யாழ். மாணவர்களின் படுகொலை : மரண விசாரணை அறிக்கை வெளியானது…!!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரு வர் பலியானமை தொடர்பான மரண விசாரணை அறிக்கையானது நேற்றையதினம் யாழ்.நீதிமன்றில் நீதிவானால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பதினெட்டாம் திகதிவரை ஒத்திவைத்த நீதிவான் சதீஸ்கரன், மாணவர் படுகொலை தொடர்பில் கைதான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அந்த சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சதீஸ்கரன் முன்
னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது பலியான
மாணவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் குறித்த சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக குறிப்பிட்டனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் பலியாகியிருந்தனர். இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தின் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்றைய தினம் வரை அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளானது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினரது விசாரணைகளின் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி ரவைகளின் வெற்றுதோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது பலியான மாணவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சயந்தன், கணேசராஜா, வி.ரி.சிவலிங்கம், சுகன்யா கணேசலிங்கம், ஏ.ரன்ஜித் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
நீதிபதியின் மரண விசாரணை அறிக்கை
யாழ்.நீதிவான் சதீஸ்கரனால் குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரண விசாரணை அறிக்கையினை அவர் மன்றில் வெளியிட்டிருந்தார்.
20.10. 2016 அன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த விஜயகுமார் சுலக்சன் துப்பாக்கி சூட்டினால் மரணமடைந்திருந்த நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தினால் நடராஜா கஜன் என்பவர் மரணமடைந்திருந்தார் என்று நீதிவான் தனது மரண விசாரணை தொடர்பான கட்டளையில் குறிப்பிட்டிருந்தார்.
சான்றுப்பொருட்கள் சமர்பிப்பு
குறித்த வழக்கு விசாரணையை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்றைய தினம் வழக்குடன் தொடர்புபட்ட சான்றுப்பொருட்களினை மன்றில் சமர்ப்பித்திருந்தனர். அதாவது துப்பாக்கிக் பிரயோம் நடைபெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயப் பொருட்கள், இரத்த மாதிரிகள் மற்றும் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவையின் வெற்றுத்தோட்டாக்கள் போன்ற பதினெட்டு தடயப்பொருட்களை மன்றில் சமர்பித்திருந்தனர்.
இதன்போது தடயப்பொருட்கள் உட்பட இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரை பூர்த்தியாக்கப்படவில்லை என மன்றில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேரில் கண்ட சாட்சியம் உண்டு
வழக்கு விசாரணையின் போது பலியான மாணவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் குறித்த சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக குறிப்பிட்டதுடன் அச் சாட்சியங்கள் அச்சத்தின் காரணமாக சாட்சியம் அளிப்பதற்கு மறுத்திருக்கலாம் எனவும் எனவே அத்தகைய சாட்சிகளின் பாதுகாப்பை நீதிமன்றினூடாக உறுதிப்படுத்தி அவர்களது சாட்சிகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மின்சார நிலைய அலுவலகம், வங்கி, வெதுப்பக நிலையம் போன்றவற்றில் சி.சி.ரி.வி.கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ள நிலையில் அவற்றிலும் இவ் வழக்குக்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளடங்கியிருக்கலாம். எனவே அத்தகைய தகவல்களை விசாரணையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் மன்றானது கட்டளையை அறிவிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் கைதான பொலிஸார் ஒவ்வொருவரது வாக்குமூலங்களும் மன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை ஒவ்வொன்றிலும் முரண்பாடான கருத்துக்கள் காணப்படும் நிலையில் அவை தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
நீதிவானின் பணிப்புரை
சட்டத்தரணிகளின் வாதங்களையடுத்து நீதிவானால் பின்வரும் பணிப்புரைகள் விடுக்கப்பட்டிருந்தன. அதாவது,
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் வாக்குமூலத்தில் முரண்பாடான நிலை காணப்படுகின்றமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவானது தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். இவற்றை விட பெறுமதியான சாட்சியங்கள் சான்றுப்பொருட்களை பதிவு செய்வது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல்களை சட்டத்தரணிகள் வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பதினெட்டாம் திகதிவரை ஒத்திவைத்துடன் அதுவரை குறித்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை பலியான மாணவர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளான சயந்தன் மற்றும் கணேசராஜா ஆகியோர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு சம்பவம் நடைபெற்ற இடத்தின் மாதிரி வரைபடத்துடன் மேலதிக சான்றுப் பொருட்கள், சாட்சியங்களை பதிவு செய்வது தொடர்பாக நீதிவானின் அனுமதிக்கேற்ப தகவல் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த விஜயகுமார் சுலக்சன் துப்பாக்கி சூட்டினால் மரணமடைந்திருந்த நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தினால் நடராஜா கஜன் மரணமடைந்திருந்தார் என யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் தனது மரண விசாரணை தொடர்பான கட்டளையில் குறிப்பிட்டிருந்தார்.
Average Rating