ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்று தெரியுமா?
வாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. என்ன தான் பற்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலருக்கு ஈறுகளில் இருந்து மட்டும் இரத்தம் கசியும்.
அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சரியாக பற்களைத் துலக்குவதில்லை என்று கூறுவார்கள்.
ஆனால் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிந்தால், பல்லைச்சுற்றி நோய்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
சில ஈறு நோய்கள் முழு பல்லையும் அழிந்து, பற்களை விழச் செய்யும். எனவே பற்களில் பற்காறைகள் படியும் போதே, அதனை போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது மெதுவாக நாளடைவில் வாய் ஆரோக்கியத்தை முழுமையாக போக்கிவிடும்.
இப்போது ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்…
ஈறுகளில் இரத்தம் கசிவதற்கு மோசமான வாய் ஆரோக்கியம் முதன்மையான காரணமாக இருக்கும். பற்களில் காறைகள் அதிகமா சேரும் போது, ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கமடைந்து, பின் இரத்தக் கசிவை உண்டாக்கும்.
சிலருக்கு பற்களில் இடைவெளிகள் இருக்கும். இப்படி இடைவெளியுடனான பற்களைக் கொண்டிருந்தால், உணவுத் துகள்கள் எளிதில் மாட்டிக் கொள்ளும். இம்மாதிரியான பற்களைக் கொண்டவர்கள் தினமும் ப்ளாஷ் செய்ய வேண்டம்.
இதனால் உணவுத் துகள் வெளியேற்றப்பட்டு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, ஈறுகள் பாதிக்கப்படுவது குறையும்.
வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று சிலர் ஒரு நாளைக்கு பலமுறை அல்லது ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் பற்களைத் துலக்குவார்கள்.
இப்படி அளவுக்கு அதிகமாக ஒருவர் பற்களைத் துலக்கினால், அது ஈறுகளில் பாதிப்பை உண்டாக்கி இரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
நீங்கள் உண்ணும் உணவில் போதிய அளவு வைட்டமின் சி இல்லாவிட்டாலும், ஈறுகளில் வலி மற்றும் வீக்கத்துடன், இரத்தக் கசிவையும் சந்திக்க நேரிடும்.
எனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வர வேண்டியது அவசியம்.
வைட்டமின் கே குறைபாடும் ஈறுகளில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். பொதுவாக வைட்டமின் கே என்பது ஓர் உறைய வைக்கும் ஓர் சத்து. இது உடலில் குறைவாக இருக்கும் போது, ஈறுகளில் இரத்தக் கசிவை சந்திக்க நேரிடும்.
பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பூப்படையும் போது, கர்ப்ப காலம், மாதவிடாய் இறுதி கால அல்லது கருத்தடை பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும்.
இப்படி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் காலங்களில், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். குறிப்பிட்ட மருந்துகளும் ஈறுகளில் இரத்தக் கசிவை உண்டாக்கும்.
குறிப்பாக ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளான ஹீமோதெரபி மேற்கொண்டாலும், ஈறுகளில் இருந்து இரத்தம் கசியும்.
கல்லீரல் பிரச்சனைகளும் ஈறுகளில் இரத்தக்கசிவை உண்டாக்கும். அதிலும் மது அதிகமாக அருந்தினால், கல்லீரலின் மெட்டபாலிசம் நிலைக்குலைந்து ஈறுகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும்.
Average Rating