சித்ரவதை செய்யும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம்: டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!
அவமரியாதையாக நடந்து கொண்டு, சித்ரவதை செய்கிற மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு என்று டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக இருப்பவர் டெல்லியை சேர்ந்த குரானா. அவரது மனைவி ஷீலா. (இருவரின் பெயரும் மாற்றி தரப்பட்டுள்ளது.) அவர்களுக்கு 1975-ம் ஆண்டு திருமணம் ஆனது.
குரானாவுக்கும், ஷீலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரிடம் மனைவி மரியாதையாக நடந்து கொள்ளவில்லை. நம்பிக்கை வைக்கவில்லை. புரிந்து கொள்ளுதலும் இல்லை.
இந்த நிலையில் குரானாவுக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட, பணியிட மாற்றம் ஆகிறது. அவர் அங்கு சென்ற சிறிது காலத்தில், ‘என் கணவருக்கு காஷ்மீரிலும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவர் அந்தக் குடும்பம் பக்கம் சாய்ந்து விட்டார். என்னை கவனிப்பதில்லை’ என கணவரது உயர் அதிகாரிகளுக்கு ஷீலா கடிதம் எழுதினார்.
அதன்பேரில் அவர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது குரானாவுக்கு அவமானமாகப் போய்விட்டது. மனைவியின் இந்த செயல்கள், மனதளவில் அவருக்கு சித்ரவதையாக அமைந்தது. இதையடுத்து அவர் டெல்லி குடும்ப நல கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த கோர்ட்டு, அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் கணவருக்கு விவாகரத்து, நிம்மதி தந்துவிடக்கூடாது என நினைத்த ஷீலா, விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட், தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, குரானாவுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. தீர்ப்பில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கணவர் மீதான மரியாதை, புரிந்து கொள்ளுதல், நம்பிக்கை ஆகியவற்றை இழந்து விட்டதை, மனைவியின் தொடர் நடத்தை காட்டுவதாக அமைந்து, அதன் மூலம் கணவருக்கு மனவேதனை, அசவுகரியம், மரியாதைக்குறைவு, புகழுக்கு களங்கம் ஏற்பட்டால் அது சித்ரவதைதான். இதனால் பாதிக்கப்பட்ட நபரான கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற உரிமை உண்டு.
நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, புரிந்து கொள்ளுதல், அர்ப்பணிப்பு ஆகியவை ஒரு திருமணம் நீடித்து நிலைப்பதில், முக்கிய குணாம்சங்களாக அமைகின்றன.
மனைவியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாத நிலையில், மற்றவர்களின் பார்வையில் குறிப்பாக உடன் வேலை செய்கிறவர்கள் மத்தியில் கணவர் மதிப்பு குறைய நேரிட்டிருக்கிறது. இது அவருக்கு அவமதிப்பையும், வேதனையையும் தந்துள்ளது. தவறான புகார், விசாரணை, இடமாற்றம் போன்றவற்றுக்கு வழிநடத்தி விடுகிறது.
இதெல்லாம் சித்ரவதையின் அங்கமாகவே அமைகின்றன. எனவே மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறுவதற்கு தகுதி படைத்தவர் ஆகிறார்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் குரானா, ஷீலா தம்பதியரின் 41 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது.
Average Rating