வல்வெட்டித்துறையில் பிரபாகரனை சுற்றி வளைத்த இராணுவம்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -88) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
தொண்டமானாறு இராணுவமுகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினருக்கு பாரிய எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை.
கோயில் சந்தை என்ற இடத்திலுள்ள ஈரோஸ் அலுவலகத்துக்குள் எல்லோம் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தளவு தூரத்துக்கு இராணுவத்தினர் இரவோடு இரவாக வந்து சேருவார்கள் என்று அவர்கள் நினைத்தே பார்க்கவில்லை.
அதனால் சென்றியும் இருக்கவில்லை. அலுவலகத்தை சுற்றிவளைத்து இராணுவத்தினர் உள்ளே புகுந்து தட்டி எழுப்பிய போதுதான் உள்ளே தூங்கியவர்கள் வாரிச்சுருட்டியபடி எழுந்தனர்.
ஈரோஸின் பருத்தித்துறை பொறுப்பாளர் முரளி கண்களை துடைத்துக் கொண்டு, தலையை உதறிக்கொண்டு கூர்ந்து பார்த்தார். காண்பது கனவல்ல வந்திருப்பது இராணுவத்தினரேதான் என்பது விளங்கிளது. அவரும் கைது செய்யப்பட்டார்.
இராணுவத்தினர் முன்னேறிவரும் செய்தி வல்வெட்டித்துறையில் இருந்த பிரபாகரனுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர். தடுத்து நிறுத்துவது லேசுப்பட்ட வேலையல்ல என்பதை புலிகள் இயக்கத்தினர் புரிந்து கொண்டனர்.
அப்போது வடமராட்சிக்கு புலிகள் இயக்கத்தில் பொறுப்பாக இருந்தவர் சூசை. பிரபாகரனை பிடிப்பதும் படையினரின் நோக்கம் என்று புரிந்துகொண்ட புலிகள் இயக்கத்தினர், பிரபாகரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் வல்வெட்டித்துறையிலிருந்து வெளியே கொண்டுசென்றனர்.
வடமராட்சியில் மக்களில் பலருக்கு காலையில் கண்விழித்தபோதுதான் இராணுவத்தினர் உள்ளே வந்துவிட்டனர் என்பதே தெரிந்தது. மக்கள் அனைவரையும் கோவில்களுக்கும், பாடசாலைகளுக்கும் செல்லுமாறு இராணுவத்தினர் அறிவித்தனர்.
வானிலிருந்து உத்தரவு
அதுவரை ‘ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் வானொலி’ என்று மக்களைக் குழப்பிக்கொண்டிருந்த வானொலிச் சேவை, ஒப்பரேசன் லிபரேசனுடன் யாழ் வானொலியாக தன் பெயரை மாற்றிக் கொண்டது. அப்போது மக்கள் மத்தியில் அந்த வானொலி தொடர்பாக இருந்த சந்தேகம் நீங்கியது. மக்களை கோயில்களுக்கு செல்லுமாறு யாழ் வானொலி மூலமும் படையினர் அறிவித்தனர்.
இதேவேளை வடமராட்சியில் இருந்து மக்களை வெளியேறுமாறு புலிகள் இயக்கத்தினரும், ஈரோஸ் அமைப்பினரும் கோரினார்கள்.
வடமராட்சியில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட பகுதிகளில் இருந்த மக்களால் வெளியேற முடியவில்லை.
வடமராட்சியில் உள்ள மக்களில் ஒருபகுதியினர் தென்மராட்சி நோக்கி இடம்பெயர்ந்தனர். எனினும் கணிசமானளவு மக்கள் வெளியேற விரும்பாமல் கோயில்களில் சென்று தஞ்சமடைந்தனர்.
வடமராட்சியில் படையினர் தமது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது, யாழ் கோட்டை முகாமிலிருந்தும் இராணுவத்தினர் முன்னேறத் தொடங்கியிருந்தனர்.
வடமராட்சியை நோக்கி புலிகள் இயக்க அணிகள் அனைத்தும் செல்வதை தடுக்கும் தந்திரோபாயமான நடவடிக்கை அதுவாகும்.
கோட்டை முகாமிலிருந்து வெளியேறி வந்த இராணுவத்தினர் மோட்டார்கள் மூலம் தாக்கப்பட்டனர்.
யாழ் கோட்டை இராணுவ முகாம், நாவற்குழி இராணுவ முகாம், பலாலி இராணுவ முகாம் என்று பல முனைகளில் இருந்து அகோரமான ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. யாழ் குடாநாடு அதிர்ந்து கொண்டிருந்தது.
வடமராட்சியில் படையினர் முன்னேறிக் கொண்டிருந்தபோது, ஒரு ஹெலிகொப்டரில் இருந்து உத்தரவுகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஹெலிகொப்டரில் முக்கியமான மூன்று பேர் இருந்தனர்.
ஒருவர் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, இன்னொருவர் முப்படைத்தளபதி ஜெனரல் சிறிவ்றணதுங்கா. மூன்றாமவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டக்கல.
இத்தகைய நடவடிக்கையால் தான் லலித் அத்துலத்முதலி ஒரு ஹீரோவாக மாறினார். களத்தில் நிற்கிறார் அத்துலத்முதலி என்று கொழும்பு ஆங்கில-சிங்கள பத்திரிகைகள் படத்தோடு செய்திகள் வெளியிட்டிருந்தன.
மே 2ம் திகதியளவில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில் வந்திருந்தன.
பாரிய மோதல்
பருத்தித்துறை-வல்வெட்டித்துறை வீதியில் புலிகளின் அணிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. பாரிய சண்டை நடந்தது.
20க்கு மேற்பட்ட புலிகள் அந்த சண்டையில் பலியானார்கள். படையினரில் பலம் அதிகமாக இருந்தது. புலிகளின் அணிகள் சண்டையை நிறுத்திக்கொண்டு பின்வாங்கிச் சென்றன.
உடுப்பிட்டியில் நவிண்டில் என்னும் இடத்தில் உள்ள புலிகளின் முகாம் சுற்றிவளைக்கப்பட்டது.
அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இராணுவத்தினரின் முற்றுகையை உடைத்துக்கொண்டு புலிகளின் அணியொன்று தப்பிச் சென்றது.
அந்த சண்டையில் புலிகள் தரப்பில் ஏழுபேர் வரை பலியானார்கள். முகாமையும் இராணுவத்தினர் அழித்தனர்.
நெல்லியடி நோக்கி இராணுவத்தினர் முன்னேறியபோது புலிகள் இயக்கத்தினரும், ஈரோஸ் இயக்கத்தினரும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் மூவர் பலியானார்கள்.
எதிர்ப்பை முறியடித்துக்கொண்டு படையினர் முன்னேறி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டனர்.
கோயில்களிலும், பாடசாலைகளிலும் மக்களை சென்று இருக்குமாறு படையினர் அறிவித்தனர் அல்லவா.
அவ்வாறு தங்கியிருந்த மக்கள் மத்தியில் புலிகளும் இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
எப்படி இனம்காண்பது? என்று யோசித்தனர்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கோயில்களிலும், பாடசாலைகளிலும் த ஞ்சமடைந்த மக்கள் மத்தியில் இருந்த 16-17 வயதுக்கு மேற்பட்ட 30-35 வயதுக்குட்பட்ட அனைவரையும் பிடித்து கப்பலில் ஏற்றி பூசாவில் இருந்த தடுப்புக்காவல் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லியடியில் கரும்புலித் தாக்குதல்
நெல்லியடி மகாவித்தியாலயத்தில்தான் பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தனது அலுவலகத்தையும் வைத்துக்கொண்டார்.
நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டனர் புலிகள்.
அப்போது புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவு வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் விசு. (பின்னர் அமிர்தலிங்கத்தை சுட்டவர்களில் ஒருவர்)
நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம் தொடர்பான விபரங்களை விசுதான் திரட்டிக் கொடுத்தார்.
மாத்தையா தலைமையில் நெல்லியடி முகாம் தாக்குதலுக்கான திட்டம் ஒன்று தயாரானது.
படையினருக்கு பலத்த அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்துவதன் மூலமே‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையின் வேகத்தை தடுக்கலாம் தடுக்கலாம் என்பதுதான் திட்டம்.
பாரிய சண்டை ஒன்றில் ஈடுபட்டு தமது உறுப்பினர்களை பெருமளவுக்கு இழக்கவும் புலிகள் விரும்பவில்லை.
திட்டமிட்டபடி வடமராட்சியை கைப்பற்றியதால் படையினரின் உற்சாகமும், உளவியல் பலமும் கூடியிருந்தது.
அதேநேரம் வடமராட்சியை படையினர் கைப்பற்றிவுடன், யாழ்-குடாநாடு முழுவதும் படையினர்வசம் செல்வது உறுதி என்று மக்களும் நினைக்கத் தொடங்கினார்கள்.
வடமராட்சியில் புலிகளுக்கு பெருமளவு நிதியுதவி செய்த வர்த்தகர்கள் தப்பிஓடிவந்து கோப்பாய் பகுதியில் தங்கியிருந்தனர்.
“எவ்வளவு பணம் கொடுத்தோம். என்ன புண்ணியம். வடமராட்சியை விட்டுப்போட்டு வந்துவிட்டார்களே” என்று புலிகளைத் திட்டிக் கொண்டிருந்தனர்.
வல்வெட்டித்துறையில் பிரபாகரன் தங்கியிருந்ததாக படையினர் அறிந்து வைத்திருந்த இரு வீடுகள் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டன.
அதிலொன்று பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீடு.
பொருளாதாரத் தடை, பட்டினி அபாயம், ஷெல் வீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள். யாழ் குடாநாடே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
எனவே எப்படியாவது ஒரு பலத்த அடியைக் கொடுத்தாக வேண்டும் என்று பிரபாகரனும் நினைத்தர்.
சக்கைலொறி
தற்கொலைத்தா க்குதல் ஒன்றை நடத்துவது மூலம்தான் முகாமுக்குள் பாரிய அழிவை ஏற்படுத்தலாம் என்று பிரபாகரன் திட்டமிட்டார்.
லொறி ஒன்றில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு சென்று நெல்லியடி முகாம்மீது மோதுவது தான் திட்டம்.
வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு செல்லுமு; லொறிக்கு ‘சக்கைலொறி’ என்று பெயர்.
‘சக்கைலொறியை செலுத்துவது யார் என்று தீர்மானிப்பதற்கு இடையில் ‘நான் போகிறேன்’ என்று முன்வந்தான் மில்லர்.
ஜுன் 5ம் திகதி சக்கைலொறித் தாக்குதல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலுக்கு செல்வது என்று முடிவு செய்தபின்னர் தன் வீட்டுக்குச் சென்றான் மில்லர்.
மில்லரின் தாய்க்கு அதுதான் தன் மகனைக் காணும் கடைசிநாள் என்பது தெரியாது. பால் காய்ச்சிக் கொடுத்தாள் அம்மா.
விடைபெற்றுக்கொண்டு புறப்பட்ட மில்லர் சில கணம் தாமதித்தான். அம்மாவை வாஞ்சையோடு கட்டிப்பிடித்து கொஞ்சினான். அம்மபவுக்கு எதுவும் விளங்கவில்லை.
அதுதான் கடைசி முத்தம் என்று தெரியாமல் சந்தோசமாக விடைகொடுத்தாள்.
ஜுன் 5ம் திகதி சக்கை லொறி ஒன்றில் மில்லர் ஏறி சாரதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். லொறியின் முன்பக்கத்தில் யுத்த ஹமுதாவ (இராணுவம்) என்று சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.
சக்கை லொறி புறப்பட்டது.
தன் சகாக்களை நோக்கி கையசைத்து புன்னகைத்தபடியே மில்லர் லொறியைச் செலுத்திக்கொண்டு போய்விட்டான்.
யுத்த ஹமுதாவ
‘யுத்த ஹமுதாவ’ என்று எழுதப்பட்டிருந்தமையால் தடை அரண்களில் லொறியை தடுக்காமல் உள்ளே விட்டனர்.
இராணுவத்தினரும் தமது தேவைகளுக்காக பல லொறிகளை அப்போது பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அதனால் மில்லர் சென்ற லொறியையும் தமது பாவனையில் உள்ள லொறிதான் என்று இராணுவத்தினர் நினைத்துவிட்டனர்.
சக்கை லொறி நெல்லியடி மகாவித்தியாலயத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
அப்போதுதான் இராணுவத்தில் சிலருக்கு அந்த லொறி மீது சந்தேகம் ஏற்பட்டது.
லொறியை நிறுத்துமாறு சைகை செய்தனர். மில்லர் நிறுத்தவில்லை. இலக்கை நோக்கி லொறியைச் செலுத்தினான்.
தடுத்தும் லொறி நிறுத்தப்படவில்லை என்பதால் இராணுவத்தினர் லொறியை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யத் தொடங்கினர்.
மில்லர் சக்கை லொறியைக் கொண்டு சென்று மத்திய கல்லூரியின் பிரதான கட்டிடத்தில் மோதுவதுதான் திட்டமாக இருந்தது.
இராணுவத்தினர் உஷாராகி சூழல் குழம்பியதால் தாமதிக்க நேரமில்லை. நெல்லியடி மகாவித்தியாலய முன்பக்கமாக குறித்த இலக்குக்கு முன்னரே சக்கைலொறி மோதி வெடித்தது.
அந்தப் பிரதேசமே அதிர்ந்தது. மகாவித்தியாலயக் கட்டிடம் இடிந்து வீழ்ந்தது.
40க்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியானார்கள். 20 பேர் பலியானதாக அரசு அறிவித்தது.
குறித்த இலக்கில் மோதி வெடித்திருந்தால் அழிவுகள் அதிகமாக இருந்திருக்கும்.
சக்கைலொறித் தாக்குதல் நடைபெற்றபோது பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ அங்கு இருக்கவில்லை.
அவரது அதிஷ்டமோ என்னவோ அந்த நேரத்தில் வேறு பகுதிக்கு நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்தார்.
புலிகள் நடத்திய முதலாவது கரும்புலித் தாக்குதல் அதுதான். புலிகள் இயக்கத்தின் முதலாவது கரும்புலி மில்லர்.
மில்லர் பிறந்தது 01.01.1966. சொந்தப் பெயர் வல்லிபுரம் வசந்தன். யாழ்ப்பாணத்தில் துன்னாலைதான் சொந்த இடம். புலிகள் இயக்கத்தில் கப்டன் தரத்தில் இருந்தவர்.
மில்லர் தாக்குதல் நடத்தியது 05.06.1987
மில்லரின் தாக்குதல் படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைத் தாக்குதலை இராணுவத்தினர் எதிர்பார்க்கவில்லை.
மில்லரின் தாக்குதல்தான் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய பதிலடியில் குறிப்பிடத்தக்க பாரிய நடவடிக்கையாகும்.
அத்துமீறல்கள்
இதற்கிடையே நடைபெற்ற சில சம்பவங்கள் இராணுவத்தினர் தொடர்பான அச்சத்தை யாழ் குடாநாட்டு மக்களிடம் ஏற்படுத்தின.
ஆலயங்கள் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று தஞ்சமடைந்த மக்களையும் அச்சமூட்டும் வகையில் அல்வாயிலுள்ள மாரியம்மன் கோவிலில் ஷெல் ஒன்று விழுந்தது.
கோயிலில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 35 பேர் பலியானார்கள்.
இராணுவத்தினர் நிலை கொண்டிருந்த பகுதிகளில் புலிகளின் சுவரொட்டிகள் காணப்பட்டன. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த
பகுதிகளில் உள்ளவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டு இராணுவத்தினரால் தாக்கப்பட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டன.
பருத்தித்துறையில் உள்ள புத்தளை பிள்ளையார் கோவிலில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
அங்கு வந்த இராணுவத்தினர் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தனர். யாழ் பல்கலைக்கழக பொறியியல் மாணவர் ஒருவரும் இருந்தார்.
அவரது அடையாள அட்டையில் அவரது சொந்த இடம் வல்வெட்டித்துறை என்று இருந்தது.
வல்வெட்டித்துறை என்றாலே இராணுவத்தினருக்கு வெறுப்பு. பிரபாகரன் பிறந்த ஊர் என்பதுதான் காரணம்.
அந்த மாணவனைத் தாக்கினார்கள். மாணவனின் பெற்றோர் தங்கள் மகனை விடுவிக்குமாறு கெஞ்சினார்கள். அவர்கள் கண் முன்பாகவே அந்த மாணவனைச் சுட்டுக் கொன்றனர்.
ஓடவிட்டுச் சுட்டனர்
மே 31ம் திகதி நடைபெற்ற ஒரு சம்பவம் மிகக் கொடுமையானது.
கணித விரிவுரையாளர் ரகுதீஸ்வரன் என்பவரும், வேறு சிலரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். நெல்லியடி முருகன் கோவிலில் அவர்கள் தங்கியிருந்தனர்.
கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரகுதீஸ்வரனையும், ஏனையோரையும் ஓடுமாறு கூறினார்கள் இராணுவத்தினர். அவர்கள் ஓடும்போது பின்புறமிருந்து சுட்டனர்.
ரகுதீஸ்வரன் மட்டும் செத்தவர் போல் கிடந்து சிறுகாயத்துடன் தப்பினார்.
அவ்ரோ விமானங்களில் இருந்து திவமும், இரப்பரும் கலந்து மக்கள் மீது வீசப்பட்டது. அதன் சிறு துணிக்கை உடலில் பட்டாலும்கூட பெரிய காயத்தை ஏற்படுத்தும்.
வல்வெட்டித் துறையில் மட்டும் 48 பீப்பாய்க் குண்டுகள் போடப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சிவன் கோவிலில் ஒரு பீப்பாய் குண்டு விழுந்தது. 17 பேர் பலியானார்கள்.
யாழ் குடாநாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த தாக்குதல்கள் தமிழ் நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது என்று தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கின.
இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.
யாழ்-குடா நாட்டில் படையினர் பாரிய நடவடிக்கையில் ஈடுபட்டதை இந்திய மத்திய அரசும் விரும்பவில்லை.
யாழ்-குடா நாட்டை இராணுவத்தினர் தமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால் இலங்கை அரசை ஒரு தீர்வுக்கு நிர்ப்பந்தப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதும் இந்திய மத்திய அரசின் எண்ணமாக இருந்தது.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பிரபாகரனுக்கு சார்பானவராக இருந்தார். எம்.ஜி.ஆரை திருப்தி செய்ய வேண்டியது அவசியம் என்று பிரதமர் ராஜிவ் காந்தி நினைத்தார்.
இறுதியாக இந்திய மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்தது.
வானில் தோன்றிய விமானங்கள்.
ஜுன் 5ம் திகதி நெல்லியடி மத்திய கல்லூரியில் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றதல்லவா.
அதற்கு முதல்நாள் ஜுன் 4ம் திகதி இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பமான சம்பவம் நடைபெற்றது.
இந்திய விமானப்படை விமானங்கள் யாழ் குடாநாட்டு வான்பரப்பில் திடீரென்று தோன்றின.
இலங்கை விமானப்படை விமானங்கள்தான் குண்டுவீச வந்துவிட்டன என்று பீதியுடன் ஓடிய மக்கள் பங்கர்களுக்குள் பதுங்கிக்கொண்டனர்.
முதலில் புலிகளுக்கும் அது யாருடைய விமானங்கள் என்று புரியவில்லை.
அதே சமயம் யாழ்குடாநாட்டு இராணுவ முகாம்களுக்குள்ளும் ஒரே குழப்பம்
(தொடர்ந்து வரும்)
Average Rating