மன்னார் கடலில் கடற்படையினரின் கெடுபிடி : மீனவர்கள் பாதிப்பு…!!
மன்னார் நகர் பாலத்தடியிலிருந்து தென் கடல் பரப்புக்கு படகுகளின் மூலம் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நேற்று கடலில் வைத்து கடற்படையினர் திருப்பியனுப்பியதால் சில மணிநேரம் இப்பகுதியில் அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது.
இப்பிரச்சினை குறித்து விடயமறிந்த மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அந்தோனி விக்ரர் சோசை அடிகளார், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பி.சகாயநாதன் மிராண்டா, மன்னார் பங்குத்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் நிலைமை சுமுக நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகரப் பகுதியான பாலத்தடி கடற்கரையிலிருந்து இருநூறுக்கு மேற்பட்ட படகுகளில் பள்ளிமுனை, பனங்கட்டுகொட்டு, உப்புக்குளம், பெரியகடை மீனவர்கள் வழமைபோன்று தென் கடல் பரப்புக்கு மீன்பிடிக்காக சென்றபோது அப்பகுதியில் கடற்கரையோர கடற்படையினர் இம் மீனவர்களை எவ்வித தடையும் விதிக்காத நிலையில் மீன்பிடிக்க அனுமதித்துள்ளனர்.
ஆனால் இம் மீனவர்கள் கடலில் சென்று கொண்டிருந்தபொழுது கடற்படையினர் இவர்களிடம் தொழில் அனுமதிப் பத்திரங்களை பரிசோதித்ததுடன் அவைகளை காண்பித்தபோதும் வேறு பல காரணங்களை கூறி தொழிலுக்கு விடாது அனைவரையும் மீண்டும் கரைக்கு திருப்பியுள்ளனர்.
இதனால் ஐநூறுக்கு மேற்பட்ட மீனவர் கள் தொழிலுக்கு செல்ல முடியாது மீண் டும் கரை வந்து சேர்ந்தனர். இதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
இச் சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் பேராலய பங்குத்தந்தை அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மன்னார் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பி.எஸ்.மிராண்டா, வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன் ஆகியோர் மீனவர்களை அமைதிப்படுத்தியதுடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் சகிதம் வந்த சனி வில்லேஷ் கடற்படை அதிகாரி கே.எஸ்.திஸாநாயக்க ஆகியோருடன் இப் பிரச்சினை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எம்.சோமரட்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.யூ.ஐயசேகர ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும் இன் றைய கால சூழ்நிலைக்கு அமைய குறிப் பிட்ட நேரம் தாழ்த்தி மீன்பிடிக்கச் செல்வ தால் பிரயோசனம் இல்லையென மீனவர் கள் கடலுக்குச் செல்லவில்லை.
Average Rating