வடக்கில் பூரண ஹர்த்தல் : அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு…!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளைய தினம் வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
அத்துடன் இதற்கு வடக்கின் அனைத்து வர்த்தக சங்கங்களும் பூரண ஆதரவு அளித்துள்ளதோடு, அரச தனியார் பேருந்து சங்கங்களும் தமது சேவைகளை புறக்கணிப்பதற்கு இணங்கியுள்ளன.
யாழ். காங்கேசன்துறை வீதி குளப்பிட்டியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியினைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (வயது 24), கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியினைச் சேர்ந்த நடராஜா கஜன் (வயது 23) எனும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்திருந்தனர். இதில் ஒரு மாணவனின் விலா எலும்பு பகுதியூடாக துப்பாக்கி சன்னம் துளைத்து கொண்டு சென்றிருந்தது.
இச் சம்பவத்தையடுத்து நேற்றைய தினம் யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆராயந்தனர். இதன் போது மாணவனின் கொலையை கண்டித்து வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கடையடைப்பை நடத்தி ஹர்த்தால் மேற்கொள்ள அழைப்பு விடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னர் குறித்த முடிவை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த இருபதாம் திகதி இரவு வேளை பொலிசாரால் இரு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலையை தமிழ் மக்கள் மீது கடந்தகாலம் தொட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகளில் தொடர்ச்சியாகவே பார்க்கின்றோம். இலங்கையில் மாறி மாறிவரும் ஆட்சியாளர்களின் கீழ் தமிழ் மக்கள் படுகொலைகளை எதிர்நோக்கிய வண்ணமே இருக்கின்றனர். அரச பயங்கரவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கு இவ்வாறன படுகொலைகள் மூலம் தொடர்ந்து முயற்சித்த வண்ணமே உள்ளது.
ஆயினும் இனிமேலும் தமிழர்கள் மீதான படுகொலைகளை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளனர். மக்களுடைய ஒட்டுமொத்த வெளிப்பாடாக நாளைய தினம் இடம்பெறவுள்ள ஹர்த்தால் இருக்கும் என நாம் நம்புகின்றோம். இதற்கு பயணிகள் போக்குவரத்து பேரூந்து சங்கங்கள், மற்றும் வணிகர் கழகங்கள், பொது அமைப்புக்கள், சங்கங்கள் என அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை நாளைய தினம் பூட்டி, ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை தரவேண்டும். இதே போன்று அரச பணியாளர்கள், வங்கி நிறுவனங்கள் என சகல திணைக்களங்களும் மாணவர் கொலையை கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இடம்பெறும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்.
தமிழர்கள் மீது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலங்களில் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் உயிர்களை பறித்த வண்ணமே உள்ளன.
ஆயுதம் தாங்கிய பொலிசார் வீதிகளில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை துப்பாக்கியால் சுடுவது என்பது சாதரணாமாக கருத முடியாது. எனவே மாணவர்கள் சுடப்பட்டத்தை கண்டித்தும் அவர்களுடைய கொலைக்கு நீதி கோரியும் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ்.குலநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், ஈ.சரவணபவன், வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன், ரெலோவின் செயலாளர் நாயகம் சிரேஸ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, உபதலைவர் ஹென்றி மஹேந்திரன், நிதி செயலாளர் கே.என்.விந்தன் கனகரத்தினம், தேசிய அமைப்பாளர் எம்.கே.சிவாஜிங்கம், யாழ்.மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்ரர், புளொட் அமைப்பின் செயலாளர் நாயகம் சதானந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, தலைவர் சுகு சிறிதரன், உறுப்பினர் எஸ்.மோகன், தமிழர் விடுதலைக்கூட்டணி நிர்வாகச்செயாளர் எஸ்.சங்கையா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.
Average Rating