ரணில் அரசுக்கு சுருக்குப் போடுகிறதா இந்தியா?

Read Time:15 Minute, 17 Second

article_1473569610-sanjayஇலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான கவுன்சிலராகப் பணியாற்றியவர் என்பதால்தான், தரன்ஜித் சிங்கின் இந்த நியமனம் ஆழமான கரிசனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்துடனான உறவுகளில், புதிய அணுகுமுறைகளைக் கையாளுவதற்காகவே இவரை நியமிக்க இந்தியா முனைகிறதா என்ற சந்தேகம் பலரிடம் தோன்றியிருக்கிறது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, மூன்றாண்டு பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள சூழலில் தான், தரன்ஜித் சிங் மீண்டும் இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கவுள்ளார்.

இலங்கையின் அரசியல், இராணுவ வரலாற்றில் முக்கியத்துவம்மிக்க, 2001 ஆம் ஆண்டு தொடக்கம், 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், தரன்ஜித் சிங் சந்து, கொழும்பில் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.

அது, இலங்கை விவகாரத்தில் இந்தியா மூக்கை நுழைக்க விரும்பியும் விரும்பாதது போன்று நடித்த ஒரு காலகட்டமாகும். அதாவது, பகிரங்கமாக இலங்கை விவகாரத்தில் தலையிட விரும்பாதது போன்று இந்தியா காட்டிக் கொண்டாலும், உள்ளூர அதற்கென்று ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்து கொண்டே இருந்தது.

அந்தக் காலகட்டத்தில்தான், ஐ.தே.க அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்ததுடன், விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு, சமாதானப் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டன.

பிராந்திய வல்லரசாகத் தான் இருக்கும் போது, நோர்வேயின் தலையீட்டுடன் பேச்சுக்கள் நடப்பதை இந்தியா விரும்பாத போதிலும், அதனை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாத வகையில் நடந்து கொண்டது.

இதுபோன்ற சிக்கலான உறவுகளின் தொடர்ச்சியாகவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை, பதவி கவிழ்க்கச் செய்வதில் இந்தியாவின் பங்கு இருந்ததாகவும் பேசப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட தேர்தலின் பின்னரே, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஒருவகையில் மஹிந்தவின் எழுச்சிக்கு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் கவிழ்க்கும், இந்தியாவின் அணுகுமுறைகளும் காரணமாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பின்னர், அதே மஹிந்த ராஜபக்ஷவை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்பதில் இந்தியா முக்கியமான பங்கு வகித்திருந்தது. இதனை மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை மாத்திரமன்றி, தரன் ஜித் சிங் சந்து கொழும்பில் இருந்தபோதுதான், விடுதலைப் புலிகள் இயக்கம் பிளவுபடுத்தப்பட்டது. கருணா தலைமையில் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரே புலிகளின் பலம் வெகுவாக குறைந்து போனது.

புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்திய கருணாவுக்கு, இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்ட போது, அவர் இந்தியாவில் சிலகாலம் மறைத்து வைக்கப்பட்டார். கருணா ஒரு பேட்டியில் தாம், இந்தியாவில் தலைமறைவாக தங்கியிருந்ததை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதிலிருந்து, புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்துவதிலும் அவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட கருணாவுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் இந்திய அரசியல் உயர்மட்டத்தின் ஆசீர்வாதம் இருந்தது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் இடம்பெற்ற 2001 -2004 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில், இந்தியத் தூதரகத்தில் மிகமுக்கியமான பொறுப்பில் இருந்தவர்தான் தரன்ஜித் சிங் சந்து.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகிப் பதவி வகிக்கின்ற, சீனாவுக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் ஏற்பட்டிருக்கின்ற, அரசியல் முக்கியத்துவமும் குழப்பங்களும் நிறைந்த சூழலுமான இந்தத் தருணத்தில் எதற்காக இந்தியா தரண்ஜித் சிங் சந்துவை கொழும்புக்கு அனுப்புகிறது என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகிறது.

ஏற்கெனவே இவர் கொழும்பில் இந்த காலகட்டத்தில்தான் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்பதால், தரண் ஜித் சிங் சந்துவை, ஐ.தே.க அரசுக்கு எதிரானவர் என்று பல்வேறு ஊடகங்களும் சித்திரிக்க முனைகின்றன.

தரன்ஜித் சிங் சந்து கொழும்பில் பணியாற்றிய காலத்தில், அவருடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் இருந்தாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தப் பின்னணிகளை வைத்து நோக்குகின்ற பலரும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சவால் மிக்கவராக விளங்குவார் என்றே விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நகர்வாகவே இவர் கொழும்புக்கு அனுப்பப்படுகிறாரா என்ற சந்தேகம் பலரிடம் தோன்றியிருக்கிறது.

இலங்கையில் தனக்குச் சாதகமற்ற ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பியதும் இல்லைƒ விரும்பப் போவதும் இல்லை.

அதற்காக, இந்தியா நேரடியாக ஆட்சியைக் கவிழ்க்கின்ற காரியங்களில் ஒருபோதும் இறங்கியதில்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் சரியாக வாய்க்கின்ற போது இந்தியா அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு முழுவதும் அவர் ஆட்சியில் நீடித்திருந்திருக்கலாம். ஆனால் அவசரப்பட்டு அவர் தேர்தலை முன்கூட்டியே நடத்த முற்பட்ட சந்தர்ப்பத்தை, இந்தியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

அதேவேளை, ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியிழந்ததற்கு இந்தியாவும் தூண்டுகோலாக இருந்தது என்று கூறப்படுகின்ற நிலையிலும், இப்போதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிரான மனோநிலையில்தான் இந்தியா செயற்படுகிறது என்று கருதுவதற்கில்லை.

ஓர் அரசாங்கத்தை கவிழ்க்க முனையும் எந்தவொரு நாடுமே, தனது பழியைத் தீர்ப்பதை மட்டும் பிரதானமான விடயமாகக் கருதாது. அடுத்து வரப் போகிறவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதையும் கணிக்கத் தவறாது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி, 2004 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டதன் விளைவாக, மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தார். ஆனால் அவர் இந்தியாவுக்கு சார்பானவராக இருக்கவில்லை. இந்தியாவுக்கு நன்றியுடையவராக இருப்பதற்குப் பதிலாக, சீனாவின் பக்கம் சாய்ந்தார். அது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

எனவே, தற்போதைய அரசாங்கம் சீனாவின் பக்கம் அதிகம் சாய முற்பட்டாலும், அடுத்து அதிகாரத்துக்கு வரக்கூடியவர் தமக்குச் சாதகமானவராக இருப்பார் என்பதை உறுதிப்படுத்தும் வரை, இந்த அரசாங்கத்தை கீழ் இறக்குவதற்கான முயற்சிகளில் இந்தியா இறங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால், அடுத்து மஹிந்த ராஜபக்ஷவே ஆட்சியமைப்பதற்கான சூழல் ஒன்று உருவாகலாம். அதற்கான சில முயற்சிகளை, மிலிந்த மொறகொட போன்ற சிலர் செய்ய முயற்சிப்பதாகத் தெரிகிறது.

மிலிந்த மொறகொட, ஐ.தே.கவில் இருந்து பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் சாய்ந்தவர். அவர் தற்போது நடத்துகின்ற ஒரு சிந்தனைக் குழாம், புதுடெல்லியின் சிந்தனைக் குழாம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

இந்தச் சிந்தனைக் குழாம்கள், இரண்டு நாடுகளின் தலைநகரங்களிலும் அரசியல் செல்வாக்கைச் செலுத்த முனைகின்றன.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக, இந்தியாவுடன் மிலிந்தகொட மூலம் கோத்தாபய ராஜபக்ஷ பேச்சுக்களை நடத்தியதாகவும் கூட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இவையெல்லாம் உண்மையா என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியாவிடினும், இந்தியாவும் சில மாற்று ஏற்பாடுகளையிட்டு சிந்திக்காமல் விடாது.

ரணில் விக்கிரமசிங்க சீனாவின் பக்கம் ஓடுகிறார் என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் முன்வைத்து, ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றை மேற்கொள்ள இந்தியா முனையாது.

தற்போதைய சூழலில் சீனாவுடன் நெருங்கிச் சென்றாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சென்றளவுக்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் செல்லாது என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது.

ஒருவேளை மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் திட்டம் இந்தியாவுக்கு இருந்தால் கூட, அவர் மட்டும் சீனாவின் பக்கம் சாயமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அதுபோல, மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுடன் எட்கா உடன்பாடு செய்து கொள்ளப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார். அது இந்தியாவுக்கு எரிச்சலை எற்படுத்தும் விடயமாக உள்ளது.

அதேவேளை, தற்போதைய நிலையில் இந்தியா மாத்திரமே கொழும்பின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியாது, ஏனென்றால் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக தற்போதைய இலங்கை அரசாங்கம் மாறியிருக்கிறது. எனவே இலங்கையில் அதிகார மாற்றம் நிகழ்வதை அமெரிக்கா விரும்பாது.

இன்னொரு பக்கத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான இராணுவ, வர்த்தக உறவுகளை கொண்ட நாடுகளாக மாறியிருக்கின்றன.

எனவே, இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொள்வதற்கு இந்தியா இப்போதைக்கு விரும்பாது.

இவையெல்லாம், தரன்ஜித் சிங் சந்துவின் நியமனத்தையிட்டு தற்போதைய அரசாங்கம், அதிகம் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறன.

தரன்ஜித் சிங் சந்துவின் நியமனம் குறித்து ரணில் விக்கிரமசிங்க அவதானமாகவே இருக்க வேண்டியிருந்தாலும், இவரது நியமனத்தை, ஆபத்தான ஒன்றாகப் பார்க்கும் அவசியம் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை : மாத்தறையில் சம்பவம்..!!
Next post போரின் எந்த சூழ்நிலையிலும் பிரபாகரன் பின்நகரவில்லை!: அவரது இடத்தை யாருமே பிடிக்கமுடியாது!! (இராணுவ மேஜர் கமால் வழங்கிய விரிவான செவ்வி!! – பகுதி-1)