துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்…!!

Read Time:18 Minute, 24 Second

article_1468469566-Turkeyபட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள். அம் மறதியின் விலை ஆட்சியதிகாரத்தையே அசைக்க வல்லது. நீதி, நியாயம், நட்பு என எல்லாவற்றையும் தாண்டி நிலைப்பதற்கான போராட்டம் முக்கியம் பெறுவதால், ‘நேற்று வரை அண்ணன் தம்பி, இன்று நீ யாரோ நான் யாரோ’ என்பதே உலக அரசியல் அரங்கில் தாரக மந்திரமாயுள்ளது.

அண்மையில் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லின் பிரதான விமானநிலையமான அட்டாட்டுர்க் விமானநிலையத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சிரிய யுத்தத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.

உலகில் சர்வதேச பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் விமான நிலையங்களில் பத்தாவதும் லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் சார்ள் டிகோல் விமான நிலையங்களை அடுத்து அதிகூடிய பயணிகள் பயன்படுத்தும் ஐரோப்பிய விமான நிலையமாக அட்டாட்டுர்க் விமானநிலையம் உள்ளது. இதன் அடிப்படையில் அதன்மீது தொடுத்த தாக்குதல் கவனிப்புக்கு உட்படுகிறது.

விமான நிலையத்தில் மூன்று தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிப்பித்ததில் 45 பேர் இறந்ததுடன் 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை யாரும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் எனத் துருக்கிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளர். எனினும் துருக்கி அரசாங்கம் அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தாக்குதலுக்குக் காரணமானோரை கண்டுபிடித்தும் அதை அறிவிக்கத் தயங்குவதன் பின்னணியில் துருக்கியின் நலன்கள் உள்ளன.

ஓட்டோமன் பேரரசின் மையமான துருக்கியில் உலகின் முக்கிய வர்த்தகத் துறைமுகமாயிருந்த கொன்ஸ்தாந்தினோபிள் (இப்போது இஸ்தான்புல்) உள்ளது. சனத்தொகையில் 18 ஆவது பெரிய நாடான துருக்கி, தெற்கே சிரியாவும் ஈராக்கும் கிழக்கே ஈரான், ஆர்மேனியா, அஸபர்ஜான் ஆகியனவும் வடகிழக்கே ஜோர்ஜியாவும் வடமேற்கே பல்கேரியாவும் மேற்கே கிரேக்கமும் என எட்டு நாடுகளை எல்லையாகக் கொண்டது. ஆசிய, ஐரோப்பிய கண்டங்களைத் தனது நிலப்பரப்பால் இணைத்துக் கருங்கடலையும் மத்தியதரைக் கடலையும் கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளதால் துருக்கி பூகோள மூலோபாய முக்கியத்துவம் உடையதாகத் திகழ்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிரிய யுத்தம் தொடங்கிய காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புத் தோன்றியது. ஐ.எஸ்.ஐ.எஸ் இல் இணையும் போராளிகள் துருக்கிக்கு வந்து துருக்கி – சிரிய எல்லையூடாக சிரியாவில் போர் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தனது எல்லைகளை விரித்து ஈராக்கின் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திய போதும் துருக்கி – ஈராக்கிய எல்லையூடாகவே ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் பயணித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை அனைத்து வழிகளிலும் ஆதரித்து வந்த துருக்கி ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தொடக்க நிலையில் அதற்கு வரன்முறையாக ஆயுத உதவியும் ஆளுதவியும் நிதியுதவியும் வழங்கியமை ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோவான் அமெரிக்காவின் அடியாளாக ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் நெருங்கிய கூட்டாளியாகச் செயற்பட்டு வந்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் திருடிய எண்ணெய், துருக்கி எல்லையைக் கடந்தே சர்வதேச சந்தையை எட்டுகிறது. இச் சட்டவிரோத எண்ணெயை சட்டரீதியாக்கும் செயலைத் துருக்கி செய்கிறது. இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் திருடும் எண்ணெய் எந்தத் தடையுமின்றி உத்தியோகபூர்வமாக சந்தையில் துருக்கியூடாக விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறே இரு நாடுகளிலும் திருடிய கலைப்பொருட்களையும் புராதன சின்னங்களையும் துருக்கிக்குக் கொண்டுசென்று அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவ்வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கான நிதிமூலங்கள் வற்றாமல் இருப்பதற்கான வேலையை துருக்கி செவ்வனே செய்து வருகிறது.

சிரியாவில் ஓர் ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவால் தொடங்கப்பட்ட போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரதான பாத்திரம் வகிக்கிறது. அதற்குப் பக்கபலமாக துருக்கி விளங்குகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்க்கும் துருக்கிக்கும் உள்ள உறவை வெளிப்படுத்திய துருக்கிய பத்திரிகைகளை அரசாங்கம் மூடியுள்ளது. சமூக வலைத்தளங்கள் அடிக்கடி தடைப்படுகின்றன. மாற்றுக் கருத்தாளர்கள் தாக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரான எக்கருத்துக்களும் பொது வெளியில் பரவாமற் கவனிக்கப்படுகிறது. துருக்கி ஜனாதிபதி எர்டோவான் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்.

சனத்தொகையில் 70 சதவீதம் துருக்கியரைக் கொண்ட துருக்கியில் ஆர்மேனியர்கள், கிரேக்கர், யூதர்கள் ஆகியோர் அங்கிகரிக்கப்பட்ட சிறுபான்மையினராவர். குர்தியர், அல்பானியர்; ஜோர்ஜியர், பொஸ்னியர், செர்காசியர்; ஆகியோர் கணிசமான சிறுபான்மையினராயினும் துருக்கி அவர்களை சிறுபான்மையினராக அங்கிகரிக்கவில்லை. துருக்கியின் மிகப் பெரிய சிறுபான்மையினரான குர்தியர் சனத்தொகையில் 22 சதவீதமாவர். இன்றுவரை அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்க துருக்கி அரசாங்கம் மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரைக்கும் சிறப்புரிமையை நீக்கியதன் மூலம் குர்திய விடுதலைக்கும் பி.கே.கே. (குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி) எனும் குர்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்துப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் எவரையும் கைதுசெய்து சிறையிலடைக்கும் வாய்ப்பை ஜனாதிபதி எர்டோவான் உருவாக்கினார். இச்செயலை எதிர்த்துப் பெருந்தொகையானோர் வீதியில் இறங்கிப் போராடினர். துருக்கி அரசாங்கத்துக்கு எதிரான குர்திய விடுதலைக்கான போராட்டம் தொடர்கிறது. பி.கே.கே. குர்திய விடுதலைக்கான பிரதான போராட்டத்தை முன்னெடுக்கிறது.

துருக்கி இராணுவம் கடந்த சில ஆண்டுகளாக குர்திய போராளிகளுக்கு எதிராகக் கட்டற்ற வன்முறையை ஏவிவருகின்றது. அவ்வாறே ஐ.எஸ்.ஐ.எஸ் குர்திய மக்களின் வாழ்விடங்களைத் தாக்கி குர்தியரை அழித்தொழிக்கும் வேலையைச் செய்கிறது. குர்தியருக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்கள் துருக்கிய அரசின் முழு ஆசிகளுடன் நடக்கின்றன. எனவே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராகப் போரிடும் முக்கிய சக்தியாக குர்தியப் போராளிகள் உள்ளனர். அவர்கள் பல பிரதேசங்களை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடமிருந்து மீட்டுள்ளனர்;. இவ்வாறு, துருக்கி – ஐ.எஸ்.ஐ.எஸ் கூட்டின் பிரதான எதிரியாகக் குர்திய விடுதலைப் படைகள் உள்ளன. சிரிய யுத்தத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் களவாடிய எண்ணெயை துருக்கிக்குக் கொண்டுசெல்லும் மார்க்கத்தைச் சிதைத்தது. எண்ணெய் கொண்டு செல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ் வாகனங்களை ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி அழித்தன. இது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் பொருளாதாரத்துக்குப் பாரிய அடியானது.

குறைந்த விலையில் பெற்ற, களவாடிய எண்ணெயை கூடியளவு விலையில் விற்று இலாபம் பார்த்த துருக்கியும் இதை எதிர்பார்க்கவில்லை. அதற்கு எதிர்வினையாகக் கடந்த நவம்பரில் சிரிய வான்பரப்பில் பறந்த SU-24 வகை ரஷ்ய போர்விமானம் ஒன்றைத் துருக்கி சுட்டுவீழ்த்தியதன் மூலம் ரஷ்யாவை வம்புச் சண்டைக்கு இழுக்கத் துருக்கி முயன்றது. துருக்கியின் இச்செயலை ரஷ்யா வன்மையாகக் கண்டித்தபோது ‘நாம் அடிபணியோம்’ எனத் துருக்கி ஜனாதிபதி எர்டோவான் வீரம் பேசினார்.

துருக்கி விழைந்த யுத்தம் நிகழவில்லை. மாறாக ரஷ்ய அரசாங்கம் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக துருக்கிக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு ரஷ்யர்களைக் கோரியது.

இவை துருக்கிய பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தன. துருக்கியின் சிறு வணிகர்களும் விவசாயிகளும் பாதையோர வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டபோதும் துருக்கிய ஜனாதிபதி ரஷ்யாவுக்கு எதிரான வீர உரைகளைத் தொடர்ந்தார்.

மத்திய கிழக்கில் முடிவுறாத யுத்தமொன்றுக்கு வழிகோலுவதன் மூலம் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி அதன்மூலம் துருக்கியை ஒரு பிராந்திய வல்லரசாக நிறுவலாம் என்பது துருக்கிய ஜனாதிபதியின் கணிப்பு.

அவ்வாறு ஒரு ‘நவீன ஓட்டோமன் பேரரசை’ உருவாக்கும் கனவை அவரது வெளியுறவுக் கொள்கை உணர்த்துகிறது. இப்பின்னணியில் அட்டாட்டுர்க் விமான நிலையத் தாக்குதலை நோக்குதல் தகும். ஐ.எஸ்.ஐ.எஸ் இன்று சிரியாவிலும் ஈராக்கிலும் அடுத்தடுத்துத் தோல்விகளைச் சந்திக்கிறது.

அதனால் அதன் இருப்பு கேள்விக்குரியதாயுள்ளது. ஊடகவெளியில் இல்லாது போயின் புதியவர்கள் அமைப்பில் இணைய மாட்டார்கள். எனவே தனது இருப்பைத் தொடரவும் ஓரு முக்கிய பயங்கரவாத அமைப்பாகத் தன்னைக் காட்டவும் வேறெங்காவது தாக்குதல் நடத்த வேண்டும். அதனாலேயே அட்டாட்டுர்க் விமான நிலையம் தாக்கப்பட்டது. அவ்விமான நிலையத்தின் மீதான தாக்குதல் பலவழிகளில் முக்கியமானது. உலகெங்கிருந்தும் பயணிகள் இவ்விமான நிலையத்தின் ஊடு பயணிக்கிறார்கள். கொல்லப்பட்ட 45 பேரில் 22 பேர் வெளிநாட்டவர்கள்.

விமானநிலையம் ஏனைய பொது இடங்களிலும் பார்க்க பாதுகாப்புக் கூடிய இடமாகும். எனவே அதிபாதுகாப்பான இடத்தில் தாக்குதல் நிகழ்த்தியதன் மூலம் வீரசாகசமொன்றை நடத்தியதாக விசுவாசிகளுக்குக் காட்டி உலகளாவிய கவனத்தையும் பெறமுடியும் என ஐ.எஸ்.ஐ.எஸ் அறியும்.

துருக்கிய ஜனாதிபதியைப் பொறுத்தவரை, இதை ஐ.எஸ்.ஐ.எஸ் செய்தது என்று ஏற்றால், அது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகிவிடும். ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பின் அது துருக்கி – ஐ.எஸ்.ஐ.எஸ் உறவைப் பாதிக்கும். எனவே இருதரப்பினரும் மௌனம் காக்கின்றனர்.

ஆனால் தாக்குதலின் துர்பலன்களைத் துருக்கியே அனுபவிக்கும். கடந்த சில வாரங்களாக ஐ.எஸ்.ஐ.எஸ் உலகின் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சிரிய, ஈராக்கியக் களமுனைகளில் சிரிய இராணுவத்திடமும் குர்துப் போராளிகளிடமும் பெற்ற தோல்விகளின் விளைவே.

சிரியாவிலும் ஈராக்கிலும் இருந்து விரட்டப்படும் போது ஐ.எஸ்.ஐ.எஸ் எவரும் கணக்கிலெடுக்காத ஓர் அமைப்பாகிவிடும். அதனால் அமைப்பில் இருந்து ஆட்கள் வெளியேறுவதோடு புதியவர்கள் சேராத நிலையை உருவாக்கும். எனவே வேறு வழியின்றி ஐ.எஸ்.ஐ.எஸ் இவ்வகைத் தாக்குதல்களை மேற்கொள்கிறது. இப்போது துருக்கி ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றித் தீர்க்கமான ஒரு முடிவை எட்ட வேண்டும்.

ஆனால் துருக்கியால் அது இயலாது. குர்தியர்கட்கு எதிரான போரை ஐ.எஸ்.ஐ.எஸ் நிகழ்த்துகிறது. சிரிய, ஈராக்கிய மண்ணில் துருக்கிக்காக அது களவாடுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்குமாறு அமெரிக்கா கட்டளை விதிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு நிதியை சவூதி அரேபியா வழங்குகிறது. அனைத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒத்தோதுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையப் பல ஆண்டுகளாக துருக்கி தவங்கிடக்கிறது.

இன்னொரு முக்கிய இம்மாத நிகழ்வை இங்கு நினைவூட்டல் தகும். ரஷ்ய விமானத்தைத் துருக்கி சுட்டுவீழ்த்தியது தவறென்றும் அதற்கு ‘மன்னிப்பு’க் கோருவதாகவும் துருக்கிய ஜனாதிபதி எர்டோவான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எழுதிய கடிதத்தில்; கூறியிருக்கிறார். துருக்கி மீதான ரஷ்யப் பொருளாதாரத் தடைகளின் விளைவுகள் எவ்வளவு பாரியவை என இது காட்டுகிறது. துருக்கியில் தன்னை ஒரு தேசியவாதியாகக் காட்டும் ஜனாதிபதி எர்டோவான் ரஷ்யாவிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டமை ‘பேச்சுப் பல்லக்குத் தம்பி கால்நடை’ என்ற கதைதான். இங்கு புதியதொரு கேள்வி; எழுகிறது.

எர்டோவான் கடிதமனுப்பிய மறுநாள் விமானநிலையத் தாக்குதல் நிகழ்ந்தது. எனவே கடிதம் ஊடக முக்கியத்துவம் பெறவில்லை. மாறாகத் தாக்குதல்களே கவனம் பெற்றன. எர்டோவானின் ஆசியுடன் அவரின் வேண்டுகோளின்படி ஐ.எஸ்.ஐ.எஸ் இத்தாக்குதல்களை மேற்கொண்டதா என்பதே அது. இக்கேள்வியில் நியாயமும் தர்க்கமும் உள்ளன. ஆனால் அதற்குரிய பதில் என்றுமே கிடையாமல் போகலாம்.

முடிவில் அராஜகத்துக்கும் அவலத்துக்கும் இடையே அல்லாடுவோர் அப்பாவித் துருக்கியர்களே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காருடன் ஆற்றில் பாய்ந்தவரை காப்பாற்ற போனவருக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ
Next post மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுதானா?