திட்டக்குடி அருகே லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை..!!
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள திருவாக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). லாரி டிரைவர்.
இவர் விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்றார்.
அங்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை இறக்கி விட்டு நேற்று இரவு விழுப்புரத்துக்கு லாரியில் புறப்பட்டார்.
அதிகாலை 2 மணி அளவில் லாரி கடலூர் மாவட்டம் திட்டக்குடி வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது 4 மர்ம மனிதர்கள் லாரியை வழிமறித்தனர். ராஜேந்திரன் லாரியை நிறுத்தினார். உடனே அந்த மர்ம மனிதர்கள் லாரிக்குள் பாய்ந்து ஏறினார்கள். ராஜேந்திரனை கண்மூடித்தனமாக தாக்கினர். அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அவர் பணத்தை தர முடியாது என்று மர்ம மனிதர்களுடன் போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜேந்திரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றனர். பின்னர் லாரியில் இருந்து அவரை கீழே இறக்கி அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் வீசினர்.
பின்னர் லாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த மர்ம மனிதர்கள் தப்பி சென்று விட்டனர். அந்த பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு அந்த வழியாக வந்த பொதுமக்கள் ராஜேந்திரன் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பார்வையிட்ட னர். லாரியில் இருந்த பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தன.
வயல் பகுதியில் கிடந்த ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ராமகிருஷ்ணன், ராஜேஷ், ரவிச்சந்திரன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
இதே பகுதியில் நேற்று நள்ளிரவு வேப்பூர் சேப்பாக்கம் வழியாக வந்த மற்றொரு லாரியையும் மர்ம மனிதர்கள் வழிமறித்து உள்ளனர்.
லிப்டு கேட்டு ஏறிய அவர்கள் லாரி டிரைவரை தாக்கி அவரிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த லாரி டிரைவர் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
எனவே இந்த கும்பல்தான் லாரி டிரைவர் ராஜேந்திரனை கொலை செய்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பழைய குற்றவாளிகள் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே பகுதியில் சிவகங்கை மாவட்டம் திருவாடானை மணக்குடி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் லூயிஸ் லாரன்ஸ் (வயது 40) என்பவரையும் மர்ம மனிதர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக லூயிஸ் லாரன்ஸ் கூறியதாவது:–
நான் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டை களை ஏற்றிக்கொண்டு லாரியில் திருவண்ணா மலை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
இரவு திட்டக்குடி அருகே உள்ள வேப்பூர் என்ற பகுதியில் வந்த போது 4 வாலிபர்கள் வழிமறித்தனர். தங்களது லாரி சேப்பாக்கம் அருகே பழுதாகி நிற்கிறது. அங்கு செல்ல வேண்டும். உங்கள் லாரியில் நாங்கள் வருகிறோம் என்றனர்.
அவர்கள் கூறியதை நான் நம்பினேன். 4 பேரையும் லாரியில் ஏற்றிக் கொண்டேன். லாரி சேப்பாக்கம் அருகே வந்த போது 4 பேரில் ஒருவன் திடீரென்று என்னிடம், நான் வைத்திருக்கும் பணத்தை தரும்படி கேட்டான். நான் மறுத்தேன். உடனே அவன் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான்.
பின்னர் நான் பையில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டான். நான் தடுக்க முயன்ற போது என்னை தாக்கினான்.
இதையடுத்து லாரியை நிறுத்த சொன்னான். உடனே நான் லாரியை நிறுத்தினேன். லாரியில் இருந்து 4 பேரும் கீழே இறங்கி விட்டனர்.
அதன் பின்னர் நான் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு லாரியுடன் வந்து புகார் செய்தேன். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் மர்ம வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
என்னை தாக்கி பணத்தை பறித்த வாலிபர்களுக்கு 20 வயது இருக்கும். நான் அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் இருந்திருந் தால் அவர்கள் என்னை யும் கொலை செய்து இருப் பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating