ராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ, விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி!! : காரணம் என்ன?? (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –14)
சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய அறிவியல் துறையினர் வசம்தான் ஒப்படைத்திருக்கிறார்.
அந்த பிலிம் ரோல், தடய அறிவியல் துறை வல்லுநர் டாக்டர் சந்திரசேகரனிடம் தரப்பட்டிருக்கிறது. டாக்டர் சந்திரசேகரனுக்கும் ஹிந்து நாளிதழுக்கும் இடையில் உள்ள நெருக்கம் டிபார்ட்மெண்டில் அனைவருக்கும் தெரியும்.
ஸ்ரீபெரும்புதூருக்கு அவர் வந்து சேர்ந்ததே ஹிந்து நிருபரின் காரில்தான். பிலிம் ரோல் கிடைத்ததும் நேரே ஹிந்து அலுவலகம் சென்று ப்ரிண்ட் போட்டுக் கொடுத்துவிட்டு அதன் பிறகுதான் அதை சி.பி.சி.ஐ.டியிடம் கொண்டு வருகிறார்கள்!
இதனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்.
அந்த ஹரி பாபு எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு நாங்கள், ராஜிவ் காந்திக்கு மாலையிட வந்தவர்களை அடையாளம் காண முயற்சி செய்துகொண்டிருந்த வேளை.
சம்பவத்தில் காயமுற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் படுத்திருந்த மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகரைச் சந்திக்கப் போயிருந்தேன்.
(மரகதம் சந்திரசேகரும் அப்போது மருத்துவமனையில்தான் இருந்தார்.) அறையில் அவரும் அவரது மனைவியும் ஒரே மகளும் மட்டும் இருந்தார்கள்.
சி.பி.ஐக்குச் சில தகவல்கள் முன்னதாகக் கிடைத்திருந்தன. லலித் சந்திரசேகருக்கும் லதா கண்ணனுக்குமான தொடர்புகள் குறித்த தகவல்கள் அவை.
லதாகண்ணன் அருகே இருந்த பெண்தான் குண்டு வெடிக்கச் செய்தவள் என்கிற வகையில் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா, என்ன மாதிரியான தொடர்பு என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம்.
மரகதம் சந்திரசேகர்
வெகு நிச்சயமாக, மரகதம் சந்திரசேகர் அல்லது அவரது மகன் அல்லது மகள் உதவியில்லாமல் அன்றைக்கு விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமேகூட மாலையிட அனுமதி கிடைத்திருக்காது என்பதால், அந்தப் புகைப்படத்தைக் காட்டி அடையாளம் தெரியுமா என்று கேட்பதற்காக லலித் சந்திரசேகரிடம் எடுத்துச் சென்றேன்.
மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருந்த அவர், படத்தை வாங்கிப் பார்த்தார். சில வினாடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘யாருன்னு தெரியலியே’ என்று வெகு இயல்பாகச் சொன்னார்.
அந்த இடைவெளியில், இயல்பான ஆர்வம் உந்த, அருகே நின்றிருந்த அவரது பெண் குழந்தை நெருங்கி வந்து அந்த போட்டோவைப் பார்த்தது.
ஒரு கணத்துக்கும் குறைவான நேரம்தான்! அந்தக் குழந்தையின் முகத்தில் நபரை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட பாவம் தெரிந்துவிட்டது எனக்கு!
‘பே… பே…’ என்று அது தன்னையறியாமல் கத்தத் தொடங்கியபோதுதான் எனக்கு விஷயமே தெரியும் லலித் சந்திரசேகரின் மகளுக்குப் பேச வராது என்பது!
அடுத்தக் கணம் என்ன ஆகப்போகிறது என்பது அனைவருக்குமே சஸ்பென்ஸாக இருந்தபோது, திடீரென்று ஆவேசம் வந்தவர் போல லலித் அங்கிருந்த தன் மனைவியைப் பார்த்துக் கத்தத் தொடங்கினார்:
‘இவளை வெளிய கூட்டிட்டுப் போன்னு உன்கிட்ட சொன்னேனில்ல? இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கா இவ?’ அந்தச் சத்தம் அபூர்வமானது.
ஆக்ரோஷம் கலந்த பதற்றம் அதில் இருந்தது. அச்சத்தின் வாசனை கலந்த கோபம்.
நான் ஒரு போலீஸ் அதிகாரி. நூற்றுக்கணக்கான விசாரணைகளைச் செய்தவன்.
பல்வேறு விதமான மனிதர்களைச் சந்தித்தவன். ஒரு குற்றவாளியைப் பார்த்த மாத்திரத்தில் உடல் மொழியிலேயே அடையாளம் காணக்கூடியவன்.
நான் மட்டுமல்ல. எல்லா அனுபவம் மிக்க அதிகாரிகளும் இதனைச் செய்வார்கள். அந்த மருத்துவமனைச் சூழலில், திடீரென்று அவருக்கு ஏற்பட்ட பதற்றமும் கோபமும் எனக்கு மௌனமாகப் பல விஷயங்களை உணர்த்தின.
இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணை இவருக்கு நிச்சயம் தெரியும். பார்த்திருக்கிறார். ஆனாலும் மறைக்க நினைக்கிறார்.
எதற்கு வம்பு என்று கருதியிருக்கலாம். தெரியாது என்று ஒரு சொல்லில் மறுத்துவிடுவதில் பல சௌகரியங்கள் உள்ளன.
வழக்கு, விசாரணை என்ற இழுத்தடிப்புகளிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
எனக்கு லலித் சந்திரசேகரை விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. அவரை மட்டுமல்லாமல், மரகதம் சந்திரசேகர், லதா பிரியகுமார் அனைவரையும் துப்புரவாக விசாரித்தால், மாலையிட்ட மங்கையை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என்று உறுதியாகத் தோன்றியது.
கார்த்திகேயன்
என் கருத்தை விளக்கிச் சொல்லி, நடந்த சம்பவத்தையும் விவரித்து, கார்த்திகேயனிடம் விசாரணைக்கு அனுமதி கேட்டேன்.
கிடைத்த பதில்: ‘அதையெல்லாம் சீனியர் ஆபீசர்கள் பார்த்துக்கொள்வார்கள்.’
வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தாலும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் சொல்லிவிட்டபடியால் நான் நினைத்தபடி அவர்கள் யாரையும் என்னால் விசாரிக்க முடியாமலேயே போய்விட்டது.
சீனியர் ஆபீசர்கள் விசாரிக்காமல் இல்லை. ஆனால் அவர்கள் யாரும் உருப்படியாக எந்தத் தகவலையும் கொண்டுவரவில்லை அல்லது அவை பதிவாகவில்லை.
இப்போதும் சொல்கிறேன். மரகதம் சந்திரசேகர் ராஜிவுக்கு எதிராகக் கனவிலும் எதையும் நினைத்துப் பார்த்து அறியாதவர்.
ஆனால் தன்னையறியாமல் ஒரு குற்றத்துக்குத் துணைபோயிருக்கிறார். அவரிடம் முதலிலேயே பேசியிருந்தால், அவர் வீட்டுக்கு வந்தவர்கள் யார் யார், என்ன பேசினார்கள், எப்படி நடந்துகொண்டார்கள் என்கிற அடிப்படை விவரங்களைச் சேகரித்திருக்கலாம்.
லலித் சந்திரசேகரும் அச்சத்தின் காரணத்தால் புகைப்படத்தில் இருந்தவர்களைத் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்த லலித்தின் நண்பர் டரியல் பீட்டர்ஸுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை.
சம்பவ இடத்தில் இறந்து போனவர்களுள் அவரும் ஒருவர். மரகதம் சந்திரசேகரைப் பிடித்து மேடையில் ஏற்றிவிட்டுவிட்டுக் கீழே இறங்கிய அவரும் குண்டு வெடிப்பில் இறந்து போனார்.
ஆனால் அதற்கு முன்னால் அவர் மே 30ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறார்!
அவருடன் சிவராசனோ சின்ன சாந்தனோ பேரம் பேசியிருக்கலாம்.
காரியத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நீ அமெரிக்கா போய்விடு, அங்கே உனக்கு நல்ல வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கலாம்!
இதற்கு வாக்குமூல ஆதாரம் ஏதுமில்லை.
இந்த விவரங்களில் பெரும்பாலானவற்றை எங்களுக்கு விவரித்த சின்ன சாந்தன் இது பற்றி ஏதும் கூறியிருக்கவில்லை.
காரணம் மிக எளிமையானது. விடுதலைப் புலிகளின் குறிக்கோள் நிறைவேறுவதற்கு உதவியாக இருந்த யாரையும் அவர்கள் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.
அப்படிச் செய்தால், பிறகு வேறொரு சமயத்தில் யாரிடமிருந்தும் எவ்வித உதவியும் கிடைக்காது போய்விடுமே!
இன்னொருவரைக் காட்டிக்கொடுப்பது இருக்கட்டும்.
சின்ன சாந்தன் ராஜிவ் படுகொலைச் சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகளான சிவராசன், சுபா, தணு, ஹரி பாபு, நளினி ஆகிய ஐவருடன் ஆறாவதாகத் தானும் இருந்த விஷயத்தைக் கூட எங்களிடம் சொல்லவில்லை!
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலையாளிகள் வேலையை முடித்து ஆட்டோவில் சென்னை திரும்பியபோது யாரோ ஒரு நபர் முன்னால் ஏறிக்கொண்டதாக விசாரணையில் நளினி குறிப்பிட்டிருந்தார்.
பிறகு ஹரி பாபு எடுத்த பத்து படங்களில் எட்டாவது படத்தில் சின்ன சாந்தன் ராஜிவின் கன்னத்தைத் தொட எத்தனிப்பது போல் காட்சி பதிவாகியிருப்பதைக் காண நேர்ந்த சமயம் வழக்கு விசாரணைகள் முடிந்து அவர் தண்டனையே பெற்றுவிட்டிருந்தார்.
இதனைச் சொல்ல வந்த காரணம், எதையும், எல்லா சாத்தியங்களையும் யோசிக்காமலும் சந்தேகப்படாமலும் எப்படி இருக்க முடியும்?
மரகதம் சந்திரசேகர் குடும்பத்தாரை நான் விசாரிக்க விரும்பியது இத்தகைய காரணங்களால்தான்.
இவற்றையெல்லாம் களத்தில் இருக்கும் ஒரு புலனாய்வு அதிகாரி விசாரிக்க முடியாது என்றால் நமது அதிகார வர்க்கம் இருந்து சாதிக்கப்போவதுதான் என்ன?
வை கோ கள்ளத் தோணியில் ஈழம் சென்ற பழைய கடற் புகைப்படம்
வை கோ. இவரைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசிவிட்டு மேற்கொண்டு புலன் விசாரணையின் பாதையில் திரும்பச் செல்லலாம். ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைகளின்போது பலசமயம் இவரை விசாரிக்க வேண்டும் என்று நான் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன்.
அதற்கான அவசியங்கள், காரணங்கள் அனைத்தையும் கார்த்திகேயன் அவர்களிடம் விளக்கிச் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் விடுதலைப் புலிகள், அவர்கள் சம்பந்தமுடைய மற்ற பல தமிழ்நாட்டு சாதாரண மனிதர்களை விசாரிக்க எனக்கு அனுமதி கிடைத்ததே தவிர, தமிழக அரசியல்வாதிகள் யாரையும் விசாரிக்க எனக்குத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டேதான் வந்தது.
இதற்கான எளிய காரணங்கள் எனக்குப் புரியாமல் இல்லை.
ஆனால் அவர் உயரதிகாரி. என்னால் கேட்டுப்பார்க்க மட்டுமே முடியும். வாதாடலாம். ஆனால் முடிவு, தீர்மானம் அவருடையது. என்ன செய்ய முடியும்?
ஆந்திரக் கடலோரப் பகுதியில் ஒரு சமயம் பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று தொடர்பான வழக்கு சி.பி.ஐ. வசம் வந்தபோது மனமுவந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டவர், அதே போன்ற இன்னொரு விடுதலைப் புலிக் கப்பல் தமிழகக் கடற்பகுதியில் பிடிபட்டபோது, ‘விட்டுவிடலாம், மாநில போலீஸ் பார்த்துக்கொள்ளட்டும்’ என்று சொன்னார்.
தமிழக அரசை, தமிழக அரசியல்வாதிகளை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என்கிற அவரது கொள்கை எனக்குப் புரியாமல் இல்லை.
ஆனால் முடிவெடுக்க வேண்டிய ஓர் அதிகாரி இப்படி இருந்ததால் என்னைப் போன்ற இடைநிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் மிக அதிகம்.
அது ஒரு புறமிருக்க, வைகோவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு குறித்துப் புதிதாக நாம் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. அவர் தீவிர புலி ஆதரவாளர்.
இதனை அவர் மறைத்ததுமில்லை. ஆனால் ராஜிவ் படுகொலை சமயம் நடந்த சில சம்பவங்கள், கிடைத்த சில ஆதாரங்கள் அவரை விசாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் வலுவாக உண்டாக்கின.
முதலாவது, நான் முன்னர் விவரித்த கொடுங்கையூர் வீட்டுக்கு வெள்ளை உடை மனிதர் ஒருவர் வந்து போன சம்பவம். ‘சீனிவாசய்யா’ என்று சின்ன சாந்தன் சொன்னாலும் சி.பி.ஐ. விசாரணையில் அந்த நபர் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தான் என்று சற்று வலுவாகவே தெரிந்தது.
தக்க ஆதாரங்கள் இல்லாமல் நான் அவரை விசாரிக்க அனுமதி கேட்கவில்லை. ‘அடுத்த சி.எம். வைகோதான்’ என்று அவரும் சிவராசனும் பேசிக்கொண்டதைச் சின்ன சாந்தன் எங்களிடம் சொல்லியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், 21ம் தேதி வைகோ ஸ்ரீபெரும்புதூருக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிந்தது.
அவர் மூலமாகக் கருணாநிதிக்கும் இந்த அறிவுறுத்தல் சென்றதாகவும் தெரிந்தது.
பிரபாகரனுக்கு வைகோவைப் பிடிக்கும். மிகவும் பிடிக்கும். இதில் சந்தேகமில்லை. ஆனால் பிரபாகரனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பிடிக்காது.
இதிலும் சந்தேகமில்லை. விடுதலைப் புலிகள் நீங்கலான பிற இலங்கைத் தமிழ் இயக்கங்களுக்குக் கருணாநிதி உதவி செய்தது, புலிகள் அமைப்புக்கு எம்.ஜி.ஆர் ஐந்து லட்சம் ரூபாய் உதவி செய்தபோது, இவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தது, பிரபாகரன் அதைத் திருப்பி அனுப்பியது அந்தக் காலக்கட்டத்திலிருந்தே ஆரம்பித்தது அது.
வைகோ ஒரு தி.மு.க. உறுப்பினராக இருந்ததில் பிரபாகரனுக்கு எவ்வித மனச்சங்கடமும் இருக்கவில்லை.
ஒரு நண்பர் என்கிற அளவில் வைகோவை அவர் மிகவும் மதித்தார்.
அதே சமயம் வைகோ எதற்கெடுத்தாலும், ‘எங்க தலைவர், எங்க தலைவர்’ என்று கருணாநிதியைக் குறிப்பிட்டுப் பேசும்போதெல்லாம் ‘அவர் இருக்கட்டும். நீங்க சொல்லுங்க’ என்று பேச்சை மாற்றவே பிரபாகரன் விரும்பியிருக்கிறார்.
இதனை ஆதாரபூர்வமாக நாங்கள் ஒளிப்படமாகவே பார்த்திருக்கிறோம்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் தளத்துக்கு வைகோ சென்றிருந்த சமயம் நினைவிருக்கிறதா? கள்ளப் படகேறிச் சென்று இரண்டு மாதகாலம் ஈழத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியதைத் தமிழகம் மறக்காது.
ஈழம் செல்வதற்கு அவரிடம் விசா கிடையாது. பின்னாளில் இது பற்றி விசாரணை ஒன்று வந்தபோது, ‘இலங்கை அரசு யாருக்கு விசா கொடுத்திருக்கிறது?’ என்று கேட்டு அதை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.
அப்படி அவர் விடுதலைப் புலிகளின் காட்டுக்குச் சென்று, பிரபாகரனையும் பிற புலித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிய சமயம் எடுக்கப்பட்ட மிக நீண்ட வீடியோ ஒன்று உண்டு.
சி.பி.ஐ. வசம் அந்த வீடியோப் பிரதி ஒன்றும் இருந்தது. அனைவரும் பார்த்திருக்கிறோம்.
பின்னாளில் அதே வீடியோ எடிட் செய்யப்பட்டு ‘புலிகளின் குகையில்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் பேபி சுப்பிரமணியம் மூலம் வினியோகிக்கப்பட்டது.
ஆனால் அந்த எடிட் செய்யப்பட்ட பிரதியில் உரையாடல்கள் ஏதும் இருக்காது. தமிழகத்தில் அத்தனை அரசியல்வாதிகளிடையே வைகோவை மட்டுமே பிரபாகரன் முழுமையாக நம்பினார், நட்புக்கொண்டார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மண்ணில் அவர்கள் செய்ய உத்தேசித்திருந்த ஒரு மிகப்பெரிய நாசகாரச் செயல் பற்றி வைகோவுக்குச் சற்றும் தெரியாது இருந்திருக்குமா? சரி. தெரியாது. அப்படியே வைத்துக்கொள்வோம்.
ஆனால் கொடுங்கையூரில் சிவராசனைச் சந்தித்துவிட்டு அந்த உயரமான வெள்ளை உடை மனிதர் திரும்பிச் சென்ற பிறகு, திடீரென்று முன்னறிவிப்பின்றி 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தைக் கருணாநிதி ரத்து செய்ததன் பின்னணி என்ன?
தொடரும்..
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating