கிட்டு மீதான தாக்குதலுக்கு, பிரபாகரனின் மறைமுக ஒப்புதல் இருந்தது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- பாகம்- 86) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினர் மேதின விழா நடத்தப்போகும் செய்தி அரசாங்கத்திற்கும் எட்டியிருந்தது. மேதின நாளுக்கு முன்னர் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டு நோட்டம் பார்த்துச் சென்றன.
அப்போதெல்லாம் விமானங்கள் துணிச்சலாக தாழப்பறந்து சட்டென்று எழுந்து உயர்ந்தெல்லாம் வேடிக்கை காட்டுவது வழக்கம்.
மேதின ஊர்வலம், கூட்டம் என்று நடக்கும்போது விமானக் குண்டுவீச்சுக்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் தோன்றியிருந்தது.
ஆனால் புலிகளோ வேறுவிதமாக யோசித்தனர். பெரும் திரளான மக்கள் கலந்துகொள்ளும் ஊர்வலத்திலோ, கூட்டத்திலோ விமானத்தாக்குதல் நடைபெறுமானால் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியாக அபகீர்த்தி ஏற்படும்.
எனவே-அவ்வாறான தாக்குதலுக்கு அரசாங்கம் துணியாது என்று புலிகள் நினைத்தனர்.
திட்டமிட்டபடி மேதினம் நடைபெறும் என்று புலிகள் அறிவித்தனர். மேதின விழாவுக்கான மாபெரும் ஒழுங்குகளும் புலிகள் அமைப்பினரால் செய்யப்பட்டன.
மேதின விழாவில் பெரும்திரளாக கலந்துகொள்ளும்படியும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
1987 மே 1ம் திகதி யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள யாழ் பல்கலைக்கழகச் சந்தியில் (பரமேஸ்வராச் சந்தி) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்களை ஏற்றிக்கொண்டுவந்து புலிகளின் வாகனங்கள் இறக்கின.
அது தவிர தாமாகவும் பெரும் திரளான மக்கள் வந்து கூடினார்கள். ஊர்வலத்தில் சில புதிய காட்சிகளை யாழ் மக்கள் முதன் முதலாகக் கண்டார்கள்.
புலிகளின் சிவப்பு மஞ்சள் கொடிகள் 1987 மே முதலாம் திகதிதான் முதன் முதலாக ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டன. தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி, மகளிர் அணி என்று பல்வேறு அணிகள் அணிவகுத்துச் சென்றன.
ஊர்வலத்தை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நடத்துவதில் யாழ் மாவட்ட புலிகளின் தளபதி ராதாதான் முன்னணியில் நின்றார்.
ஊர்வலம் கந்தர் மடச் சந்தி, அரசடி வீதிவழியாக நல்லூர் வடக்கு வீதிக்கு சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்றவர்கள் தம்மையறியாமலேயே அடிக்கடி அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டனர்.
நல்லூர் வடக்கு வீதியில் மேதினக் கூட்டம் ஆரம்பமானது.
யோகிக்கு முக்கியத்துவம்
கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் யோகி. யாழ் மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்தவர் திலீபன். கிட்டு யாழ் மாவட்ட தளபதியாக இருந்த போது யாழ் மாவட்ட கூட்டங்களில் திலீபன்தான் முக்கிய பாத்திரம் வகிப்பார்.
மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் திலீபன் காணப்பட்ட போதும், யோகிதான் பிரதான இடத்தைப் பிடித்து;க்கொண்டார்.
கொளுத்தும் வெய்யில் நேரத்தில் கூட்டம் நடைபெற்ற போதும் மக்கள் திரண்டிருந்தனர். பிரபாகரன் வந்து கலந்துகொள்ளக்கூடும். பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றும் பெரும்பாலானோர் காத்திருந்தனர்.
திடீரென்று மேடையில் இருந்து யோகி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இப்போது முக்கியமான ஒருவர் உங்கள் முன் தோன்றப்போகிறார்.
அவர் வருவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். என்று கூறினார் யோகி.
பிரபாகரன்தான் வரப்போகிறார் என்று கூட்டத்தினர் மத்தியில் ஒரே பரபரப்பு.
ஒரு கார் ஒன்று வந்து கூட்டத்தினரை நெருங்கியது.
காருக்குள் இருந்தவர் கிட்டு. அவர் அருகே ராதாவும் இருந்தார்.
பிரபாகரனை எதிர்பார்த்திருந்த போதும், கிட்டுவைக் கண்டதுகூட கூடியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
எல்லோரும் முண்டியடித்து கிட்டுவைப் பார்த்துவிடும் ஆவலில் காரை முற்றுகையிட்டனர்.
காருக்குள் இருந்தபடியே கிட்டு உரையாற்றுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. காருக்குள் இருந்தபடியே கிட்டு உரையாற்றினார்.
கிட்டு உரையாற்றி முடிந்ததும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடமிருந்து வெளிப்பட்ட ஆரவாரம், கிட்டுமீது யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடு தெரிந்தது.
35 இலட்சம் மக்கள் பலியானாலும்…
பிரபாகரன், மாத்தையா ஆகியோர் மேதினக் கூட்டத்தில் சமூகமளிக்கவில்லை.
மேதினக் கூட்டத்தில் யோகி ஆற்றிய உரையில் முக்கயமாக குறிப்பிட வேண்டிய விடயம் இது.
“35 இலட்சம் மக்கள் பலியாக வேண்டிய நிலை வந்தாலும், தமிழ் ஈழ இலட்சியத்தை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழீழம் உருவாகும்வரை போராடியே தீருவோம்.” என்றார் யோகி.
மேதினக் கூட்டத்தின்பின்னர் புலிகள் இயக்கத்தில் புதிய நட்சத்திரமாக யோகி கணிக்கப்பட்டார். புலிகள் இயக்க அரசியல் நடவடிக்கைகளில் யோகி பிரதானமானவர் என்று கருதப்படுமளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பிரபாகரனுக்கு மிக நம்பிக்கையானவராக இருந்தவர் பொன்னம்மான். அவரது சகோதரர் யோகி தனக்கும், இயக்கத்துக்கும் விசுவாசமாக இருப்பார் என்று பிரபாகரன் நினைத்தார்.
அதனால்தான் யோகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
யோகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையானது கிட்டுவின் விசுவாசிகளை ஓரம்கட்டும் ஒரு வெளிப்பாடு என்றும் அப்போது பேசப்பட்டது.
எது எப்படியோ யோகியின் வரவோடு யாழ்ப்பாண அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த திலீபனின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக கிட்டு இருந்தவரை பத்திரிகைகளில் அவரது பேட்டிகளும், அவர் தொடர்பான செய்திகளுமே இடம் பெற்றுவந்தன.
கிட்டுவின் பின்னர் யாழ் மாவட்டத் தளபதியாக ராதா பொறுப்பில் இருந்தாலும், மாத்தையா, யோகி ஆகியோரின் ஆதிக்கமே யாழ்ப்பாணத்திலும் மேலோங்கியிருந்தது.
கிட்டு இருந்தவரை யாழ்ப்பாணத்தில் மாத்தையாவுக்கு தனது முக்கியத்துவத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பமே இருக்கவில்லை.
கிட்டுமீதான தாக்குதலின் பின்னர்தான் புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் என்று யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் மாத்தையா பிரபலமாகத் தொடங்கினார்.
மாத்தையாவுக்கென்று ஒரு விசுவாசிகள் கூட்டமும் யாழ்ப்பாணத்தில் உருவாகத் தொடங்கியது.
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக இருந்த புலிகளின் பிரதான அலுவலகத்திற்கு தினமும் வந்து சென்ற மாத்தையா, உள்ளுர் பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தினார்.
மாத்தையாவுக்கு தனக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர் என்ற அங்கீகாரத்தை பிரபாகரனும் எவ்வித தயக்கமும் இல்லாமல் வழங்கியிந்தார்.
கிட்டு மீதான மாத்தையா குழுவினரின் தாக்குதலுக்கு பிரபாகரன் ஒப்புதல் வழங்கியிருந்தாரோ, இல்லையோ, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
கிட்டுவைவிட மாத்தையாமீதே அப்போது பிரபாகரன் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதற்கு, பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் நின்றபோதே கிட்டுமீதான தாக்குதல் நடத்தப்பட்டமையும் ஒரு உதாரணம் எனலாம்.
பிரபாகரனுக்கு பிடிக்காத ஒரு நடவடிக்கையை பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் நிற்கும் போதே மாத்தையா செய்யத் துணிந்திக்கமாட்டார். அதன் விளைவு என்னாகும் என்று மாத்தையாவுக்கு தெரியும்.
எனவே கிட்டு மீதான தாக்குதலுக்கு பிரபாகரனின் மறைமுக ஒப்புதல் இருந்தது என்று ஏனைய இயக்கங்கள் மத்தியில் பரவலான பேச்சு இருந்தது.
யாழ்ப்பாணத்தில் இராணுவப் பொறுப்பாளராக ராதா இருந்த போதும், உளவுப்பிரிவு நடவடிக்கைகள், விசாரணைகள் மற்றும் இயக்கம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் மாத்தையாவின் கட்டுப்பாட்டில் வந்திருந்தன.
மாத்தையா – யோகி ஆதிக்கம் ஆங்கிலப் பத்திரிகைமீது பாய்ச்சல்
சற்றடே ரிவியூ
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஒரே ஒரு ஆங்கிலப் பத்திரிகை ‘சற்றடே ரிவியூ’.
அதன் ஆசிரியராக முதலில் இருந்தவர் சிவநாயகம். சற்றடே ரிவியூ பத்திரிகைக்கு நிதியுதவி வழங்கியது தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் (வுசுசுழு).
கொழும்பில் வெளியான ஆங்கிலப் பத்திரிகைகள் தமிழ் தேசிய உணர்வுக்கு எதிரானவையாகவும், பேரினவாத உணர்வு சார்ந்தவையாகவுமே வெளிவந்தன.
நடுநிலையான பத்திரிகையாகவும், அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தக்கூடிய வகையிலும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையை வெளியிடும் எண்ணத்தின் பிரதிபலிப்புதான் ‘சற்றடே ரிவியூ’.
‘சற்றடே ரிவியூ’ ஆசிரியர் சிவநாயகத்திற்கு படையினர் தரப்பிலிருந்து மிரட்டல்கள் விடுவிக்கப்பட்டன. உதவியாசிரியர் ஈஸ்வரச் சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அதனால் பயந்து போன சிவநாயகம் தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்றார்.
அதன் பின்னர் ‘சற்றடே ரிவியூ’ பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் காமினி நவரட்ண. முற்போக்குச் சிந்தனை கொண்டவரும், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுள்ள ஒருவராகவும் இருந்தார்.
இராணுவத்தினரின் தரப்பிலிருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தமையால் காமினி நவரட்ண ஆசிரியராக இருப்பதுதான் சூழலுக்கு ஏற்றதாகவும் இருந்தது.
புலிகள் முரண்பாடு
“சற்றடே ரிவியூ” பத்திரிகையில் வெளியான கருத்துக்கள் சில வெற்றோடு புலிகளுக்கு உடண்பாடில்லை. அது மட்டுமல்லாமல் புலிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மட்டத்திலிருந்த சிலருக்கும் “சற்றடே ரிவியூ” மீது நல்ல அபிப்பிராயம் இல்லை.
எனவே ‘சற்றடே ரிவியூ’ மீதும் அதன் ஆசிரியர் காமினி நவரட்ண மீதும் புலிகளிடம் புகார் கூறிக்கொண்டிருந்தனர்.
மே மாதம் 11ம் திகதி யாழ்-பல்கலைக்கழகத்தில் ஒரு விமர்சனக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
புலிகள் அமைப்பினரின் நடவடிக்கைகளை விமர்சனக் கண்ணோட்டத்தோடு நோக்குவது தான் அந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். கூட்டத்தில் காமினி நவரட்ணவும் கலந்து கொள்வதாக இருந்தது.
யாழ்-பல்கலைக்கழகம் மீதும், அங்கு நடைபெரும் விடயங்களை அறிவதிலும் புலிகள் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்கள்.
ஏனைய இயக்கங்களை தடை செய்த பின்னர் யாழ்-பல்கலைக்கழகத்தின்மீது புலிகளின் கண்கானிப்பு பலமாக இருந்தது.
பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் தம்மை புலிகளோடு தொடர்புடையவர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை அப்படி. பல்கலைக்கழகத்திற்குள் உளவு வேலை செய்வதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.
புலிகள் தொடர்பான விமர்சனக் கூட்டம் நடைபெறும் செய்தியும் மாத்தயாவுக்கு எட்டி விட்டது. மே 11ம் திகதி கூட்டம் ஆரம்பமான போது புலிகளது உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்களும் கூட்டத்தில் வந்து புகுந்து கொண்டனர்.
கூட்டத்தின் இடையிலேயே விடை பெற்றுக் கொண்டு காமிணி நவரட்ண புரப்பட்டு விட்டார். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவரால் அவர் பின்தொடரப்பட்டார். பின்னர் புலிகளால் கைதுசெய்யப்பட்டார்.
எச்சரிக்கை
காமிணி நவரட்ணாவை மாத்தையாதான் விசாரணை செய்தார். “புலிகளுக்கு எதிராக ஒரு அறிக்கை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்தார்” என்று காமிணி நவரட்ண மீது மாத்தையா குற்றம் சாட்டினார்.
காமிணி நவரட்ண அதனை மறுத்தார். காமிணி நவரட்ணவை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் புலிகளிடம் வலியுறுத்தினார்கள்.
“புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்ற மறைமுகமான எச்சரிக்கையோடு காமிணி நவரட்ண 4 வது நாள் விடுதலை செய்யப்பட்டார்.
காமினி நவரட்ண ஒரு துணிச்சலான, நேர்மையான பத்திரிகையாளராக அப்போதிருந்தார். அவரால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பெறத்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
காமிணி நவரட்ண விடுதலையான பின்னர் வெளியான “சற்றடே ரிவியூ” வில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் காமினி நவரட்ணவை கைதுசெய்ததை கடுமையாக சாடியது.
பத்திரிகையைப் பார்த்து மாத்தையா உடனே உத்தரவிட்டார் “சற்றடே ரிவியூ இனிமேல் வெளிவரக்கூடாது”.
பத்திரிகைக்கு பண உதவி செய்த தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழக (TRRO) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் விசுவலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற புலிகள் அவரை மிரட்டினார்கள். அவரும் பயந்து போனார்.
புனர்வாழ்வுக் கழகத்தின் மற்றொரு பிரமுகரான சட்டத்தரணி அரவிந்தன் என்பவரும் மிரட்டப்பட்டார். புலிகள் மிரட்டிய மிரட்டில் அவர் புலிகளின் விசுவாசியாகிஇ பத்திரிகையை மூடியேயாக வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்.
ஈரோஸ் தலையீடு
ஏனைய இயக்கங்கள் எதுவுமில்லை. ஈ.ரோஸ் மட்டுமே அப்போது இருந்தது. “சற்றடே ரிவியூ” மீதான தடையை நீக்குமாறு புலிகளிடம் பேசிப்பார்த்தது ஈ.ரோஸ்.
ஈ.ரோஸ் தலைவரான பாலக்குமாருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு ஆங்கிலப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் விருப்பம். பிரபாகரனிடம் நேரடியாகப் பேசிப்பார்த்தார் பாலக்குமார்.
ஒரே பதில்தான் “முடியாது” அது மட்டுமல்ல அந்த விவகாரத்தில் ஈ.ரோஸ் தலையிடுவது நன்றாக இருக்காது. தொடர்ந்தும் தலையிடாமல் இருப்பதும் நல்லது என்றும் மறைமுகமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
புலிகள் தடைசெய்யாதிருப்பது தம்மை மட்டும் தான். பிரச்சனையை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்து ஈ.ரோஸ் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டது.
அத்தோடு “சற்றடே ரிவியூ” பத்திரிகைக்கு யாழ்ப்பாணத்தில் மூடு விழா நடந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது நான்கு தமிழ் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
ஈழநாடு, உதயன், ஈழமுரசு, முரசொலி “ஈழநாடு” பத்திரிகை மட்டும் நடுநிலையைப் பேணியது. ‘உதயன்’ ஓரளவு நடுநிலையாக வர முயற்சித்தது.
ஈழமுரசும், முரசொலியும் புலிகளின் பத்திரிகை போலவே வெளிவர ஆரம்பித்தன.
கொழும்பிலிருந்து வெளியான தினபதி, சிந்தாமணி பத்திரிகைகள் தமிழ் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவை என்று புலிகளால் ஒரு தடவை யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எரிக்கப்பட்டன.
அரசாங்கத்தின் திட்டம்
யாழ்-குடாநாட்டில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக மிக இரகசியமாக திட்டமிட்டது ஜே.ஆர் அரசு.
யாழ்குடா நாட்டை கைப்பற்றியே தீருவது என்ற முடிவுடன் திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருந்தன.
பலாலி இராணுவத்தளம்இ பருத்தித் துறை இ ஊர்காவத் துறை போன்ற இராணுவ முகாம்களில் படைகள் குவிக்கப்பட்டன.
எந்த முனையில் இருந்து படை நடவடிக்கை ஆரம்பிக்கப்போகிறது என்று ஊகிக்க முடியாமல் இருக்க பல்வேறு முனைகளில் படைகளைக் குவித்து போக்குக் காட்டியது அரசாங்கம்.
தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள், ஹெலித்தாக்குதல் என்பவற்றால் மக்கள் பீதி கொண்டிருந்தனர். பங்கர்களை வெட்டி தற்காப்புத் தேடுவதில் மும்முரமாயினர்.
இதே வேலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உயர் அதிகாரிக்கு மே 03ம் திகதி ஒரு கடிதம் கிடைத்தது.
சுகாதார அமைச்சரிடம்யிருந்து வந்த அந்தக் கடிதத்தில் மே 8ம் திகதி போதனா வைத்திய சாலையை மூடுமாறு பணிக்கப்பட்டிருந்தது.
பெரும் தாக்குதல் ஒன்றுக்கான அறிகுறியே அதுவாகும் என்று கருதப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலைமீது கோட்டை இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட ஷெல்கள் விழுந்து வெடிப்ப துன்டு. அதனால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியான கண்டனங்கள் எழுந்தன.
யாழ் ஆஸ்பத்திரியிலிருந்து புலிகள் ஷெல் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஷெல் வரும் திசையை குறிவைத்து தாக்குவதால் ஆஸ்பத்திரி பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். அதனால் அதனை மூடிவிட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அரசாங்கம் அப்பட்டமான பொய் ஒன்றை அவிழ்த்துவிட்டிருந்தது.
எல்லாவெற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்று யாழ் குடாநாட்டில் ஆரம்பமாகப் போகிறது என்பது புலிகளுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் நன்கு விளங்கியிருந்தது.
ஒப்பரேசன் லிபரேசன்
ஏனைய இயக்கங்களை புலிகள் தடைசெய்தமையால்தான்; படையினருக்கு யாழ் குடாநாட்டை கைப்பற்றும் துணிச்சல் வந்திருக்கிறது. புலிகள் தனித்து நின்று எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
மக்கள் அஞ்சத்தேவையில்லை. கடைசிப்புலி உள்ளவரை யாழ் குடாநாடு படையினர் கைக்குச் செல்ல விடமாட்டோம்.
என்று புலிகள் நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது புலிகள் இயக்கப் பாடல்கள் தயாராக இருக்கவில்லை. பாரதியாரின் பாடல்கள்தான் புலிகளால் பயன்படுத்தப்பட்டன.
“அச்சமில்லை. அச்சமில்லை. அச்சமென்பதில்லையே. உச்சிமீது வான் இடிந்து விழுகின்ற போதிலும்…..” என்ற பாடலை அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது.
புலிகள் ‘நிதர்சனம்’ என்னும் தொலைக்காட்சி ஒளிபரப்பை அப்போது நடத்திக்கொண்டிருந்தனர்.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. வடமராட்சியில் குவிக்கப்பட்ட படைகள் யாழ் குடாநாட்டை கைப்பற்றும் தமது பாரிய படை நகர்வை ஆரம்பித்தன.
அதற்கு சூட்டப்பட்ட பெயர் “ஒபரேசன் லிபரேசன்” பல புதிய திருப்பங்களுக்கு அடி கோலிய ஒபரேசன் அது. புலிகளும் பதிலடிக்கு தயாரானார்கள்.
(தொடர்ந்துவரும்)
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating