தென்னிலங்கையிலானால் நிலைமை மோசமாகியிருக்கும் : யாழ்.மக்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி…!!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவத்தின்போது அமைதிகாத்தமைக்கு யாழ்.மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். தென்னிலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெற்றிருந்தால் இதைவிட மோசமான அமைதியற்ற தன்மை ஏற்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மாணவர்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனைகளை நாமும் அறிவோம். இதனால் சில ஆர்ப்பாட்டங் கள், போராட்டங்கள் இடம்பெற்றன. அப்படியான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நியாயமானவைதான்
என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். மேலும் கையெழுத்
துப் போடுகின்ற ஒப்பந்தத்தைவிட உள்ளத்தில் மனச்சாட்சியில் இருக்கின்ற உடன்படிக்கைதான் முக்கியமானது என்பதை இந்தவிடயத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தினரிடம் இருந்த 450 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்துகொடுப்பதற்கான அனுமதியை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளேன். கடந்த ஒரு வருடமாக இதேபோன்று மக்களுக்கான
காணிகளை விடுவித்துள்ளோம். அதேபோன்று மேலும் காணிகளை மக்களிடம் விரைவாக ஒப்படைப்போம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 100 வீட்டு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்
புதிய அரசியமைப்பு வரைபுத்திட்டம் வெளிவருவதற்கு முன்னரே சிலர் தவறாக செயற்படுகின்றார்கள். பலர் விகாரைகளுக்குச் சென்று பெ ளத்த மத குருமார்களுக்கு தவறான விடயங்களை செய்து வருகின்றார்கள். குறிப்பாக பௌத்த மதத்திற்கு தற்போதுள்ள முக்கியத்தும் புதிய அரசியலமைப்பில் இல்லை என்று கூறிவருகின்றார்கள். மேலும் நாம் நாட்டைக் காட்டிக் கொடுக்கப்போகின்றோம் எனவும் நாட்டைப் பிளவுப் படுத்தப் போகின்றோம் எனவும் கூறுகின்றனர். படையினர் யுத்தம் செய்து கட்டிக்காத்த இந்த நாட்டை பிரிக்கப்போகின்றோம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முழுவதையும் நான் நிராகரிக்கின்றேன்.
அரசியலமைப்பு உருவாக்கப்டும்போது எங்களால் செய்யப்படவேண்டிய கடமைகள் பொறுப்புகள் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். சிலர் வேறு நாடுகளில் உள்ள அரசியலமைப்பைப் பற்றி பேசுகின்றார்கள். வேறுநாடுகளின் அரசியல் அமைப்பு எங்களுக்குப் பொருந்தாது. எங்களுக்கு பொருந்தக்கூடிய அரசியலமைப்பைத்தான் உருவாக்கவேண்டும். எல்லோருடைய ஆதரவையும் பெறக்கூடிய விதத்தில் உருவாக்க வேண்டும். அந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ளவேண்டும். எமது தேசத்தில் மீண்டும் இரத்த ஆறு ஓட அனுமதிக்கக்கூடாது.
எனவே நாட்டில் வாழுகின்ற படித்த புத்திமான்கள் கல்விமான்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இந்த நாடு அனைத்து மக்களும் வாழுகின்ற தேசமாகும். அது மொழியால் இனத்தால் பிரியக்கூடாது. நாமனைவரும் ஒன்று சேர்ந்து அந்தக்கடமையை நிறைவேற்றுவோம்.
வட பகுதி மக்களை பொறுத்தவரை முக்கிய விடயமாக நாங்கள் அனைவரும் பொறுப்பாக செயற்பட வேண்டும் எனவும் சில பிரச்சினைகள் அவசரமாக தீர்வு கிடைக்கவேண்டும் என நினைக்கின்றார்கள். இவ்வாறு நினைப்பது சமுகத்தில் வாழ்கின்ற எல்லா மக்களுடையதும் சுபாவம். ஆனால் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி தெ ளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எங்களை அமைதியற்ற நிலையில் பார்ப்பதற்கு சிலர் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இத்தகைய கபளிகரமான செயற்பாட்டுக்கு நாங்கள் இடமளிக்கக்கக்கூடாது. நாங்கள் பெற்றுக்கொண்ட சமாதானத்தை இழந்து போகக்கூடாது. வடபகுதி மக்கள் மிகவும் பொறுமையோடும் செயலாற்றுகின்றார்கள் என்பது எமக்குத் தெரியும். இந்தப் பொறுமையும் அமைதியும்தான் எமக்கு முக்கியமாகும். நீங்கள் அமைதியாக செயற்படுவதற்கு நான் நன்றியைத் தெரிவுத்துக்கொள்கின்றேன்.
கடந்த கால வரலாற்றை நாம் அறிவோம். அது கடுமையான இருள் சூழ்ந்த காலம். அந்த யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகின்றன. எனவே சமாதானத்தை மீள உருவாக்குவதற்காக பணிபுரிந்த முப்படையைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் நன்றிகளைக் கூருகின்றோம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படாமலிருக்க செயற்படவேண்டியதுதான் எங்கள் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்புப் படையினரும் அதற்கெதிரானவர்களும் கைளில் ஆயுதங்களைக் கொண்டுதான் யுத்தம் செய்தார்கள்.
இன்று அந்த முப்படையினர் நல்லிணக்கத்திற்காக தமது கைகளை நீட்டுகின்றார்கள். சாதாரண பொதுமக்களுடன் சிநேக பூர்வாக முப்படையினரும் பணியாற்றிவருகின்றார்கள். இதுதான் முப்படையினருடைய பொறுப்பும் கடமையுமாக இருக்கின்றது. இவற்றைத்தான் முப்படையினரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என எனக்குத் தெரிகின்றது.
இதன் காரணமாகதான் இராணுவத்தினரை இணைத்து நல்லிணக்க புரம் என்ற வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிக்கின்றோம். இதனை ஒரு நல்ல திட்டமாகவே கருதுகின்றேன். இங்கு 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இராணுவத்தில் உள்ள பொறியியலாளர் பிரிவிற்கு எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்த வீட்டின் காணியுடன் சேர்ந்த வீட்டின் பெறுமதி 28 இலட்சம் ரூபாவாகும். அழகாகவும் முறையாகவும் இவை கட்டப்பட்டுள்ளன.
இராணுத்தினரிடம் இருந்த 450 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கான அனுமதியை அரசாங்க அதிபரிடம் இன்று கையளித்துள்ளேன். கடந்த ஒரு வருடமாக இதேபோன்று மக்களுக்கான காணிகளை விடுவித்துள்ளோம். அதேபோன்று மேலும் காணிகளை மக்களிடம் விரைவாக ஒப்படைப்போம்.
யாழ்.மாவட்டம் உட்பட குறிப்பாக வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த வீட்டுத்திட்டங்களை முப்படையினர் மூலமாகவும் கம்பனிகள் மூலமாகவும அமைப்பதற்கு செயலாற்றி வருகின்றோம். அந்த வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு அம்சமாகவே இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் வேகமாக இத்தகைய வேலைத்திட்டங்களை செய்து முடிப்போம்.
இது மட்டுமன்றி வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை செய்து கொடுப்பதற்கும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
நாங்கள் வெற்றி கொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன. முதலாவதாக இனங்களுக்கு மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் .வெற்றி கொள்ள வேண்டும். மற்றையது மக்களுடைய வறுமையைப் போக்க பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வறுமை, ஏழ்மையை இல்லாமலாக்கும் செயற்பாட்டை இந்தப் பகுதியில் மாத்திரமல்ல நாட்டில் உள்ள எல்லா மாகாணங்களிலும் செயற்படுத்த வேண்டியுள்ளது.
நாங்கள் புதிய அரசாங்கம் என்ற வகையில் எங்களுக்கு கடன்களும் பல உதவிகளும் வெ ளிநாடுகளிலிருந்து ஏராளமாக கிடைத்து வருகின்றன. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் வெளிநாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. இதன்காரணமாக 2017 ஆண்டை வறுமையிலிருந்து விடுபடுகின்ற ஆண்டாக பிரகடணப்படுத்தி இருக்கின்றோம். நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டை கடந்த வருடத்திலிருந்து மேற்கொண்டிருக்கின்றோம். இதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன். இத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போது இடையிடையே சில தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
யாழ். மக்களுக்கு நன்றி
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.. இந்தச் செய்தி எனது காதுக்கு எட்டியதுடன் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அதற்காக விசேட குழுவொன்றினை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பிவைத்திருந்தேன். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச் சம்பவங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சகோதர மாணவர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டார்கள். யாழ்ப்பாண மக்களும் கலக்கமடைந்தார்கள். அவர்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனைகளை நாமும் அறிவோம். இதனால் சில ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் ஏற்பட்டன. அப்படியான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நியாயமானதுதான் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். யாழ்ப்பாணத்தில் அமைதியான நிலையே காணப்பட்டது. ஆனால் கொழும்பில் இவ்வாறு ஏற்பட்டிருந்தால் இதைவிட மோசமான அமைதியற்ற நிலை ஏற்பட்டிருக்கும். இத்தகயை செயற்பாடுகள் நடைபெறும் போது மாணவர்கள் கலவரமடைந்திருப்பது புதுமையன காரியமல்ல.
மோசமாக இருந்திருக்கும்
எமது நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் தங்களுடைய உரிமைகளை மிகச் சரியாக எடுத்துக்காட்டுகின்றார்கள். எனவே இச்சம்பவம் தொடர்பாக அமைதியாக செயற்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன். ஆனால் தென்னிலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெற்றிருந்தால் இதைவிட மோசமான அமைதியமற்ற தன்மை ஏற்பட்டிருக்கும். இவ்வாறான மோசமான சம்பவங்கள் ஏற்படாத விதத்திலிருப்பதற்கு அனைத்து பிரிவினரும் செயற்படவேண்டும்.
ஊடகங்களின் பொறுப்பு
இவ்வாறான சம்வங்கள் இடம்பெறும்போது ஊடகங்கள் மிகக் கவனமாக செயற்பட வேண்டும். சில ஊடகங்கள் தங்கள் செய்திகள் ஊடாக மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டன. . ஆனால் சில ஊடகங்கள் மக்களை குழப்பும் விதத்திலும் அமைதியமற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் செயற்பட்டுள்ளன. எனவே எல்லா விதமான உரிமையும் சுதந்திரமும் உள்ளது என்பதற்காக இப்படியான சம்பவம் இடம்பெறும்போது நாட்டில் அமைதியும் சமதானமும் ஏற்படும் விதத்தில் ஊடகங்கள் செயற்படவேண்டும்.
தொலைக்காட்சியைப் பார்த்தாலும் பத்திரிகைகளைப் பார்த்தாலும் அவை மக்களின் மனங்களை அமைதியடையச் செய்வதாக இருக்கவேண்டும். இதை விடுத்து மக்களை குழப்பம் விளைவிக்கச் செய்வது தவறான விடயமாகும். ஊடகங்கள் எப்போதும் சமுகத்தில் அமைதியையும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக செயற்படவேண்டும்.
மக்களுக்கு பொறுப்புத் தன்மையை ஏற்படுத்தவேண்டும். ஊடகங்கள் தங்களுடைய பொறுப்புக்களை சரியாக செய்யாவிட்டால் ஒரு நாட்டை நிர்மூலமாக்கிவிட முடியும். எனவே அவ்வாறான செயலைச் செய்யும் போது அவர்கள் அரசியல் ரீதியில் செயற்படக்கூடாது. எனவே நாங்கள் எப்போதும் பொறுமையோடும் கடமையுணர்வோடும் செயற்படவேண்டும். கடமையாற்றும் போது நாட்டு நன்மைக்காக மக்களுக்கு தீமை ஏற்படாத வகையில் ஒன்று பட்டு செயற்படவேண்டும். எனவே மக்களை அமைதியாக இருக்கக்கூடிய விதத்தில் செயற்பட்ட ஊடகங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவைஎல்லா வற்றையும் வைத்துக்கொண்டு நாங்கள் நல்ல நாட்டைக் கட்டியெழுப்ப உறுதிபூணவேண்டும்.
நாங்கள் நாட்டில் தேசிய நல்லிக்கத்தை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியல் யாப்பை உருவாக்கி வருவது யாவருக்கும் தெரியும். வடபகுதி மக்கள் என்னைத் தெரிவு செய்வதற்காக அவர்கள் அளித்த உதவியை நான் மறக்க மாட்டேன். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா உரையாற்றும் போது தமிழ் மக்கள் எந்த விதமான உடன்படிக்கையும் இல்லாமல் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று சொன்னார். எனவே கையெழுத்துப் போடுகின்ற ஒப்பதந்தத்தைவிட உள்ளத்தில் மனச்சாட்சியில் இருக்கின்ற அந்த உடன்படிக்கைதான் முக்கியமானது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் மனச்சாட்சியின் ஊடாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக நாமனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும். எமது நாட்டில் ஒற்றுமையீனத்தை இல்லாமல் செய்வதற்கு செய்யப்பட்ட காரணங்கள் இந்த நாட்டில் பல தசாப்தங்களாக இருந்துள்ளன. அது இறுதியில் யுத்தமாக உருவானது. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றது. யுத்தத்தின் கொடுமைகளை நாங்கள் எல்லோரும் அனுபவித்துள்ளோம். மீண்டும் யுத்தம் ஏற்படாமலிருக்க வேண்டுமாயின் நாங்கள் எல்லோரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது தான் உருவாகியுள்ளது.
இதைப்பற்றி பலர் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்கின்றார்கள். கேலியாக பேசுகிறார்கள். இத்தகைய செயற்பாட்டுக்காக பொருத்தமற்ற வகையில் செயற்படுகின்றார்கள். ஆனால் இது குறைவாக மதிப்பீடு செய்யக்கூடிய விடயமல்ல. கடந்த 50,60 வருட காலமாக இதைப்பற்றிய அனுபவங்கள் எம்மிடம் உள்ளன. நாடு என்ற ரீதியில் நல்ல தீர்மானத்தை எடுப்பதற்கு நல்ல சந்தர்ப்பமாக தற்போதைய சூழலுள்ளது. நாங்கள் அரசியமைப்பு மூலமாக எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பைத்தான் உருவாக்கப்போகின்றோம். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பை உருவாக்கி வருகின்றோம் என்றார்.
Average Rating