சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? கட்டுரை

Read Time:16 Minute, 39 Second

article_1477415171-cvbஅந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது.

இந்தச் சாக்குரலின் சத்தங்களுக்கும் நீதியை நோக்கிய கேவல்களுக்கும் என்ன நடந்துவிடப்போகிறது என்று பார்த்தால், புங்குடுதீவுச் சம்பவமாகவும் வவுனியாச் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞனின் மரணமாகவும் இன்னும் எத்தனையோ சாவுகளாகவும் இதுவும் இன்னும் சில நாட்களில் மறந்துவிடப்படும்; அவ்வளவுதான்!

அடுத்து, மரணங்களுக்குப் பின்னர், அடுத்த எழுச்சிக்காக அரசியல்வாதிகள் காத்திருப்பர்; அடுத்த மரணத்துக்குப் பொங்கிப் பீறிடுவதற்காகச் சமூக வலைத்தளங்களும் எதிர்பார்த்திருக்கும்; குற்றமிழைத்த தரப்பு மட்டும், இன்னொரு மன்னிப்பையும் நட்ட ஈடையும் வழங்கிவிட்டுத் தன் துப்பாக்கிகளை மீண்டும் நிரப்பிக்கொள்ளும்.

இந்தக் காலச்சுழற்சியின் காலடிகளில் நின்றுதான் தமிழ் மக்கள் இனியும் தங்களது நல்லிணக்கத்தைப் பொங்கிச் சரிக்க வேண்டுமா?

இந்தக் காலக்கணக்கின் அடிப்படையில்தான், இந்த வருட இறுதியில் தமிழ் மக்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்களா? இதனைத்தான் மிகவும் இறுக்கமான விடயமாக இந்தப் பத்தி ஆராயவிருக்கிறது.

அன்று நடந்தது என்ன?

நிறுத்தாமல் சென்ற ஒரு மோட்டர் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களின் அசட்டைப் போக்கு, அந்த வீதியில் நிலைகொண்டிருந்த பொலிஸாரைச் சீற்றம் கொள்ளவைக்கிறது; அல்லது சந்தேகப்பட வைக்கிறது. அடுத்த தெருவிலிருந்த தமது அணியினருக்குத் தகவல் அனுப்புகிறார்கள். அவர்களும் நிறுத்த முயற்சிக்கிறார்கள்; அந்த மோட்டார் சைக்கிள் நிறுத்துவதாக இல்லை.

அவர்களை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. குண்டு உடலில் பாய்ந்தமையால் ஓர் இளைஞன் சரிகிறான். மாணவர்கள் குண்டு துளைக்கப்பட்டும் இடுப்பெலும்பு முறிக்கப்பட்டும் விழுந்து கிடக்கின்றார்கள். கொஞ்ச நேரத்தில் இரண்டு இளைஞர்களும் அந்த இடத்தில் சடல‍ங்களாகி விடுகிறார்கள். தமிழர் பிரதேசத்திலிருந்து படையினரை அகற்றக்கோரி, பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில், இந்த மாதிரியான ஒரு தாக்குதல் எவ்வாறான ஒரு விளைவை ஏற்படுத்தும் என்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் இந்தச் சம்பவம் நடந்தேறி இருக்கின்றது. போர்க்குற்றங்களைப் புரிந்ததாகச் சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தங்களது படையினர், இவ்வாறான ஒரு சம்பவத்தை மேற்கொண்டால் அது எவ்வளவு தூரம் பழைய உண்மைகளுக்குச் சாதகமான விடயங்களாகிப் போய்விடும் என்ற எந்தப் பயமும் இல்லாமல் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்தேறியிருக்கின்றது.

தமிழ் – சிங்கள உறவென்பதை எவ்வளவோ நுணுக்கமாகக் கவனம் செலுத்திக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் சிங்களப் படையினருக்கு அதிகம் உண்டென்ற உண்மையை கொஞ்சமும் உணரமால் இந்தத் தான்தோன்றித்தனமான, ஈவிரக்கமின்றிய கொலை நடந்தேறியிருக்கின்றது.

இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மீது, பெரும்பான்மை இனம், தங்களது நல்லிணக்கக் கரங்களை இனியாவது தயவோடு நீட்டிக்கொள்ள வேண்டும் என்ற எந்த பிரக்ஞையும் இல்லாமல் இந்த அரக்கத்தனமாக கொலைச் சம்பவம் நடந்தேறியிருக்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்வதற்கு, அந்தப் பொலிஸ் கூட்டத்துக்கு அவ்வளவு துணிச்சலும் சுதந்திரமும் வாய்க்கப்பெற்றிருக்கிறது என்றால் அது உண்மையிலேயே ஆச்சரியத்தை வரவழைக்கும் ஒன்றுதான்.

இப்படியான ஒரு சம்பவத்தைக் கிழக்கில் முஸ்லிம் பிரதேசம் ஒன்றிலோ, அல்லது தெற்கில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் ஒன்றிலோ செய்ய முடியுமா என்றெல்லாம் இந்தப் பொலிஸாரை இப்போது கேட்பதினால் எந்தப் பயனும் இல்லை.

ஆனாலும், இவர்களால் தமிழர் பிரதேசத்தில் இப்படியொரு படுகொலையைச் செய்துவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையைக்கூட இந்த நல்லாட்சி ​தொடர்ந்து அவர்களிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

சரி! இந்தச் சம்பவம் தொடர்பாக இனி யார் – எவ்வாறு – எப்படி நடந்து கொள்ளப்போகிறார்கள்? என்று பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் அலரிமாளிகையிலும் நின்று நீதி கேட்டுப் போராடுவதெல்லாம் ஒன்றுக்கும் உதவாததும் நேரத்தை வீணடிக்கும் முயற்சியாகும். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் ஆணிவேராக ஒரு பிடி இருக்கிறது. அதன் வழியாக இந்த விடயத்தை அணுகுவதும் அதனை நோக்கிய உரையாடல்ப் புள்ளியைத் திறந்துகொள்வதும்தான் இந்தப் பத்தியின் நோக்கம்.

அதாவது, இந்த இரண்டு இளைஞர்களின் கொலை இன்னும் இரண்டு வாரங்களுடன் அடங்கிவிடப்போகும் வெறும் செய்தி மட்டுமென்றாலும், இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வு அதையும் தாண்டியது. இந்தக் கொலையுடன் தமிழர்களின் நிலத்தில் நிற்கும் படையினர் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்காகியிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் என்பதால் அந்தச் சாவின் வெக்கை தமிழர்கள் மத்தியில் இன்னமும் அதிக செறிவுடன் பரவியிருக்கிறது.

எந்தத் தயவு தாட்சண்யமும் பாராமல், எந்தப் பின்விளைவுகளும் ஏற்படாது என்ற பெரு நம்பிக்கையுடன் இவ்வாறான கொடூரமான கொலைகளை அரங்கேற்றக்கூடிய ஒரு படைச்சமூகத்தை இன்னமும் மக்கள் வாழும் பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்ள அனுமதிப்பதும் அதனை வெளியேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதும் இனிவரும் காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. மக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவென்பது எந்த நிலையிலும் சுமூகமாகப் போவதில்லை என்பதை இந்தச் சம்பவம் ஆழமாக உணர்த்தி விட்டது.

அதேபோல, இந்தப் படையினரின் அதே மன இயல்புகளைக் கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் இனிமேல் மக்களுக்கு உதிரத்தொடங்கிவிடும். இந்தச் சம்பவம் வெறுமனே ஒரு துப்பாக்கி சூடென்று அமையாமல் இவ்வளவு காலமும் இந்த அரசாங்கத்தினால் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையுடனிருந்த பலரின் மிச்ச சொச்ச எதிர்பார்ப்புக்களையும் தகர்த்திருக்கிறது.

போரின் வடுக்களை மாத்திரமல்ல, இந்த அரசாங்கத்தாலும் இனி எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் தமிழ் மக்களின் நிரந்தர வலிகளைப் புரிந்து கொள்ளவே முடியாது என்ற உண்மையை இந்தச் சம்பவம் சகல தரப்புக்களுக்கும் எடுத்துக்காட்டி விட்டது. அதிகாரமற்ற சிறுபான்மைத் தேசிய இனமொன்றின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியாத – புரிந்துகொள்ள விரும்பாத பெரும்பான்மை அரசாங்கத்தினால் நல்லிண்ணம் போன்ற உயரிய விடயங்களை என்றைக்கும் சாதிக்க முடியாது என்ற யதார்த்தத்தையும் இந்தச் சம்பவம் சர்வதேச தரப்புக்கு எடுத்துக் கூறியிருக்கிறது.

இரண்டு இளைஞர்களின் படுகொலை இவ்வளவு பாரமான செய்திகளை உரையாடியிருக்கிறதா? அல்லது இவ்வளவு பாரதூரமாக நோக்கப்படவேண்டுமா என்று ஆச்சரியப்படலாம்.

இந்தப் புள்ளியில் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இது ஒற்றைச் சம்பவம் அல்ல; தொடர்ச்சியாக அரங்கேற்றப்படும் எண்ணற்ற சம்பவங்களின் திரட்சியாகும். இந்தச் சம்பவங்களினால் பிளந்துபோய் இருக்கும் மக்களின் மனவெடிப்புக்களைத் தொடர்ந்தும் பிராண்டிக்கொண்டிருப்போரின் குரூரமான ஒரு சீண்டுதலாகவும் பார்க்க முடியும். இதற்கு சமவலுவுடைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சரியான தருணம் இது.

அப்படியானால், தற்போது மேற்கொள்ள வேண்டிய அதி உச்சச்செறிவுடைய தமிழர் தரப்பின் பதிலடி எதுவாக இருக்கமுடியும்?

இந்தச் சம்பவம் பற்றிச் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தலைவர்களும் கூடி ஆராய்ந்திருக்கின்றனர். இதன்படி இந்தச் சம்பவத்தையும் கொலையையும் கண்டித்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு ஹர்த்தாலை செய்வது என்று தீர்மானித்துள்ளார்களாம்.

இதைக் கேட்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இப்படி வடக்கில், அதுவும் தமிழர்களால் மட்டும் செய்யப்படும் ஹர்த்தாலினால் நட்டமடைவது தமிழர்களே. இதனால் அரசாங்கத்துக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது.

இப்படியான ஹர்த்தால், கதவடைப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் காலம்காலமாகத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுவரும் படுகொலைப்படலம் போன்றதொரு சம்பிரதாய நிகழ்ச்சியாகப்போய்விட்டது.

அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் என்பன, எப்போதும் நிபுணத்துவமும் சாணக்கியமும் பயனும் உடையதாக இருக்க வேண்டும். குறிப்பாக எதிர்ச்சக்திகளை அது உலுப்புவதாக, குழப்பத்தில் ஆழ்த்துவதாக, நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

அப்படியானால், இப்போதைய நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ஏன் இராஜினாமைச் செய்யக் கூடாது? அது அரசியல் நெருக்கடியை அரசாங்கத்துக்குக் கொடுக்கும்; சர்வதேச சமூகத்துக்கு அதிர்ச்சியாக இருக்கும். பிராந்திய மற்றும் வெளிச்சக்திகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக நாடாளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இதைச் செய்வது பொருத்தமாக இருக்கும். இரண்டு மாணவர்களின் கொலைக்கு இப்படி ஒரு பெரிய முடிவை எடுத்து, 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய பதவிகளை இழக்கலாமா? என்று யாரும் கேட்கலாம். மக்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றுவதே, பிரதிநிதிகளின் கடமை. அவர்கள் நம்பிக்கை இழக்கும்போது தாங்கள் அதற்குப் பதிலான நடவடிக்கையை எடுப்பதே மக்கள் தலைவர்களுடைய பொறுப்பு. இது ஒரு துணிச்சலான நகர்வு; அரசியலில் ஈடுபடுவது என்பதும் அரசியலில் செயற்படுவது என்பதும் துணிச்சல் மிக்க செயற்பாடுகளே. துணிவோடு முடிவுகளை எடுப்பதே வீரமாகும். தவிர வீரத்தைப் பற்றிப் பேசுவதல்ல; இங்கே தேவையானது, அதை நிகழ்த்திக் காட்டுவதும்தான். இங்கே யாரும் உயிரைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை; மக்கள் உங்களுக்குத் தந்த பதவியை மக்களுக்காக இந்த இடத்தில் இழக்கத் தயாராகுங்கள். அதேமக்கள் மீண்டும் அதைவிட இரட்டிப்புப் பரிசைத் தருவார்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கு நெத்தியடியாக தமிழர் தரப்பு மேற்கொள்ளக்கூடிய இந்த நகர்வு பயங்கரமான நிலைமாற்றத்தை ஏற்படுத்தும். தமிழர் தரப்பின் உண்மையான வலியை அடித்துக்கூறும். எதிர்பாராத அதிர்ச்சியை கொடுக்கும். மெய்யாகவே இந்தப் படுகொலையைக் கண்டிப்பதாக இருந்தால். அதை வெறுமனே ஹர்த்தால் என்று சுருக்கி, இறந்தவர்களையும் இருப்பவர்களையும் அவமானப்படுத்த கூடாது.

இப்படியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு கையிலெடுக்குமா?அல்லது பழைய பல்லவியை போல ஹர்த்தால், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன அறிக்கைகளுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதற்கெல்லாம் காலம்தான் பதில்சொல்லவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் 74 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது…!!
Next post படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி..!!