மும்பையில், பயணிகள் கப்பல் முனையம்: சுற்றுலா பயணிகளை அதிகரிக்க திட்டம்…!!

Read Time:6 Minute, 11 Second

201610300732252949_passenger-ship-terminal-to-set-in-mumbai-plans-to-increase_secvpfமும்பை துறைமுகம் நாட்டின் மிகவும் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். எனினும் இங்கு பெரும்பாலும் வணிக கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தநிலையில் மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தி வருவாய் ஈட்ட மும்பை துறைமுக பொறுப்பு கழகம் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி வரும் மே மாதம் வரை 59 பிரமாண்ட பயணிகள் கப்பல்கள் மும்பை துறைமுகம் வர உள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்க போதிய இடவசதி இல்லாததால் தற்போது மும்பை துறைமுகத்திற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் கப்பல் வருவதில்லை.

இந்தநிலையில் தனது முதல் பயணத்தை தொடங்கிய ஜெர்மனி சுற்றுலா பயண கப்பல் ‘ஜென்டிங் டிரிம்’ நேற்று மும்பை வந்தது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த கப்பல், மும்பை துறைமுகத்தில் இருந்து சுமார் 1,900 பயணிகளை ஏற்றிக் கொண்டு இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக சிங்கப்பூர் சென்றடைகிறது.

இந்த கப்பல் போக்குவரத்து சேவையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்க நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்கள் அனைத்திலும் பயணிகள் முனையம் அமைக்க முடிவு எடுத்திருக்கிறோம். நாட்டில் 200-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் இருக்கின்றன.

பயணிகள் முனைய வசதியை அனைத்து துறைமுகங்களும் பெற வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். உள்ளூர் பொருளாதாரம் பயனடையும் வகையில், கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது.

மேலும், மும்பையில் உள்ள துறைமுகம் சர்வதேச அளவில் 5-வது இடத்துக்குள் வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. நாட்டின் மிகவும் பழமைவாய்ந்த துறைமுகம் ஒன்றில், நவீன சர்வதேச கப்பல் முனையம் கட்ட அரசு ரூ.200 கோடிக்கும் மேல் முதலீடு செய்கிறது.

துபாய் மற்றும் சிங்கப்பூர் நாட்டு துறைமுகங்களை காட்டிலும் மும்பை துறைமுகத்தை சிறப்புவாய்ந்ததாக மாற்றம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதுபோன்ற மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளும்போது, வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். இந்த முயற்சிகளால் நிச்சயம் வேலைவாய்ப்பு பெருகும்.

இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

முன்னதாக, மும்பை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சஞ்சய் பாட்டீயா நிருபர்களிடம் கூறியதாவது:-

பயணிகள் கப்பல் போக்குவரத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதன்படி மும்பை துறைமுகத்தில் பயணிகள் கப்பல் முனையம் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.

இந்த பிரமாண்ட பயணிகள் கப்பல் முனையம் அரசு, தனியார் பங்களிப்புடன் ரூ.225 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ.130 கோடியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்தது.

கப்பல் முனையம் சுமார் 2 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. முனையம் அமைக்கும் பணியை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் துறைமுகத்தின் நீண்டகால வசதிக்காக ‘கோஸ்டா சிப்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் பயண கப்பல்கள் மும்பையில் இருந்து கிளம்பி, வந்து சேர்வதற்கான பணிகளில் உதவுவார்கள்.

இவ்வாறு சஞ்சய் பாட்டீயா கூறினார்.

இதுதவிர பயணிகள் கப்பல் இயக்குபவர்களுக்கு ஊக்க தொகையை அதிகம் வழங்கவும் மும்பை துறைமுகம் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு கட்டணங்களில் விலக்கு அளிக்கவும், சுங்க நடவடிக்கைகளில் முறையான வழிமுறைகளை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் உள்நாட்டு சுற்றுலா கப்பல் திட்டத்தை அறிமுகம் செய்வதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து மும்பை துறைமுக பொறுப்பு கழகம் ஆலோசித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது…!!
Next post கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு இந்த உணவுகள் மிக அவசியம்…!!