புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் எப்படி எம்.ஜி ஆருடன் மிகவும் நெருக்கமாக ஆனார்?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-1)

Read Time:10 Minute, 40 Second

timthumb (4)Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…
இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை நடத்துவதாக ஜெனீவா தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இருப்பினும் அவ்வாறான விசாரணைகளை சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேற்கொள்வது என்பது அரசியல் ரீதியாக நடைமுறைச் சாத்தியமா? என்பது கேள்வியாக உள்ளது.

பாராளுமன்றப் பலம் எதிர்பார்த்த வகையில் இல்லாமல் இருப்பதும் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் காணப்படுவதும், இனவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுவதும் சில காரணிகளாக உள்ளன.

போர்க்குற்ற விசாரணைகனை வற்புறுத்துவதற்கான காரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குவதும், குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதும், அதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுமாகும்.

இங்கு தண்டனை என்பதை விட குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவது என்பது, இவ்வாறான குற்றம் மீளவும் எழாமல் தடுப்பதும் நோக்கமாகும்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இம் முயற்சிகள் முன்னரும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக நோர்வே நாடு தனது அமைச்சர் எரிக் சோல்கெய்ம் அவர்கள் மூலமாக பல முயற்சிகளை மேற்கொண்டது.

விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரன் அவர்களைச் சந்தித்த முதலாவது வெளிநாட்டவரும், அவர்களது நம்மிக்கைக்குரிய ஒருவருமாக அவர் இருந்தார்.

2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயகா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தார்.

அவ் வாழ்த்துச் செய்தியின்போது இலங்கை அரசிற்கும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான அனுசரணையாளராக நோர்வே நாடு செயற்பட ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்திருந்தார்.

அதுவரையும் அம் முயற்சி இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ் அறிவிப்பு நோர்வே வெளிநாட்டமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆச்சரியத்தை அளித்திருந்தது.

இவ்வாறு ஆரம்பித்த முயற்சிகள் 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்றமடைந்தது. இதற்கிடையில் போர் நிறுத்தத்தினை மேற்பார்வை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இரு சாராரும் ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்திய அதேவேளை போருக்கான தயாரிப்புகளையும் மேற்கொண்டிருந்தார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தினையும் பல தடவை மீறினார்கள்.

இக் காலகட்டத்தில் நடந்த பல சந்திப்புகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள், பங்குபற்றியோரின் தனிப்பட்ட குணாம்சங்கள், அவதானிப்புகள் என பல உள்ளன.

இலங்கை அரசு சமாதானத்தில் இறங்கியுள்ள இச் சமயத்தில் ஏற்கெனவே இடம்பெற்ற சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை அறிவது மிக முக்கியமானது.

அதுவும் மிகவும் நேரடியாகவே ஈடுபட்ட ஒருவரின் வாக்குமூலம் குறிப்பாக பேச்சுவார்தைகளின் பெறுபேறுகளை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்த அவர் அந் நாடுகள் இப் பிரச்சனையில் கொண்டிருந்த ஆர்வத்தின் பின்புலங்களை நாம் அறிவது மிகவும் தேவையாக உள்ளது.

ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்தை முன்மொழிந்த இலங்கை அரசு, அதனை நிறைவேற்றுதில் முனைந்துள்ளது.

தேசிய இனப் பிரச்சனையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தலையிட்டு நியாயமான விதத்தில் தீர்க்கும் என்ற நம்பிக்கை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மத்தியிலும் காணப்படுகிறது.

இவ்வாறு அந்நிய நாடுகளை நம்பி தேசிய இனப் பிரச்சனையை எடுத்துச் செல்வது நம்பிக்கை அளிக்கும் அணுகுமுறையா? அல்லது சர்வதேச அரசுகளின் நலன்களுக்கான போராட்டங்களில் தமிழ் அரசியல் தலைமை சிக்குண்டுள்ளதா?

சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் இலங்கை அரசுடன் தேசிய இனப் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியுமா? இன்னொரு தடவை ஏமாற்றம் அடைய வாய்ப்பு உண்டா? என்ற பல கேள்விகள் உள்ளன.

இவற்றினை நோர்வே அனுசரணையாளராக செயற்பட்ட எரிக் சோல்கெய்ம் அவர்கள் மூலமாக அறிவது அவசியமானது.

எரிக் சோல்கெய்ம் அவர்கள் Mark Salter என்பவருடன் இணைந்து TO END A CIVIL WAR என்ற நூலை வெளியிட்டுள்ளனர்.

அந் நூலிலிருந்து சில முக்கியமான விபரங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்.

சுமார் 550 பக்கங்களைக் கொண்ட இந் நூலிலிருந்து இன்றைய சமாதான முயற்சிகளுடன் இணைத்து நோக்கும் வகையில் வாராவாரம் தொகுத்து வழங்க உள்ளேன்.

வாசகர்களின் அபிப்பிராயங்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம். 1

வரலாற்றின் பக்கங்களை நாம் பார்ப்பதானால் சில திருப்புமுனைச் செய்திகளிலிருந்து அதாவது இடைநடுவிலிருந்து ஆரம்பிக்க முடியாது. அது ஒருவேளை பரபரப்பான செய்திகளை வெளியிட உதவலாம்.

ஆனால் பிரச்சனைகளின் தாற்பரியத்தை அறிய உதவாது.

எரிக் சோல்கெய்ம் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு இருந்த ஆதரவுத் தளங்கள் குறித்து தனது அவதானிப்பை வெளியிடுகையில் குறிப்பாக:

தமிழ் நாட்டில் அப்போதிருந்த முதலமைச்சர் MG ராமச்சந்திரன் அவர்களின் ஆதரவு குறித்து தெரிவிக்கையில்,

தமிழ் நாட்டில் MGR அவர்கள் தமிழ் நாட்டின் ரொனால்ட் றீகன் (Ronald Regan முன்னைய நடிகராக இருந்து பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானவர்) எனக் கருதப்பட்டார்.

MGR அவர்கள் பிரபாகரனை தனக்கு மிக மிக நெருக்கமானவராக ஏற்றுக்கொண்டு விடுதலைப்புலிகளுக்கு பாரிய உதவிகளைச் செய்தார்.

ஒரு சமயம் பாலசிங்கம் அவர்கள்: எவ்வாறு பிரபாகரன் எம்.ஜி ஆருடன் மிக நெருக்கமாக ஆனார்? அதன் காரணமான கிடைத்த பெரும் தொகையான பணம் போன்ற விபரங்களைத் தெரிவித்திருந்தார்.

ஒரு சமயம் தி மு க தலைவர் கருணாநிதி அவர்கள் சகல தீவிரவாத இயக்கங்களையும் அழைத்திருந்ததாகவும், ஆனால் அவ் அழைப்பினை விடுதலைப்புலிகள் தற்செயலாக நிராகரித்திருந்ததாகவும், இச் செய்தி MGR அவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துவிட்ட நிலமையில் மறுநாள் தாம் அழைக்கப்பட்டதாகவும் அப்போது பாலசிங்கம், பிரபாகரன் இருவரும் சென்றுள்ளனர்.

அச் சந்திப்பின்போது பிரபாகரன் சில மில்லியன் ருபாய்களைக் கோரியபோது அது மிகச் சிறிய தொகை, போதாது எனக் கூறி தனது புத்தக அலுமாரிக்குச் சென்று பல கட்டுகள் பணத்தை எடுத்து பிரபாகரனின் கரத்தில் திணித்தார்.

அத் தொகை பிரபாகரன் கேட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமானமாகும். அதனைத் தொடர்ந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு சென்னை துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்ட போது அதனை வெளியில் பொலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் வைப்பதற்கும் அவர் உதவியிருந்தார்.

தமிழ் நாட்டில் காணப்படும் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு இந்திய மத்திய அரசிற்கு மிகவும் அச்சுறுத்தலாகவே இருந்தது.

தமிழ்நாடு அரசினால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மிகவும் பாரதூரமான ஆதரவை வழங்க முடியும் என்பதை இலங்கை அரசும் புரிந்து கொள்ளும் என்றே நாம் கருத வேண்டும்.

இப் பின்னணியிலிருந்தே இந்திய மத்திய அரசின் போக்குகளையும் அவதானிக்க வேண்டும்.

தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாக்பூர் ஆஸ்பத்திரியில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை..!!
Next post சாலாவ முகாம் அனர்த்தம்: விதியா, சதியா? -கே.சஞ்சயன் (சிறப்புக் கட்டுரை) -VIDEO-