அதிகாரத்துக்கான போராட்டம்…!! கட்டுரை
அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டமாகும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதனைத் தக்க வைப்பதுமே அரசியலின் இலக்காக இருக்கின்றது. இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்காக, எதை வேண்டுமானாலும் அரசியல் பலிகொடுக்கும். அரசியல் அரங்கில், அதிகாரத்தின் போதையை விடவும் உச்சமானது என்று வேறெதுவும் கிடையாது.
அரசியலுக்கென்று கோட்பாட்டு ரீதியாக மட்டுமே விழுமியங்கள் உள்ளன; நடைமுறையில் அரிதாகி விட்டன. அதிகாரத்துக்கானப் போராட்டத்தில் நீதி, நியாயம், கருணை மற்றும் மனச்சாட்சி என்று – எல்லாமே இழக்கப்பட்டு விடுகின்றன. அரசியலின் அகராதி வித்தியாசமானது; துரோகத்துக்கு அங்கு இராஜதந்திரம் என்று பெயராகும்.
புதிய அரசியல் யாப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை ஆகியவை தொடர்பிலும், அவற்றின் உள்ளடக்கம் மற்றும் உருவாக்கம் பற்றியும் அனைத்து மட்டங்களிலும் உரத்துப் பேசப்படுகிறது. மேற்படி விடயங்கள் தொடர்பில் ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்கிற நம்பிக்கை – ஆரம்பத்தில் இருந்தது. இப்போது – அவநம்பிக்கைகள் தொற்றிக் கொண்டுள்ளன.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விடவும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதுதான் பெரும்காரியமாகும். அதிகாரத்தில் உள்ளவர்களால் ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடிவதில்லை. புதிய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் முறைமை உருவாக்கத்தின் போதும் எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்த முடியாது என்பது வெளிப்படை உண்மையாகும். அப்படியென்றால், இந்த விவகாரங்களில் சில தரப்பினரைத் திருப்திப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறும் அதேவேளை, சிலரின் எதிர்பார்ப்புகள் பலிகொடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான இழுபறி இப்போதே ஆரம்பித்து விட்டது. நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசியலமைப்பு அமையுமா என்கிற கேள்விகள் உருவாகத் தொடங்கியுள்ளன. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தைப் பிரதிதிநித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கூறியிருந்தார்.
நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினைக்கு மூல காரணம், முக்கிய காரணங்கள், கிளைக் காரணங்கள் என்று ஏராளம் உள்ளன. பல்லினங்கள் வாழும் இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக, பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளமையானது நேர்மையான செயற்பாடு இல்லை என்கிற விமர்சனங்கள் பாரியளவில் உள்ளன. மதச்சார்பற்ற ஒரு நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதுதான் அநேகரின் விருப்பமாகும்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் அத்தியாயம் 02, உறுப்புரை 09 இல் ‘பௌத்த மதம்’ எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ஆம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசாங்கத்தின் கடமையாக இருத்தலும் வேண்டும்’.
‘சும்மா ஆடுகின்ற பேய்களுக்குக் கொட்டு முழக்கம் போதாதா’ என்கிற சொற்றொடரொன்று நம்மிடையே உள்ளது. பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்று, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள வாசகம் – பேரினவாதிகளின் ஆட்டத்துக்கு, ‘கொட்டு முழக்கம்’ போன்றதாகும். ஏனைய மதத்தினரை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடும் மனப்பாங்கினை, அரசியலமைப்பிலுள்ள மேற்படி ஏற்பாடானது பேரினவாதிகளுக்கு வழங்கியுள்ளது.
தனியொரு மதத்தினை அரசியலமைப்பின் மூலமாக முன்னிலைப்படுத்தும் செயற்பாட்டின் பாதக விளைவுகள் குறித்து, ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், அதற்கு எதிராகச் செயற்படும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை ஸ்தானத்தினை அரசியலமைப்பிலிருந்து நீக்கினால், பெரும்பான்மை மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்கிற பயம், ஆட்சியாளர்களுக்கு உள்ளது. பெரும்பான்மை மக்களைப் பகைத்துக் கொண்டு, அதிகாரத்தைத் தக்க வைக்க முடியாது என்பதால், பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமையினை இல்லாமல் செய்யும் விஷப் பரீட்சையில் – ஆட்சியாளர்கள் ஈடுபட்ட மாட்டார்கள்.
இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று, அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு, தமிழ்க் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று பிரதமர் தெரிவித்த விடயத்தை, இதனூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது. மேற்படி விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில், இதுகுறித்துக் கலந்துரையாடப்படவில்லை. மேலும், புதிய அரசியலமைப்பில் மதச் சார்பற்ற ஒரு நாடாக இலங்கை இருக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
ஆனால், ஆட்சியில் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பில் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தால் வம்பாகி விடும் என்று அவை நினைத்திருக்கக் கூடும். பிரதமரின் கருத்துடன் முட்டி மோதுவது சாணக்கியம் அல்ல என்று, முஸ்லிம் தலைவர்கள் யோசித்திருப்பார்கள். அதனால், பேசாமல் இருப்பதே பக்குவமானது என்று நினைத்து, அவர்கள் மௌனமாக இருக்கக் கூடும். ஆனாலும், பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாத இடத்தில் பேசுவதும் புத்திசாலித்தனமான முடிவுகளல்ல! அரசியலமைப்பு விவகாரத்தில் முக்கியமானதொரு விடயம் தொடர்பில், கருத்து மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, முஸ்லிம் கட்சிகள் பேசாமல் வாய் பார்த்துக் கொண்டிருப்பதை, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில், தமிழ் அரசியல்த் தரப்புக் காட்டும் ஆர்வத்தில், சிறிதளவையேனும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் காண முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்குள் பூதாகரமாகியுள்ள உள்வீட்டுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கே, அவற்றுக்கு நேரம் போதாமலுள்ளது. அந்தக் கட்சிகளின் உயர் மட்டத்தவர்கள் கூடிக் கலையும் அநேகமான கூட்டங்கள், சண்டை சச்சரவுகளிலேயே நிறைவடைகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வொன்றினை, அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் நடத்தியிருந்தது. கட்சியின் இந்நாள், முன்நாள் மக்கள் பிரதிநிதிகளும் உயர்பீட உறுப்பினர்களும் அந்தச் செயலமர்வில் கலந்து கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி செயலமர்வில் அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் மற்றும் கலாநிதி சுஜாதா கமகே ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர். கடந்த வாரப் பத்தியில், அந்தச் செயலமர்வில் கலாநிதி சுஜாதா கமகே பேசிய விடயங்களை மையப்படுத்தி, சில விடயங்களை எழுதியிருந்தோம்.
முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய மேற்படி செயலமர்வில், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமை தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் முன்மொழிவுகளைக் கொண்ட ஆவணமொன்று வெளியிடப்பட்டது. இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்ட அந்த ஆவணத்தில் 17 விடயங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. நாட்டில் மொத்தமாக 196 தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது, அந்த ஆவணத்தில் முதலாவது முன்மொழிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி முன்மொழிவு ஆவணத்தின் பிரதிகள் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதன்போது, முஸ்லிம் காங்கிரஸ் தயாரித்துள்ள புதிய தேர்தல் முறைமைக்கான முன்மொழிவு ஆவணத்தினை, அந்தச் செயலமர்வில் பங்கு பற்றிய கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்விக்குட்படுத்தியதோடு, அதில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொகுதிவாரித் தேர்தல் முறைமையானது, முஸ்லிம்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகையினைக் குறைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டும், தொகுதிவாரி முறைமையினை ஏற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்த முன்மொழிவு ஆவணம் முஸ்லிம் காங்கிரஸினால்தான் தயாரிக்கப்பட்டதா என்கிற கேள்வியினை, அங்கு சட்டத்தரணி அன்சில் முன்வைத்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள மேற்படி முன்மொழிவுகள் தொடர்பாக அன்சில் அங்கு மேலும் கூறுகையில், “இந்த முன்மொழிவுகளைப் பார்க்கையில், தொகுதிவாரித் தேர்தல் முறைமையினை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. முஸ்லிம் சமூகத்துக்குத் தீங்கான தொகுதிவாரித் தேர்தல் முறைமையை நாம் ஏற்றுக் கொள்வதென்பது, நமது சமூகத்துக்குச் செய்யும் பாரிய துரோகமாகும். என்னுடைய பார்வையில் – தொகுதிவாரித் தேர்தல் முறைமையானது, முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையாக இருக்க முடியாது. அது, இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. கட்சியின் சார்பாகத் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவுகளைத் தீர்மானித்தவர்கள் யார்?
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டிருக்க முடியாது. காரணம், கடந்த ஒரு வருடமாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவில்லை. சென்ற மாதம்தான் ஒரு கூட்டம் நடைபெற்றது. மேலும், உயர்பீடக் கூட்டத்திலும் இந்தத் தீர்மானங்கள் எட்டப்படவில்லை. அப்படியாயின், முஸ்லிம்களுக்குப் பாதகமாகவுள்ள தொகுதிவாரித் தேர்தல் முறைமையினை, இச்சபை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த முன்மொழிவுகளில் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. (குறித்த முன்மொழிவில், கண்டித் தேர்தல் மாவட்டத்துக்கு மேலதிகமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கு நான்கு மேலதிக நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது). தொகுதிவாரி தேர்தல் முறைமையினூடாக மட்டக்களப்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியுமா? அதற்கான வாக்காளர்கள் அங்கு இருக்கின்றார்களா? தொகுதிவாரி முறையினால், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை. ஆனால், ஏனைய மாவட்டங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் அன்சில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தபோது, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அங்கு இருக்கவில்லை. ஆயினும், பின்னர் வந்து சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், மேடையேறி – ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று, அன்சிலுடன் ஆத்திரமுற்ற நிலையில் பேசினார். கட்சிக்குள் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், “அவ்வாறானவர்கள் கட்சியை விட்டும் விலகிச் செல்லலாம்” என்று கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இந்தப் பேச்சு அங்கு சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் அன்சிலுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. மேலே சொன்ன சம்பவங்கள் அனைத்தும், அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு, இணையத் தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில், முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸுக்குள் இவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும். புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமைகளுக்கான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் முன்பாக, கட்சிக்குள்ளும் வெளியிலும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்துதல் அவசியமாகும். அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பாலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகளின் கருத்துக்களையும் இவைதொடர்பில் பெறுதல் வேண்டும். மேலும், இவை – முஸ்லிம் சமூகத்தை முன்னிறுத்தியதாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்பதனால், அவற்றினைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, முஸ்லிம் சமூகத்துக்கும் அவை குறித்து தெரியப்படுத்துதல் அவசியமாகும்.
புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில், முஸ்லிம் கட்சிகள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகள், அந்தக் கட்சினரின் அதிகாரங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாகவும் முனைப்புக்களாகவும் இருந்து விடுமோ என்கிற அச்சம் மக்களிடையே தலைதூக்கியுள்ளது. முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகள்தான் அந்த அச்சத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன.
அதிகாரத்துக்கான போராட்டங்களுக்கு அப்பால் நின்று சிந்திப்பதற்கு, சமூகம் மீதான பற்று அவசியமாகும்.
Average Rating