ஓரம் கட்டப்பட்ட கிட்டு: விரக்தியில் ஒதுங்கிய கிட்டுவின் விசுவாசிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 79) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல்.
கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது மெய்ப்பாதுகாவலர் பலியானார். அவரது பெயர் சாந்தாமணி. மன்னார் மாவட்ட தளபதியாக இருந்து பலியான விக்ரருக்கு நெருக்கமானவர் சாந்தாமணி.
யாழ் பொது மருத்துவமனையில் கிட்டுவுக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள் அவரது மன உறுதியை வியந்து பாராட்டினார்கள்.
கிட்டுவின் மீதான தாக்குதலை அடுத்து யாழ் மாவட்ட புலிகளின் தளபதியாக ராதா நியமிக்கப்பட்டார்.
விக்ரரின் மரணத்தின்பின்னர் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவை யாழ் மாவட்ட தளபதியாக நியமித்தார் பிரபாகரன்.
கிட்டு தாக்கப்பட்ட மறுநாள்-ஏப்ரல் 30ம் திகதி (1987) காலையில் யாழ் கோட்டை மீது புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தினார்கள்.
(முதன்முதலாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். தயாரிக்கப்பட்ட ஷெல்)
அதற்கு முன்னர்- ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் இருந்து எடுத்த மோட்டார்களையும், ஷெல்களையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களைக் கொண்டே புலிகள் பரிசீலித்துப் பார்த்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சொந்தத் தயாரிப்பான மோட்டார் ஷெல்கள், மோட்டார் குழாய்களுக்குள்ளேயே வெடித்துவிடும் ஆபத்து இருந்தது.
அதனால் தம்மால் கைது செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களை வைத்து அவற்றைப் பரிசீலித்துப் பார்த்தார்கள்.
ஷெல்லை போடுமாறு கூறிவிட்டு புலிகள் இயக்க உறுப்பினர்கள் தூரத்தில் போய் நின்றுவிடுவார்கள்.
அச்சுவேலியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு ஒரு கிரேனேட் தயாரிப்பு பட்டறையும் வைத்திருந்தது. டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அந்த கிரனேட் தயாரிப்பு பட்டறை உருவாக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்த கிரனேட் தயாரிப்பு கருவிகளும் புலிகள் அமைப்பினரால் எடுக்கப்பட்டன.
மோட்டார் ஷெல் தயாரிப்பிலும், கிரனேட் தயாரிப்பிலும் ஈடுபட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களை தாமும் பயன்படுத்திக்கொள்ள கிட்டு நினைத்தார்
கைது செய்யப்பட்ட உறுப்பினர்களில் அவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்தும் பார்த்தார்.
தெரிந்து விட்டால் தம்மை ஒருநாளும் வெளியே விடமாட்டார்கள் என்று நினைத்து யாரும் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.
வசாவிளான் இராணுவமுகாமில் இருந்து இராணுவத்தினர் வெளியேற முற்பட்ட போது, புலிகள் அமைப்பினர் பதில் தாக்குதல் தொடுத்தனர்.
அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களை தம்மோடு அழைத்துச் சென்று மோட்டார் ஷெல் தாக்குதலை நடத்தமாறு உத்தரவிட்டனர்.
பதிலடியாக படுகோரம்
ஏப்ரல் 30ம் திகதியன்று யாழ் கோட்டை முகாம்மீதும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் சுபாஷ் கபேயின் அருகில் இருந்தே ஷெல் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
ஷெல் தாக்குதல் தம்மை நோக்கி நடத்தப்பட்டதும், கோட்டை இராணுவமுகாமில் இருந்த இராணுவத்தினரும் பதிலடியாக ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர்.
கோட்டை இராணுவ முகாமில் இருந்து சரமாரியாக ஷெல்கள் சீறியெழுந்து வந்து யாழ் நகரில் விழத் தொடங்கின. யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையின் கூரைகளிலும் ஷெல்கள் வந்து விழுந்தன.
19ம் 20ம் வார்டுகளில் கர்ப்பிணிகள் இருந்தனர். அந்த வார்டு கூரைமீதும் ஷெல் விழுந்தது.
பொது மருத்துவமனையில் பயங்கரம்: அந்தோ..பரிதாபம்.
கர்ப்பிணிகள் எட்டுப்பேரும் துடிதுடித்து மாண்டுபோனார்கள்.
இரண்டு தாதிமார்கள் படுகாயமடைந்தனர். யாழ் பொதுமருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உயிரைக் கையில் பிடித்தபடி, ஷெல் விழுமோ என்ற பயத்தில் தவித்துக்கொண்டிருந்தனர்.
பொது மருத்துவமனை தாக்கப்பட்டதும், கர்ப்பிணிகள் கொல்லப்பட்டதும் சர்வதேச ரீதியாகவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியா கண்டனம்
யாழ் பொதுமருத்துவமனை சம்பவம் தொடர்பாக இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. கண்டனங்கள் தம்மை நோக்கிப் பாய்வதைக் கண்ட இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்தது.
அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் லலித் அத்துலத்முதலி. யாழ் பொது மருத்துவமனை சம்பவம் தொடர்பாக அவர் நினைத்திருந்தால் ஒரு விசாரணை நடத்தியிருக்கலாம், வருத்தம் தெரிவித்திருக்கலாம்.
அவர் என்ன செய்தார் தெரியுமா? “யாழ் பொது மருத்துவ மனைமீது ஷெல் தாக்குதல் நடத்தியது புலிகள் இயக்கத்தினர் தான்” என்று நாகூசாமல் தெரிவித்துவிட்டார்.
பொது மருத்துவமனைமீது விழுந்த ஷெல் யாழ் கோட்டை இராணுவமுகாம் இருந்த திசையில் இருந்தே வந்திருந்தது. அவ்வாறு இருந்தும் லலித் அதனை மறுத்திருந்தார்.
அப்போது இலங்கையில் இந்திய தூதுவராக இருந்தவர் ஜே.என்.டிக்ஷித். லலித் அத்துலத்முதலி புலிகளை குற்றம் சாட்டியது தொடர்பாக டிக்ஷித் கேலியாக சொன்ன கருத்து இது:
“புலிகளிடம் ஒரு விசே ஷெல் இருக்கிறது. அது முன்னோக்கிச் சென்றுவிட்டு திரும்பிவந்து தாக்கும்!”
கிட்டுமீதான தாக்குதலின் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமீபமாகவிருந்த மாடிவீட்டை தமது பகிரங்க அலுவலகமாக புலிகள் பயன்படுத்தினார்கள்.
அங்கு வைத்து பொதுமக்களை சந்திப்பார் மாத்தையா. புலிகளின் அமைப்பின் தலைவராக அவர் பொதுமக்கள் மத்தியிலும் பிரபலம் பெறத் தொடங்கியது அக்கட்டத்தில்தான்.
கிட்டு தாக்கப்பட்ட பின்னர் புலிகள் அமைப்பினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ உறுப்பினர்கள் 70 பேர் கொல்லப்பட்ட செய்தி பல்வேறு வழிகளில் வெளியே தெரியத் தொடங்கியது.
அதனையடுத்து, புலிகளால் கைது செய்யப்பட்ட ஏனைய இயக்க உறுப்பினர்களது பெற்றோர்கள் புலிகளது முகாம்களை நோக்கி படையெடுத்தனர்.
தமது பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரிவிக்குமாறு அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள்.
தமது தரப்பில் இருவரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு உறுப்பினர்களான 18 கைதிகளும்தான் பலியானதாக புலிகள் அறிவித்திருந்தனர். ஆனால் பலியானவர்களோ 70 பேர்.
எனவே-புலிகள் அமைப்பினர் ஒரு காரியம் செய்தனர். தமது முகாம்களை தேடிவரும் மக்களுக்கு ஒரு கறுப்பு பலகையில் பெயர்களை எழுதி, இவர்கள் அனைவரும் தமது முகாமில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.
புலிகள் அமைப்பின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன்தான் அந்த யுக்தியை கடைப்பிடிக்கும் யோசனை சொன்னவர்.
மீண்டும் கிட்டு
யாழ் பொது மருத்துவ மனையில் கிட்டுவை தொடர்ந்துவைத்திருப்பது பாதுகாப்பல்ல என்று இரகசியமாக வைத்திருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது.
கிட்டுவை இந்தியாவுக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்யப்படுவதாகவும் கதைகள் உலாவின. ஆனால், கிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்துதான் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சைக்குப் பின்னர் செயற்கைக்கால் பொருத்திக்கொண்டு கார் ஓட்டிச்சென்று தனது இயக்க உறுப்பினர்களை ஆச்சர்யப்படுத்தினார் கிட்டு.
செயற்கைக்கால் பொறுத்தப்பட்ட பின்னர் யாழ் மாவட்ட தளபதியாக கிட்டு மீண்டும் செயற்பட்டிருக்க முடியும். அதனையே கிட்டுவும் விரும்பி இருந்திருக்கலாம்.
ஆனால், கிட்டு சிகிச்சை முடிந்து வருவதற்கு இடையில் மாத்தையா தனது பிடியை யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக்கிக் கொண்டார்.
மாத்தையா-கிட்டு பிரச்சனையின்போது பிரபாகரன் மாத்தையாவின் பக்கம்தான் இருந்தார்.
கிட்டுவுக்கும் தனது கால்போகக் காரணம் மாத்தையா குழுவினர் என்பது தெரியாமல் இல்லை. ஆனால் இறுதிவரை கிட்டு அதனை வெளியே சொல்லவே இல்லை.
கிட்டுவோடு நெருக்கமாக இருந்த அவரது விசுவாசிகளுக்கும் உண்மை தெரிந்தது. அதனால் அவர்களும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கிச் சென்றனர்.
விரக்தியில் ஒதுங்கிய கிட்டுவின் விசுவாசிகள்
இயக்கத்தில் தொடர்ந்து இருந்த கிட்டுவின் விசுவாசிகளும் மாத்தையாவால் ஓரம் கட்டப்பட்டனர். அவர்களில் ஒருவர் ரகீம் என்றழைக்கப்படும் கனகரத்தினம்.
இயக்கத்தில் இருந்து வெளியேறிய கிட்டுவின் விசுவாசிகளில் ஒருவர் சிவபரன். மானிப்பாயைச் சேர்ந்தவர். வெளிநாட்டுக்குச் சென்று போதை மருந்து கடத்தலில் ஈடுபடத் தொடங்கினார்.
தானும் போதை மருந்துக்கு அடிமையானார். இயக்கத்தில் இருந்தபோது தான் செய்த செயல்களைச் சொல்லி புலம்பத் தொடங்கினார். மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.
கிட்டுவின் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தவர்களில் ஒருவர் கலாநாதன். இயக்கப்பெயர் கலா. கிட்டுவின் நண்பராக இருந்து பின்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்.
புங்குடுதீவுப் பொறுப்பாளராக இருந்தவர். இயக்கத்தில் இருந்து வெளியேறி வெளிநாடு சென்றார். போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு சிறைப்பட்டார். பின்னர் விடுதலையாகி தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்.
மற்றொருவர் கில்டன். வல்வெட்டித்துறைக்கு பொறுப்பாக கிட்டுவால் நியமிக்கப்பட்டவர். கிட்டுவின் நண்பர். விலகிச் சென்று தற்போது இலண்டனில் இருக்கிறார். இவரை மீண்டும் இயக்கத்தில் சேருமாறு பிரபாகரன் அழைத்திருந்தார். கில்டன் மறுத்துவிட்டார்.
இன்னொருவர் ஊத்தைரவி. இவர் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி கொழும்புக்குச் சென்றார். இவரால் பாதிக்கப்பட்ட ஏனைய இயக்க உறுப்பினர்களால் கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் உயிர் தப்பி வெளிநாடு சென்றுவிட்டார்.
செம்படை இயக்கம்
புலிகள் இயக்கத்தினர் தம்மால் உரிமை கோரமுடியாத சில நடவடிக்கைகளை‘செம்படை இயக்கம்’ என்ற பெயரில் மேற்கொண்டு வந்தனர் என்பதை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க உறுப்பினர்களை யாழ் மனோகரா தியேட்டரின் அருகில் உள்ள வைமன் றோட் முகாமிலும் புலிகள் தடுத்துவைத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தினர் வைத்திருந்த சிறைகளில் பெரியது வைமன் றோட் சிறைமுகாம்தான்.
அங்கு வைக்கப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் கண்களில் செம்படை இயக்க பிரசுரங்களும் தட்டுப்பட்டன. அங்குள்ள சுவர்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டன. சிறிய அறைகள் சிறைச்சாலை ஷெல்கள் மாதிரியே அமைக்கப்பட்டிருந்தன.
தடுத்துவைக்கப்பட்டிருந்த உறுப்பினர்களிடம் புலிகள் அமைப்பினர் “அராஜகம் என்றால் என்ன?’’ என்று கேட்பார்கள். விளக்கம் சொன்னாலும் அடி. சொல்லாவிட்டாலும் அடி.
புலிகள் அமைப்பினரை ‘அராஜகவாதிகள்’ என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரசாரம் செய்தது. அதனால்தான் அந்தக் கேள்வி.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர் ஒருவரிடம் அராஜகத்துக்கு விளக்கம் கேட்டுவிட்டு, புலிகள் இயக்க உறுப்பினரே தனது விளக்கத்தைச் சொன்னாராம்.
அவர் சொன்னது இது, “அராஜகம் என்றால் அரசு இல்லாத காலகட்டம் என்றுதானே அர்த்தம். இங்கே நாங்கள் தானே அரசாங்கம். இது எப்படி அராஜகமாகும்?”
போர் நிறுத்த முயற்சி
1987 சித்திரைப் புத்தாண்டுக்கு போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் அமைச்சர் தொண்டமான். அமைச்சரவை மட்டத்திலும் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
தொண்டமானின் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது.
ஏப்ரல் 11ம் திகதிமுதல் 20ம் திகதி வரை 9 நாள் போர் நிறுத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்தது.
அரசாங்கத்தின் போர் நிறுத்த அறிவிப்பை பிரபாகரன் நிராகரித்தார்.
ஏப்ரல் 20ம் திகதிக்குப் பின்னர்தான் அரசாங்கத்தின் போர்நிறுத்த அறிவிப்பு தொடர்பாக யோசிக்கப்படும் என்று புலிகள் கூறிவிட்டனர்.
ஷெல் தாக்குதல், விமானத் தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசுமீது சர்வதேச கண்டனம் ஏற்பட்டுள்ளது. கண்டனங்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், உலகை ஏமாற்றவுமே போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ளது என்று புலிகள் கூறினார்கள்.
போர் நிறுத்த முயற்சி முறிவடைந்த அதேவேளையில் கொழும்பில் மிகப்பாரிய தாக்குதல் ஒன்றுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன் Thanks… Ilakkiyaa
இறுதித் தாக்குதல்
தொலைத்தொடர்பு நிலையத்தில் கைப்பற்றிய ஆயுதங்களை பிரபாவுக்கு காண்பிக்கிறார் கிட்டு.
யாழ் மாவட்ட தளபதியாக கிட்டு இருந்த போத அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இறுதித்தாக்குதல் யாழ்-தொலைத்தொடர்பு நிலைய முகாம் மீதான தாக்குதலாகும்.
1987 மார்ச் 23ம் திகதி யாழ்-தொலைத் தொடர்பு நிலைய இராணுவ முகாம்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.
யாழ் பொலிஸ் நிலையம் கிட்டு தலைமையில் தாக்கப்பட்ட பின்னர், யாழ் கோட்டை இராணுவ முகாமுக்கு அருகில் இருந்த தொலைத்தொடர்பு நிலையத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.
அம் முகாம்மீது தாக்குதல் நடத்த கிட்டு திட்டமிட்டார். தாக்குதல் அணிக்கு தலைமைதாங்கி சென்றவர் ராதா.
புலிகளின் இராணுவத்தினர் பின்வாங்கி யாழ் கோட்டை முகாமுக்குள் சென்றுவிட்டனர்.
அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கைப்பற்றியதோடு, இராணுவத்தினர் ஆறு பேரையும் புலிகள் பிடித்துக் கொண்டனர்.
தொலைத் தொடர்பு நிலைய முகாம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.
கிட்டுவின் பெயர் மேலும் பிரபலமடைந்தது.
1986 நவம்பரில் கோட்டை இராணுவ முகாமிலிருந்து வந்த கப்டன் கொத்தலாவலயுடன் கிட்டு பேச்சு நடத்தினார். தம்மிடமிருந்த இரண்டு இராணுவத்தினரையும் புலிகள் விடுவித்தனர்.
1987 மார்ச் 23 இல் அதே கோட்டை இராணுவ முகாமின்கீழ் இயங்கிய தொலைத் தொடர்பு நிலைய முகாம் தாக்கப்பட்டது. ஆறு இராணுவத்தினரைப் புலிகள் கைதிகளாகப் பிடித்தனர்.
Average Rating