பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான..-TMVP தூயவன்.
பிரபா குழுவின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமே மூதூரில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களும், வெளியேற்றமும். பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான தெளிவானதும், உறுதியானதுமான நடவடிக்கை அவசியம் என்கின்றார் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தூயவன்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் அரச படையினர் மீதான பிரபா குழுவின் வலிந்த தாக்குதலின்போது ஆகக் குறைந்தது 32 முஸ்லிம் சகோதரர்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக மூதூரைவிட்டு வெளியேறியுள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பிரபா குழுவினால் இருட்டறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. முஸ்லிம் சகோதரர்கள் மீதான கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதுடன் முஸ்லிம் சகோதரர்களுக்கெதிரான பிரபா குழுவின் கொடமைகளுக்கும், கொடூரங்களுக்கும் இதுவே இறுதிச் சந்தர்ப்பமாக அமையவேண்டும் என்பதுடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் குடும்பத்தினரின் துயரங்களில் நாமும் பங்கெடுக்கின்றோம் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தூயவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூரைவிட்டு முஸ்லிம் மக்களின் வெளியேற்றமானது தற்காலிகமாக நடந்தேறியதொன்றல்ல. பிரபா குழுவின் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நன்கு திட்டமிட்டே முஸ்லிம் மக்கள் மூதூரைவிட்டு நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பும் முஸ்லிம் மக்களை மூதூரை விட்டு வெளியேறுமாறும் இல்லை கொல்லப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையுடன் பிரபா குழுவினர்களால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தொடங்கி வடகிழக்கில் முஸ்லிம், சிங்கள இனச் சகோதரர்களுக்கெதிராக பல இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் பிரபா குழுவினர் ஈடுபட்டனர். 1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு சில மணிநேரத்தில் முஸ்லிம் மக்களை அகதிகளாக வெளியேற்றியது போன்று கிழக்கில் முஸ்லிம் மக்களை வெளியேற்றும் பிரபா குழுவினரின் திட்டத்திற்கு இப்போது மூதூரில் செயலுருவம் கொடுத்துள்ளனர். இது மிகப் பாரதூரமான ஒரு விடயமாகும். அடிப்படை மனித உரிமை மீறலுங்கூட.
மூதூரில் முஸ்லிம் மக்களையும், பிரபா குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்திவிட்டு தாம் மரபுவழிச் சமரில் யுத்தம் புரிந்ததாக மார்தட்டுகின்றனர். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகக் கொண்டு, மக்களைப் பலிகொடுத்து நடாத்தப்பட்ட இத் தாக்குதல் பயங்கரவாத, கோழைத்தனமான தாக்குதலாகும்.
எமது வெளியேற்றத்தை தொடர்ந்து இனி எப்போதும் பிரபா குழுவால் மரபுவழிச் சமரில் ஈடுபட முடியாது என்பது நிரூபணமான ஒன்று. மரபுவழிச் சமரானது பிரபா குழுவைப் பொறுத்தவரை இனி சொல்லளவிலேயே அன்றி செயற்பாட்டில் சாத்தியமற்றது. இதனைப் பிரபா குழுவின் தலைமையும் உணர்ந்துள்ளது.
இயற்கை மனிதனுக்கு வழங்கிய அருட் கொடைகளில் ஒன்றான நீரைக்கூட போராட்ட ஆயுதமாகப் பயன்படுத்தும் நாகாிகமற்ற கோழைகள் பொது மக்களை பணயமாக வைத்து தாக்குதல் நடாத்துவதில் ஒன்றும் வியப்பில்லை. மாவிலாற்றுப் பிரச்சினையைத் திசைதிருப்பவும், மூதூரைவிட்டு முஸ்லிம் மக்களை வெளியேற்றவுமே இத்தாக்குதல் பிரபா குழுவினால் நடாத்தப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் அவர்கள் இலக்கை அடைந்து விடுவார்களானால் அது இந்நாட்டில் ஒரு மாபெரும் தவறான உதாரணமாகவும், பயங்கரவாதத்திற்கான வெற்றியாகவும் அமைந்துவிடும். இது விடயத்தில் இலங்கை அரசாங்கம் தெளிவானதும், உறுதியானதுமான செயற்திறன்மிக்க தீர்மானங்களை மேற்கொண்டு பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்.
இதனைவிட பிரபா குழுவின் தாக்குதல் காரணமாக அகதிகளாக இடம்பெயர்ந்த பல்லாயிரம் மக்களின் மனிதாபிமான உரிமைகளையும், அடிப்படை வசதிகளையும் அரசாங்கம், தொண்டர் நிறுவனங்களும் பூர்த்திசெய்து கொடுப்பதுடன் அம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதுடன், அம்மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும். இதற்கு சர்வதேசத்தின் பூரண ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கவேண்டும் என்பதே எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும்.
இதனைவிட முக்கியமாக பிரபா குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவான முஸ்லிம் இளைஞர்களின் விடயத்தில் அரசாங்கமும், சர்வதேச சமூகமும் உடனடியாகத் தலையீடு செய்து அவ்விளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்துடன் முஸ்லிம் மக்களின் இழப்பீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.