புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி…!!
பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
குறிப்பாக, உலகத் தமிழர்களின் நலனுக்காக 17 அமைப்புகளை உருவாக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சியினரால் அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழகத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சியொன்று ஈழத் தமிழர்களிடத்தில் இவ்வாறு ஊடுருவியிருப்பதன் நோக்கம் உண்மையில் எவ்வகையானது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் போட்டி பல தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டது. அது பெரும்பாலும் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தளத்தினை முன்னிறுத்திய தமிழக அமைப்புக்களுக்கு இடையில் எழுந்தன.
தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்திய செயற்றிட்டங்களோடு இயங்குவதாக தம்மைக் காட்டிக் கொண்ட இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவை குறுகிய வட்டமொன்றுக்குள்ளேயே சுற்றி வந்து காணாமற்போயின.
இன்னும் சில அமைப்புக்கள் அந்த வட்டத்தை பெரிதானது என்று காட்டிக் கொள்ளும் முனைப்பில் வெற்றி பெற்று மக்களிடம் குறிப்பிட்டளவில் சென்று சேர்ந்தன. தமிழ்த் தேசியப் போராட்டங்களைத் தலைமையேற்பதற்கு யாருமில்லை என்கிற நிலையில், இந்த அமைப்புக்களின் மீது அபிமானம் கொள்வதற்கான கட்டத்துக்கு புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகையினர் வந்தனர். அது பெருமளவான உழைப்பினையும் நிதியினையும் இந்த அமைப்புக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு காரணமானது.
ஆனால், எந்தவித அடிப்படைகளும் இல்லாத கற்பிதங்களும் போலிக் காட்சிகளும் விரைவிலேயே கலைந்து சென்றுவிடும் என்கிற நிலையில், அந்த அமைப்புக்களின் உண்மையான முகம் அல்லது அவற்றின் இயலாமையினை மக்கள் உணரத்தொடங்கிய புள்ளியில், அந்த அமைப்புக்களுக்கு புதிய புதிய வடிவங்களையும் வர்ணங்களையும் தம்மீது பூசிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்த அமைப்புக்கள் மாவீரர் தினம், மே 18 நினைவேந்தல், ஜெனீவா திருவிழா என்று தமிழ் மக்களோடு அதிகமாகப் பிணைந்துவிட்ட விடயங்களை முன்னிறுத்திக் கொண்டன. குறிப்பாக, மனப்பூர்வமான அஞ்சலிகளையும் மக்கள் ஒருங்கிணைப்பையும் தங்களது வருமானத்துக்கான வழிகளாக வைத்துக் கொண்டன.
இதன் பெரும் நிகழ்ச்சி நிரல் மாத்திரம் இன்று வரை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது. எந்தவித முறையான செயற்றிட்டமும் இலக்கும் இன்றிய இந்த அமைப்புக்களின் மீது தமிழ் மக்கள் அபிமானம் கொள்வதற்கான சந்தர்ப்பங்களில் முக்கியமானது இன்றைய கையறு நிலையாகும். பெரும் போராட்டமொன்றின் தோல்வியின் புள்ளியிலிருந்து தமிழ் மக்கள் முன்நகர்வது தொடர்பில் சிந்திப்பதற்குப் பதில் பெரும்பாலும் போலிகள் மீதான அபிமானத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.
அது பொறுப்பினை ஏற்கும் மனநிலையிலிருந்து விலகியிருக்கும் தன்மையின் போக்கிலுமானது. அதாவது, போராடும் இனமொன்றின் அனைத்துத் தளமும் தன்னை வீரியத்தோடு வைத்துக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. ஆனால், தமிழ்ச் சூழலில் போராட்டத்தினை ஒரு தரப்பினர் முன்னெடுத்தால் போதும் என்கிற உணர்வொன்று கடந்த காலங்களில் இருந்து வந்திருக்கின்றது. அதன் நீட்சி இன்னமும் உண்டு.
அதனால் மற்றவர்கள் மீது பொறுப்பினை சுமத்துவதற்கு தயாராகும் மக்கள் கூட்டத்தின் ஒரு தொகுதியினரை ஏமாற்றுவதும் அலைக்கழிப்பதும் பல அமைப்புக்களுக்கு சாதகமாக அமைகின்றன. உணர்வுபூர்வமான ஒருங்கிணைவையும் ஒருவர் மீதான இன்னொருவரின் பிணைப்பையும் தப்புச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தையும் விடுதலை குறித்த நம்பிக்கைகளையும் முன்வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியப் போலிகள் உள்நுழைவதையும் அவை ஆதிக்கம் செலுத்துவதையும் தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.
ஏனெனில் புலம்பெயர் தமிழர்களின் பெரும் பொருளாதாரத் தளத்தினை இலக்கு வைத்தே அவை வருகின்றன. அந்த வருகை நிச்சயமாக உணர்ந்து கொள்ளப்பட வேண்டியது. இன்னொரு பக்கம், புலம்பெயர் தளத்தில் இயங்கும் அமைப்புக்களில் தங்களை புலமையாளர்களாக காட்டிக் கொள்ளும் தரப்பு மக்களை நோக்கி உண்மையான விடயங்களை முன்வைப்பதற்குப் பதில், விடயங்களின் அளவினை மீறிய காட்சிகளைக் கட்டமைக்கின்றன.
உதாரணமாக, இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் கோரிக்கையொன்றை சர்வதேச ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் போது, அதன் சாத்தியப்பாடுகள், அதன் படிநிலைகள் பற்றி மக்களிடம் தெளிவுபடுத்துவதில்லை. மாறாக, தாம் முன்வைக்கும் விடயங்கள் இறுதியானவைƒ உறுதியானவை என்கிற தொனியை முன்வைத்து மக்களை அதன்போக்கில் இயங்கச் செய்ய காரணமாகின்றார்கள். ஆனால், சர்வதேச சதிராட்டத்துக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகும் போது மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து நிற்கின்றனர்.
விடயமொன்றை முன்வைக்கும் போது அது எடுக்கும் காலம், அது வேண்டிக்கொள்ளும் புலமை – இராஜதந்திர பலம் உள்ளிட்டவை தொடர்பில் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஊடகங்களும் இணையங்களும் நிறைந்து வழிகின்றன என்ற ஒரே காரணத்தினால், அறிக்கைகளினூடு எதையும் சாதித்துவிடலாம் என்கிற முனைப்பினை புலமைத்தளமும் அது சார் அமைப்புகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் கோரி நிற்கின்ற நீதியை சர்வதேச ரீதியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை அவசியமானது. அது தமிழர் அரசியலிலும் விடுதலையிலும் காத்திரமான பங்கினை கோரி நிற்கின்றது.
ஆனால், அதற்கான சாத்தியமான வழிகள் கண்டுணரப்பட வேண்டும். மாறாக, எந்தவித இலக்கும் அடைவும் இன்றி புலம்பெயர் மக்களின் பெருமளவு நிதியும் உழைப்பும் வீண்விரயமாக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனெனில், ஜெனீவாத் திருவிழாக்களில் பங்கெடுப்பதற்காக உலகின் பல பாகங்களிலும் இருந்து பறந்து செல்லும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள், அரசியல்வாதிகளின் செலவுகள் புலம்பெயர் தமிழ் மக்களினால் செய்யப்படுகின்றவை. அவற்றின் பெறுமதி உணரப்பட வேண்டும். அது தொடர்பில் புலம்பெயர் மக்களும் கேள்விகளை எழுப்பி முறையான செயற்றிட்டமொன்றுக்கு அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் தள்ள வேண்டும்.
மாறாக, ஜெனீவா அரங்கிலிருந்து செல்பிகளை எடுப்பதாலோ, கலரிகளை (பார்வையாளர் இருக்கைகளை) நிரப்புவதாலோ, ஏன் அங்கிருக்கும் ஊடகங்களுக்கு உணர்வுபூர்வமாக கருத்துரைப்பதாலோ பெரும் பயன்கள் விளைந்துவிடாது. இவையெல்லாமும் புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதார பலத்தினை உறிஞ்சித் தீர்ப்பதாகவே அமையும். மறுபக்கமாக, புலம்பெயர் தமிழ் மக்களினால் தாயகத்தில் முதலிடப்படும் பெருமளவான நிதி தேவையற்ற விடயங்களில் முடங்கும் சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தாயகத்தின் பொருளாதார, கல்வி, சமூக வளர்ச்சிக்கும், மீள்கட்டமைப்புக்கும் பெருமளவாக பயன்பட வேண்டிய நிதி, கோயில்களிலும் அதன் கோபுரங்களுக்குள்ளும் முடக்கப்படுகின்றன. அதுபோல, மோட்டார் சைக்கிள்களுக்குள்ளும் அதற்கான பெற்றோலுக்குள்ளும் காற்றாய் கலந்து போகின்றன. கலாநிதி ஆய்வு மாணவரான தங்கேஸ் பரம்சோதியின் „புங்குடுதீவு சிதைவுறும் நிலம்… எனும் ஆவணப்படமொன்று அதனை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கின்றது.
முன்னாள் போராளிகளுக்கான தொழில் வாய்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. அதற்கான வழிகள் சாத்தியமாகும் போது அவை அர்த்தபூர்வமானதாக மாறும். மாறாக, நிகழ்வொன்றில் உணர்ச்சியுரை ஆற்றுவதற்காக தென்னிந்தியாவிலிருந்து சீமானையோ, திருமுருகன் காந்தியையோ அல்லது வேறு யாரையோ அழைத்து வந்து கனல் தெறிக்க ‘தமிழீழத்தை அடைந்துவிடுவோம்.
ஆயுதப் போராட்டம் தோற்காது.’ என்பது மாதிரியான நிலைப்பாடுகளில் இயங்குவது வேண்டாத வேலை. அதற்காக முதலிடப்படும் நிதி, கடலிலிட்ட உப்புக்கு சமமாகும். புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிப் பலத்தினை இலக்கு வைக்கும் தரப்புகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு ஒருதரப்பு இன்னொரு தரப்பினை கேள்வி கேட்பதும், காட்டிக் கொடுப்பதும் நாம் கண்டுவருவதுதான்.
அதுவொன்றும் புதியதல்லƒ ஆனால் இவ்வாறான தரப்புகளை அடையாளம் கண்டு விலக்கி வைக்கும் போதுதான் உண்மையான செயற்பாட்டாளர்களும் அமைப்புக்களும் மேல் நோக்கி வர முடியும். இல்லாது போனால் புலம்பெயர் தேசங்களில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களைக் காட்டிக் கொண்டும் புலிக்கொடியை ஏந்திக் கொண்டும் பெரும் வழிப்பறிக் கொள்ளையர்கள் வருவார்கள்.
புலம்பெயர் தமிழ் மக்கள் தமது நிதி எங்கு செல்கின்றது? அதன் பயன்பாடு உண்மையில் சாத்தியமான வழிகளைத் திறக்கின்றதா என்கிற விடயங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அது அமைப்புசார் நிறுவனங்களுக்குள் சேர்ந்தாலும் தாயகத்தில் கொட்டப்பட்டாலும் அவற்றின் பயன்பாடு எப்படியானது என்பதை அறிய வேண்டும். மாறாக, உணர்ச்சியூட்டல்களுக்குள்ளும் வரட்டுக் கௌவரத்துக்குள்ளும் சிக்கி சீரழிவொன்றினை ஏற்படுத்தும் பக்கத்திற்கு சென்று சேரக் கூடாது. அதற்கு அவர்களின் பெரும் உழைப்பும் நிதியும் காரணமாகிவிடக்கூடாது.
Average Rating