கருணா- பிரபா மோதல்!!: சுடுகாடாக மாறிய கிழக்கு… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!
• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு மிகப் பெருந் தொகையான பணத்தை கொடுத்த புலிகள்??
• யூலை 25ம் திகதி அதிகாலை கருணாவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் ராணுவத்தின் பாதகாப்பான வீட்டில் இருந்த வேளை படுக்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
• கருணா இன் சகோதரர் கேணல் றெஜி செப்டெம்பர் 22ம் திகதி கொல்லப்பட்டார்.
தொடர்ந்து..
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையே பேச்சுவார்த்தைகளைத் தொடர நோர்வேயின் முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்தன.
புலிகள் தமது இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளை மையமாக வைத்தே ஆரம்பிக்க வேண்டும் என வற்புறுத்த அரச தரப்பினர் நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தொடரவேண்டும் என வற்புறுத்தினர்.
ஆனால் புலிகள் தரப்பினர் அரசாங்கம் தொங்கு நிலையில் இருக்கும்போது அந்த அரசாங்கத்துடன் நிரந்தர தீர்வு குறித்து பேசுவதில் அரத்தமில்லை எனக் கூறி நிலமைகள் இழுபறியில் காணப்பட்டன.
எரிக் சோல்கெய்ம் இலங்கை சென்று நிலமைகளை ஆராய்ந்த பின், இந்தியாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.
பிரசல்ஸ் நகரில் இடம்பெற்ற சந்திப்பின்போது ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ், யசூசி அக்காசி, கிறிஸ் பற்றன் ஆகியோர் உடனிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை எழுப்பியிருந்தன.
பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடையாவிடில் நன்கொடை வழங்குவோரின் கவனம் வேறு பக்கம் திரும்பலாம் என எச்சரித்தனர்.
இப் பின்னணியில் நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சந்திரிகா அவர்களை 2004ம் ஆண்டு யூன் 15 ம் திகதி சந்தித்து தமது அபிப்பிராயங்களை வெளியிட்டார்.
குறிப்பாக இரு சாராரும் குறிப்பிடத்தக்க அளவில் பேச்சுவார்த்தைகளை நகர்த்த உதவவில்லை எனவும், அரசில் பங்காளியாக உள்ள ஜே வி பி இனர் இப் பேச்சுவார்த்தைகளில் அரசிற்கு உதவியாக இல்லை என புலிகள் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இச் சந்தர்ப்பத்தில் கருணா குழுவினர் கிழக்கில் செயற்படும் முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறுவதாக உள்ளதாக புலிகள் முறையிடத் தொடங்கினர். இச் சந்தர்ப்பத்தில் கருணா தலைமறைவாகியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ராணுவ கமாண்டரும், கருணாவின் ஆதரவாளருமான நிலாவினி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அச் சந்திப்பின் போது கிழக்கில் புலிகளின் தாக்குதல் அதிகரித்த வேளையில் தானும் கருணாவின் ஆதரவாளர்கள் சிலரும் ராணுவத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பான வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
இவர்களை கொழும்பிற்கு எடுத்துச் செல்வதற்கு அப்போதைய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷகிர் மௌலானா உதவியதாகவும், கருணா தான் குடும்பத்துடன் வெளிநாடு செல்வதாக கூறிச் சென்றார் எனவும் தெரிவித்தார்.
கருணா வெளியேறியதைத் தொடர்ந்து அப் பெண் போராளி நிலாவினி உட்பட பலர் மட்டக்களப்பிற்குத் திரும்பினர். பின்னர் நிலாவினி புலிகளோடு மீண்டும் இணைந்தார். இச் சம்பவங்கள் 2004ம் ஆண்டு யூன் 13ம் திகதி இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து அம் மாத இறுதியில் சோல்கெய்ம் கிளிநொச்சி சென்றார். அங்கு அரசாங்கம் கருணாவிற்கு உதவுவதை நிறுத்தவேண்டும் எனக் கூறியிருந்தார்.
கிளிநொச்சியைத் தொடர்ந்து லண்டன் சென்று பாலசிங்கத்தைச் சந்தித்தார். கருணாவின் பிரச்சனை தீர்க்கப்படும் வரை வேறு எதுவும் பேச முடியாது எனக் கையை விரித்த அவர் ஏனைய தமிழ்க் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என வற்புறுத்தினார்.
இரண்டு தரப்பினரும் இறுக்கமான போக்குகளை எடுத்த போது கிழக்கில் கொலைகள் தொடர்ந்தன.
கிழக்கில் கறுப்பு புலிகள் தினம் யூலை 3ம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட போது கிழக்கின் அரசியல் பொறுப்பாளர் சேனாதிராஜா தாக்கப்பட்டு இன்னொருவர் கொல்லப்பட்டார்.
இச் சம்பவத்தின் பின்னணியில் கருணா தரப்பினர் இருந்ததாக செய்திகள் கசிந்தன.
இச் சம்பவம் நடைபெற்ற நான்கு நாட்களில் கருணா தரப்பினைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் ஜாதிக கெல உறுமய இற்கு ஆதரவான பௌத்த பிக்குவின் விகாரையிலிருந்து கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்ட குண்டர்கள் என புலிகள் கூறினர்.
இதற்கு அடுத்த தினம் இன்னொரு சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தில் கொழும்பு பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் இறந்ததோடு 10பேர் படுகாயமடைந்தனர்.
கருணாவைத் தனிக் கட்சி அமைத்துச் செயற்படுமாறு டக்ளஸ் தேவானந்தா அவ்வேளையில் ஆலோசனை கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருந்த கொழும்பில் அதுவும் ஜனாதிபதியின் வாசஸ்தலம், அமெரிக்க, பிரித்தானிய, இந்திய தூதுவராலயம் அமைந்த அப் பகுதியில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
இச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்த புலிகள் சமாதான முயற்சிகளைக் குலைக்கும் சக்திகளின் நாச வேலை எனத் தெரிவித்தனர்.
ஆனால் புலிகளே அச் செயலை மேற்கொண்டனர் என்பது பின்னர் தெரியவந்தது.
கறுப்பு புலிகள் தினத்தில் நடத்திய தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் கருணா தரப்பைச் சேர்ந்த இருவர் யூலை நடுப்பகுதியில் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து யூலை 25ம் திகதி அதிகாலை கருணாவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் ராணுவத்தின் பாதகாப்பான வீட்டில் இருந்த வேளை படுக்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
புளொட் மோகன் படுகொலை
அது கருணாவிலிருந்து வெளியேறியவர்களின் செயல் என புலிகள் கூறினர். அடுத்த ஒரு வாரத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தரான மோகன் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் ராணுவத்திற்கு உளவாளியாக செயற்பட்டதாக பின்னைய செய்திகள் தெரிவித்தன.
இவை யாவும் கறுப்பு யூலை தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் நடந்தேறின.
இக் காலவேளையில் ஜனாதிபதி சந்திரிகா 83ம் ஆண்டு யூலை இனக் கலவரம் குறித்து நாட்டின் தலைவர் என்ற வகையில் தனது வருத்தத்தைத் தெரிவித்த போதும் அவை உரிய மக்களின் கவனத்திற்குச் செல்லவில்லை.
கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னால் மறைமுகமான சக்திகள் செயற்படுவதாக கருணா குற்றம் சாட்டினார்.
தாய்லாந்திலிருந்து வெளிவரும் ‘ஆசியன் ரிபுயூன்’ என்ற ஆங்கில இணையப் பத்திரிகைக்கு கருணா வழங்கிய செவ்வியில் அதாவது ராணுவ பாதுகாப்பு வீட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்த கருணா பல முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டார்.
தனது வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாம் எனத் தாம் கருதியதாகவும், அதன் காரணமாக ராணுவம் தமக்கு உதவுவதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
“மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு வந்தது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் எனவும், இவர்கள் அவ்வாறு எப்படி கடற்படையின் உதவியில்லாமல் வர முடிந்தது? என்ற கேள்வியை எழுப்பிய அவர் கடற்படை மிகப் பெருந் தொகையான பணத்தைப் புலிகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டார்.
கருணாவின் இத் தகவல் குறித்து பிரபல பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ் தெரிவிக்கையில் கருணா இரண்டு தகவல்களை முழுத் தமிழருக்கும் வழங்கியுள்ளார்.
அதாவது வடக்கில் புலிகளை நம்பாதீர்கள். அதே போலவே தெற்கில் அரசை நம்பாதீர்கள் என்பதுதான்.
இவ்வாறு பழிக்குப் பழி என்ற வகையில் படுகொலைகள் தொடர்ந்தன. கொழும்புத் தெருவீதிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
மட்டக்களப்பிலிருந்து தப்பி கொழும்பில் தங்கியிருந்த கருணா தரப்பினைச் சேர்ந்த சுரேஷ் கொழும்பில் ஆகஸ்ட் 28ம் திகதி கொல்லப்பட்டார்.
எரிக் சோல்கெய்ம் இனது முயற்சிகள் பெரும் தடைகளை நோக்கிச் சென்றது.
புலிகள் தரப்பினர் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவுகளை மிகவும் இறுக்கமாக வற்புறுத்தத் தொடங்கினர்.
அரச தரப்பினர் இப் பிரச்சனை குறித்து ஒரே குரலில் பேசாவிடில் தம்மால் தொடர முடியாது என நிபந்தனைகளைப் போடத் தொடங்கினர்.
ஆனால் கிழக்கில் மேலும் கொலைகள் தொடர்ந்தன. கருணா இன் சகோதரர் கேணல்றெஜி செப்டெம்பர் 22ம் திகதி கொல்லப்பட்டார்.
கிழக்கு மாகாண நிலமைகள் குறித்து நோர்வே கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த சுசனா ரிங்கார்ட பிடர்சன் ( Sussane Ringgaard Pedersen) 2004ம் ஆண்டு முழுவதும் கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டவர்.
அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 2004ம் ஆண்டு கோடை காலத்தின் போது விடுதலைப்புலிகள் 5 போட்டோ பிரதிகளை அதன் பின்புறத்தில் பெயர்கள் இருந்தவாறு என்னிடம் தந்து கருணா குழுவிலுள்ள மிக முக்கியமானவர்கள், அக் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும், ராணுவத்தின் உதவி இல்லாமல் அவர்கள் செயற்பட்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
படுகொலைகள் மே மாதமே ஆரம்பித்திருந்தன. ஆனால் அதற்கு முன்னரே கருணா அப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார்.
இந்த ஐவரும் ராணுவ முகாமில்தான் தங்கியுள்ளனர். புலிகளின் அரசியல் வேலைகளைச் செய்தவர்கள் இவர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
ராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை நான் அறிவேன். அவர் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவர்.
அவருக்கு சில ஜெனரல்களைத் தெரியும். அவர்களது கருத்துப்படி சில அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது? என்பது குறித்து எதுவுமே தெரியாது.
ஆனால் வேறு சிலருக்கு முழுவதும் தெரிந்திருந்தது. அவர்களில் சிலரே கருணாவுக்கு உதவினர்.
எமது கவனம் வேறு ஏதாவது ராணுவப் பிரிவு உதவியாக இருந்ததா? என்பதை அறிவதுதான். உதாரணமாக விஷேஷ அதிரடிப் பிரிவு போன்றவையாகும்.
2004ம் ஆண்டில் பல்வேறு நாடுகளிலிருந்து பல தூதுக்குழுக்கள் கிழக்கிற்கு வந்தன. அவர்களில் சிலர் ராணுவ தூதுவர்களாக இருந்தனர்.
அவர்களுக்கு உள்நாட்டு தகவல்களை வழங்குவது கடமையாக இருந்தது. அங்கு இடம்பெற்ற படுகொலைகள் யாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்களாகவே அவர்களால் பார்க்கப்பட்டது.
அவர்களின் மொழி அரசியல் பேசுபவர்களின் கருத்தாடல்களை விட மாறுபட்டதாக இருந்தது.
அதாவது அங்கு இரட்டை விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சமாதான முயற்சிகளுக்கு வெளியிலிருந்து ஆதரவு. உள்நாட்டில் ராணுவத்திற்கும், விஷேட படைகளுக்கும் ஆதரவு.
வாசகர்களே,
சர்வதேச ஆதரவுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் உட் போக்கு எவ்வாறு அமைந்தது? என்பதை தற்போது ஓரளவு அறிந்திருப்பீர்கள், ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு என்ன நடந்தது? தமிழர் தேசியக் கூட்டமைப்பு இப் பிரச்சனையில் எங்கே நிற்கிறது?
( அடுத்த வாரம்)
Average Rating