குழந்தைகளின் ஏக்கம் யாருக்கும் புரியவில்லையா?
கிளிநொச்சி நகர் இராணுவ முகாங்களாலும் இராணுவச் செயற்பாடுகளாலும் இராணுவ மயமாகக் காணப்படுகின்றது.
மக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவை இராணுவத்திற்குச் சொந்தமானதல்ல மக்களது காணிகளை மக்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் என பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த மண்ணிலே நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக இடம்பெயர்ந்து சென்ற நாம் செட்டிகுளம் முகாம்களில் அடைக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டோம். கிளிநொச்சிக்கு வந்த எமது பரவிப்பாஞ்சான் மக்கள் யுத்தம் முடிந்ததாகக் கூறப்பட்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் தமது காணிகளுக்குப் போகமுடியாத நிலையில் அவல வாழ்க்கையையே அனுபவித்துக் கஸ்டப்படுகின்றார்கள்.
கிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி கூறியிருந்தார் பரவிப்பாஞ்சான் விடுவிக்கப்பட்டு விட்டதாக. ஆனால் அப்பகுதி விடுவிக்கப்படவில்லை. அங்குள்ள மக்களது காணிகளிலும் வீடுகளிலும் இராணுவம் பாரிய முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளது.
கிளிநொச்சியில் எங்கு திரும்பினாலும் இராணுவ முகாம்களும் இராணுவச் செயற்பாடுகளுமே காணப்படுகின்றன. கிளிநொச்சியில் இந்தளவு தொகையான இராணுவத்தினர் மக்களது இருப்பிடங்களைக் கையகப்படுத்தி முகாம் அமைத்துத் தங்கி இருக்கவேண்டிய தேவை இல்லை.
கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் இராணுவத்தினர் இருப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. கிளிநொச்சி நகரிலுள்ள பரவிப்பாஞ்சான் மக்கள் நெருக்கமாக காலங்காலமாக வாழ்ந்த மக்களது பாரம்பரிய இருப்பிடங்கள்.
மக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவையாகும். பரவிப்பாஞ்சானிலுள்ள தமது வீடுகளுக்கு எப்போது செல்வோம் எங்களது வீடுகளில் நாங்கள் எப்போது சுதந்திரமாக இருப்போம் என ஆவலுடன் எதிர்பார்த்து ஏக்கத்துடன் இருக்கும் இந்தக் குழந்தைகளின் எதிர்பார்ப்பையும் உணர்வுகளையும் நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் குழந்தைகள் ஜனாதிபதியை தமது உறவாகக் கருதி மைத்திரி மாமா எங்களது காணிகளையும் எங்களது வீடுகளையும் எங்களிடமே தாருங்கள் அதில் நாங்களும் நிம்மதியாக வாழவேண்டும் நாமும் கல்வி கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்புக்கள் நிறைந்த ஏக்கத்தோடு கேட்கின்றார்கள்.
இந்தக் குழந்தைகளின் கோரிக்கைகளுக்காகவென்றாலும் நல்லாட்சிக்கான ஜனாதிபதி, பரவிப்பாஞ்சான் மக்களின் சொந்தக்காணி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த மக்களுக்கான காணிகளை வழங்க முன்வரவேண்டும்.
இந்த மக்கள் தமது காணிகள் தம்மிடம் வழங்கப்படும்வரை தொடரச்சியான போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக முடிவெடுத்துள்ளார்கள். இந்த மக்களின் நிலையை இந்த நாட்டின் நல்லாட்சிக்கான ஜனாதிபதி இதனைப் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மக்களுக்கான நல்ல முடிவை விரைந்து வழங்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக்கான போராட்டம் பரவிப்பாஞ்சானுக்குச் செல்லும் வீதி முன்றலில் நடு வெய்யிலில் தொடர்கின்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் நிலையைப் பார்க்கும்போது வேதனையாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனை இம்மக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள் சிந்திப்பார்களா?
Average Rating