புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)
வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது.
தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது.
சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடிந்த தடைகளைப் போட முயற்சிக்கின்றன.
இருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் காணப்படுகின்ற நிலையில் தீர்வு சாத்தியமா? என்ற சந்தேகங்களும் உள்ளன.
இவ்வாறான ஒரு நிலை சந்திரிகா அவர்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைப்பட்டபோது காணப்பட்டது.
1994- 1995 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்தபோது காணப்பட்ட புறச்சூழல்களை சந்திரிகா இவ்வாறு விபரிக்கிறார்.
புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுபவஸ்தர்களை ஈடுபடுத்தாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது. தோல்வியில் முடிவடையும் என எச்சரிக்கைகள் எழுந்தன.
ஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை நோர்வே பல சந்தர்ப்பங்களில் ஈடுபடுத்தியபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. எனவே அவ்வாறான விமர்சனங்களை நான் ஏற்கவில்லை.
பேச்சுவார்த்தைகளை நல்ல நோக்கோடு நடத்துபவர்களை நான் இணைத்தேன்.
ஆனாலும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு புலமை, அனுபவம் எந்த விதத்தில் உதவப்போகிறது?
பிரபாகரனும் நானும் சுமார் 42 அல்லது 43 கடிதங்கள் பரிமாறினோம்.
அதன் மூலம் பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது.
எனவே ஈழத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் வடக்கில் ஏதாவது வேலைகள் செய்யவேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது. அப் பகுதி போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னர் அப் பிரதேசம் கவனிப்பாரற்ற பிரதேசமாக இருந்தது. அம் மக்கள் பிரபாகரனைப் பின் தொடர்வதற்கு அதுவே பிரதான காரணமாக இருந்தது.
எனவே நாம் சாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பாடசாலைகள், மீன்பிடி, துறைமுகம் போன்றவற்றைத் திருத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்தோம்.
இதனை நிறைவேற்ற எங்களை அனுமதிப்பீர்களா? என எனது கடிதத்தில் கேட்டிருந்தேன்.
ஈழம் கிடைத்ததும் நாமே அதனைச் செய்வோம் என பிரபாகரனின் பதில் இருந்தது. அவரைப் பொறுத்த மட்டில் எந்த அரசாங்கமம் எதுவும் செய்யவில்லை என தமிழ் மக்களுக்கு தொடர்ந்து கூறுவதே அவரது நோக்கமாக இருந்தது.
இதனை வைத்தே உங்கள் பிள்ளைகளை என்னிடம் தாருங்கள் என கோர வைத்தது.
அடுத்ததாக நான் பதவிக்கு வந்தது அவருக்கு பெரும் கவலை அளித்தது. பெருமளவு மக்கள் சமாதானத்தைக் கோரி நின்றதால் நானும் அதனை வழங்க தீர்மானித்திருந்ததால் இக் கவலை ஏற்பட்டது.
தமிழ் மக்கள் சலுகைளை எதிர்பார்க்கவில்லை. உரிமைகளையே வேண்டுகிறார்கள்.
மக்கள் பொருட்களை வாங்கும் அங்காடிகளில் சந்திரிகா காப்பு, தாம் வணங்கும் சுவாமி அறைகளில் எனது படங்களை வைப்பது போன்ற நிகழ்வுகள் காணப்பட்டதால் ஏற்பட்ட கவலைகளால் என்னை “ஒரு பேயாகக் காட்டும்” தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.
என்னை அவ்வாறான பேயாக அதாவது நீளமான பற்களுடன், வாயிலிருந்து இரத்தம் கசியும் தோற்றத்துடன் காணப்படும் துண்டுப் பிரசுரங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன.
எனது நடவடிக்கைகள் குறித்து விமர்ச்சிக்கும் சிலர் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்காத பிரபாகரனுடன் நேரத்தை விரயமாக்குவதாக கிண்டலடித்தார்கள்.
பிரபாகரன் தனிநாட்டினைக் கோரிய போதிலும், அதனை நாம் வழங்க முடியாது என்ற நிலையிலும் போரை மிக விரைவாக முடிவுக்கு எடுத்துச் செல்வதே எனது நோக்கமாக இருந்தது.
நாம் தொடர்ச்சியாக அவரது கதவைத் தட்டிக்கொண்டே அம் மக்களின் தேவைகளை உண்மையாக நிறைவேற்றுவதே எதிர்பார்ப்பாக இருந்தது. அவர்கள் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை.
தனி நாட்டினை அல்ல உரிமைகளையே எதிர்பார்த்தார்கள். நாம் அம் மக்களது உரிமைகளை வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது அம் மக்கள் அவரை விட்டு விலகிச் செல்வார்கள்.
இன்று அதுவே யதார்த்தமாக உள்ளது. சந்திரிகா அவர்களின் பயணம் தற்போது அவ்வாறே உள்ளது. ஆனால் அவரிடம் அன்று அதிகாரம் இருந்தது. இன்று செல்வாக்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
தொடரும்…
Average Rating