யாழ்ப்பாணத்தில் பலஇடங்களில் இரு தரப்பும் கடும் மோதல்
இலங்கையின் வடக்கே முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று மாலை ஆரம்பமாகிய மோதல்கள் யாழ் குடாநாட்டின் வேறு பலஇடங்களுக்கும் பரவியுள்ளதாக புலிகளும், இராணுவத்தினரும் தெரிவித்துள்ளனர். இருதரப்பினரும் உக்கிரமான மோட்டார் மற்றும் ஆர்ட்டிலறி, பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருவதாக வடபகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக இலங்கை விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவுக்கு அப்பால் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதியும். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் குடாநாட்டுப் பிரதேசங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து இப்போது துண்டிக்கப்பட்டுள்ளன.
வடபகுதிக்கான ஏ9 வீதி ஊடான போக்குவரத்துக்களும், கொழும்பிலிருந்து பலாலி விமானத்தளத்தின் ஊடான யாழ்ப்பாணத்திற்கான வான்வழி போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வடக்கில் உள்ள யாழ் குடாநாட்டை நாட்டின் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் முக்கியமான ஏ9 சாலையை மையப்படுத்தி தமது கட்டுப்பாட்டில் உள்ள ஆனையிறவு பகுதியை நோக்கி இராணுவத்தினர் முன்னேற முயன்றதாக புலிகள் கூறியிருப்பதை, இராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர். புலிகளே தமது முன்னணி அரண்கள் மீது தாக்குதல் நடத்தி முன்னேற முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான பீரங்கி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினாலும், விமானத் தாக்குதல்களினாலும் யாழ் குடாநாட்டின் தென்மராட்சி, மண்டைதீவு பிரதேசங்கள் அதிர்ந்து கொண்டிருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். ஏ9 வீதியில் உள்ள ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச்சாவடிகள் இன்று இயங்கவில்லை. அவைகள் மூடப்பட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள உயிலங்குளம் வீதிச்சோதனைச் சாவடியும் மூடப்பட்டிருப்பதாக மன்னாரில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாகர்கோவில் தொடக்கம் கிளாலி வரையிலான பகுதியில் ஒரு தாக்குதல் அரங்கைத் திறக்க முயன்ற புலிகள், யாழ் கடலேரியின் கிளாலி, கச்சாய், தனங்கிளப்பு, மண்டைதீவு ஆகிய பகுதிகளில் கடல்வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உட்புக முயன்றதாகவும், இதன்போது அரச படையணிகள் நடத்திய எதிர் தாக்குதலில் விடுதலைப் புலி உறுப்பினர்களில் குறைந்தது 100 பேரைத் தாங்கள் கொன்றுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் சில இடங்களில் ஒருசில விடுதலைப் புலிகள் உட்புகுந்திருக்கலாம் எனவும் எனினும் யாழ் குடாநாடு முழுமையாக அரசபடைகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளால் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு பதிலளித்த இராணுவ தரப்புப் பேச்சாளர், ஒரு பட்டம் கூட அங்கு பறக்கவில்லை என்று கூறினார்.
இதே விடயம் குறித்து விடுதலைப்புலிகளிடம் கேட்டதற்கு, இராணுவத்தினரே தாக்கப்பட்டவர்கள், ஆகவே இது குறித்து அவர்களிடந்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று புலிகளின் சார்பில் பேசவல்ல இளந்திரையன் கூறினார்.
இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக யாழ் குடாநாட்டில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ள போதிலும் அங்கு அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் பற்றிய அதிகாரபூர்வமான விபரங்களை உடனடியாகப் பெற முடியவில்லை. அரச அதிகாரிகளோ அல்லது தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோ இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகளைச் செய்யவும், அவர்களின் நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிவில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஷெல் வீச்சுக்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் காயமடைந்த 25 பேர் இதுவரையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டைதீவுப் பகுதியில் கடுமையான மோதல்
யாழ் மண்டைதீவு பகுதியில் இருதரப்பினருக்கும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இடம்பெறும் மோதல்கள் காரணமாக மண்டைதீவை அண்டிய யாழ்ப்பாணத்தின் புறநகர்ப்பகுதிகள் வரை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் நகரப்பகுதியில் இருந்து மண்டைதீவு பகுதியை நோக்கி தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களும், ஷெல் மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியை நோக்கி சரமாரியான ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றதுடன், விமானக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் தங்களால் உணர முடிந்ததாக யாழ்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ் குடாநாட்டில் நேற்றிரவு பிறப்பிக்கப்பட்ட இராணுவ ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், பகல் முழுதும் யாழ்ப்பாண மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளிலும் வீட்டு வளவுகளிலும் முடங்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தின் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்காக புலிகள் மேற்கொள்ளக்கூடிய கடல்வழியான தரையிறக்கம், மற்றும் அவர்களின் நடமாட்டம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.