வந்தாரை வரவேற்கும் பண்பில் சிறந்து விளங்கிய ஜே.ஆர்…!! கட்டுரை

Read Time:20 Minute, 16 Second

article_1479183786-ddபலரும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று விளிப்பதுண்டு. ராஜதந்திர நகர்வுகளை அரசியலில் முன்னெடுப்பதில் ஜே.ஆருக்கு தனிப்பெயர் இருந்தது. எந்தவொரு விடயத்தையும் வெட்டொன்று துண்டிரண்டு என்று நேரடியாக அதிரடியாக ஜே.ஆர் அணுகுவதில்லை. ஆங்கிலத்தில் ‘schemer’ என்று ஒரு வார்த்தையுண்டு. ஒரு விடயம் சார்ந்து இரகசியமாக, திரைக்குப் பின் திட்டமிட்டுக் காய்நகர்த்துபவர் என்ற பொருள்படும் வார்த்தையது. இது ஜே.ஆருக்கு மிகப்பொருத்தமானது எனலாம்.

தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அழுத்தத்தை தொடர்ந்து வழங்கி வந்த சூழலில் ஜே.ஆர் தனது புதிய காய்நகர்த்தலாக மாவட்ட அமைச்சர்கள் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த விளைந்தார். 1978 ஆரம்பப்பகுதியில் ஜே.ஆர் முதன்முறையாக 24 மாவட்டங்களுக்கும் மாவட்டத்துக்கு தலா ஓர் அமைச்சர் வீதம் மாவட்ட அமைச்சர்களை நியமிக்கும் தனது திட்டத்தை முன்வைத்ததாகத் தெரிகிறது.

இது பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானிடமும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடமும் ஜே.ஆர் பேசியிருந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று மாவட்ட அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜே.ஆர் தயாராக இருந்தார். அத்தோடு மாவட்ட அமைச்சர் பதவிகளை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியில் நீடித்திருக்கவும் ஜே.ஆர் சம்மதித்தார்.

கட்சித்தாவலும் “துரோகியும்”

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ‘செக்’ வைப்பதற்கு ஜே.ஆர் பல வழிகளிலும் முயற்சித்துக்கொண்டார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் கனகரத்னம் 1977 டிசம்பர் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைவதாக அறிவித்தார். இதனைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பெருந்துரோகமாகக் கருதியது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மயில்வாகனம் கனகரத்னத்தை ‘துரோகி’ என்று பகிரங்கமாகக் கூறினார். ஜே.ஆரைப் பொறுத்தவரையில் தனது அரசாங்கத்தில் இணைவதற்கு யார் தயாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. இந்தச் சூழலில் 1978 ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அவரது இல்லத்தில் வைத்து இரண்டு இளைஞர்களால் சுடப்பட்டார். தலைக்கு வைக்கப்பட்ட குறி, தோளில் பட்டமையால் அவரது உயிருக்கு உடனடி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அரசியல் களத்தைப் பரபரப்பாக்கியது. ஆளுங்கட்சியினர் குறித்த கொலைமுயற்சிக்காக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சாடும் வகையில் பேசினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டச் சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய வீரவன்னி சமரவீர, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், மயில்வாகனம் கனகரத்னத்தை ‘துரோகி’ என விளித்தமைக்கும் இளைஞர்களிருவர் அவரைச் சுட்டமைக்குமிடையில் தொடர்பொன்றைச் சுட்டிப் பேசினார். இதற்கெதிரான தனது ஆட்சேபனையைப் பதிவுசெய்த அமிர்தலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அவருடைய இந்தக் கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சியினர் ஒன்றாகக் குறித்த கொலை முயற்சியை அமிர்தலிங்கம் கண்டிக்க வேண்டும் எனக் குரலெழுப்பத் தொடங்கினர். உங்களது குரல்கள் என்னையோ எனது கட்சியினரையோ அச்சப்படுத்தாது என்று அமிர்தலிங்கம் சொன்னபோதிலும், குறித்த கொலைமுயற்சியைத் தாம் கண்டிப்பதாகவும் பேசினார். இந்தச் சம்பவங்கள் நடந்து சிலகாலத்தில்தான் ஜே.ஆர் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை மாவட்ட அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ள அழைத்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு

இந்த நிலையில் 1978 ஜூலை 29 ஆம் திகதி புத்தூரின், ஆவரங்காலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பதவிகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுவரை காலமும் அ. அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால முறையைப் பின்பற்றி இணைத்தலைவர்களாக இருந்தார்கள். இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைவராக எம்.சிவசிதம்பரமும் செயலாளர் நாயகமாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால், இந்த மாநாடு சுமுகமான முறையில் இடம்பெறவில்லை. மாறாக மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. மாநாட்டில் பெருமளவில் பங்குபற்றியிருந்த இளைஞர்கள் தமது தலைமைகள் மற்றும் பிரதிநிதிகள் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் கடுமையாக வௌிக்காட்டினார்கள். குறிப்பாக ஜே.ஆரின் ‘மாவட்ட அமைச்சர்கள்’ பதவிகளைப் பெறுவதற்கான அழைப்புப் பற்றி கசிந்திருந்த தகவலும் தனிநாட்டை ஸ்தாபிப்பது, அதற்கான அரசியலமைப்பை வரைவது பற்றித் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மெத்தனம் காட்டியமையும் இளைஞர்களது கோபத்திற்கும் அதிருப்திக்கும் காரணம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. இந்த மாநாட்டில் தனிநாட்டுக்கான கோசத்தை எழுப்பிய இளைஞர்கள், உங்களால் முடியாவிட்டால் எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள் என்று குரலெழுப்பினார்கள். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களை துரோகிகள் என்று விழித்த சில இளைஞர்கள், அவர்களை உடனடியாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு, தனிநாட்டைப் பிரகடனப்படுத்துமாறு கோசமிட்டார்கள். இளைஞர்களின் குரல்கள் உணர்ச்சிப்பிளம்பாகக் கிளம்பியது என்பதே பொருத்தமான கூற்றாகும். மேலும் இளைஞர்களினால் தனிநாட்டுக்கான ஒரு தேசிய அவை அமைக்கப்பட்டு தனிநாட்டுக்கான அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதனை தந்திரோபாய ரீதியில் கையாண்ட தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைகள், குறித்த தீர்மானத்தில் ‘தேவையேற்படும் பட்சத்தில், குறித்த நேரத்தில், குறித்த அவை உருவாக்கப்படும்’ என்ற வாசகத்தையும் இணைத்துக்கொண்டனர்.

இந்த மாநாட்டின் பின்னர், மாவட்ட அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்வதானது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு சாத்தியமானதொன்றாக இருக்கவில்லை. ஏனென்றால், அதனை ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்களின், குறிப்பாக தமிழ் இளைஞர்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்பதை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனாலும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஜே.ஆரிடம் 5 மாவட்ட அமைச்சர்கள் பதவிகளை வேண்டியதாகவும் ஆனால் ஜே.ஆர் 3 மாவட்ட அமைச்சர் பதவிகளை மட்டுமே வழங்கத்தயாராகவிருந்ததாகவும் ஒரு செய்தியுமுண்டு. எது எவ்வாறாயினும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாவட்ட அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

அமைச்சரானார் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதில் ஜே.ஆர் ஆர்வம்காட்டினார். இது பற்றி அவர் தொண்டமானோடு பேசிய போது, ‘நீங்கள் அழைத்தால் நான் வருகிறேன். ஆனால் சில நிபந்தனைகளுண்டு’ என்று தொண்டமான் தெரிவித்திருந்தார். தன்னுடைய மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவர்களது தொழிலுரிமைகளை மேம்படுத்துதல் என்பன எனக்கு முக்கியமானது. இந்தக் கொள்கைகளை சமரசம் செய்யாது அமைச்சரவையில் தொடர்வதானால் அதற்கு தான் தயார் என்று சௌமியமூர்த்தி தொண்டமான் ஜே.ஆரிடம் தெரிவித்திருந்தார். இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறைவேற்றுக்குழுவில் தொண்டமான் குறித்த முன்மொழிவை முன்வைத்து அதற்கான ஏகமனதான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். அமைச்சரவையில் இணைவதுதான் சரியான வழி என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல்குழு ஏற்றுக்கொண்டிருந்தது. சௌமியமூர்த்தி தொண்டமானைப் பொறுத்தவரையில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் தௌிவாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழ் மக்களினதும், இலங்கை தமிழ் மக்களினதும் பிரச்சினைகள் அடிப்படையில் வேறுபட்டது; அவற்றுக்கான தீர்வும் அதனை அடைவதற்கான வழிகளும் வேறுபட்டவை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தில் அவர் பங்குபற்றி மூன்று தலைவர்களுள் ஒருவராகப் பதவிவகித்திருப்பினும் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப்’ பின் அவர் அதிலிருந்து விலகித் தனி வழியேதான் செயற்பட்டார். ‘தனிநாடு’ என்பது தமது பிரச்சினைக்கு தீர்வல்ல என்பது அவருடைய மிகத்தௌிவான நிலைப்பாடு. மேலும் போராட்டம், எதிர்ப்பரசியல் ஆகியவற்றிலும் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவரது அரசியலிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இதன் வழியேதான் ஜே.ஆரின் அமைச்சரவையில் இணையும் அவரது முடிவும் அமைந்தது. 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி கிராமப்புற கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக சௌமியமூர்த்தி தொண்டமான் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டதும் இலங்கை ‘சிங்கள-பௌத்த’ மரபுப்படி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றார். அத்தோடு புத்தரின் தந்ததாது இருப்பதாகச் சொல்லப்படும் தலதா மாளிகைக்குச் சென்று அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின் பேசிய அவர் இந்துக்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகக் காண்பதாகவும் இந்துக்களுக்கு பௌத்தம் அந்நிய மதமல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மாவட்ட அமைச்சர்கள் நியமனம்

1978 ஒக்டோபர் 5ம் திகதி ஜே.ஆர் முதல்கட்ட மாவட்ட அமைச்சர்களை நியமித்திருந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாவட்ட அமைச்சுப் பதவிகளை ஏற்காத போதிலும் அவர்களுக்கு அளிப்பதாகச் சொன்ன நியமனங்களை மேற்கொள்ளாது அவர்கள் இணைவதற்கான கால அவகாசத்தை வழங்கியிருந்தார். ஆயினும் தமிழ் ஐக்கிய முன்னணி மாவட்ட அமைச்சுக்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லாத நிலையில் ஜே.ஆர் வடக்கு-கிழக்கில் ஒரு தமிழ், இரண்டு முஸ்லிம், நான்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட அமைச்சர்களாக நியமித்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்திருந்த மயில்வாகனம் கனகரத்னம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். யு.பி.விஜேக்கோன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் ஏ.ஆர்.மன்சூர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் ஜீ.டீ.மஹிந்தசோம வவுனியா மாவட்டத்துக்கும் எம்.ஈ.எச்.மஹ்ரூப் மன்னார் மாவட்டத்துக்கும் எச்.ஜீ.பி.நெல்சன் திருக்கோணமலை மாவட்டத்துக்கும் பி.தயாரத்ன அம்பாறை மாவட்டத்துக்கும் மாவட்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். அத்தோடு இந்த நியமனங்களுடன் தன்னுடைய உறவினரும் முதன் முதலாக நாடாளுமன்றம் நுழைந்திருந்த மிக இளைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் ஷிரான் விக்ரமசிங்ஹவை 1978 ஒக்டோபர் 5ம் திகதி இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சராக நியமித்து அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்.

இன்னுமொரு கட்சித்தாவல்

1979 மார்ச் 23 ஆம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா ராஜதுரை (சீ.ராஜதுரை) அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார். சீ.ராஜதுரைக்கும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் இடைமிடையில் நீண்டகாலமாக பனிப்போர் நடந்துகொண்டிருந்ததைப் பலரும் அறிவார்கள். இருவரும் தமிழரசுக் கட்சியினதும் பின்னர் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள். வடக்கின் தளபதி அமிர்தலிங்கம் என்றால் கிழக்கின் தளபதியாக ராஜதுரையிருந்தார். இதுகூட இந்தப் பனிப்போருக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அமிர்தலிங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தலைவராகியதிலிருந்து, தான் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவதாக சீ.ராஜதுரை உணர்ந்திருக்கலாம். இந்தப் பனிப்போரின் உச்சகட்டமாக 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு பலநபர் தேர்தல் தொகுதியாக அமைந்ததால் அந்தத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் சீ.ராஜதுரை களமிறங்க, சீ.ராஜதுரையின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழரசுக் கட்சி சார்பில் கவிஞர்.காசி ஆனந்தனை அமிர்தலிங்கம் களமிறக்கியிருந்தார். இதனை தனக்கெதிரான வௌிப்படையான சதியாகவே சீ.ராஜதுரை எடுத்துக்கொண்டார். தேர்தலில் ராஜதுரை வென்று, காசிஆனந்தன் வென்றிராத பின்பும்கூட, கட்சிச் செயற்பாடுகளிலிருந்து சீ.ராஜதுரை சற்றே விலகி நின்றதுடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளிலும் பங்குபற்றத் தொடங்கியிருந்தார். இதன் விளைவாக இவருக்கெதிராக கட்சியிலிருந்து விளக்கங்கோரப்பட்டபோதும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்தப் பின்புலத்தில்தான் ராஜதுரையின் அரசாங்கத்துடனான சங்கமம் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்த சீ.ராஜதுரை 1979 ஏப்ரல் 5ம் திகதி பிராந்திய அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். கட்சிதாவி வந்தவர்களை அமைச்சுப் பதவி வழங்கி வரவேற்று கௌரவிக்கும் புதிய அரசியல் பண்பில் ஜே.ஆர் ஒரு மைல்கல்லை நிலைநாட்டினார் என்றால் அது மிகையல்ல.

( அடுத்த வாரம் தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த ஆப்பிரிக்கர்கள்…!! வீடியோ
Next post முதல்முறையாக சுதுமலையில் பிரபாகரன், மக்கள் முன் தோன்றினார்!: பல்லாயிரக் கணக்கான மக்கள், சுதுமலையில் கூடினர்!!.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -95) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)