இஸ்ரேல் தாக்குதல்: 21 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

Read Time:4 Minute, 14 Second

Israel.flag1.jpgதெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் பிடித்துச் சென்ற 2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்பதற்காக கடந்த 3 வாரங்களாக லெபனான் மீதும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேலியப் படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலில் இதுவரை 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனான் சுடுகாடாக மாறியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் லெபனானில் பரிதவித்து வருகின்றனர். புகலிடம் தேடி ஓடி வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு 4 ஐ.நா. பார்வையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்துத் தாக்கி வருவதாக இஸ்ரேல் கூறினாலும் இறந்தவர்கள் பெரும்பாலும் அப்பாவி மக்களே.

இதனால் ஐ.நா. சபை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இஸ்ரேல் உடனடியாக தனது போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை பலமுறை கோரியும் கூட அதை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது இஸ்ரேல். லெபனான் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், தனது தாக்குதலை சற்றும் தளர்த்திக் கொள்ளாமல் மேலும் மேலும் தீவிரப்படுத்திவருகிறது.

இந்த நிலையில் இன்று தெற்கு லெபனானில் உள்ள க்வானா என்ற கிராமத்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. ஒரு 3 மாடிக் கட்டடம் பாதியளவு சேதமடைந்தது. இந்தக் கட்டடத்தில் 100 பேர் வரை வசித்து வந்தனர்.

இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 21 பேர் குழந்தைகள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர். ஐ.நா. கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக 3 நாட்களுக்கு சண்டையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

தற்காலிகமாக போரை நிறுத்துவது நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும். இது ஒரு மனிதாபிமான செயலாகவும் கருதப்படும். சர்வதேச படையை இரு நாட்டு எல்லைகளிலும் நிறுத்த இது உதவும். பேச்சுவார்த்தைக்கும் வழி வகுக்கும் என்று அன்னான் தெரிவித்தித்திருந்தார்.

ஆனால் இந்தக் கோரிக்கையை இஸ்ரேல் பரிசீலனை கூட செய்யாமல் ஒரேயடியாக நிராகரித்து விட்டது. ஐ.நா. வேண்டுகோளை ஏற்க முடியாது. இப்படிச் செய்தால் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்களது பலத்தை பெருக்கிக் கொண்டு விடுவார்கள் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மெயர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுப் பதிவு விறுவிறு!
Next post பஹ்ரைன் தீவிபத்து: விழுப்புரம், பெரம்பலூர் தொழிலாளர்கள் 17 பேர் பலி உடல்கள் சென்னை வருகின்றன!