இலங்கை அரசியலில் பெண்கள்…!!
அமெரிக்கக் காங்கிரஸில் வெறுமனே 19 சதவீதமான பெண்களே இருக்கிறார்கள் எனவும் இந்நிலைமையானது ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் விட மோசமானது எனவும் அமெரிக்க வரலாற்றில் இதுதான் சிறப்பான பெறுபேறு என்ற போதிலும், இவ்வளவு மோசமான நிலை காணப்படுகிறது எனவும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டனின் உப ஜனாதிபதியாகப் போட்டியிடும் டிம் கெய்ன் தெரிவித்த கருத்து, சில புருவங்களை உயர்த்தியிருந்தது. அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக முயலும் ஹிலாரி கிளின்டன், அரசியல் அரங்கில் எதிர்கொள்ளும் சவால்களை வைத்துப் பார்க்கும் போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் அமெரிக்கா இன்னமும் முன்னேற வேண்டுமென்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் விடவும் உண்மையில் மோசமான நிலையில் அந்நாடு காணப்படுகிறதா?
இதே கேள்வியைத் தான், குடியரசுக் கட்சியினரும் ஏனையோரும் கேட்டனர். அரசியல் தலைவர்களது கருத்துகளின் உண்மைத்தன்மைகளை ஆராய்ந்து, அதுகுறித்துத் தெளிவான தகவல்களைத் தரும் Pழடவைiகுயஉவ என்ற சுயாதீன இணையத்தளம், டிம் கெய்னின் கருத்தை ஆராய்ந்து பார்த்து, அவர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையானது என்ற தகவலை வெளியிட்டது.
இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்தோருக்கு, அமெரிக்கா என்றால் அதீத விருப்பம் அல்லது உயர்வான எண்ணம் காணப்பட்டாலும், உலகப் பொலிஸ்காரனாகச் செயற்படுவதாலும் அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு வகையான வெறுப்பும் உண்டு. ஆகவே, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை விட அமெரிக்கா பின்தங்கியுள்ளது என்பது, அவர்களைப் பொறுத்தவரை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அவ்வாறு அதை வைத்துக் கேலி செய்யலாம் என எண்ண முன்னர், இலங்கையின் நிலைமையை ஆராய்ந்தால், கேலி செய்யும் எண்ணமே வராது. காரணம், இலங்கையின் நிலைமை அவ்வளவுக்கு மோசமானது.
இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 13 ஆகும். இது, ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் வெறுமனே 5.77 சதவீதம் ஆகும். இது, உலக சராசரியான 23 சதவீதத்தை விட மிகக்குறைவானது என்பது ஒரு விடயம். 189 நாடுகள் கொண்ட உலக வங்கியின் இது தொடர்பான பட்டியலில், இலங்கைக்குக் கிடைத்திருப்பது, 174ஆவது இடம். அதாவது, மிகவும் குறைவான சதவீதமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகள் என்ற பட்டியல் வழங்கப்பட்டால், இலங்கைக்கு 16ஆவது இடம் கிடைக்கும்.
இலங்கையை விட அதிக சதவீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் ருவன்டா (64 சதவீதம். முதலிடம்), எதியோப்பியா (39 சதவீதம்), நேபாளம் (30 சதவீதம்), ஆப்கானிஸ்தான் (28 சதவீதம்), ஈராக் (27 சதவீதம்), பாகிஸ்தான் (21 சதவீதம்), பங்களாதேஷ் (20 சதவீதம்), சவூதி அரேபியா (20 சதவீதம்), இந்தியா (12 சதவீதம்), மலேஷியா (10 சதவீதம்), மாலைதீவுகள் (6 சதவீதம்), நைஜீரியா (6) ஆகியன, இலங்கையர்கள் அறிந்த, ஆனால் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கையை விட முன்னிலையில் இருக்குமென எதிர்பார்க்காத சில நாடுகளாகும்.
இதில் குறிப்பிடத்தக்கதாக, சவூதி அரேபியா காணப்படுகிறது. உலகில், பெண்களை வாகனம் ஓட்டுவதிலிருந்து சட்டம் மூலமாகத் தடுக்கும் ஒரே ஒரு நாடான சவூதி அரேபியா, பெண்களுக்கான உரிமைகளைத் தடுப்பதிலும் அவர்களை ஒடுக்குவதிலும் உலகப் ‘புகழ்’ பெற்றது, அப்படிப்பட்ட நாடு, இலங்கையை விட அதிக சதவீதமான பெண்கள் பிரதிநிதித்துவத்தை, நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கிறது. பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கையின் மோசமான நிலைமையை எடுத்துக் காட்டுவதற்கு, இதைவிடப் பொருத்தமான உதாரணம் எதுவும் கிடைக்காது.
அதேபோல், 2015ஆம் ஆண்டுக்கான பாலின சமத்தும் தொடர்பான பட்டியலில், இறுதிக்கு முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான், 21 சதவீதமான பெண்கள் பிரதிநித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அந்தப் பட்டியலில், இலங்கைக்கு 84ஆவது இடம் கிடைத்திருந்தது. ஆக, ஏனைய விடயங்களில் இலங்கை ஓரளவு முன்னேற்றகரமான நிலையில் இருந்தாலும், பெண்கள் பிரதிநிதித்துவத்தில், மோசமான நிலையிலேயே இருக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
சவூதி அரேபியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ, இலங்கையை விட அதிக சதவீதமான பெண்கள் பிரதிநிதித்துவம் இருந்தாலும், பெண்கள் உரிமைகளுக்காக அவர்கள் போராடுகிறார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படலாம். வெறும் இலக்கங்கள் மாத்திரமே, உண்மையான முன்னேற்றத்துக்கான அறிகுறியா என்பது, நியாயமான கேள்வியொன்று.
ஆனால், அதே கேள்வியே இலங்கை மீது முன்வைக்கப்படலாம்.
இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சந்திராணி பண்டார, தலதா அதுகோரள, விஜயகலா மகேஸ்வரன், சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜி. ஜயசேன, அனோமா கமகே, பவித்திரா வன்னியாராச்சி, ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, கீதா சமன்மலீ குமாரசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, துஸிதா விஜேமான்ன, ரோஹினி குமாரி விஜேரத்ன, சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களில் சிலர், தங்களுடைய குடும்ப அரசியல் செல்வாக்குக் காரணமாக, அரசியலுக்குள் நுழைந்தவர்கள். ஏனையோர், பெண்களின் உரிமைகளுக்காக, எந்தளவுக்குப் போராடுகிறார்கள் என்பது கேள்விக்குரியதே.
இவர்கள் பங்களித்தார்கள் அல்லது பங்களிக்கவில்லை என்பதை வெறுமனே ஒரு கருத்தாகச் சொல்லாமல், தரவுகளின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. இலங்கை அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்தில் எவ்வாறான பங்களிப்புகளை மேற்கொள்கிறார்கள் என்பதை ஆராயும் இணையத்தளமான மந்திரி, ‘உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பின் கீழ், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் தொடர்பான தரப்படுத்தல்களைக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பில் பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், மனித உரிமைகள், சிறுவர்கள் ஆகியோரின் உரிமைகள், அவர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பங்களிப்புகள் ஆராயப்படுகின்றன.
இந்தப் பட்டியலில், முதல் 25 இடங்களில் பெண்கள் எவரும் கிடையாது. 26ஆவது இடத்தில் சுதர்ஷினி
பெர்ணான்டோபுள்ளேயும் 30ஆவது இடத்தில் விஜயகலா மகேஸ்வரனும் காணப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, 39ஆவது இடத்திலேயே காணப்படுகிறார். இவ்வாறு தான், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புக் காணப்படுகிறது,
சரி, பெண்களுக்கான உரிமைகளைப் பெண்கள் தான் கோர வேண்டுமா, ஏன் ஆண்களால் அதற்கான முயற்சிகளை எடுக்க முடியாதா போன்ற கேள்விகள் எழுப்பப்படலாம். நியாயமான கேள்விகள் தான். ஆனால், காலாகாலமாகப் பெண்களின் உரிமைகளை மறுத்துவரும் ஆண் வர்க்கம், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுமென எதிர்பார்ப்பது பேராசையாக அமையாதா? பெண்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், தங்களது வழக்கமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆண்களுக்கென்று பிரச்சினைகள் இல்லாமலில்லை, ஆனால் பெண்களுக்கான பிரச்சினைகளோடு ஒப்பிடும்போது, அவை மிக மிகக் குறைவானவை. ஆண்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தேவையென்று ஒன்று, தற்போது கிடையாது. ஆனால், பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியப்பாடு காணப்படுகிறது. ஆகவே தான், இந்த விடயத்தில் பெண்கள் முன்னிலை வகித்தாலொழிய, முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளே கிடையாது.
பெண்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிக் கதைத்தாலோ அல்லது அவர்களது பிரதிநிதித்துவம் தொடர்பாகக் கதைத்தாலோ எழுப்பப்படுகின்ற கேள்வி, 21ஆம்
நூற்றாண்டில் பெண்களுக்கு அவ்வாறு என்ன பிரச்சினை என்பது தான். 18ஆம் நூற்றாண்டு முன்போ அல்லது 19ஆம் நூற்றாண்டில் இருந்ததை விடவும், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களுக்கான உரிமைகள், முன்பை விட அதிகமாக வழங்கப்படுகின்றன என்பது உண்மையானது. ஆனால், பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளதா என்பது, கேள்விக்குரியதே.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 95 சதவீதமானோர், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கின்றனர். இலங்கை ஆண்களில் 15 சதவீதமானோர், வன்புணர்வை மேற்கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வன்புணர்ந்தவர்களில் வெறுமனே 2.2 சதவீதமானோர் மாத்திரமே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
உலகத்தின் பெரும்பாலான நாடுகளில், ஆண்களைப் போன்ற அதே தொழிலை, அதே அனுபவம் கொண்ட பெண்ணொருவர் செய்யும் போது, அவருக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதென்பது இன்னமும் காணப்படுகின்றது. இலங்கையும் அதற்கு விதிவிலக்குக் கிடையாது. ஒக்ஸ்பாம் நிறுவனத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று, ஆசிய நாடுகளில் ஊதிய வேறுபாடு தொடர்பாகக் கவனஞ்செலுத்தியது. அதில், ஆணொருவர் பெறும் ஊதியத்தில் 82.1 சதவீதமான ஊதியத்தையே, பெண்ணொருவர் பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இலங்கையில் தொழில் செய்யக்கூடிய வயதை எட்டிய பெண்களில் வெறுமனே 35 சதவீதத்தினர் மாத்திரமே, தொழிலாளர் படையில் காணப்படுகின்றனர். ஆண்களில், இந்த சதவீதம் 75 சதவீதம் ஆகும். இந்த வித்தியாசங்கள், பொருளாதார ரீதியாகப் பெண்கள் எந்தளவு தூரத்துக்குப்
பின்தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதைக் காட்டியது. இவற்றுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?
ஐக்கிய நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மிலேனியம் அபிவிருத்தித் திட்டங்களில், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தலும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும் என்ற இலக்கு ஒன்றும் உள்ளடங்கியிருந்தது. இந்த மிலேனியம் அபிவிருத்தித் திட்டங்கள், 2015ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டியன. ஏனைய 7 இலக்குகளில் இலங்கை, மிகச்சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், பாலின சமத்துவம் என்ற இலக்கை அடைவதில், மிகவும் பின்னடைவைக் காட்டியிருந்தது. இதற்கான காரணங்கள் என்ன?
மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும், பெண்களின் அரசியல் ஈடுபாட்டால் உடனடியாகத் தீர்ந்துவிடும் என எதிர்பார்ப்பது, தவறானது. அவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. பெண்களுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவ்விடயத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானது. தற்போதுள்ள அரசியல் சூழலில், நாடாளுமன்றத்துக்கு 30 சதவீதமான பெண்களை அனுப்பினால் மாத்திரம், பெண்களுக்கு அத்தனை உரிமைகளும் மீளக்கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூகச் சூழலில், தலைமைத்துவமிக்க பெண்களின் உருவாக்கம், ஒரு வகையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய வேலைகளோடு நின்றுகொள்ளும் ஒருவகையான மனப்பாங்கை, கணிசமான பெண்கள் கொண்டிருக்கும் நிலைமை காணப்படுகிறது. பொதுவெளியில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பெண்கள் சந்திக்கும் அவதூறுகளும் அவப்பெயர்களும் கூட, பெண்கள் இவ்வாறு ஒதுங்கியிருக்கும் நிலைமைக்குக் காரணமாக அமைகின்றன.
எனவே, ஒதுக்கீடுகள் என்பன ஒருபுறமிருக்க, சமூகத்தின் அடிப்படையான நிலைமையிலிருந்து, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். வீடுகளில் ஆரம்பிக்கும் அச்செயற்பாடுகள் மூலமாக, பொதுச்செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறான நிலைமையில் தான், பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள் அதிகரிக்கும்.
இதற்காக, ஆண்கள் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது. உலகில் பொதுவாக, ஆதிக்கம் செலுத்தும் அல்லது அடக்குதலை மேற்கொள்ளும் பிரிவைச் சேர்ந்தவர்கள், அந்த அடக்குதல் காரணமாக நன்மைகளை அனுபவிக்கின்றனர் என்பது யதார்த்தமானது. ‘அ’ என்ற இனப்பிரிவை, ‘ஆ’ என்ற இனப்பிரிவு அடக்கி ஒடுக்குகிறது என்றால், ‘ஆ’ என்ற இனப்பிரிவில் காணப்படும் நபரொருவர், அந்த அடக்கி ஒடுக்குதலில் விருப்பம் கொண்டிருக்காவிட்டாலும், அதன்மூலமாக நன்மை அடைவார். பெண்களை விட ஆண்களுக்கு, சராசரியாகப் பார்க்கும் போது அதிக ஊதியம் கிடைக்கிறது என்றால், பெண்களை ஒடுக்குவதில் நம்பிக்கையற்ற ஆண்கூட, இந்த நிலைமையால் நன்மை பெறுவார். இதைத் தான், மாபெரும் நகைச்சுவையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ஜோர்ஜ் கார்லின், ‘இங்கு, அப்பாவிகள் என்று எவரும் இல்லை. உங்களுடைய பிறப்புச் சான்றிதழ், உங்களின் குற்றத்துக்கான சான்றிதழ்’ என்று குறிப்பிடுவார்.
ஆகவே, பெண்களின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வோர் ஆண்மகனும், பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகரிப்புக்காகப் போராட வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது என்பது, தனியாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று அல்ல.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating