பக்ரைனில் தீவிபத்து நடந்தது எப்படி? நெஞ்சை உருக்கும் தகவல்கள்
பக்ரைன் நாட்டில் நடந்த தீவிபத்தில் பலியான அனைவருமே தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தீவிபத்தின் போது ஏற்பட்ட புகையால் மூச்சு திணறி பலியாகியுள்ளனர். காற்றோட்டமே இல்லாத அறையில், சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியா அருகே 30 க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்ட பணக்கார நாடு பக்ரைன். குவைத் நாட்டை போல் எண்ணெய் வளமிக்க இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். பலர் எண்ணெய் கிணறுகளிலும், இன்னும் பலர் கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அங்குள்ள குடாபியா பகுதியில் ராயல் டவர்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் கட்டுமான கம்பெனி உள்ளது. இதில் 350 க்கும் மேலான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் மூன்றடுக்கு குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.
சம்பவ தினமான நேற்று காலை 5 மணியளவில் இந்த குடியிருப்பில் மின்கசிவு காரணமாக கட்டடத்தின் 2 வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த 2 வது மாடி பகுதியைத்தான் தொழிலாளர்கள் தங்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்த 2 வது மாடியில் காற்றோட்டம் இல்லாத காரணத்தாலும் சுகாதாரக்கேடு நிலவியதாலும் தீவிபத்தால் ஏற்பட்ட புகை அந்த பகுதியையே சூழ்ந்தது. இதனால் 16 இந்தியர்கள் மூச்சுத்திணறி பலியானதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவித்தன.
பின்னர், பலியான அனைவரும் தமிழர்கள் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் பற்றி கூறிய பக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சகம் தீவிபத்தால் ஏற்பட்ட புகையால்தான் 16 பேரும் மூச்சுத்திணறி பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும், 196 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இதுகுறித்து கேள்விப்பட்டதும் மனாமாவிற்கான இந்திய தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி பக்ரைன் பிரதமரோடு சென்று சம்பவ இடத்தை பார்த்தார். காயமடைந்த 7 பேரும் கார்பன் மோனாக்ஸைடு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தீப்பிடித்த போது அதில் இருந்து தப்பிப்பதற்காக ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஒருவர் மாடியில் இருந்து குதிக்க முயன்றார். இதில் அவரது கை எலும்பு முறிந்து போனது. இருப்பினும் காயமடைந்த அனைவரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்தார்.
சம்பவத்தில் பலியானவர்களும் சரி…, காயமடைந்தவர்களும் சரி… அனைவருமே தமிழர்கள். இவர்கள் ராயல் டவர் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்றும் இந்திய தூதர் தெரிவித்தார்.
ராயல் டவர் நிறுவனத்திற்கு பக்ரைன் அரசு கடந்த ஜனவரி மாதம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாம். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சரியில்லை என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தும், இந்த நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இந்திய தூதர் வருத்தத்தோடு தெரிவித்தார்.
மேலும் இங்கு இந்திய தொழிலாளர்கள் வாழுகின்ற நிலைமை மிக மோசமானது. சுகாதாரமற்ற, காற்றோட்டமே இல்லாத அறைகளில் அவர்கள் வாழ்கிறார்கள். அறைகளில் அளவுக்கு அதிகமான ஆட்களை தங்க வைத்துள்ளனர் என்றும் இந்திய தூதர் தெரிவித்தார்.
பலியானவர்களின் பட்டியல் கிடைக்க பெற்றதும் அவர்களது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிப்போம் என்றும் அவர் சொன்னார். சம்பவம் நிகழ்ந்த 3 மாடி குடியிருப்பில் 218 பேர் இருந்ததாக போலீசாரும், 350 பேர் இருந்ததாக ஊழியர்களும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பக்ரைன் நாட்டு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழக்கூடாது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுங்கள் என தமது மூத்த அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ஆம்புலன்சுகள் அங்கு விரைந்தன. அதிகாரிகளும் போலீசாரும் அங்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் இன்னும் 2 நாட்களில் தமிழ்நாடு வந்து சேரும் என தெரிகிறது. பலியான அனைவரும் தமிழர்களாக இருப்பதால் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தனர். தங்களது இரங்கலையும் தெரிவித்தனர்.