இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக நேற்றையதினம் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு… இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். அரசியல் பன்மைத்துவமும் மாற்று ஜனநாயகக் குரல்களை வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து இன மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் (ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும்) தமிழர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படுகிற கட்டாய அறவிடுதலை (பணம் சேர்ப்பதை) ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தங்களால் இயன்றளவுக்கு தடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகள், நிறுவனங்கள் ஆகியவற்றை முடக்குமாறு அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம். பெப்ரவரியில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சு மேசைக்குத் திரும்பியதை மகிழ்வோடு வரவேற்றோம். ஜெனீவாவில் ஏப்ரல் 26ஆம்நாள் நடைபெற இருந்த பேச்சுக்களில் பங்கேற்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக மறுத்ததால் நாம் கண்டனம் செய்கிறோம். தமது ஆயுதங்களைக் கைவிட்டு இனப்பிரச்சனைக்கான இறுதி அரசியல் தீர்வுக்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடிப் பேச்சுக்களை நடத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் வன்முறைகளையும் இருதரப்பினரது மனித உரிமை மீறல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். கடல்சார் நடவடிக்கைகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை பாரிய அளவில் மீறியுள்ளனர். குறிப்பாக மே 11ஆம்நாளன்று கடலில் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் குழுவினரும் பேராபத்துக்குள்ளாகியுள்ளனர். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு எனும் நிராயுதபாணி அமைப்பினரது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையிலான தொடர் தாக்குதல்களை குறிப்பாக பொதுமக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கைவிட வேண்டும். சிறார்களை படையணிகளில் சேர்ப்பது போர்க் குற்றமாகும். அனைத்து ஆயுதக் குழுக்களையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை சிறார்படை சேர்ப்பை நிறுத்துமாறு வேண்டுகிறோம். சிறார் மீதான குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளை எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் மறு அறிவித்தல் வரும் வரை வரவேற்காது என்ற தீர்மானத்தை அங்கீகரிக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. இலங்கையின் அனைத்து மக்களினது ஆதரவுடன் இனப்பிரச்சனைக்கு நீதியானதும் நிலையானதுமான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபாட்டுடன் உள்ளன. நோர்வே, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இதர இணைத் தலைமை நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், சுவிஸ், சிறிலங்கா மற்றும் சார்க் நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தீர்மானங்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating