கர்ப்பிணி போல நடித்து வந்ததால் குழந்தையை கடத்தி சென்றேன்: பெண் வாக்குமூலம்…!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(23). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கர்ப்பமடைந்த ஜோதி பிரசவத்துக்காக கோவை சிங்காநல்லூரில் தனது தாய் வீட்டுக்கு வந்தார். கடந்த 7-ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு மறுநாள் பெண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் ஜோதியை மருத்துவ பரிசோதனைக்காக நர்சுகள் அழைத்தனர். அப்போது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அருகில் இருந்த பெண்ணிடம் கூறி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது குழந்தையையும், அந்த பெண்ணையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தையை திருடி சென்ற நபர்கள் கால்டாக்சியில் தப்பிச் சென்றது தெரியவந்தது. கார் எண் மூலம் விசாரணை நடத்தி டிரைவர் அசோக் என்பவரை பிடித்தனர். அவர், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவரது மனைவி அர்ச்சனா மற்றும் அவரது உறவினர்களை சவாரிக்கு அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்டதாக கூறினார். உடனே போலீசார் நரேசின் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் நரேஷ், அர்ச்சனா, நரேசின் தந்தை பாபு, தாயார் கோமதி, அர்ச்சனாவின் தந்தை ராமலிங்கம், தாயார் பேபி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அர்ச்சனா நான் தான் குழந்தையை திருடினேன் என்றார். மேலும், அர்ச்சனா தான் கர்ப்பமடைந்திருப்பதாக நாடகமாடி கணவர், குடும்பத்தினரை நம்ப வைத்ததும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக கூறி உறவினர்களை வரவழைத்து நேற்று ஜோதியின் குழந்தையை திருடி சென்றதாகவும் கூறினார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அர்ச்சனாவை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பபதாவது:-
எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. 3 வருடங்களுக்கு முன்பு எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டது. அதன்பிறகு மீண்டும் கருத்தரிக்க முடியவில்லை. இதனால் என்னை பலரும் கேலியாக பேசினர். இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
நான் அடிக்கடி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றேன். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து ஏதாவது ஒரு குழந்தையை திருடி சென்று விடலாம் என திட்டமிட்டேன். அதன்படி கடந்த ஜனவரி மாதம் நான் கர்ப்பமடைந்திருப்பதாக கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறினேன். அவர்களும் அதை நம்பினர்.
ஏற்கனவே எனக்கு கர்ப்பம் கலைந்திருந்ததால் அதை காரணமாக கூறி கணவரை என் பக்கத்தில் வரவிடவில்லை. நாட்கள் செல்ல செல்ல வயிற்றில் துணியை கட்டி கர்ப்பமடைந்திருப்பது போல நடித்ததோடு, அவ்வப்போது ஆஸ்பத் திரிக்கு சென்று வருவது போல நடித்தேன். யாருக்கும் சந்தேகம் வராததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனக்கு வளைகாப்பும் நடத்தினர்.
இந்நிலையில் கடந்த செவ்வாயக்கிழமை லேசாக வயிறு வலிப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அங்கு வளாகத்தில் படுத்துக் கொண்டு அவ்வப்போது பெண்கள் கவனிப்பு பிரிவுக்கு சென்று வந்தேன். அங்கு ஜோதியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தேன். அப்போது அவர் தனக்கு 2-வது பெண் குழந்தை பிறந்ததில் கணவருக்கு விருப்பம் இல்லை என்றும், அவர் தன்னை கண்டிக்கிறார் என கூறினார். எனவே அந்த குழந்தையை திருடி செல்ல முடிவு செய்தேன்.
இதற்கிடையே எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, ஆனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் யாரும் இங்கு வர வேண்டாம் என எனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறி அவர்களை சமாளித்தேன். நேற்று ஜோதி என்னிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். உடனே நான் குடும்பத்தினருக்கு போன் செய்து குழந்தையை தந்து விட்டார்கள். உடனே வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என கூறினேன். அதன்படி அவர்கள் வந்ததும் குழந்தையுடன் காரில் வீட்டுக்கு சென்றோம். குழந்தை ஏக்கத்தில் இவ்வாறு செய்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் எனக்கூறி அர்ச்சனா போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத வண்ணம் இருந்தார். குடும்பத்தினர் அவரை தேற்றினர். பின்னர் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating