மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம்: முரசு கொட்டி நிற்கும் அரசியல் சட்டச் சர்ச்சைகள்…!! கட்டுரை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புக்களை, அ.தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார்” என்று 11.10.2016 அன்று அறிவித்திருக்கிறார் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும் என்று அப்பலோ வைத்தியசாலை அறிவித்ததால், “பொறுப்பு முதல்வர்” நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இக்கோரிக்கையை முன்வைத்தார் கலைஞர் கருணாநிதி. இதைத் தொடர்ந்து வேறு சில தலைவர்கள் கோரிக்கை வைத்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பாரதிய ஜனதா கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இக்கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்கவில்லை. “பொறுப்பு முதலமைச்சர் வேண்டும்” என்றும் “வேண்டாம்” என்றும் இரு வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் மட்டும் அரசியல் சட்டத்தை அலசிக் கொண்டிருந்தார்.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 163இன்படி, ஆளுநருக்கு ஆலோசனை கூற (to advise the Governor) ஓர் அமைச்சரவை (Council of Ministers) மாநிலத்தில் இருக்க வேண்டும். அந்த அமைச்சரவைக்கு முதலமைச்சர் தலைவராக (headed by the Chief Minister) இருப்பார். 164ஆவது பிரிவின்படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையுள்ளவரை முதலமைச்சராக, மாநில ஆளுநர் நியமிப்பார். அந்த முதலமைச்சர் பரிந்துரைக்கும் நபர்களை அமைச்சர்களாக ஆளுநர் நியமிப்பார். இப்படி நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் ஆளுநரின் “விருப்பம்” (During the pleasure of Governor) தொடரும் வரை பதவியில் நீடிப்பார்கள். இந்த இரு பிரிவுகளின்படி, முதலமைச்சர் ஜெயலலிதா தனக்குப் பதிலாக ஒரு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று கருதினாலோ அல்லது தன் அமைச்சரவையில் உள்ளவரே தன் இலாகாக்களை கவனிக்க வேண்டும் என்றாலும் முதலமைச்சர்தான் ஆளுநருக்கு ஆலோசனை (Advice) வழங்க வேண்டும். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஆகவே ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் நிலையில் இருக்கிறாரா என்ற கேள்வியை அரசியல் கட்சிகள் எழுப்பின.
கடந்த கால மரபுகள் என்ன? பேரறிஞர் அண்ணா, தமிழக முதலமைச்சராக இருந்தபோது, இரு முறை 1968இல் அமெரிக்காவில் சிகிச்சை பெறச் சென்றார். பின்னர், எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெறச் சென்றார். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, ஸ்ரீ ராமச்சந்திரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அப்போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டன. அண்ணா, அமெரிக்கா சென்ற போது அவருக்கு அடுத்தபடியாக இருந்த நாவலர் நெடுஞ்செழியனிடம் தன் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டுச் சென்றார். அவரே ஆளுநருக்கு அது தொடர்பாக ஆலோசனையும் வழங்கினார். 1984இல் எம்.ஜி. ஆர், மருத்துவ சிகிச்சைக்குச் சென்ற போது எழுத்து பூர்வமான ஆலோசனையை வழங்க இயலவில்லை. ஆனால், வாய்மொழியாக “நாவலர் நெடுஞ்செழியன் என் பொறுப்புக்களை பார்க்கட்டும் என்று சொன்னார்” என, எம்.ஜி.ஆர் அரசாங்கத்தில் தலைமைச் செயலாளராக இருந்தவரே ஆளுநராக இருந்த குரானாவுக்குக் கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் நெடுஞ்செழியனிடம் முதலமைச்சர் பொறுப்புக்களை வழங்கினார் ஆளுநர். ஆனால், 2009ஆம் ஆண்டு, கருணாநிதி, ஸ்ரீ ராமச்சந்திரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது அப்படியோர் இடைக்கால நிர்வாக ஏற்பாட்டினை செய்யவில்லை. வைத்தியசாலையில் இருந்தவாறே அரசாங்க அலுவல்களை அவரால் பார்க்க முடிந்ததே அதற்கு காரணம்.
இதுபோன்ற சூழ்நிலையில், தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவையும் அ.தி.மு.க அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துப் பேசிய ஆளுநர் “இடைக்கால நிர்வாக ஏற்பாடு செய்ய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா வைத்தியசாலையில் இருக்கும் நேரத்தில் இது போன்ற மாற்றத்துக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் எதிர்கட்சிகளும் அழுத்தம், பொறுப்பு நிர்வாக ஏற்பாட்டை செய்வதற்கு யார் ஆலோசனை கூறுவது என்ற விவாதம் என தமிழக அரசியல் சூடுபிடித்தது. அப்போது மத்திய செய்தித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்தார். அப்பல்லோ வைத்தியசாலைக்குச் சென்றார். அங்கிருந்து நேராக ஆளுநர் மாளிகைக்குப் போனார். அடுத்த நாள் (ஒக்டோபர் 11 ஆம் திகதி) “முதல்வரின் இலாகாக்களை
ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவரே தலைமை வகிப்பார்” என்று அரசியல் சட்டப் பிரிவு 166(3)இன் கீழ், ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவினை, பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்றது. “மாநில நலன்கருதி செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டை வரவேற்கிறேன்” என்றார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
மு.க. ஸ்டாலின். ஆனால், திடீரென்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியோ, “ நிர்வாக ஏற்பாட்டுக்காக இதை ஏற்றுக் கொண்டாலும், அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் முதலமைச்சர் ஜெயலலிதாவை யாருமே பார்க்க முடியாத நிலையில் ஆளுநருக்கு எப்படி இந்த ஆலோசனையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்” என்று கேள்வி எழுப்பி, “அரசியல் சட்ட பரிணாமங்களை ஆளுநர் நன்கு பரிசீலித்தாரா என்ற சந்தேகம் எழுகிறது” என்று அறிக்கை வெளியிட்டார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டொக்டர் ராமதாஸும் “ஆளுநருக்கு வழங்கிய ஆலோசனையில் எப்படி முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்துப் போட்டார்” என்று கேள்வி கேட்டிருக்கிறார். இப்படி கேள்வி எழுப்புவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
அரசியல் சட்டப் பிரிவு 166 (3)இன் கீழ் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் அமைச்சர்களின் இலாகாக்களை ஆளுநர் மாற்றி அமைக்க முடியும். அப்படியென்றால் “என் பொறுப்புகளை ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கொடுங்கள்” என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். அதைத்தான் இப்போது எதிர்கட்சிகள் எப்போது ஆலோசனையை ஆளுநரிடம் வழங்கினார்? எப்படி அந்த ஆலோசனையை வழங்கினார்? எழுத்து பூர்வமாகவா அல்லது வாய்மொழியாகவா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எதிர்கட்சிகள் முன் வைக்கின்றன. இந்த நிர்வாக ஏற்பாட்டை ஆளுநர் செய்திருந்தாலும், மத்திய அரசாங்கத்தின் கண் அசைவு இன்றிச் செய்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை.
ஏனென்றால், மத்திய அரசாங்கத்தின் விருப்பத்துக்கு மாறாக எந்த ஆளுநரும் செயற்பட முடியாது. “முதலமைச்சர் உடல் நலம் சரியில்லாத நேரத்தில் மாற்று நிர்வாகம் பற்றியெல்லாம் பேசுவது மனிதாபிமானம் இல்லாதது” என்று பா.ஜ.க தலைவர்களே கருத்து தெரிவித்தனர். ஆனாலும் இந்த நிர்வாக ஏற்பாடு எப்படி வந்தது? அதற்கு இன்னோர் அடிப்படைக் காரணமும் இருக்கிறது. “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்” என்று பா.ஜ.க ராஜ்ய சபை எம்.பி டொக்டர் சுப்ரமணியம் சுவாமி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குக் கடிதம் கொடுத்தார். திரைமறைவில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சியும் அந்தக் கட்சி ஆட்சி செய்யும் மத்திய அரசாங்கமும் நினைக்கிறது என்று தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. இந்த பா.ஜ.க எதிர்ப்பை தவிடு பொடியாக்கவே இப்போது “இந்த புதிய நிர்வாக ஏற்பாட்டை” செய்திருக்கிறார் ஆளுநர். இதன் மூலம் “மாநிலத்தில் நல்ல நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஜெயலலிதா வைத்தியசாலையில் இருப்பதை பயன்படுத்தி அ.தி.மு.கவுக்குள் அரசியல் செய்ய மத்திய அரசாங்கம் விரும்பவும் இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதும் நோக்கமல்ல” என்ற செய்தியை அறிவித்திருக்கிறது.
அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஏற்கெனவே இருமுறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது செல்லாது என்று 2001இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த போதும் ஓ. பன்னீர்செல்வம்தான் இடைக்கால முதல்வராகப் பணியாற்றினார். இப்போது மூன்றாவது முறையாக முதல்வராகவில்லை. ஆனால், முதல்வரின் பொறுப்பை கவனிக்கிறார். ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சராக தொடர்ந்து கொண்டிருப்பார். தமிழக அரசியலில் மக்கள் மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் முதலமைச்சர்களாக வந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மன்றத்தில் அப்படி முன்னிறுத்தப்படாமல் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை கவனிக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இவருக்கு முன்பு 1968 முதல் 1987 வரை “ஓ.பன்னீர்செல்வம் மாதிரியே” ஏழு முறை தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை கவனித்தவர் நாவலர் நெடுஞ்செழியன். ஆக, அமைச்சர் இலாகாக்களை ஆஸ்பத்திரியில் இருந்தே பரிந்துரைக்கலாம் என்பதற்கு மீண்டும் ஒரு புதிய அரசியல் சட்ட மரபு உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த மரபின் பின்னனியில் உள்ள குழப்பமும் இது தொடர்பாக எதிர்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளும் முரசு கொட்டி நிற்கின்றன.
Average Rating