வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற அமிர்தலிங்கம் ஆற்றிய உரை…!! கட்டுரை
1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆற்றிய உரையின் தொடர்ச்சியில் அவர், “நான் உங்கள் முன் வாசித்த எமது “வட்டுக்கோட்டைத் தீர்மானமானது” நாம் எந்த அடிப்படைகளில் ஒரு சுயநிர்ணய உரிமையுடைய தனியான தேசம் என்பதை தௌிவாக விளக்கியது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தனியான தேசமொன்றை உருவாக்கும் அடிப்படைகள் பற்றிய அரசியல் விஞ்ஞானப் பாடவிளக்கமொன்றை என்னால் இங்கு தரமுடியாது. சுருக்கமாகச் சொல்வதாயின் ஒரு பிராந்தியம் சார்ந்து வாழும் பொதுவான மொழி, மதம், பாரம்பரியம் மற்றும் கலாசாரம் கொண்ட அதேவேளை ஒரு தேசமாக வாழத் திடசங்கற்பம் பூண்ட மக்கள் கூட்டத்தை நாம் ஒரு தனித்தேசம் என வரையறை செய்யலாம்.
இப்போது இதை நாம் இந்த நாட்டுக்குப் பொருத்திப்பார்ப்போம். இங்கே இருவேறுபட்ட மொழிகளைப் பேசும், இருவேறுபட்ட மக்கள் கூட்டமுண்டு. அவர்கள் பெருமளவுக்கு இருவேறுபட்ட மதங்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் இருவேறுபட்ட பாரம்பரியத்தையும் கலாசாரத்தினையும் கொண்டுள்ளார்கள்.
அந்நியர்கள் அவர்களை ஒன்றாக ஆளும் வரை, இவ்விரு மக்கள் கூட்டத்தினரும் வரலாற்று ரீதியாக வெவ்வேறாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். 1833 வரை நாம் வேறுபட்டே வாழ்ந்து வந்திருக்கிறோம். அந்நியர் எம்மை ஒன்றாக்கினார்கள். ஆங்கிலக் கல்வி எம்மை ஒன்றிணைத்தது. இதனால் எமது முன்னைய தலைவர்கள் எம்மை ஒரு தேசமாக எண்ணினார்கள். அவர்கள் “சிலோன்” தேசம் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
இங்கே கௌரவ உறுப்பினர் மெரில் காரியவசம் அவர்கள் தமிழர்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை என்றார். ஆனால் இலங்கை தேசிய காங்கிரஸைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக இருந்தவர் சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம்; அவர் ஒரு தமிழர். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் தமிழர்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லையென” என்று பேசினார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மெரில் காரியவசம், “நாம் அதைப்பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கையர் யாவருக்குமாகப் போராடினார்; தமிழர்களுக்காக மட்டுமல்ல” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம்,
“சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம், சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர்.ஜேம்ஸ் பீரிஸ், எஃப்.ஆர்.சேனநாயக்க உட்பட பல தலைவர்கள் ஒன்றாக இணைந்தார்கள். ஆகவே தமிழர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை என்று மெரில் காரியவசம் போன்ற கௌரவ உறுப்பினர்கள் சொல்வதானது இரக்கமற்றது; நியாயமற்றது மற்றும் உண்மையற்றது. எமது முன்னைய தலைவர்கள் ஒரு பொதுத் தேசம் உருவானதாக எண்ணினார்கள்.
ஆனால் நான் வருத்தத்தோடு சொல்கிறேன், 1948 இன் பின் இடம்பெற்ற நிகழ்வுகள், இந்நாட்டில் இரண்டு தேசங்களும் வேறுபட்டே வாழ்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. இங்கு ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றமானது, ஒரு தேசமானது – அதாவது பெரும்பான்மை தேசமானது இந்நாட்டின் அதிகாரக் கட்டிலில் அமர்ந்துகொண்டது; சிறுபான்மைத் தேசமானது அதன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட தேசமாகிவிட்டது. கடந்த இரண்டு தசாப்தகாலமாக எமது போராட்டமானது எம்மிடமிருந்து ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பது சார்ந்ததாக உள்ளது” என்று பேசினார்.
இத்தோடு சபை ஒத்திவைக்கப்பட்டு மாலை 4.30 மணிக்குப் பிரதிச் சபாநாயகர் பாகீர் மார்க்கார் தலைமையில் கூடும் எனச் சபாநாயகர் அறிவித்தார்.
மாலை, சபை பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் மெரில் காரியவசம் எழுந்து, தான் முன்னர் கூறியதொரு விடயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகவும் தான் சேர். பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோர் இலங்கைத் தேசத்துக்காக உழைத்தவர்கள்; வெறுமனே தமிழ் தேசத்துக்காக மட்டும் உழைத்தவர்கள் அல்ல என்றே கூறியதாகவும் இலங்கைத் தேசம் முழுவதற்குமாகப் போராடிய அவர்கள் மீது தான் அளப்பரிய மரியாதை கொண்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசத்தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தேநீர் இடைவேளைக்கு முன்பதாக நான் தேசம் என்பதன் வரைவிலக்கணம் பற்றியும், இலங்கையானது இரண்டு தேசங்களது வீடு என்பதையும், காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரமானது சுதேசிகளிடம் கைமாறியபோது பெரும்பான்மைத் தேசம் அவ்வதிகாரத்தைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததையும், சிறுபான்மைத் தேசம் அடிமைகளாக்கப்பட்டதையும் பற்றி எடுத்துரைத்திருந்தேன்.
சுதந்திர காலம் முதல் வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இயற்றிய சட்டங்களும், எடுத்த பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளும் இந்நாட்டில் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரம் மீதுகொண்டுள்ள பங்கைக் குறைப்பதாகவே அமைந்தது. நான் உங்கள் முன் வாசித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் “வட்டுக்கோட்டைத் தீர்மானமானது” சுதந்திர காலம் முதல் இந்நாட்டில் சிறுபான்மையினருக்கெதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் பற்றியும், எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகளைப் பற்றியும் தௌிவாக எடுத்துரைத்தது.
இங்கே சமத்துவம் என்பது அர்த்தமற்ற பேச்சாகிவிட்டது. இலங்கையின் மிகமுக்கியமான வரலாற்றாசிரியர்களில் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டவருமான பேராசிரியர் கே.எம்.டி சில்வா, அண்மையில் “இலங்கையில் பாகுபாடு” என்றொரு தனிக்கட்டுரையை எழுதியுள்ளார்.
இலங்கையில் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்க அரசியலைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். நான் அவரது கட்டுரையிலிருந்து நேரடியாக மேற்கோள்காட்டுகிறேன்: ‘சிங்கள பௌத்தர்களானவர்கள் இலங்கை மக்களில் பெரும்பான்மையும் மேலாதிக்கமும் கொண்ட இனக்கூட்டமாவர்கள். அவர்களே எசமானர்களும், ஆட்சியாளர்களுமாவார்கள். பல நூற்றாண்டுகளின் பின் அவர்கள் ஆட்சியதிகாரத்தை மீண்டும் பெற்றுள்ளார்கள். அவர்கள் அதனை நன்கு அறிந்துள்ளார்கள்; சிலவேளைகளில் தேவைக்கதிகமாக அதனை அறிந்துள்ளார்கள்.
மனித இயந்திரமாக இந்நாட்டைக் கருதினால், அவர்களே இந்த நாட்டினை இயக்கும் ஒரே தனி வலுவாகிறார்கள். அவர்களின் விருப்பமும், அபிலாஷைகளுமே இந்நாட்டை இயக்குகிறது. மற்றைய எந்த அம்சமும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை…” என்று குறிப்பிட, இடையில் குறுக்கிட்ட நிதியமைச்சர் றொனி டி மெல், “இந்தத் தனிக்கட்டுரை எப்போது எழுதப்பட்டது” என்று கேள்வியெழுப்பினார். அவரின் கருத்து இது 1956 களில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அமிர்தலிங்கமோ, “இது அண்மைக்காலத்தில் எழுதப்பட்டது” என்றார். தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம், “நாம் இந்த நாட்டுக்கான அரசியலமைப்பொன்றைப் பற்றிக் கருத்திற்கொள்ளும் போது, ஒருதரப்பு மக்களினது அபிலாஷைகளை மட்டும் கருத்திற்கொள்ளுதல் கூடாது. அந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் மேலாதிக்கமுடையதாக இருக்கலாம்; அரசியல் ரீதியில் பலம் வாய்ந்ததாக இருக்கலாம்; தேர்தலைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையுடையதாக இருக்கலாம்.
ஆனால் அவர்களினுடைய நிலைப்பாட்டை அரசியல் சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால்தான் இந்தப் பிரச்சினை வருகிறது. கடந்த 30 ஆண்டுகாலமாக பல்வேறு விடயங்களில் ஏற்பட்ட பிரச்சினை இது. முதலாவது பிரச்சினை குடியுரிமைப் பிரச்சினை. இந்நாட்டின் ஒரு பகுதிக் குடிமக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமை பறிக்கப்பட்டு, அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாததாக்கப்பட்டு அவர்களுக்குரித்தான பிரதிநிதித்துவம் பெரும்பான்மையினரின் கைக்குச் சென்றது. இந்நாட்டில் 70 சதவீதத்தினரின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் 80 சதவீதம் இருக்கிறார்கள்.
குடியுரிமைச் சட்டத்தினாலும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத் திருத்தத்தினாலும் நிகழ்ந்த ஜனநாயகச் சிதைவு இது. இதன் பிறகு வந்தது மொழிச் சட்டங்கள். நான் எனது பேச்சில் தமிழ் மக்கள் தமது மொழியுரிமைகளுக்காக தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்” என்று சொல்லும்போது குறுக்கிட்ட, றொனி டி மெல் “அந்தப் போராட்டத்தை இப்போது வென்றுவிட்டீர்கள்” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “இந்தப் புதிய அரசியலமைப்பு மசோதாவிலுள்ள ஏற்பாடுகள் கடந்த 22 வருடங்களாக இருந்த நிலையை விடச் சற்று முன்னேற்றகரமானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். புகழப்பட வேண்டியவற்றை புகழ்வது அவசியம் எனக் கருதுபவன் நான். ஆனால், நான் முன்னும் சொன்னது போல, இங்கு சமத்துவம் என்பது இன்னும் இல்லை” என்றார். இதன்போது குறுக்கிட்ட றொனி டி மெல், “இங்கு இனரீதியான பாகுபாடு ஏதுமில்லையே? இந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இனப்பாகுபாட்டுக்கு எதிரான சட்ட ஏற்பாடு மசோதாவிலுள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “சோல்பரி அரசியலமைப்பின் 29 ஆம் சரத்து பாகுபாட்டுக்கு எதிரான பாதுகாப்பாக இருந்தது. அதனால் விளைந்த பயன் என்ன? பாகுபாடு பெருகியது; பாகுபாடு கொண்டு நடத்தப்பட்டது; அவர்கள் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்; ஏறத்தாழ பத்து லட்சம் மக்களின் குடியுரிமையைப் பறித்தார்கள். சட்டம் நிர்க்கதியற்று நின்றது. இப்போது இந்த மசோதாவில் கூடத் தமிழ்மொழியின் நியாயமான ஆனால், சமத்துவமற்ற பயன்பாடு பற்றிச் சில ஏற்பாடுகள் இருப்பினும் தமிழ் மொழியுரிமையைச் செயல்படுத்தத்தக்க அல்லது நடைமுறைப்படுத்தத்தக்க ஏற்பாடுகள் ஏதுமில்லை. உத்தியோகபூர்வ மொழி தவிர்ந்த ஏனைய மொழிமூலம் பொதுச்சேவையில் இணைபவர்கள் உத்தியோகபூர்வமொழியில் தேர்ச்சிபெறுதல் அவசியமாகும் என்று இந்த புதிய அரசியலமைப்பு மசோதா கூறுகிறது. தமிழ் மக்கள் நாட்டின் எப்பகுதியிலும் தமிழில் தமது வேலைகளைச் செய்துகொள்ள முடியும் என்ற ஏற்பாடு நிதர்சனமாக வேண்டுமென்றால் பொதுச்சேவையிலுள்ள அனைவரும் தமிழ் மொழி அறிவைப் பெறுதலும் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும்.
காலனித்தவ காலத்தில் கூட இரண்டு தேசிய மொழியறிவும் பொதுச்சேவையிலுள்ளோருக்கு அவசியமாகவிருந்தது” என்றார். இதன்போது குறுக்கிட்ட றொனி டி மெல், “நான் இரண்டு தமிழ் மொழிப் பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளேன்” என்றார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “அதுதான் நீங்கள் விதிவிலக்கு என்கிறேன். இங்கு தமிழ்மொழி கற்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகள் ஏதுமில்லை. அரசாங்கத்தின் கஷ்டம் எனக்கு விளங்குகிறது. 1966 இல் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோதுகூட சிங்கள பொதுச்சேவை உத்தியோகத்தர்களை தமிழ் கற்கச் சொல்லும் திராணி அவர்களிடம் இருக்கவில்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் எசமானர்கள்; ஆள்பவர்கள். அவர்களிடம் எப்படிக் கேட்பது? ஆனால், தமிழ்ப் பொதுச் சேவையாளரிடம் சிங்களம் கற்கச் சொல்லலாம்; அப்படிச் செய்யாவிட்டால் பணி நீக்கலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம், பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் படியான தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் பற்றியும் அதன் அவசியப்பாடு பற்றியும் அமுலாக்கத்தின் பின்னடைவு பற்றியும் வடக்கு- கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றியும் காணியுரிமை பற்றியும் பேசினார். தொடர்ந்து மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றிய வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
தனது பேச்சின் இறுதியில் அமிர்தலிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார். “புதிய அரசியலமைப்பினை வடிவமைப்பவர்களிடம் நான் எதிர்பார்ப்பது, அவர்கள் நாட்டின் நிதர்சனங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறான ஏற்பாடுகளைச் செய்வதுதான்; அதுதான் முக்கியமானதும் காலம் வேண்டி நிற்கிற விடயமுமாகும். இந்த நாட்டின் பழைய பிரச்சினையானது, தீக்கோழி போன்று அரசியல்வாதிகள் ஒரு பிரச்சினையுமில்லை என்று மண்ணுக்குள் தமது தலையைப் புதைத்துக்கொண்டு நிராகரிக்கும் பிரச்சினையானது, இந்நாட்டின் இரண்டு தேசங்களிடையேயான உடைந்துபோயுள்ள உறவேயாகும். ஆகவே இந்த இரண்டு தேசங்களும் சமத்துவத்துடன், சுதந்திரத்துடன், நட்புறவுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை அரசியலமைப்பு வழங்காதாயின் அந்த அரசியலமைப்பை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்களின் சுதந்திரத்துக்கும் விடுதலைக்குமாக உழைக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ள நாம் சொல்வது யாதெனின், நாம் முதலில் போர்த்துக்கேயரால் அடிமைப்படுத்தப்பட்டோம்; பின்பு ஒல்லாந்தர்களால் அடிமைப்படுத்தப்பட்டோம்; பின்பு பிரித்தானியர்களால் அடிமைப்படுத்தப்பட்டோம்; இன்று சுதந்திரத்தின் பெயரால் எமது சகோதரர்களான சிங்கள தேசத்தினால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.
எமக்கு எமது சுதந்திரம் வேண்டும்; எமது தாயகத்தில் எம்மை நாம் ஆள வேண்டும்; எங்கள் பிரதேசத்துக்குள் ஊடுருவல்களை நாம் விரும்பவில்லை; எமது எதிர்காலச் சந்ததி தனது தனித்தவ அடையாளத்தை இழந்து, இந்த நாட்டில் அழிந்தொழிந்து போவதை நாம் விரும்பவில்லை. இவற்றின் அடிப்படையில்தான் நாம் எமது கோரிக்கைகளை முன்வைக்கிறோம். எமது மக்கள், எமது கோரிக்கையை ஏற்று மக்களாணையைத் தந்திருக்கிறார்கள். அந்தப் பாதையில் தாம் நாம் செல்கின்றோம். சட்டம் எமக்கெதிராக இருக்கிறது; நாம் சிறைப்படுத்தப்படலாம்; அரசாங்கத்தின் அதிகாரபலம் எமக்கெதிராக இருக்கிறது; நாம் சுட்டுக்கொல்லப்படலாம்; நாம் தாக்கப்படலாம்; எமது இளைஞர்கள் மரணிக்கலாம்; ஆனால், நாம் முன்னோக்கிச் சென்று, எமது சுதந்திரத்தையும் எமது மக்கள் இந்நாட்டில் சுதந்திர குடிமக்களாக வாழும் உரிமையையும், தம்மைத்தாமே ஆளும் உரிமையையும் வென்றெடுக்க எண்ணம் கொண்டுள்ளோம். இந்த அடிப்படையில்தான் நாம் இந்த அரசியலமைப்பைப் பார்க்கிறோம். இதனால்தான் இந்த அரசியலமைப்பை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறோம். எமது கட்சியின் அடிப்படைக் கொள்கையிலிருந்து எம்மால் விலக முடியாது. இந்த அரசியலமைப்பை ஆக்கும் பணியில் நாம் பங்குபற்றப்போவதுமில்லை, இந்த மசோதா மீதான வாதப்பிரதிவாதங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளப் போவதுமில்லை.
அமிர்தலிங்கத்தின் வரலாற்று முக்கியத்தவம்மிக்க இந்தப் பேச்சு, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் எதிரொலியாக அமைந்தது என்றால் மிகையில்லை. இந்தப் பேச்சின் முக்கிய பகுதிகளை முழுமையாக இங்கு எடுத்து நோக்கியதன் காரணமும் இதுதான். இன்று வரை, இந்தப் பேச்சு நிகழ்த்தப்பட்டு 38 வருடங்கள் கடந்த நிலையிலும், இந்தப் பேச்சில் குறிப்பிட்ட விடயங்கள் பலவும் இன்றைய புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் பொருத்தமாக இருப்பதுதான் இந்தநாட்டில் சிறுபான்மை மக்களின் நிலையை உணர்த்திக் காட்டுவதாக இருக்கிறது.
Average Rating