கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை…!!
விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் ‘தமிழ் – சிங்களக் கலைக்கூடல்’ என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாக தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை எட்டுவதற்கு கலைஞர்களும் படைப்பாளிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைக்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட கே. எச். குணரட்ண என்ற ஊடகவியலாளர் கூறினார், “இனவாதத்தையும் மதவாதத்தையும் பாடசாலைகளிலேயே ஊட்டி வளர்க்கிற நாடு இலங்கை. பல்கலைக்கழகங்களில் இது இன்னும் வலுவாக நடக்கிறது. இனவாதத்தையும் மதவாதத்தையும் இல்லாதொழிக்க வேண்டும் என்றால் இன, மத அடையாளங்களோடு இயங்கும் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் அந்த அடையாளங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். இதற்கான அரசியற் தீர்மானங்களை எடுப்பதிலிருந்தே இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். இன, மத அடையாளங்களைத் தாங்கியிருக்கும் பாடசாலைகளின் பெயரை மாற்றுவதிலிருந்தே இதைத் தொடங்க வேண்டும்” என்று.
அவர் கூறியது முற்றிலும் உண்மையே. இலங்கையில் பல பாடசாலைகள் இன, மத அடையாளங்களையே கொண்டிருக்கின்றன. தமிழ் மகா வித்தியாலம், இந்துக் கல்லூரி, சிங்கள மகா வித்தியாலம், றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்க மிஸன் பாடசாலை, சிங்கள கலவன் பாடசாலை, தமிழ்க் கலவன் பாடசாலை, முஸ்லிம் வித்தியாலயம் என்று முற்றிலும் இன ரீதியான அல்லது மத ரீதியான பாடசாலைகளே. இப்படியான அடையாளங்களோடு பாடசாலைகள் உருவாகியதற்கான வரலாற்றுப் பின்னிணியும் உண்டு.
ஐரோப்பியரின் வருகையோடுதான் இந்த நோய்க்கூறு உண்டானது. அவர்கள் கிறிஸ்தவத்தையும் ஆங்கிலக் கல்வியையும் வளர்ப்பதற்காக கிறிஸ்தவப் பாடசாலைகளை உருவாக்கினார்கள். குறிப்பாக, பிரித்தானியர். இதனால், சுதேச மொழியும் மதமும் அழிகிறதே என்று கவலைப்பட்ட இலங்கையர்கள் தத்தம் இன, மத அடையாளங்களோடு பாடசாலைகளை உருவாக்க முற்பட்டனர். ஆறுமுகநாவலர் தொடக்கம் அநாகரிக தர்மபால, அறிஞர் சித்திலெப்பை வரையில் இப்படிச் செயற்பட்டனர். இவர்கள் உருவாக்கியதே இந்த இன, மத அடையாளங்களைக் கொண்ட பாடசாலை முறைமை.
அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகச் சுய அடையாளத்தைத் தக்க வைப்பதற்கு மாற்று வழியில்லாத நிலையில் இதை அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிச் சிந்தித்திருக்கிறார்கள். இது அன்றைய காலகட்டத்துக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் காலகட்டம் முடிவுற்ற பிறகு இதை மாற்றியமைத்திருக்க வேண்டும். பின்னர் வந்த காலம் வேறு வகைப்பட்டது. அது நாட்டில் ஒருமைப்பாட்டுக்கும் சுதேச வளர்ச்சிக்குமுரியது. அதற்கேற்ற வகையில், புதிதாகச் சிந்தித்திருக்க வேண்டும். அதற்குரிய சிந்தனைமுறையை பிற்காலகட்டத்துக்குரியவர்கள் கொள்ளவில்லை. இது பெருந்துயரே.
இப்போது, பெரும்பாலான பாடசாலைகள் கோயில்களைப்போல உள்ளன. இன்னும் சரியாகச் சொன்னால், கோயில்களாக – மத அடையாளங்களை வலுவாகக் கொண்டவையாக மாற்றப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு பாடசாலையிலும் பெருமளவு காசைச் செலவழித்து கோயில்களைக் கட்டுகிறார்கள்.
சில பாடசாலைகள் தேவாலயங்களின் ஒரு பகுதியாகவே தெரிகின்றன. இதைப்போலதான் பிற மத அடையாளங்களைக்கொண்ட பாடசாலைகளில் அந்தந்த மத அடையாளங்கள் பிரமாண்டமாக்கப்படுகின்றன. மத அடையாளங்களை வலுப்படுத்துமளவுக்கு மதங்களின் தத்துவ அடிப்படையில் பண்பட்ட சமூக மனத்தை உண்டாக்கவில்லை.
இதனால் எங்கும் எதிலும் இனவாதமும் மதவாதமுமே நிறைந்து போயிருக்கிறது. இதனால்தான் “எங்கெங்கு காணினும் விகாரையடா” என்று பாடவேண்டியிருக்கிறது. விகாரைகள் மட்டுமல்ல. “எங்கே நிமிர்ந்தாலும் கோயிலும் கோபுரமும்தானடா” என்றும் சொல்ல வேண்டும். விகாரைகளுக்குப் போட்டியாக தேவாலயங்களும் மசூதிகளும் தாராளமாக உண்டு. இப்படியே நாடு மதச்சின்னங்களின் கூடாரமாகி வருகிறது. நாட்டில் மத அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவே அதிக பணம் செலவழிக்கப்படுகிறது. யுத்தத்தினால் அழிவடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக ஒவ்வொரு சமூகமும் கோயில்களையும் தேவாலயங்களையும் விகாரைகளையும் மசூதிகளையுமே கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன.
வகுப்பறைகளின் வசதியை மேம்படுத்துதற்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. ஆய்வுகூட வசதிகளைப் பெருக்கி, அவற்றை நவீனமயப்படுத்துவதற்கு முயற்சிப்பதில்லை. நூலகங்களை விருத்தி செய்து, அவற்றைத் திறம்பட இயக்குவதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை. விளையாட்டு மைதானங்களை விரிவாக்கிச் செம்மைப்படுத்தி, அவற்றின் மேம்பாட்டை உயர்த்த வேண்டும் என்று யோசிப்பதில்லை. பதிலாக மத அடையாளச் சின்னங்களுக்காகவே செலவழிக்கிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள மனப்பாங்கு மதவாதமன்றி வேறென்ன? இந்த மதவாதத்தின் பின்னே சில இடங்களில் இனவாதமும் ஊறியுள்ளது.
இப்படியான இன, மத அடையாளங்களோடு இயங்கும் பாடசாலைகள் மிக இளைய வயதிலேயே பிஞ்சுப்பருவத்திலேயே பிள்ளைகளின் மனதில் மெல்ல மெல்ல இனவாத அல்லது மதவாதப்பட்ட தன்மைகளை ஊட்டிவிடுகின்றன. பின்னர், இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும்போது, அங்கும் இன, மத வாதப்பட்ட அடையாளங்களும் தன்மைகளும் தாராளமாக இருப்பதால், அவற்றின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.
இது ஒவ்வொரு சமூகத்தையும் இனவாதத்தின் அடிப்படையிலும் மதவாதத்தின் நோக்கிலுமே சிந்திக்குமாறு மாற்றி விடுகிறது. எதை நம் குழந்தைகளுக்கு ஊட்டுகிறோமோ அந்த அடிப்படையிலேயே அவர்கள் வளர்வார்கள். அப்படிதான் வளர்ந்து கொண்டுமிருக்கிறார்கள். அதனால்தான் இன வாதம் வரவர பலமடைந்து வருகிறது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கைச் சமூகங்களின் சிந்தனை முறை, இயங்கு நிலை, அவர்களுடைய அரசியல் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், அவை எவ்வாறு இனவாத மயப்பட்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.
1948இல் இன அடையாளத்தைப் பகிரங்க முத்திரையாகக் கொண்ட கட்சிகள் இலங்கையில் இருக்கவில்லை. ஆனால், இன்று இன ரீதியாகவும் மத ரீதியாகவுமே மக்கள் சிந்திக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் தங்களின் அரசியற் தேர்வுகளைச் செய்கிறார்கள். இப்படியான ஒரு நிர்ப்பந்தம் மக்களுக்கு உண்டாகியுள்ளது. மக்கள் என்பது யார் நாம் தானே. நம்மையறியாமலே இன்று நாம் இனவாதத்துக்குப் பலியாகியிருக்கிறோம். ஏனென்றால், அவரவர் இனம் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் இன்னொரு இனக்கட்சிக்கு வாக்களித்தால் அது துரோகம் என்று பார்க்கும் அளவுக்கு வந்திருக்கிறோம் என்றால் அது இனவாதமில்லாமல் வேறு என்ன?
முஸ்லிம்கள், முஸ்லிம் அடையாளக்கட்சிகளுக்கும் சிங்களவர்கள், சிங்களத்தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கும் தமிழர்கள், தமிழ் அடையாளக் கட்சிகளுக்கும் மலையகத் தமிழர்கள், மலையகத் தமிழை அடையாளமாகக் கொண்ட கட்சிகளுக்குமே வாக்களிக்க வேண்டும் என்ற எழுத விதி உருவாகியுள்ளது. இதெல்லாம் நாம் மேற்சொன்ன இன வாத, மத வாத நோக்கிலான செயற்பாடுகளின் விளைவன்றி வேறென்ன?
ஆகவே, நம் குழந்தைகளுக்கு நாம் எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது என்று சிந்திக்க வேண்டியது இன்று அவசியமாகியுள்ளது. அப்படி நல்நோக்கோடு சிந்திக்கவில்லையென்றால், மேலும் கேடான போக்கே வளரும். அது இதுவரை இந்த நாடு சந்தித்த அழிவையும் துயரையும் விட அதிகமான அழிவுகளையும் துயரத்தையுமே உண்டாக்கும்.
இலங்கையின் கல்வி மூலம் விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் மேதகு சிந்தனையாளர்களும் உருவாகுவதற்குப் பதிலாகத் தாராளமாக இனவாதிகள் உருவாகியிருக்கிறார்கள். அதிலும் இளைஞர்களிடத்திலே இது ஒரு கொள்ளை நோயைப்போல தீவிரமாகப் பரவியிருப்பதை நாங்கள் பார்க்க முடியும். பல்கலைக்கழகங்களில் இன்று இனவாத அடிப்படையிலேயே மாணவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே அண்மைக்காலத்தில் இனரீதியில் கொந்தளிக்கும் மையங்களாகப் பல்கலைக்கழகங்கள் மாறியிருக்கின்றன. இதன்விளைவாக, தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்குச் சிங்களப் பெற்றோர் பயப்படுகிறார்கள்.
இதைப்போலவே, சிங்களப் பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயில்வதற்குப் பிள்ளைகளை அனுப்பும் தமிழ்ப் பெற்றோரும் அச்சமடைந்திருக்கின்றனர். இந்த நிலை எவ்வளவு வேதனைக்குரியது. ஆனால், இந்த நிலைமைக்கு ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு கல்வியலாளரும் காரணமாகி இருந்ததன் விளைவே இன்றைய இந்த நெருக்கடி நிலையாகும்.
இதையிட்டுச் சிலர் பெருமைப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இனவாத அடிப்படையில் பல்கலைக்கழகங்களை உருவாக்கிவிட்டால், நாடே இனவாதமயமாகி விடும். அப்பொழுது தமது அரசியல் அறுவடைகளை மிகச் சுலபமாகச் செய்து விடலாம் என்று சிந்திக்கிறார்கள். இதற்காகவே பல்கலைக்கழகங்களில் தீவிர இன உணர்வு கொண்ட மாணவர்களைத் தலைவர்களாகத் தெரிந்தெடுக்கும் சூழலை உருவாக்குகிறார்கள். இது வீட்டுக்கு நெருப்பை மூட்டுவதற்குச் சமம்.
உண்மையில் கல்வி மையங்கள் இன, மத அடையாளங்களுக்கு அப்பால் இயங்க வேண்டியவை. எந்தக் காரணம் கொண்டும் இன, மத அடையாங்களைச் சுமப்பவையாக இருக்கக்கூடாது. மாணவப் பருவம் என்பது வேற்றுமைகளில்லாத அருமையான பருவமாகும். படிக்கின்ற காலத்தில் சாதி, மதம், இனம் என்ற உணர்வுகள் எவருக்கும் தலைதூக்குவதில்லை. அது ஒரு பொதுமைப்பண்பாட்டுப் பருவம். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கை என்ற நிலைவரும்போதே அவை பெரும்பாலும் தலையெடுப்பதுண்டு. அதிலும் இளைஞர்களாக இருக்கும் பருவத்தில் சரியான பயில்நிலையும் அறிவார்ந்த சமூகச் செயற்பாட்டுத் தொடர்புகளும் கிடைத்து விடுமாக இருந்தால், பின்வரும் கால வாழ்க்கையும் கூட பொதுமைத்தன்மையுடையதாகவே இருப்பதுண்டு.
இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சுட்டமுடியும். இடதுசாரிகளின் உருவாக்கத்தை ஆராய்ந்தால் இதை விளங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான முற்போக்குச் சிந்தனையுடைவர்களும் மாற்றத்துக்கான சிந்தனாவாதிகளும் இளமைப்பிராயத்தில் பன்முகப்பண்பாட்டில் வளர்த்தெடுக்கப்பட்டவர்களாகவே இருப்பர்.
எனவேதான் இன, மத, பிரதேச, சாதீய வேறுபாடுகளுக்கு அப்பால், மாணவர்களையும் இளைஞர் – யுவதிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அப்படி குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டுமானால், அதற்கமைவான சிந்தனையும் கல்வி முறையும் சூழலும் உருவாக்கப்படுவது அவசியமாகும். ஆனால், இன்றைய கல்வி மற்றும் அரசியற் சூழலில் இது மிகக் கடினமான ஒன்றாகவே உள்ளது. அரசியற்தரப்புகள் இந்த விடயத்தில் துணிச்சலான முடிவுகளை, மாற்றத்தை நோக்கி முன்னெடுக்கும் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் இன, மத அடிப்படையில் அந்த அடையாளங்களை முன்னிறுத்தித் தங்களுடைய வாக்குவங்கிகளை உயர்த்தும் எண்ணத்தோடியங்கும் அரசியற் தரப்புகள், அதற்கு எதிராகத் தீர்மானமெடுக்க முன்வராது. இதைப்போலவே, கல்வி நிர்வாக மையங்களில் உள்ளவர்களும் சட்டாம்பிள்ளைத்தனமாக இன, மத நிலைப்பட்டுச் சிந்திப்போராகவே உள்ளனர். ஆகவே, அவர்களும் முன்வரப்போவதில்லை. வேண்டுமானால், இவர்கள் இதற்கு சில சப்பைக்கட்டு நியாயங்களைச் சொல்லிச் சமாளிக்க அல்லது அப்படிச் சொல்லித் தம்மை நியாயப்படுத்த முற்படுவர்.
றோமன் கத்தோலிக்கப் பாடசாலைகளில் சைவப்பிள்ளைகள் படிக்கிறார்களே. அதைப்போல சைவப்பாடசாலைகளில் கிறிஸ்தவ மாணவர்கள் பயில்கிறார்கள். முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களும் சிங்களப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகளும் படிக்கிறார்களே. இதிலெங்கே இனவாதமும் மதவாதமும் இருக்கிறது? என்று வேறு கேட்பார்கள். சிங்களப் பாடசாலை, தமிழ்ப் பள்ளிக்கூடம், முஸ்லிம் கல்லூரி என்று சொல்வதிலேயே இன அடையாளம்தானே உள்ளது. இதை நீங்கள் கவனிக்கவில்லையா?
ஆகவே, இதை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்புச் சுயாதீன சிந்தனையாளர்களுக்கும் கல்விச் சிந்தனாவாதிகளுக்கும் மாற்றத்தைக்குறித்துச் சிந்திப்போருக்குமுரியது. எப்போதும் மாற்றங்களை நிகழ்த்தும் நெம்புகோல்களும் தூண்டுவிசைகளும் இவர்களே. இவர்கள் சிறிய அணியினராகவே இருப்பர். ஆனால், தாக்க விசை அதிகமுடையவர்கள். இவர்களுடைய பலம் சிந்தனையும் அறிவுமே. இது அறிவின் யுகம். சிந்தனைப் புரட்சிக்கான களம். ஆகவே, இவர்களே மாற்றங்களுக்கான திறப்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating