உளுந்தூர்பேட்டை அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் பலி…!!
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 64). இவர் மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ளார். இவருடைய இளைய மகன் லோகேஷ்குமார்(28). இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்த்து வந்தனர். நாமக்கல்லில் ஒரு பெண்ணை பார்ப்பதற்காக சந்திரசேகரன் தனது குடும்பத்தினர் 9 பேருடன் ஒரு வாடகை காரில் சென்னையில் இருந்து நாமக்கல் சென்றார். நேற்று காலை அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண்ணை நேரில் பார்த்தனர்.
பின்னர் மதியம் 1 மணி அளவில் 9 பேரும், அதே காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை 45 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் நேற்று இரவு 7.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் வந்தது. அப்போது எதிரே, சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக காரும், அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது. மேலும் காரில் பயணம் செய்த சந்திரசேகரன் மனைவி பழனியம்மாள்(54), சந்திரசேகரின் மகன் தினேஷ்குமாரின் மனைவி ஜெயந்தி(24), பேத்தி ஷர்மி(9), கார் டிரைவர் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
காரின் இடுபாடுகளில் சிக்கிய மற்றவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என அபயக்குரல் எழுப்பினர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சந்திரசேகரன், அவரது மகன் தினேஷ்குமார்(29), இளையமகன் லோகேஷ்குமார்(28), மகள் தனபாக்கியம்(35), மருமகன் ஆறுமுகம்(43), தனபாக்கியத்தின் மகன் தரனேஸ்வர்(8) ஆகிய 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தில் பலியான கார் டிரைவர் யார்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating