மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது: தென்பிராந்திய ராணுவ தளபதி பேட்டி..!!
கடந்த மாதம் மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று தென் பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர் சிங் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் வரலாற்றை பற்றியும், முப்படைகளில் பணிபுரியும் வீரர்களின் வீரதீர செயல்கள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சிலர் ஒன்றாக இணைந்து ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளனர்.
அதற்கு www.co-l-ou-rs-o-f-g-l-o-ry.org என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ‘செய்னிக் இன்ஸ்டிடியூட்’ கட்டிடத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தென் பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர் சிங் தலைமை தாங்கி புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
இதில், ரஷிய நாட்டு தூதரக அதிகாரி கோட்டோ, ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி செய்ஜி பாபா, வரலாற்று ஆய்வாளர் முத்தையா, கர்னல் மதாய், மேஜர் ஜெனரல் பானி கிரகானெய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென் பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர் சிங் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அவர்களுக்கு இந்திய ராணுவம் குறித்த முழு தகவல்கள் தெரியவில்லை. இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளின் செயல்பாடுகள், அதில் உள்ள தகவல்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த புதிய இணையதளத்தை ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.
கடந்த மாதம் காணாமல் போன ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணியை நிறுத்தவில்லை. பல புது யுக்திகளை கொண்டு தேடுதல் பணி தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி குறித்து இணையதளத்தை உருவாக்க மூல காரணமாக இருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கேப்டன் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் கட்டிடங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், புராதன இடங்கள் ஆகியவற்றின் பாரம்பரியத்தை எடுத்துக் கூறுவதற்கு எத்தனையோ விதமான இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் இந்திய ராணுவத்தை பற்றிய பாரம்பரியத்தை எடுத்துக்கூற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இணையதளத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இதில் ராணுவத்தில் இதுவரை நடந்த சண்டைகள், ராணுவ டாட்டூஸ், கண்காட்சி, கருத்தரங்கம், ராணுவம் தொடர்பான படங்கள், ராணுவத்தில் சிறந்து விளங்கிய வீரர்கள் ஆகிய குறிப்புகள் இடம் பெற்று இருக்கும்.
இது ஒரு தொடக்கம்தான். இன்னும் ஏராளமான ராணுவம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை நாங்கள் இதில் பதிவு செய்ய இருக்கிறோம். முதலில் ஆங்கிலத்தில் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். பின்னர், பிற மொழிகளில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating