மாணவி கழுத்தை அறுத்து கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை…!!
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் வன்னியர் நகர் திலீப் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஹரினி, தேஜாஸ்ரீ என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் ஹரினி பி.இ. முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். தேஜாஸ்ரீ அத்வைத ஆசிரம ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்தார். கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் 13–ந்தேதி பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்து தனியாக இருந்தார். அவரது தாயார் கஸ்தூரி சென்னையில் உள்ள மூத்த மகளை பார்க்க சென்று விட்டார்.
தந்தை துரைராஜ் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் கிரானைட் கம்பெனியில் வேலைக்கு சென்று விட்டார். வீட்டுக்கு ஹெல்மெட் அணிந்த மர்ம மனிதன் ஒருவன் வந்து தேஜாஸ்ரீயை கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம மனிதன் மாடியில் இருந்து வேகமாக வெளியே சென்றான். ஆனால் அந்த நேரத்தில் அவரால் அந்த ஹெல்மெட் மனிதரை பிடிக்க முடியவில்லை, துரைராஜ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தேஜாஸ்ரீ கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க அப்போது சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் தனிப்படை அமைத்தார். அப்போதைய துணை கமிஷனர் பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமலேசன், முத்தமிழ் செல்வ ராஜன், குமரேசன், வின்சென்ட், ராஜா, வெங்கடேசன் மற்றும் போலீசார் இந்த தனிப்படையில் இடம் பெற்று இருந்தனர்.
இவர்கள் 48 மணி நேரத்தில் துப்பு துலக்கி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த சலங்கைபாளையம் அருகே உள்ள மின்னா வேட்டுவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் யுகாதித்தியன் (23), அவரது நண்பரான கவுந்தப்பாடியை அடுத்த நல்லாகவுண்டனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரத்தக்கறை படிந்த துணிகள், கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விட்டு இவர்களை அழைத்து வந்த போது போலீசாரை ஏமாற்றி விட்டு திருமணிமுத்தாறு பாலத்தில் இருந்து பள்ளத் தில் குதித்தனர். இதில் 2 பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் தேஜாஸ்ரீயை கொன்றது குறித்து பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்தனர்.
யுகாதித்தியன் கொடுத்த வாக்குமூலத்தில், தேஜாஸ்ரீயின் அக்காள் ஹரினியுடன் ஒன்றாக படித்ததாகவும் அவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய கேட்ட போது அவர் மறுத்து விட்டதாகவும் கூறினார்.
ஹரினி செல்போன் எண்ணை மாற்றி விட்டதால் அந்த நம்பரை வாங்க வீட்டுக்கு வந்த போது தேஜாஸ்ரீயிடம் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை கொன்று விட்டதாவும் அவர் வாக்கு மூலத்தில் கூறி இருந்தார்.
இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சேசசாயி தீர்ப்பு வழங்கினார்.
இந்த கொலையில் தொட புடைய யுகாதித்தியன், சசிகுமார் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Average Rating