மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? கட்டுரை
சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற சந்தேகங்கள் அரசியல், ஊடக மட்டங்களில் எழுந்திருக்கின்றன.
சீனாவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இருந்த நட்பும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால், சீனாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும்தான், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த சீனா விரும்புகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாகும்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது சீன – இலங்கை உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உச்சத்தில் இருந்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
சீனா, தனது நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பில் தரித்து நிறுத்தும் அளவுக்கு இந்த உறவுகள் வளர்ச்சி அடைந்திருந்தன. அதுவே, பின்னர் ஆட்சி மாற்றத்துக்கான பிரதான காரணியாகவும் சொல்லப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டில் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போருக்குப் பிந்திய இலங்கையின் உட்கட்டமைப்புகள் திடீரென வளர்ச்சி பெற்றமைக்கு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் சீன அரசுக்கும் இடையில் இருந்து வந்த நெருங்கிய உறவுதான் காரணம்.
இந்தத் திட்டங்களுக்காக சீனா செலவிட்ட நிதி ஒன்றும் கொடையாக வழங்கப்பட்டல்ல; அது கடன். அந்தக் கடனை வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் போன்ற பொருளாதார ரீதியில் இலாபமீட்டாத திட்டங்களில் முதலிடப்பட்ட நிதியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த இலங்கை அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.
சீனாவின் திட்டங்களுக்காக அதிக வட்டியில் கடன் பெறப்பட்டுள்ளதாக இலங்கை குற்றம்சாட்டி வரும் நிலையில், சீனா அதனை மறுத்து வந்தது.
அண்மையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சீனத் தூதுவர், யி ஷியாங் லியாங், “இரண்டு வீத வட்டியில்தான் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி என்றால், எதற்கு மீண்டும் மீண்டும் கடனுக்காக சீனாவை நாடுகிறார்கள்” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை நோக்கிக் கேள்வி எழுப்பும் வகையில் அவரது இந்தக் கருத்துக்கள் அமைந்திருந்தன. ஒன்றுக்கு மூன்று தடவைகள் ரவி கருணாநாயக்கவின் பெயரையும் சீனத் தூதுவர் வெளிப்படுத்தியிருந்தார்.
வெளிநாட்டுத் தூதுவர்கள், உள்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதில்லை. இராஜதந்திர நெறிமுறைகளுக்கு இது புறநடையானது. இந்தவகையில் சீனத் தூதுவர் எல்லை மீறிக் கருத்துக்களை வெளிப்படுத்தியதால் சர்ச்சைகள் தோன்றியிருக்கின்றன.
சீனத் தூதுவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டமைக்குத் தனியே, பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சார்ந்த விடயங்களே காரணம் என்று கூற முடியாது.
இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக நெருக்கடியை அடைந்துள்ளது என்பது சீனாவுக்கு நன்றாகவே தெரியும். இந்தக் கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷவின் கையில் அதிகாரம் சென்றடைவதற்கான தூண்டுதல்களை சீனா ஏற்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால், அதிக இழப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்த நாடு சீனா. எனவே, இழந்து போனவற்றை மீள நிலைப்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவர சீனா ஆசைப்பட்டால் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
உலக வல்லரசு நாடுகள், கேந்திர முக்கியத்துவம் மிக்க அல்லது பொருளாதார முக்கியத்துவம் மிக்க நாடுகளில் தமக்குச் சார்பான ஆட்சி நடக்க வேண்டும், தமது திட்டங்களைச் செயற்படுத்த வசதியானவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதான்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, மேற்குலகம் எவ்வாறு ஆட்சி மாற்றத்தை விரும்பியதோ, அதுபோலவே இப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் சீனாவும் ஆட்சி மாற்றத்தை விரும்புவது ஒன்றும் வியப்பானதோ, உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயலோ அல்ல.
ஆனால், தூதுவர் ஒருவர் உள்நாட்டு அரசியலில் எந்தளவுக்கு கருத்துக்களை வெளியிடலாம் என்ற வரையறைகள் உள்ளன. அத்தகைய வரையறைகளுக்கு அப்பால் சீனத் தூதுவர் சென்றிருப்பதாகவே கருதப்படுகிறது.
புதிய அரசாங்கம் சீனாவுடன் பொருளாதார ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தி வந்த போதிலும் சீனத் தூதுவரின் இந்தத் திடீர்க் கருத்து பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மாதம் சீனாவில் நடந்த பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சீன அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பங்கேற்றிருந்த அந்தக் கருத்தரங்கில், கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் சீனா சமமான அங்கிகாரமும் மதிப்பும் அளித்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
அதைவிட, பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, கோத்தாபய ராஜபக்ஷ பல நாட்கள் முன்னதாகவே பீஜிங் சென்றிருந்தார். கருத்தரங்கு முடிந்தும் பல நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டே நாடு திரும்பினார்.
பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகச் சென்ற கோத்தாபய ராஜபக்ஷ, அங்கு அதிக நாட்கள் எதற்காக தங்கியிருந்தார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்ற கேள்விகளுக்கான விடை யாருக்கும் தெரியாது.
அதுபோலவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்த மாதம் 23 ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அவருக்கான அழைப்பை சீன அரசாங்கமே விடுத்திருக்கிறது. இந்தப் பயணத்தின் போது சீன அரசுத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கோத்தாபய ராஜபக்ஷவினதும் மஹிந்த ராஜபக்ஷவினதும் சீனப் பயணத் திட்டங்கள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
சீன அரசின் அழைப்பின் பேரில் கடந்த ஜனவரி மாதம் பீஜிங் செல்வதற்கு மஹிந்த திட்டமிட்டிருந்தார். எனினும் கடைசி நேரத்தில் அந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டமை நினைவிருக்கலாம்.
இப்போது மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள பயணம், அதுவும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தொடர்பாக சீனத் தூதுவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் இடம்பெறவுள்ள இந்தப் பயணம், கூடுதல் முக்கியத்துவத்துடன் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
சீனாவைப் பொறுத்தவரையில், எப்போதும் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களுடன் மட்டுமே தொடர்புகளை வைத்துக் கொள்வது வழக்கம். உள்நாட்டு அரசியலில் தாம் ஆர்வம் காட்டுவதில்லை என்று காட்டிக் கொள்வதற்காக சீனா இவ்வாறு நடந்து கொள்ளும்.
சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங், கொழும்பில் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட இந்தக் கருத்தை குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கங்களுடன் மாத்திரமே, சீனா தொடர்புகளைப் பேணும் என்ற கொள்கை உறுதியாக இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், மஹிந்த ராஜபக்ஷவுடனும் கோத்தாபய ராஜபக்சவுடனும் சீனா பேணி வரும் உறவுகள் எத்தகையதாக இருக்க முடியும்? கடந்த ஆண்டு கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்திய பின்னர், சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மினை கொழும்புக்குத் தனது விசேட தூதுவராக அனுப்பியிருந்தது சீனா. கொழும்பு வந்த சீன உதவி வெளிவிவகார அமைச்சர், லியூ சென்மின் அரசாங்கத் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து விட்டே சென்றார்.அது மாத்திரமன்றி, முன்னாள்ப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சீனா அதிகாரபூர்வமான முறையில் பாதுகாப்புக் கருத்தரங்குக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இப்போது மஹிந்த ராஜபக்ஷவும் சீனாவின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்லவிருக்கிறார். இவர்கள் ஒன்றும் அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் அல்ல.
அரசாங்கத்துடன் மாத்திரம் தொடர்புகளை வைத்திருப்போம் என்பது உண்மையானால், இந்தத் தொடர்புகள் சாத்தியமானது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பு.எது எவ்வாறாயினும், சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகளைத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், திடீரென அந்த முயற்சிகளில் குழப்பம் விளைவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு, மஹிந்த ராஜபக்ஷவை வைத்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபடுகிறதா அல்லது மஹிந்த ராஜபக்ஷவைப் பயன்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தைத் தனது வழிக்குக் கொண்டு வர சீனா முனைகிறதா என்று தெரியவில்லை.
இதில் எதற்கான முயற்சிகள் நடந்தாலும் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகமாகவே இருக்கும்.
Average Rating