நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில், பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக் கொள்ளவில்லை..!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -17)
• ஒருநாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது.
• கடைசிக்கட்ட போரில் காயப்பட்டிருந்த பெண் போராளிகள் பலர் பதுங்குக்குழிகளுக்குள் கிடந்தபடி சயனைட்டை அருந்தி மரணித்திருந்தனர்.
• நாம் கிழக்கு மாகாணத்தில் மக்களைச் சந்தித்தபோது, அவர்கள் கொட்டிய பாச உணர்வுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
• “எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே போராடப் போனதுகள். இயக்கத்தை நம்பிப்போன பிள்ளைகளை இயக்கமே சுட்டுக் கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.
தொடர்ந்து……
அதேவேளை சராசரி திருமண வயது கடந்த நிலையிலும், படுகாயமடைந்த நிலையிலும், அங்கவீனமுற்ற நிலையிலும் பல பெண் போராளிகள் திருமணமாகாமல் இருந்தனர்.
இயக்கத்தின் இடைவிடாத வேலைப்பளுவில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த காரணத்தால், தமக்கு வயது போய்க் கொண்டிருக்கிறது என்பதையோ, தமக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வது பற்றியோ சிந்திக்காதிருந்தனர்.
இயக்கம் அவர்களுக்கான பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் ஒரு போராளி என்கிற சமூக அந்தஸ்த்தையும் கொடுத்திருந்தது.
எனக்குத் தெரிந்த பல பெண் போராளிகள் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ந்தும் போராட்டத்தில் பங்களிப்பு செய்யவே விரும்பினார்கள். இந்த விடயத்தில் இயக்கம் அவரவர்களது சுதந்திரத்திற்கு இடமளித்திருந்தது.
போர்க்களங்களில் அதிக அளவு பெண் போராளிகள் செயற்பட்டாலும் பகுதி கட்டளை வழங்கும் அதிகாரிகளாக ஆண் தளபதிகளே இருந்தனர்.
நீண்ட போர் அனுபவம் கொண்ட பெண் தளபதிகளை ஆண் பெண் போராளிகளுக்கான கட்டளை அதிகாரிகளாகத் தலைவர் நியமித்திருந்தார். கேணல் விதுஷா, கேணல் துர்க்கா ஆகியோரது பொறுப்பில் களமுனைப் பகுதிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இப்படியாக விடுதலைப் புலிப் பெண் போராளிகளின் வளர்ச்சி இராணுவ கட்டமைப்புக்குள் ஏற்பட்டிருந்தது.
1992ஆம் ஆண்டு வைகாசி மாதம் யாழ்ப்பாணம் வின்ட்ஸர் தியேட்டரில் விடுதலைப் புலிகளின் மகளிர் முன்னணியினர் பெண்களுக்கான மாநாடு ஒன்றை நடாத்திப் பத்து முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார்கள்.
தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார்கள். அந்தத் தீர்மானங்களில் பிரதானமானது‘சீதனத் தடை‘ பற்றியது.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமல்லாமல் முழுச் சமூகத்தையும் பாதிக்கும் பிரச்சனையாக இருந்து வருவது சீதனம்.
இது தொடர்பான சமூக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ‘தமிழீழ நீதி நிர்வாகப் பிரிவினரின் சட்டவாக்கப் பகுதி‘யால் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற தனிச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் நடைமுறைச் செயற்பாட்டில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகக் கோவைகளுக்குள் தூசு படிந்து, தூங்கிக் கிடந்த சட்டமாகவே ‘சீதனத்(மணக்கொடை)தடைச் சட்டம்’ அமைந்திருந்தது.
பெண் போராளிகள் நீதிபதிகளாகவும் சட்டவாளர்களாகவும் நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவும் ஊடகப்பிரிவுகளான நிதர்சனம், புகைப்படப் பிரிவு, பத்திரிகை, வானொலி ஆகிய துறைகளில் செயல்படுவோராகவும் இருந்தனர்.
பெண் போராளிகளில் பலர் சிறந்த இலக்கியக் கர்த்தாக்களாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு அப்பால் அரசியல், சமூகம் பற்றிய தளங்களில் பரந்து விரிந்த தேடல் உள்ளவர்களாகவும் இருந்தனர்.
ஆனாலும் இயக்கத்தின் போராட்டக் கருத்தியலின் எல்லைக்கு வெளியே செல்லாமல் போராட்டத்தின் நியாயங்களை வலுப்படுத்தும் வகையிலேதான் அவர்களது படைப்பாற்றல்களும் வெளிப்படுத்தல்களும் அமைய முடிந்திருந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கெரில்லா இயக்கம் என்ற நிலையைக் கடந்து மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்கப்பட்டு, இறுதிக்காலக் கட்டங்களில் ஒரு தனிச் சமூகமாகவே உருவாகியிருந்தது.
போராளிகள், அவர்களுடைய குடும்பங்கள், பிள்ளைகள், இயக்கத்தின் பராமரிப்பிலிருந்த முதியோர் (போராளி மாவீரர்களின் பெற்றோர்) செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, மற்றும் புனர்வாழ்வு அமைப்புக்களால் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகள், அனாதரவான நிலையிலிருந்த பெண்கள், முதியவர்கள், மனநிலை பாதிப்புற்ற ஆண் பெண்கள் அத்தனை பேருமே இறுதியில் கைவிடப்பட்டிருந்தனர்.
அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் எதுவுமே இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பெண் போராளிகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
அவரவர்கள் அந்தந்த இடங்களிலேயே தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை.
கடற்புலியணியின் பெண் போராளிகள் சிலர் வெடிமருந்து ஏற்றப்பட்ட வாகனங்களோடும், வெடிமருந்து அங்கிகளோடும் கடற்புலி தளபதி சூசையின் கட்டளைக்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தனர்.
காயப்பட்டிருந்த பெண் போராளிகள் பலர் பதுங்குக்குழிகளுக்குள் கிடந்தபடி சயனைட்டை அருந்தி மரணித்திருந்தனர்.
பல பெண் போராளிகளுக்கு என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல் தத்தமது நிலைகளில் குழப்பத்துடன் நின்றிருந்தனர்.
பொதுவான அறிவித்தல்கள் எதுவுமே வழங்கப்பட்டிருக்கவில்லை.
“இறுதி முயற்சியாகத் தலைவரும் அவருடன் சில தளபதிகளும் நந்திக்கடல் வழியாக வெளியேறும் திட்டத்தில் பெண் போராளி எவரையேனும் இணைத்துக்கொண்டதான தகவல்கள் எதனையும் நான் அறியவில்லை”.
நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்களின் நிலை இன்று சமூகத்தில் எவ்வளவு மோசமானதாக ஆகிவிட்டது?
ஒருநாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது.
வாழ்க்கையின் பொருளாதார நெருக்கடி, போரின் அனுபவங்களால் ஏற்பட்ட மனச்சுமை, சமூகத்தின் அவதூறுகள், பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதில் உள்ள பிரச்சனைகள் எனப் போராடப் போன குற்றத்திற்காகப் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லை கடந்து நீளுகின்றன.
தமிழ்ப் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் சகிப்புத்தன்மையும், துன்பங்களை எதிர்த்து நின்று போராடும் மனோபாவமும், போர்க்களங்களில் கற்றுக்கொண்ட துணிச்சலும் இன்று அவர்கள் தமது வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன.
ஆனாலும் அவர்களது உளவியல் தாக்கங்களையும் சுமந்து கொண்டுதான் அடுத்த சந்ததியும் உருவாகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண் யுத்தக்களத்தில் வயிற்றில் காயமடைந்தவள், அவளுக்காக ஒரு வெளிநாட்டு மணமகனைப் பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்தப் பெண் வயிற்றில் காயமடைந்திருந்த காரணத்தால் அவளது மருத்துவ எக்ஸ்-ரே அறிக்கைகளை ஆராய்ந்த பின்பே அவளை மணப்பதா இல்லையா என்ற முடிவை மணமகன் எடுக்கவிருப்பதாக அறிய முடிந்தது.
ஏனெனில் அவளால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதுவிடின் அவள் ஒரு வாழ்க்கைத் துணையாகவும் ஆக முடியாது. எந்தக் குறை குற்றங்களோடும் ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லாத சராசரியான சமூக மனப்பாங்கானது, களமுனையில் பலத்த காயங்களை அடைந்த போராளிப் பெண்களுக்குக் குடும்ப வாழ்வு அமைவதற்கு எவ்வளவு தடையாக இருக்கிறது.
பெண்கள் போராடப் போனது தவறல்ல, அவர்கள் உயிருடன் மீண்டு வந்ததுதான் தவறானது. இதுதான் முன்னாள் போராளிப் பெண்கள் சந்திக்கும் சமூகப் போர்க்களம். இதில் வெற்றி பெறுபவர்களையும் வீழ்ந்துபோவோர்களையும் கடந்து கொண்டு போகிறது காலம்.
கிழக்கு மண்ணின் நினைவுகள்
2004இன் இறுதிப் பகுதியில் இலங்கையின் கரையோரங்களைத் தாக்கிய சுனாமிப் பேரனர்த்தத்தினால் வடக்கு, கிழக்கின் பல கரையோரக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோயின.
இந்த இயற்கைப் பேரனர்த்தம் நிகழ்ந்தபோது நான் மன்னார் நகர்ப் பகுதியிலிருந்த எமது முகாமில் அரசியல் வேலைத்திட்டம் காரணமாகத் தங்கியிருந்தேன்.
சுனாமியால் காயமடைந்திருந்த பெருந்தொகையான மக்களுக்கு மிக அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து உடனடியாக இரத்தத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பிவைக்கும்படியும் தலைமைப் பீடத்திலிருந்து எனக்கு அறிவுறுத்தல் வந்திருந்தது.
போரின் கொடூரமான பல அழிவுகளை நான் நேரில் கண்டிருந்தாலும், இந்த அளவுக்கு ஆங்காரத்தின் உச்சத்துடன் இயற்கை பொங்கியெழுந்து மக்களைக் காவு கொண்டதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாமலிருந்தது.
எமது உடன் பிறந்தோருக்கு உயிர் பிழைப்பதற்கு இரத்தம் தாருங்கள் என்ற எமது ஒலிபெருக்கி அறிவித்தல்களைச் செவிமடுத்த மக்கள்
தமது இரத்தத்தைத் தானமாக வழங்குவதற்காக மன்னார் பொதுமருத்துவமனைக்குப் பெருந்தொகையாகப் படையெடுத்து வரத் தொடங்கியபோது சக மனிதன் மீதான மானுடத்தின் நேசம் இன்னமும் மடிந்துவிடவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்.
தலைமன்னார் கடலிலும் வழமைக்கு மாறான பெரிய அலைகள் ஏற்படுவதாகக் கரையோர மக்கள் தெரிவித்திருந்தனர்.
நாங்கள் தலைமன்னாருக்குச் சென்று பார்த்தபோது, தூர இடங்களிலிருந்து வந்து வாடிகளில் தங்கியிருந்த சிங்கள, முஸ்லிம் மீனவக் குடும்பங்களின் பெண்களும் குழந்தைகளும் பேரலைகள் ஏற்படுத்திய பயத்தில் உறைந்துபோயிருந்தனர்.
அவர்களைக் கரையோரங்களிலிருந்து அப்புறப்படுத்தி உட்பகுதிகளில் இருந்த பாடசாலைக் கட்டடங்களில் அன்றிரவு தங்கவைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
அடுத்த நாள் நிலைமையைப் பார்த்து அவர்களை என்ன செய்வது எனத் தீர்மானிப்பதாக இருந்தது. கிளிநொச்சிக்கு உடனே வரும்படி எனக்கு அறிவித்தல் வந்திருந்ததால், உடனடியாக விரைந்தேன்.
அரசியல் துறையின் எந்த முகாம்களிலும் போராளிகள் ஒருவர்கூடத் தங்கியிருக்கவில்லை. அனைவரும் வடமராட்சி கிழக்கில் தொடங்கி, முல்லைத்தீவு வரையுள்ள கரையோரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரித மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வேலைகளை ஒழுங்குபடுத்தும் அவசரக் கூட்டமொன்றிற்காக அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. மீட்டெடுக்கப்பட்டவர்களுக்கான தங்குமிடங்களாகப் பாடசாலைக் கட்டடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
அவர்களுக்கான சமைத்த உணவுகள், குழந்தைகளுக்கான பால்மா என்பனவும் உடனடி அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
புலிகள் இயக்கத்தின் படையணிகள் அனைத்தும், மக்களுடன் இணைந்து அசுர வேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தன.
நான் பங்குபெற வேண்டிய கூட்டம் இயக்கச்சி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காரணத்தால் வன்னிப் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த பல அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பிரதேச மக்கள் கட்டமைப்புகளின் உறுப்பினர் களும் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களும் மதகுருமார்களும் ஏ9 நெடுஞ்சாலைக்கருகில் ஒரு மரத்தின் கீழ் ஒன்று கூடியிருந்தனர்.
அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் ரீதியாக எத்தகைய உடனடிப் பணிகளைச் செய்யமுடியும் என அவர்களிடம் கேட்டார் தமிழ்ச்செல்வன்.
மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அவசரமாக வழங்க வேண்டியிருந்த சூழ்நிலையில், சில அரச சார்பற்ற நிறுவனங்கள், தமது வழமையான ஒழுங்குகளுக்கமைய அலுவலகத்திற்குத் திட்டத்தை அனுப்பி அவர்களுடைய பரிந்துரைக்கமையவே செயற்பட முடியும் என்ற கருத்தை முன்வைத்தனர்.
அவர்களுடைய கருத்து அரசியல்துறைப் பொறுப்பாளருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலைமையில் அவசரமும் அவசியமுமான பணிகளை உடனடியாக முன்னெடுக்கக்கூடிய நிறுவனங்கள் மாத்திரம் இங்கிருந்து செயற்படலாம்.
அதை விடுத்து தமது வழமையான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் செயற்பட முடியும் எனக் கருதுகிற நிறுவனங்கள் வெளியேறுவதுதான் நல்லது என அவர் கூறினார்.
அது பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. பல நிறுவனங்கள் உடனடியாகவே தம்மால் முன்னெடுக்கக் கூடியதாயிருந்த வேலைகளின் விபரங்களைத் தெரிவிக்கத் தொடங்கின.
அங்குச் செயற்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்துத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திட்டங்களைச் செயற்படுத்தும் எனத் தீர்மானிக்கப் பட்டது.
பெண்கள் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக, மக்களின் தற்காலிகத் தங்குமிடங்களில் பெண் போராளிகளுடன், மக்கள் பெண் தொண்டர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவுப் பிரதேச மக்களுக்கும் இதே மாதிரியான ஒழுங்குபடுத்தல் கூட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் நடத்தப்பட்டது.
எல்லாக் கூட்டங்களையும் முடித்துக்கொண்டு கிளிநொச்சி திரும்பும் வரையில் எனக்கான தனிப்பட்ட வேலைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படாத காரணத்தால் மறுநாள் மக்களின் தங்குமிடங்களுக்குச் சென்று ஏனைய போராளிகளின் வேலைகளுடன் நானும் இணைந்துகொள்ளுவது என்ற தீர்மானத்துடன் இருந்தேன்.
கிளிநொச்சி சமாதானச் செயலகத்திற்கு வந்து சேர்ந்தபோது மட்டக்களப்பு, அம்பாறை அரசியல் பொறுப்பாளர்களுடனான தொடர்புகள் அதுவரை சரிவரக் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.
அந்த இடங்களுக்கு நேரடியாக ஒருவர் செல்ல வேண்டிய தேவை உணரப்பட்டதால், தமிழ்ச்செல்வன் என்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.
“தமிழினி! நீங்கள் உடனடியாக அம்பாறைக்குப் போக வேணும், கடற்பெருக்கு ஏற்பட்டதோட அங்க தொடர்ச்சியான மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருக்குது.
யாழ்ப்பாணத்திலிருந்து இருபத்தைந்து லொறிகளில் நிவாரணப் பொருட்கள் வந்திருக்குது, அதையும் கொண்டு போகவேணும். ‘ஆமியின்ர ஸ்கொட்’ எடுக்கிறதெண்டால் நீங்கள் காலையில் போகமுடியாது.
தாமதமாகும் . . . அவர்களுக்குத் தெரியாமல் களவாத்தான் போகவேணும், என்னமாதிரி உங்களால் ஏலுமா?” எனது மனம் ஒரு கணமேனும் தாமதிக்கவில்லை.
“ஓம், ஏலும், நான் போறன்.” போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்பு சில தடவைகள் அரசியல் பணி காரணமாக ஏற்கனவே கிழக்கு மாகாணத்திற்குச் சென்றிருந்த அனுபவம் எனக்கிருந்தது.
நான் முதலிரு தடவைகள் சென்றிருந்தபோது, புலிகளின் கருணா அம்மானைச் சந்தித்திருந்தேன். கிழக்கில் நாம் ஏற்பாடு செய்து நடாத்திய பெண்கள் மாநாட்டுக்கும் அவர் பல உதவிகளைச் செய்திருந்தார்.
புலிகள் இயக்கம் பிளவுபட்டதன் பின்னர், கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கை என்ற பெயரிலான ஒரு சகோதர யுத்தமொன்றில் புலிகளின் தாக்குதல் படையணிப் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் கிழக்கு மாகாண மக்களைச் சந்திப்பதற்காக ஒரு சிறப்புப் பரப்புரை அணியாக அரசியல்துறைப் போராளிகள் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு அணியில் நானும் சில பெண் போராளிகளும் சென்றிருந்தோம்.
பளுகாமம், களுவாங்கேணி, கொக்கட்டிச்சோலை, தாண்டியடி, மகிழடித்தீவு, வாகரை, கதிரவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்த அனுபவங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை.
எவ்வளவுதான் துன்ப துயரங்கள் நெஞ்சில் இருந்தாலும், வாசலுக்கு வந்தவர்களை“வாங்க மகள் உட்காருங்க, சாப்பிடுங்க மகள், களைச்சுப் பொயிட்டியள் தண்ணியெண்டாலும் குடிச்சிட்டுப் போங்க புள்ளையள்” என்ற அந்த அன்புக்கு ஈடாக உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது.
இயற்கை எழில் கொஞ்சும் அந்த மண்ணைப் போன்றே மக்களின் இதயங்களில் எளிமையும் அன்பும் நிறைந்தே இருந்தது.
வாகரைப் பகுதியில் பரப்புரை வேலைகளை முடித்துக்கொண்ட எமது அணி கரடியனாறு செல்லப் புறப்பட்டபோது, அந்தப் பிரதேசங்களை நன்கு அறிந்திருந்த நான்கு போராளிகள், எமக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.
அவர்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் யாரும் எதிர்பாராத நிலையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில், ஒரு ஆண் பொறுப்பாளர் உயிரிழந்ததுடன் ஒரு பெண் போராளி பலத்த காயமடைந்தார்.
உயிர் தப்பிய இரண்டு போராளிகளும் காடுகளுக்கூடாகத் தப்பியோடி இறுதியில் எம்மிடம் வந்து சேர்ந்தார்கள்.
அன்றைய நிலையில் வன்னியிலிருந்து போராளிகள் அங்குச் சென்று பணி செய்வது என்பது மிகவும் உயிராபத்தை ஏற்படுத்தும் ஒரு சவாலாகவே இருந்தது.
வன்னிப் போர்க் களங்களில் புலிகள் இயக்கம் பெற்ற பல பாரிய இராணுவ வெற்றிகளுக்குப் பின்னால், கிழக்கு மாகாணப் போராளிகள் எத்தகைய வீர, தீர சாதனைகளையும் அர்ப்பணிப்புக்களையும் செய்திருந்தார்கள் என்பதை மறக்க முடியாது.
நாம் கிழக்கு மாகாணத்தில் மக்களைச் சந்தித்தபோது, அவர்கள் கொட்டிய பாச உணர்வுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
கிழக்கு மாகாணப் போராளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகோதர யுத்தம் எத்தனை வலிகளை அந்த மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது என்பதை நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தபோது ஏற்பட்ட மனத் துயரம் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்குச் சோகமானது.
பல வருடங்களாக எம்முடன் ஒன்றாயிருந்து போரிட்டவர்களின் வாழ்க்கை, பின்பு எமது கரங்களாலேயே முடிவு கட்டப்பட்டபோது, வஞ்சகப் பொறியினுள் அகப்பட்ட பொறுப்பாளர்களின் பலவீனம் காரணமாகவும்,
முதுகில் குத்திய துரோகத்தை என்றும் மன்னிக்க முடியாது எனச் சூளுரைத்து,சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தடம் மாறிய சாதாரண கீழ்நிலைப் போராளிகளுக்குச் சிறு மன்னிப்பேனும் வழங்குவது தமது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் அப்போராளிகள் ஈவிரக்கமின்றி இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட போதும் நாம் மீண்டும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத வஞ்சகப் பொறியினுள் விழவே செய்தோம்.
இக்கொடும் பழிவாங்கலில் உயிரிழந்த தமது பிள்ளைகளின் உடல்கள்கூட தமக்குத் தரப்படவில்லையென அழுது அரற்றிய எத்தனையோ பெற்றோரை ஆற்றுப்படுத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே போராடப் போனதுகள். இயக்கத்தை நம்பிப்போன பிள்ளைகளை இயக்கமே சுட்டுக் கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.
இயக்கம் எமக்குத் தந்திருந்த அரசியல் விளக்கங்களை அந்த அப்பாவிப் பெற்றோருக்கு எப்படிப் புரியவைக்க முடியும்? அந்தச் சூழ்நிலைகள் மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் நிறைந்தவை.
மனதுக்கு மிகவும் கடினமானவை. ஒரு விடுதலைப் போராட்டம் இத்தகைய கட்டங்களையும் கடந்துதான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை ஜீரணித்துக்கொள்வது என்பது எனக்கு மட்டுமல்ல, பல போராளிகளுக்கும் நெருப்பை விழுங்குவதாகவே இருந்தது.
Average Rating