இரண்டாம் உலகப்போர் முடிவை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த நர்ஸ் 92 வயதில் மரணம்…!!
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் ராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் என்ற நர்ஸ், தனது 92 வயதில் காலமானார்.
போலந்து நாட்டை கைப்பற்ற ஜெர்மனியால் தொடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை எதிர்த்து பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேசநாடுகள் போரில் குதித்தன. ஜெர்மனிக்கு ஆதரவாக இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்தப் போரை எதிர்கொண்டன.
ஆறாண்டுகள் நீடித்த இந்தப் போரின் முடிவாக 14-8-1945 அன்று அமெரிக்காவிடம் ஜப்பான் சரண் அடைந்தது. அமெரிக்காவின் வெற்றியையும், இரண்டாம் உலகப்போரின் முடிவையும் கொண்டாட அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர்.
அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின்போது அவ்வழியாக வந்த ஒரு ராணுவ வீரர் அங்கு நர்ஸ் சீருடையுடன் நின்றிருந்த இளம்பெண்ணை மகிழ்ச்சி பெருக்கில் திடீரென கட்டியணைத்து முத்தமிட்டார். இந்த உற்சாகக் காட்சியை ஆல்பிரட் எய்சென்ஸ்டாட் என்பவர் தனது கேமராவுக்குள் சிறைபிடித்தார்.
அமெரிக்காவின் பிரபல வார இதழில் ‘வெற்றிக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருந்த அந்த புகைப்படம், உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னாளில், ‘தி கிஸ்’ என்ற பெயரில் வெகுவாக பேசப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது நாங்கள்தான் என 11 ஆண்களும், 3 பெண்களும் ’போலியாக’ உரிமை கோரினர்.
1980-ம் ஆண்டுவாக்கில் அந்த வரலாற்று சிறப்புக்குரிய முத்தக் காட்சியில் இடம்பெற்றிருந்த ஜோடி யார்? என அடையாளம் தெரிந்தது.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரான ஜார்ஜ் மெண்டோன்சா என்பவர் அதேபோரில் தனது பெற்றோரை இழந்துவிட்டு ஆஸ்திரியா நாட்டில் இருந்து அமெரிக்காவில் வந்து குடியேறி, அங்கு நர்சாக பணியாற்றிவந்த கிரேட்டா ஜிம்மர் என்ற 21 வயது நர்சை முத்தமிட்ட சம்பவம் உரிய ஆதாரங்களுடன் நிரூபணமானது.
இருவரும் அதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் இல்லை. அந்த முத்த சம்பவத்துக்கு பின்னர் இருவரும் வெவ்வேறு நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் தனது 92-வது வயதில் மரணம் அடைந்தார். அர்லிங்டன் நகரில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதை அவரது மகன் நேற்று அறிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating