புலிகள் இயக்கத் தலைவர் பிரபா தொடர்பாக, ராஜீவ் அனுப்பிய இரகசியக் கடிதம்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -94) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
பிரபாகரன் கொடுத்த வாக்கைமீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுத் பட்சத்தில் இந்தியப் படைகள் எல்.ரி.ரி.ஈயின் ஆயுதங்களை பலாத்காரமாகப் பறித்தெடுக்கும்..
• இலங்கை- .இந்திய ஒப்பந்தம் கைச்சாத்ததாகிவிட்டது.இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. மகிழ்ச்சி வெள்ளத்தில் இந்தியப்படைகள்
• எட்டாயிரம் இந்தியத் துரப்புக்கள்தான் வந்துள்ளன. அவை ஒப்பந்த அமுல்படுத்தும் விடயத்தில் தலையிடப்போவதில்லை” என்றும் கூறியிருந்தார் ஜே.ஆர்.
• சுட்டுத்தள்ள உத்தரவு
தொடர்ந்து..
ராஜீவ் காந்தியின் வருகை இலங்கையில் இருண்டயுகத்தின் ஆரம்பம் என்று ஒப்பந்தத்துக்கு எதிரான தென்பகுதியினர் விபரித்தனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்த விடயத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் துணிச்சல் பற்றி குறிப்பிட்டேயாக வேண்டும்.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்று முடிவு செய்த பின்னர் அதற்கெதிரான சக்திகளின் எதிர்ப்பைக் கண்டு ஜே.ஆர். அஞ்சவில்லை.
தனது கட்சிக்குள் பிரேமதாசா போன்ற சக்திமிக்க தலைவர்களின் எதிர்ப்பு ஏற்படும் என்று தெரிந்தபோதும் அதனையும் எதிர்கொள்ள அவர் தயாரானார்.
கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் பாரியளவு நடைபெற்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ட இடத்தில் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டார் ஜே.ஆர்.
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை அள்ளிக் கொண்டுபோய் பிரேத அறையில் போட்டார்கள்.
வெளியே சொல்லப்பட்ட கணக்கைவிட சுட்டுக்கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகம்.
பௌத்த மதகுருமாரின் உடையுடன் வந்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிரேத அறையில்வைத்து அவர்களது உடைகளைக் களைந்த பொலிசாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
மதகுருமார் அணியும் அங்கிகளின் உள்ளே டெனிம் ஜீன்ஸ் அணிந்திந்தனர். பின்னர்தான் விபரம் தெரிந்தது அவர்கள் பௌத்த குருமார்களல்ல.
பௌத்த குருமாரும் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள் என்றால் மக்களுக்கும் உணர்ச்சி ஏற்படும். அதற்காகவே ரவுடிகள் சிலருக்கு மதகுருமார் அணியும் அங்கிகள் போட் ஆர்ப்பாட்டத்தில் இறக்கிவிட்டார்கள்.
இந்த அபாரமான திட்டத்தின் பின்னணியில் அநுரா பண்டாரநாயக்காதான் இருந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.
இதேபோல மற்றொரு சம்பவம். கொழும்பில் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. தெகிவளையில் இருந்து ஒரு கும்பல் புறப்பட்டு வந்தது.
அந்தக்கும்பலை தடுத்து நிறுத்தினார்கள் இராணுவத்தினர். கும்பலின் தலைவனை இராணுவக் கப்டனுக்கு நன்கு தெரியும். ‘குடுக்காரன்’ என்று அழைக்கப்படும் போதைப்பொருள் பாவிக்கும் ஒருவன்தான் கும்பலின் முன்னால் நின்றான்.
இராணுவக் கப்டன் அந்தக் குடுக்காரனை “திரும்பிப் போய்விடு, உனக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நீ ஒரு குடுக்காரன்” என்று எச்சரித்தார்.
குடுக்காரன் கேட்கவில்லை. “சுடு பார்ப்போம் என்றுவிட்டு தடையைத் தாண்ட முற்பட்டான்.
இராணுவக் கப்டன் உடனே சுட்டார். கும்பல் காணாமல் போனது. குடுக்காரன் பலியானான்.
அரசாங்கமும் பாதுகாப்புப்படையினரும் கலவரங்களை ஒடுக்கவேண்டும் என்னும் கண்டிப்போடும், உறுதியோடும் செயற்பட்டால் அடக்கிவிடலாம் என்பதற்கு ஒப்பந்தத்துக்கு எதிரான கலவரங்கள் அடக்கப்பட்டமையும் ஒரு உதாரணமாகும்.
தாக்குதல்
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் ராஜீவ் காந்தி நாடுதிரும்ப ஆயத்தமானார்.
இலங்கை கடற்படையின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கடற்படைத்தளபதி ஆனந்த சில்வா விடுத்த அழைப்பை ராஜீவ்காந்தி ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பு மரியாதை ஆரம்பமானது. கடற்டைத்தளபதியும், ராஜீவ் காந்தியின் மெய்ப்பாதுகாவலர்களும் ராஜீவுடன் கூட வந்தனர்.
விஜிதமுனி ரோகன டி சில்வா, 19 வயதான அந்த கடற்படை வீரன் இதயம் படபடக்க தன்னைக் கடக்கப்போகும் ராஜீவ்காந்தியை தலையில் அடித்துச் சாய்க்கத் தயாராக நின்றான்.
முக மளர்ச்சியுடன் அணிவகுப்பை பார்வையிட்டபடி வந்தார் ராஜீவ் காந்தி.
ராஜீவ் காந்தி இளைஞர். துடிப்பானவர். விமான ஓட்டியாக இருந்தவர். இதனால் அவதானமும் அவரது இரத்தத்தில் ஊறியிருந்தது.
அணிவகுப்பை பார்வையிட்டபடி நடந்து சென்றுகொண்டிருந்த ராஜீவ்காந்திக்கு தனக்கு பக்கவாட்டில் யாரோ அசைவது போலத் தெரிந்தது.
கடற்படைத்தளபதியோ, மெய்ப்பாதுகாவலர்களோ, அணிவகுப்பில் மேர்பார்வை பார்த்துக்கொண்டிருந்த வீரர்களோ அந்த அசைவைக் கவனிக்க முன்பாக ராஜீவ் உணர்ந்துவிட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அணிவகுப்பில் இருந்து முன்நோக்கி நகர்ந்து தனது ரைபிளின் பின்பகுதியை ராஜீவின் தலையை குறிவைத்து ஓங்கி அடித்தான் விஜிதமுனி.
அதேநேரம் தனது உணர்வுக்கு ஏற்ப தலையை முன்பக்கமாக வளைத்து குனிந்தபடி நகர்ந்தார் ராஜீவ் காந்தி.
அதனால் அடி குறி தப்பியது.
ராஜீவ்காந்தியின் பின் கழுத்துப் புறத்திலும், தோளிலும்தான் அடிபட்டது.
அடி குறிதப்பியதாலும், ராஜீவ்காந்தி கீழே விழாததாலும், திட்டமிட்டபடி விஜிதமுனியின் கூட்டாளிகளான ஏனைய இரு கடற்படைவீரர்களும் செயற்படவில்லை.
ராஜீவ் கீழே விழுந்திருந்தால் அவர்கள் இருவரும் பாய்ந்து துப்பாக்கியின் ‘பேனற்’ கத்தியினால் குத்துவது என்பதுதான் திட்டம்.
புகைப்படம்
அணிவகுப்பில் ராஜீவ்காந்தி தாக்கப்பட்ட செய்தி இலங்கையில் பீதியையும், இந்தியாவெங்கும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
ராஜீவ்காந்தி தாக்கப்பட்டதால் இந்தியப்படைகள் கொழும்புக்குள் புகுந்துவிடுமோ என்று எங்கும் பீதி நிலவியது.
ராஜீவ்காந்தி எதிர்பாராமல் தாக்கப்பட்ட அந்த நொடிகள் அதனை கச்சிதமாகப் படமெடுத்து பாராட்டுப்பெற்றவர் லேக் ஹவுஸ் புகைப்படப்பிடிப்பாளர்.
அப்புகைப்படத்துக்கு பயங்கர மவுசு. எவ்வளவு பணம் கொடுத்தாயினும் அப்புகைப்படத்தைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் பத்திரிகைகள் போட்டி போட்டன.
லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் அவர் பணியாற்றியதால் வேறு நிறுவனங்களுக்கு புகைப்படத்தைக் கொடுக்க முடியாது.
எனினும் ரோய்டர் செய்தி நிறுவனம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து அப்புகைப்படத்தைப் பெற்றுக்கொண்டது.
குறிப்பிட்ட புகைப்பிடப்பிடிப்பாளரை பின்னர் அதிக சம்பளம் தருவாதாகக் கூறி ஃபிரான்ஸ் செய்தி நிறுவனமான ஏ.எஃபி.பி. தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இத்தனைக்கும் குறிப்பிட்ட புகைப்படப் பிடிப்பாளராக லேக்ஹவுஸில் பியோனாக வேலை பார்த்தவர். புகைப்பிடிப்பாளராக அவர் விரும்பியதால் அந்த வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
புகைப்படப்பிடிப்பாளர் வேலையில் சேர்ந்தபின்னர் அவர் முதன்முதலாக படமெடுக்கச் சென்றது ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட அணிவகுப்புத்தான்.
ராஜீவ் தாக்கப்பட்டதால் அவருக்கு அடித்தது அதிஷ்டம். இவ்வாறான சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.
படைகள் வந்தன
ஒப்பந்தம் கைச்சாத்தன மறுநாள் ஜீலை 30ம்திகதி இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இந்தப் படை இறக்கத்திலும் இந்திய இராணுவம் ஒரு பரீட்சார்த்த முயற்சி செய்து பார்க்கத்தவறவில்லை.
வான்மூலமும், கடல்வழியாகவும் எத்தனை வேகமாக படையை தரை இறக்க முடிகிறது என்று பரீட்சித்துப் பார்த்தது இந்திய இராணுவம்.
ஜே.ஆரும், ராஜீவ் காந்தியும் ஒப்பந்தம் மூலமாக தமது அரசியல் பலத்தை உயர்த்திக்கொள்ள நினைத்தனர். இந்திய இராணுவத்தளபதி கிரு~;ணசாமி சுந்தர்ஜி படை இறக்கம் மூலமாக இந்திய இராணுவத்தின் பலத்தை பரீட்சீலித்துப் பார்க்க நினைத்தார்.
விமானங்கள் மூலமாக பலாலி விமானத் தளத்தில் படைகள் தரை இறங்கின. கடல்வழியாக வந்த படைகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரை இறங்கின.
இந்திய படைகள் யாழ்;ப்பாணத்தில் தரை இறங்கிய செய்தி நாடெங்கும் காட்டுத் தீயாகப் பரவியது. வதந்திகளும், பீதிகளும் பரவின.
‘இந்தியா தலையிடவில்லை. இலங்கை அரசாங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் உதவுவதே இந்தியாவின் பணி என்று இந்திய இரசு விளக்கமளித்திருந்தது.
ஜனாதிபதி ஜயவர்த்தனா பின்வருமாறு கூறினார்.
“கண்டி பெரஹராவில் பாதுகாப்பு வழங்குவதற்கு 20 ஆயிரம் வரையான பொலிசார் கடைமையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் கலவரங்களை அடக்க ஆட்கள் தேவைப்பட்டனர்.
கொழும்பில் கலவரங்களை அடக்க ஆட்கள் தேவைப்பட்டனர். பெரஹராவை நடைபெறாமல் தடுக்க நான் விரும்பவில்லை.
இதே வேளை ‘ஏதாவது உதவி தேவையா?’ என்று ராஜீவ் காந்தி என்னிடம் கேட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து துருப்புக்களை தென்னிலங்கைக்கு கொண்டுவர விமானங்களை தந்து உதவுமாறு நான் கேட்டேன்.
யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படைகளின் பணியினைப் பொறுப்பெடுப்பதற்காக இந்தியப் படைகள் வருகின்றன” என்றார் ஜே.ஆர்.
எட்டாயிரம் இந்தியத் துரப்புக்கள்தான் வந்துள்ளன. அவை ஒப்பந்த அமுல்படுத்தும் விடயத்தில் தலையிடப்போவதில்லை” என்றும் கூறியிருந்தார் ஜே.ஆர்.
வரவேற்பு
இந்தியப் படைகள் வந்திறங்கிய செய்தி தென்னிலங்கையில் எந்தளவுக்குப் பீதியை ஏற்படுத்தியதோடு அந்தளவுக்கு யாழ்ப்பாண மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கேசன்துறையில் வந்திறங்கிய படைகளை வரவேற்க புலிகள் இயக்கத்தினரும் சென்றனர்.
புலிகள் இயக்கப் பிரதித் தலைவர் கோபாலசாமி மாத்தையா, திலீபன், யோகி ஆகியோர் வரவேற்பில் கலந்துகொண்டனர்.
இந்தியப் படைகளுக்கு தலைமை தாங்கிவந்தவர் மேஜர் ஜனரல் ஹரிகிரத்சிங். பிரிகேடியர் பெர்னாண்டசும் வந்திருந்தார். (பின்னர் காஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியானவர்தான் பெர்னாண்டஸ்)
மேஜர் ஜனரல் ஹரிகிரத்சிங்கையும், பிரிகேடியர் பெர்னாண்டசையும் கைகுலுக்கி வரவேற்றார் மாத்தையா. அதன்பின்னர் புலிகள் இயக்கத்தின் ஏனைய பிரமுகர்களும் கைகுலுக்கி வரவேற்றனர்.
மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்பளித்தனர்.
பலர் முண்டியடித்து அதிகாரிகளுக்கு மாலைசூட்டி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். வரவேற்பில் பெருந்திரளான பெண்களும் கலந்து கொண்டு ஆனந்தக் கண்ணீரோடு வரவேற்ற காட்சி இந்தியப் படையினரை நெகிழச் செய்தது.
குளிர்பானங்கள், அன்பளிப்புக்கள் என்று வாரியிறைத்து இந்தியத் துருப்புக்களை மக்கள் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.
புலிகளும் இந்தியப் படை அதிகாரிகளை தமது முகாமுக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர்.
பிரபா எங்கே?
ஒப்பந்தம் கைச்சாத்ததாகிவிட்டது.இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன.
இந்தியா சென்ற பிரபாகரன் திம்பவில்லை.
புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையாவிடம் ஆயுத ஒப்படைப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் பேசினார்கள்.
“தலைவர் நாடு திரும்பினால்தான் அதனைப்பற்றி முடிவு செய்யலாம். முதலில் பிரபாகரனை இங்கு கொண்டுவாருங்கள்” என்று உறுதியாகக் கூறிவிட்டார் மாத்தையா.
ஜுலை 30 ம் திகதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒழுங்கு செய்தனர் புலிகள்.
‘பிரபாகரனை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும்’ என்பதே ஆர்ப்பாட்டங்களின் கோரிக்கையாக இருந்தது.
புதுடில்லியில் இருந்த பிரபாகரனின் நடமாட்டங்கள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டே வந்தன. தொலைபேசியில் பேசுவதற்கு மட்டும் தடைகள் இருக்கவில்லை. தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட போதும் தொலைபேசிப் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன.
எங்கிருந்து பிரபாகரனுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன் என்பதையும் அவதானித்துக் கொண்டிருந்தனர்.
ராஜீவ் காந்தியிடமிருந்து மிக மிக அந்தரங்கமான கடிதம் ஒன்று ஜே.ஆருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பிரபாகரன் தொடர்பாக இந்தியா எவ்வாறு நடந்துகொள்ளப்போகிறது என்ற விடயம் தான் அக்கடிதத்தில் இடம் பெற்றிருந்தது.
மிக முக்கியமான அந்தரங்கக் கடிதத்தில் காணப்பட்ட விரங்கள் பின்வருமாறு.
1. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அமையவிருக்கும் இடைக்கால நிர்வாக சபைக்கு எத்தகைய பணிகள் இருக்கும் என்பதை திக்ஷித் மூலம் (ஆகஸ்ட் 1,1987) அறிவித்திருந்தோம்.
ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கான தொழில் வசதிகள் பற்றி எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனுக்கு திக்ஷித் தெரியப்படுத்தியபோது, பிரபாகரன்:
(அ) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சம்மதம் அளித்தார்.
(ஆ) ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தார்.
(இ) ஆயுதங்களை ஒப்படைக்கும்போது பிரபாகரன் தானும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.
2. நல்லிணக்கமான முறையில் ஒப்பந்தத்தை அமைதியான முறையில் நடைமுறைப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2ம் திகதி பிரபாகரன் விமானம் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவார்.
இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பின்வரும் அட்டவணைப்படி ஆயுதங்கள் ஒப்படைப்பதற்கு பிரபாகரன் சம்மதித்துள்ளார்.
ஆகஸ்ட் 2 மாலை:- பிரபாகரன் யாழ் வருகை
ஆகஸ்ட் 3:- இந்தியப் படைகள் யாழ் நகர் உட்பட குடாநாட்டின் சகல பகுதிகளிலும் பரவலாக நிலை கொள்ளும்.
ஆகஸ்ட் 3 (பிற்பகல்):- இந்தியத் தூதருக்கு ஆகஸ்ட் 4ம் திகதி மாலை ஆறு மணிக்கு முன்பாக ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் என்பதை எல்.ரி.ரி.ஈ. முறைப்படி அறிவிக்கும் அதே செய்தி பகிரங்கப்படுத்தப்படும்.
ஆகஸ்ட் 4,5:- எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை ஒப்படைப்பதை பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியினரும் பார்வையிடவேண்டும்.
ஆகஸ்ட் 5:- ஜனாதிபதி ஜயவர்த்தனா வடக்கு-கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் என்ற தீர்மானத்தை அறிவிக்க வேண்டும். இதன் விபரங்கள் இந்திய அரசுடன் கலந்து உருவாக்கப்படும்.
3. பிரபாகரன் கொடுத்த வாக்கைமீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுத் பட்சத்தில் இந்தியப் படைகள் எல்.ரி.ரி.ஈயின் ஆயுதங்களை பலாத்காரமாகப் பறித்தெடுக்கும் என்பதை உறுதியுடன் கூறவிரும்புகிறேன்.
4. ஆகஸ்ட் 3 முதல் 5ம் திகதிவரை ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட வேண்டுமானால் மேலும் 48 மணிநேரம் நீடிக்கப்படலாம். போர் நிறுத்தம் இந்தியப் படைகளால் கண்காணிக்கப்படும்.
5. ஆகஸ்ட் 3ம் திகதி பிற்பகலுக்கு முன்னர் இந்த ஒழுங்குகள் பற்றி அறிவிக்க வேண்டாம். ஆகஸ்ட் 3 பிற்பகலில் வெளியிடப்பலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுதான் கடிதம்.
இக்கடிதத்தில் இந்தியாவின் கடும்போக்கும், பிரபாகரனை தமது பிடியில் உள்ள ஒருவர் போலவே ராஜீவ் நடந்து கொண்டமையும் தெளிவாகத் தெரிகின்றன.
தமது அழைப்பை ஏற்று இந்தியா சென்ற ஒரு இயக்கத்தலைவரை தம்மிடமுள்ள ஒரு கைதிபோலவே இந்தியப் பிரதமர் கருதிக் கொண்டமைதான் பின்னர் விபரீதங்களுக்கு வித்திட்டது.
பிரபாகரன் சென்னை வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டபோது, கிட்டுவும் பிரபாகரனுடன் இணைந்து வந்தார்.
பிரபாகரன் யாழ்ப்பாணம் வந்து இறங்கியபோது யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
(தொடர்ந்து வரும்)
Average Rating