இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்…!!
தங்கள் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட, தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற, தனி மனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடாத குணவாளனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளம் பெண்களின் கல்யாண கனவுகளாக மலர்ந்து கொண்டிருக்கிறது. இது 2016-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் ஒரு அங்கம். ‘மேரேஜ் டூ லவ்’ என்ற சமூக அமைப்பு பாலிவுட் நடிகை வித்யா பாலனை முன்னிறுத்தி இந்த கருத்துக்கணிப்பை எடுத்திருக்கிறது.
அப்படி 18 வயது முதல் 25 வயது வரையுள்ள இளம் பெண்களிடம் ‘கல்யாண ஆசைகள்’ பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் உங்கள் பார்வைக்கு…
நண்பர் போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்பது 80 சதவீத பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கணவரிடம் அதிகபட்ச அன்பு, தாம்பத்யம், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே…! மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசும் அளவுக்கு கணவர் திறந்த மனதுடன் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்பதைத்தான் எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.
‘ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா? என்பதை கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும்’ என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எவ்வளவு நல்லவராக இருந்தாலும், ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று, அதிரடியாக சொல்கிறார்கள் 68 சதவீத பெண்கள். 10 சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 40 சதவீத பெண்கள் திருமணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம் என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தவேண்டியதில்லை என்று 58 சதவீத பெண்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் 42 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றுகூறி, ஆடம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
‘மது அருந்தும் பழக்கம் கொண்டவர் தங்கள் வாழ்க்கை துணையாக வேண்டாம்’ என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. காரணம், மது அருந்துபவர்கள் எந்த விஷயத்திலும் தங்களை ஒரு அளவுக்குள் அடக்கிக் கொள்ளமாட்டார்களாம். மனைவிக்கு வேண்டாம் என்பதை கூட, மதுபிரியர்கள் வேண்டும் என்பார்கள் என்பது, இன்றைய பெண்களின் மன நிலையில் உதிக்கும் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி விட்டால் எல்லை மீறிப்போய்விடுவார்கள் என்ற பயம் பெண்களிடம் இருக்கிறது.
டீன்-ஏஜ் பெண்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு சமையல் செய்ய தெரியும் என்றிருக்கிறார்கள். ஆனால் தங்களை சமையல் அறைக்குள்ளே முடக்கி போட்டுவிடக்கூடாது என்பது, அவர்களின் அன்பு கட்டளை.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating