யாழ்ப்பாணம் சுதுமலையிலும் ஒப்பந்தம் தொடர்பாகவும், ஆயுத ஒப்படைப்பு தொடர்பாகவும் விளக்கமளிக்க ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள் புலிகள்.
முதல் முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றப் போகிறார் பிரபாகரன்.
பிரபாகரனைப்பற்றித் தெரியாதவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரபாகரனை நேரில் கண்டவர்கள் குறைவு.
முதல் முறையாக பகிரங்க இடத்தில் பிரபாகரன் தோன்றப்போகிறார் என்ற செய்தி பரவியதும் சுதுமலையில் பல்லாயிரம் மக்கள் கூடினார்கள்.
சுதுமலை அம்மன் கோவில் அருகே உள்ள வயல் வெளிகளில் மக்கள் வெள்ளம்.
(தொடர்ந்து வரும்)
Average Rating