இந்தியா, ஈரோஸ் இயகத்துக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள்: யாழ்கோட்டைக்குள் சரமாரியாக ஏவிய ஷெல்கள்..! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -83) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”..!!

Read Time:18 Minute, 44 Second

timthumbஷெல்லுக்கு ஷெல் – கோட்டைக்குள் மோட்டார் தாக்குதல்:

கொழும்பில் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவதைவிட, யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்துவது கடினமான காரியம்.

கொழும்பில் தங்கியிருந்து நடவடிக்கையில் ஈடுபட பொருத்தமான ஆட்கள் இல்லையென்பதால் யாழிலிருந்து கொழும்பில் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

கொழும்பில் அப்போதெல்லாம் இப்போதுபோல தமிழர்கள் எங்கெங்கும் காணப்படும் சூழ்நிலை இருக்கவில்லை.

இப்போதென்றால் கொழும்பில் திரும்பிய இடமெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்கள். வடக்கு-கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்து வந்த தமிழர்கள் பெருவாரியாக இருப்பதே இதற்கு காரணமாகும்.

எனவே-அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் இயக்க நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் ஒரு உறுப்பினருக்கு மும்மொழிகளிலும் நல்ல பரிச்சயம் இருக்கவேண்டும்.

குறிப்பாக சிங்கள மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும். கொழும்பும் ஓரளவாவது பரிச்சயமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் முக்கியமாக இருந்தது.

ஈரோசுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும்தான் கொழும்பில் வசித்து, கொழும்பு நன்கு பரிச்சயமான உறுப்பினர்கள் இருந்தனர்.

ஈழமாணவர் பொதுமன்றம் (G.U.E. S ) மூலமாக கொழும்பு தமிழ் பாடசாலைகளிலும் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் கொழும்பில் சில காலம் வசித்தமையால் கொழும்பிலும் உறுப்பினர் திரட்டலில் ஈடுபட்டார்.

டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் கராத்தே வகுப்பு நடத்தி அதன்மூலமாகவும் உறுப்பினர்களை திரட்டினார். எனினும் கொழும்பின் அப்போதைய சூழல் காரணமாக இயக்கங்களில் இணைந்துகொண்;ட உறுப்பினர்களில் ஒரு சிலர் மட்டுமே இறுதிவரை தாக்குப்பிடித்தனர்.

ஈரோஸ் இயக்கத்தின் கொழும்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர் ஐ.பி.ரி.வரதன்.

அவர் கொழும்பு தொலைத்தொடர்பு நிலையத்தில் முக்கிய அதிகாரியாக பதவி வகித்தார். அந்தப் பொறுப்பில் இருந்து கொண்டுதான் கொழும்பில் குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

பல நடவடிக்கைகளுக்குப் பின்னரே வரதனுக்கும் தொடர்பு இருப்பது பொலிசாருக்கு தெரியவந்தது. பொலிசார் தேடத் தொடங்கிய போது வரதன் யாழ்ப்பாணத்திற்கு பறந்துவிட்டார்.

குண்டு லொறி

கொழும்பில் ஈரோஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விபரங்களை கைது செய்யப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் மூலம் பொலிசார் பெற்றுக் கொண்டனர்.

எனவே-யாழ்ப்பணத்திலிருந்து கொழும்புக்கு நேரடியாக குண்டு லொறியை அனுப்புவது என்று ஈரோஸ் திட்டமிட்டது.

அப்போது எலிஃபன்ற் ஹவுஸ் நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்தது. சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸின் மாத வருமானத்தின் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கப்பட்டுவந்தது. சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸில் குண்டுவெடிப்பு நடத்துவதென்று இலக்கைத் தீர்மானித்தது ஈரோஸ்.

கொழும்பு இராணுவ தலைமையகம் அருகேதான் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் ஏஜெண்டாக இருந்தவர் வி.எம்.பரமநாதன்.

ஒருநாள் பாவனைக்காக தமக்கு லொறி தேவை என்று லொறியைக் கொண்டுசென்றது ஈரோஸ்.

நெல்லியடிக்கு லொறியைக் கொண்டு சென்று லொறியின் அடிச்சட்ட அளவுகளை எடுத்தனர். லொறியில் குண்டு பொருத்துவதற்கு வசதியாக லொறியில் செய்யவேண்டிய மாற்றங்களைக் குறித்துக் கொண்டனர்.

பின்னர் லொறியை பத்திரமாக கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டனர்.

பாவனை முடிந்ததும் லொறியை திருப்பித்தந்துவிட்டார்களே என்று லொறி உரிமையாளருக்கு பரம சந்தோசம்.

அதேநேரம் நெல்லியடியில் குறிப்பிட்ட லொறியின் அடிச்சட்டமாக பொருத்தவேண்டிய பாகம் தயாராகிக்கொண்டிருந்தது. பொருத்தப்படும் அந்த அடிச்சட்டத்தில்தான் குண்டுவெடிப்புக்கான சூக்குமம் இருந்தது.

காலியான சோடாப் போத்தல்களை பெட்டிகளில் நிரப்பி ஏற்றிக்கொண்டு லொறி கொழும்புக்கு புறப்பட்டது.

சாவகச்சேரியில் வைத்து லொறியை மறித்து நெல்லியடிக்கு கொண்டுசென்றது ஈரோஸ். முன்கூட்டியே அளவெடுத்து தயாரித்து வைத்திருந்த அடிச்சட்டத்தை லொறியில் பொருத்தினார்கள்.

கொழும்பில் கோல்ட் ஸ்ரோஸில் லொறியில் இருந்து சோடாப்போத்தல் பெட்டிகள் இறக்கப்படும். கடைசிப்பெட்டி இறக்கப்படும்போது குண்டுவெடிக்கும். அதற்கேற்ப மிக நுணுக்கமாக குண்டு தயாரிக்கப்பட்டது.

லொறியைக் கொண்டுவந்து சாரதியிடம் ஒப்படைத்தனர். சாரதிக்கும் கிளீனருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. ஆனால், லொறியில் குண்டு பொருத்தப்பட்டிருப்பதோ, எங்கு அது பொருத்தப்பட்டிருக்கிறது என்பதோ அவர்களுக்கு தெரியாது.

ஏதோ ஒரு காரியம் செய்திருக்கிறார்கள் என்றுமட்டும் அவர்களுக்கு சந்தேகம்.

ஒருவாரத் தாமதம்

ஆணையிரவு இராணுவ தடைமுகாமில் லொறி மறிக்கப்பட்டது. இராணுவத்தினர் சோதனையிட்டனர். சந்தேகப்படும்படியாக எதுவுமில்லை. லொறி தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

பல தடைமுகாம்களையும், சோதனைகளையும் தாண்டி கொழும்பு நகருக்குள் லொறி வந்துசேர்ந்துவிட்டது. கொழும்பு கோல்ட் ஸ்ரோஸில் குண்டு வெடித்தது என்ற செய்தியை அறிய ஈரோஸ் காத்திருந்தது.

ஒருவாரமாகியபோதும் குண்டுவெடிப்பும் நடக்கவில்லை. குறிப்பிட்ட லொறி மாட்டியதாகவும் செய்தி இல்லை. ஈரோசுக்கு ஒரே பரபரப்பு. லொறிச் சாரதிதான் ஏதாவது வம்பு பண்ணிவிட்டாரோ என்று சந்தேகம்.

அதேநேரம் அந்த லொறி கொழும்பில் உள்ள லொறித் தரிப்பிடமொன்றில், தனக்குள் குண்டை வைத்துக்கொண்டு தரித்து நின்றது. ஒருவாரத்தின் பின்னர் 30.05.86 அன்று தரிப்பிடத்தில் இருந்து லொறி புறப்பட்டது.

‘சிலோன் கோல்ட் ஸரோர்ஸ்’ களஞ்சியப்பகுதிக்கு லொறி சென்றது.

பெட்டிகள் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. லொறிச்சாரதிக்கு சந்தேகம் மாறவில்லை. லொறியை விட்டுவிட்டு மெல்ல நழுவிவிட்டார்.

கடைசிப்பெட்டி இறக்கப்பட்டபோது குண்டுவெடித்தது.

களஞ்சியப்பகுதி பலத்த சேதமடைந்தது. எட்டுப்பேர் பலியானார்கள். 50க்கு மேற்பட்டடோர் காயமடைந்தனர்.

குண்டுலொறிக்கு அருகில் நின்ற ஐந்து லொறிகளைக் காணவில்லை. அத்தனையும் சிதறிப்போய் இருந்தன.

குண்டுவெடிப்பின் சத்தம் சுமார் மூன்று மைல்தூரம்வரை கேட்டது. குண்டுவெடிப்பின் அதிர்வால் பல கட்டடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

திருமலையில்

திருக்கோணமலையில் உள்ள எலிஃபன்ற் ஹவுஸ் கட்டிடத்திலும் ஈரோஸ் ஒரு குண்டு வெடிப்பை நடத்தியது. அப்போது திருமலை மாவட்ட ஈரோஸ் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் தவா.

எலிஃபன்ற் ஹவுஸ் கட்டிடத்துக்குள் குண்டுபார்சலை கொண்டுசென்றுவைத்து விட்டு வருவதுதான் வேலை.

நடவடிக்கையில் ஏற்ட்ட சில தவறுகள் காரணமாக குண்டுவெடிப்பின் போது ஈரோஸ் உறுப்பினர் ஒருவரும் பலியானார்.

கட்டடம் சேதமானது. கட்டடத்தில் இருந்த ஏழுபேர்வரை பலியானதாக ஞாபகம். 15.07.86 இல் நடைபெற்றது.

தம்பலகாமம் பகுதியில் இருந்த மின்மாற்றி ஒன்றையும் 10.09.86 அன்று ஈரோஸ் அமைப்பினர் குண்டுவைத்துத் தகர்த்தனர்.

28.10.86 அன்று திருமலையில் உள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையத்தில் பார்சல் குண்டொன்று வெடித்தது. அந்த குண்டுவெடிப்பும் ஈரோஸ் அமைப்பினரால்தான் மேற்கொள்ளப்பட்டது.

குண்டுவெடிப்பு என்றாலே அது ஈரோசின் வேலை என்று கருதப்படுமளவுக்கு தொடர்ச்சியாக பல குண்டுவெடிப்புக்களை நடத்தி முடித்தது ஈரோஸ்.

குண்டுத்தாக்குதல்கள் மட்டுமல்ல வெற்றிகரமான கண்ணிவெடி தாக்குதல்களையும் வடக்கு-கிழக்கில் நடத்தியிருந்தது ஈரோஸ்.

25.06.86 புல்மோட்டையில் ஒரு கண்ணிவெடித்தாக்குதல். படையினர் இருவர் கொல்லப்பட்டனர். படையினர் இருவர் கொல்லப்பட்டனர். எழுவர் காயமடைந்தனர்.

11.08.86 அன்று மட்டக்களப்பு வாகரையில் பாரிய கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை ஈரோஸ் நடத்தியது.

19 இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு, ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

29.08.86 அன்று துறைமுகவீதி திருக்கோணமலையில் ஈரோஸ் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 4 பொலிசார் பலியானார்கள்.

31.08.86 அன்று மூதூரில் நடைபெற்ற கண்ணிவெடித்தாக்குதலும் குறிப்பிடத்தக்கது. இராணுவத்தினர் தரப்பில் 7 பேர் பலியானார்கள்.

யாழ் கோட்டை

ஷெல்தாக்குதல்

07.9.86 அன்று யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்து யாழ்நகரை நோக்கி ஷெல்கள் ஏவப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தியா ஈரோசுக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள் அப்போதுதான் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்திருந்தன.

மோட்டார் ஷெல்களை யாழ்கோட்டை இராணுவ முகாம்மீது ஏவியது ஈரோஸ்.

யாழ்கோட்டைக்குள் சரமாரியாக விழுந்து வெடித்தன ஷெல்கள். ஒன்பது இராணுவத்தினர் பலியானார்கள். முகாமுக்குள் நின்ற கட்டடங்கள், வாகனங்கள் என்பன சேதமடைந்தன.

யாழ்கோட்டை இராணுவ முகாம்மீதான தாக்குதலில் இராணுவத்தினருக்கு முதலில் ஏற்பட்ட பலத்த சேதம் அதுதான்

யாழ்ப்பாணத்தில் ஈரோசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் சண்.

08.09.86 அன்று முருங்கன் பகுதியில் ஈரோஸ் கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றை நடத்தியது. ஏழு இராணுவத்தினர் பலியானார்கள்.

14.12.86 அன்று முருங்கனில் ஈரோஸ் வைத்து பொறிவெடியில் சிக்கி இராணுவத்தினர் மூவர் பலியானார்கள்.

ஜிகாத்மீது நடவடிக்கை

முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்காக என்று ஆரம்பிக்கப்பட்டது ஜிகாத் இயக்கம். உண்மையில் ஜிகாத் இயக்கத்தின் பின்னணியில் நின்றது அரசாங்கம்தான்.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே மோதல்களை உருவாக்கி விடுவது, உளவு வேலைகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளை ஜிகாத் மூலமாக மேற்கொள்வதுதான் அரசாங்கத்தின் நோக்கம்.

மொசாட்டுடனும் உறவு, ஜிகாத் இயக்கத்தையும் வளர்த்துவிடுவது என்ற ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார் அத்துலத் முதலி.

30.12.86 அன்று மன்னார் மாவட்ட ஜிகாத் பொறுப்பாளர் றம்சின் ஈரோஸ் இயக்கத்தால் கைது செய்யப்பட்டார். இராணுவத்தினரிடம் பயிற்சி பெற்றது. ஆயுதங்கள் கிடைத்தது. பணம்பெற்றது அத்தனையையும் ஒப்புக்கொண்டார் றம்சின்.

பத்திரிகையாளர் மாநாட்டில் றம்சினை கொண்டுவந்து நிறுத்தியது ஈரோஸ்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அனைத்தையும் ஒப்புவித்தார் றம்சின். ‘ஜிகாத்’இயக்கத்தை தடைசெய்வதாக அறிவித்தது ஈரோஸ்.
றம்சினுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

ஜிகாத் மீதான நடவடிக்கையை முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக பிரசாரம் செய்தது அரசாங்கம்.

இஸ்ரேலிய மொசாட் இலங்கையில் காலடி வைத்தமையால் அரசின் மீது வெறுப்புக்கொண்டிருந்தனர் முஸ்லிம் மக்கள்.

ஜிகாத் இயக்கம் மீது ஈரோஸ் மேற்கொண்ட நடவடிக்கையை பயன்படுத்தி முஸ்லிம் மக்களின் வெறுப்பை திசை திருப்பிவிடப்பார்த்தார் அத்துலத் முதலி.

காவலண்மீது தாக்கதல்

திருமலை மாவட்டத்தில் தோப்பூர் இராணுவ முகாம் காவலரண்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் பலியானார்கள். ஈரோஸ் தரப்பில் எவ்வித இழப்புமில்லை.

10.02.87 அன்று சிலோன் தியேட்டர் குடியேற்றவாசிகள் மீது ஈரோசால் தாக்குதல் நடத்தப்பட்டது.

குடியேற்றத்துக்கு பாதுகாப்பாக ஊர்காவல் படையை உருவாக்கியிந்தது அரசாங்கம்.

பயிற்சி முடித்த ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு நடைபெறப்போவதாக அறிந்தது ஈரோஸ்.

மோட்டார் ஷெல்களோடு சென்று தூரத்தில் மறைந்திருந்தனர். அணிவகுப்பு ஆரம்பமானபோது மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன. அணிவகுப்பின் மத்தியில் சென்று விழுந்த மோட்டார் ஷெல்கள் பலரைப்பலி கொண்டன.

ஏனைய இயக்கங்களை புலிகள் தடைசெய்தபோதும் ஈரோஸ் இயக்கத்தை தடை செய்யாமல் இருந்தனர்.

ஈரோஸ் இயக்கமும் புலிகளுடன் முரண்பிடிக்கும் போக்கை மேற்கொள்ளாமல் செயற்பட்டுவந்தது.

எப்போது வேண்டுமானாலும் ஈரோஸ் இயக்கம்மீதும் புலிகள் பாய்வார்கள், தடை செய்வார்கள் என்றே ஏனைய இயக்கங்கள் எதிர்பார்த்தன.

1987இல் ஈரோஸ் தொடர்பாக புலிகள் இயக்கம் ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. அது வெளியே தெரியாது.

ஈரோசும் அதைப்பற்றி வெளயே சொல்லவேயில்லை.

அதனை அடுத்தவாரம் பார்க்கலாம்.

(தொடர்ந்து வரும்…)

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!
Next post சிங்கத்துக்கு அஞ்சாத கண்ணாடி…!!