இரண்டாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம்.. சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 73) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் உள் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன.
ரெலோ, புளொட் இயக்கங்கள் மீது புலிகள் தடைவிதித்திருந்தனர்.
புலிகள் அமைப்பினரோடு முரண்பட்ட கருத்துக்கொண்டவர்கள் மத்தியில் தமது குரல்வளைகளும் நசுக்கப்படலாம், மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாத சூழல் தோன்றலாம் என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டது.
விஜிதரன் கடத்தப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்களது பாத யாத்திரைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, விஜிதரன் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் மிரட்டப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் அந்த அச்சத்தை நியாயப்படுத்தின.
அதனால், புலிகள் அமைப்பினருக்கு சமமான இன்னொரு இயக்கம் இருந்தாக வேண்டும். அப்படியானால்தான், ஒரு இயக்கம் வைப்பது சட்டம் என்ற நிலை ஏற்படாது என்பது போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த புத்திஜீவ்களது கருத்தாக இருந்தது.
ஜனநாயகத்தோடு இணைந்திருக்கும் போராட்டமே எமக்குத் தேவை. தனி ஒரு இயக்கம் இருந்தால் ஜனநாயக மறுப்புச் சூழல் தோன்றலாம் என்று அவர்கள் கருதினார்கள்.
அவ்வாறு கருதியவர்கள் புலிகளுக்கு சமமான அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பு உள் பிரச்சனைகளுக்குள் சிக்கியிருந்தது.
இயக்கத்திற்குள் இரகசிய உட்கொலைகள், உள் பிரச்சனைகளை ஆயுதத்தால் தீர்க்க முயலாத தன்மை போன்றவை இல்லாத ஒரே ஒரு அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். தான் இருந்தது.
இரண்டாகிய இயக்கம்
ஆனால், 1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள்ளும் உள் பிரச்சனைகள் ஆயுத முனையில் தீர்க்கும் நிலை தோன்றியது.
கடத்தல்
பத்மநாபாவின் உத்தரவுப்படி ரமேஷ் கடத்தப்பட்டார். ரமேஷ் வெளியே இருக்கும் வரை பத்மநாபா அணியினரின் முடிவுகளை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தன.
டக்ளஸ் தேவானந்தா அப்போது தமிழ்நாட்டில் இருந்தமையால், யாழ்ப்பாணத்தில் அவரது அணியைச் சேர்ந்த ரமேஷ் அகற்றிவிட்டால் போதும் இயக்க பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்பதுதான் பத்மநாபாவின் திட்டமாக இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் எவருமே தமது இயக்கத்திற்குள் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நினைத்திருக்கவில்லை.
அவ்வாறான திட்டம் பத்மநாபாவுக்கு இருப்பதாக தெரிந்திருந்தாலோ, அப்படியும் நடக்கும் என்று ஊகித்திருந்தாலோ டக்ளஸ் தேவானந்தா அணியினர் முந்திக் கொண்டிருப்பார்கள்.
ரமேஷ் கடத்தப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. சிறுப்பிட்டியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் அத்தியடியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகம் வரை சென்றது.
அதே நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் தமது ஆயுதங்களை யாழ்-பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கப் போவதாக அறிவித்தனர்.
ரமேஷ் விடுவிக்கப்படுவார் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். மத்திய குழு சார்பாக சேகர் உறுதியளித்து, அந்த முயற்சியை நிறுத்தச் செய்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக கபூர் என்னும் பாலசுப்பிரமணியத்தை பத்மநாபா நியமித்தார்.
ரமேஷ் கடத்தப்பட்டதுக்குப் பதிலாக கபூரை கடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் விடுதலைப் படை உறுப்பினர்கள் திட்டமிட்டனர்.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து ரமேஷ் விடுதலை செய்யப்பட்டார்.
கொலைத்திட்டம்
கடத்தல் நடவடிக்கைக்கு பதிலடியாக பத்மநாபாவின் அணியைச் சேர்ந்த மூன்று முக்கியஸ்தர்களைத் தீர்த்துக்கட்ட திட்டமிடப்பட்டது.
யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். தளபதியாக பத்மநாபாவால் நியமிக்கப்பட்ட கபூரை மானிப்பாயில் வைத்து தீர்த்துக்கட்டும் பொறுப்பு இப்ராகிம் என்றழைக்கப்படும் சிவகாந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் விடுதலைப்படை உளவுப்பிரிவுக்கு இப்ராகிம்தான் பொறுப்பாளராக இருந்தார்.
கபூரின் முகாமில் இருந்த உளவுப்பிரிவு ஆள் முலமாக கபூரின் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டன.
உரும்பிராயில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்திற்கு இரவோடு இரவாக குண்டு வீசுவதற்கு அலுவலகம் அருகே இருந்த வீடொன்றில் கைக்குண்டுகளையும் கொண்டு சென்று வைத்திருந்தனர்.
தான் திரும்பிவரும் வரையும் பதில் நடவடிக்கை எதிலும் ஈடுபடவேண்டாம் என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார் டக்ளஸ் தேவானந்தா.
தமது இயக்கத்திற்குள்ளும் ஆயுதமோதலுக்கு உரிய சூழல் உருவாகிவிட்டதை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் பலர் ஒதுங்கத் தொடங்கினார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் பிரசார பீரங்கி என்று சொல்லப்பட்ட டேவிற்சன் இயக்கத்தை விட்டு விலகிச் சென்றார்.
யாழ்-மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏற்றிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா அணியினரிடமிருந்து யாழ் மாவட்ட தலைமைத்துவம் பத்மநாபா அணியினரின் கைக்குச் சென்றது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் ஏற்பட்டுக்கொண்டிருந்த பிரச்சனைகளை புலிகள் அமைப்பினர் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு
1986 நவம்பர் மாதம் தீபாவளி தினத்தன்று தமிழ் நாட்டில் சென்னை-சூளைமேட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சூளைமேட்டில் தான் டக்ளஸ் தேவானந்தா தனது பாதுகாவலர்களுடன் தங்கியிருந்தார்.
தீபாவளி தினத்தன்று காலையில் அருகிலுள்ள தேநீர் கடைக்குச் சென்றனர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்கள்.
தீபாவளியை முன்னிட்டுடு போதையில் நின்ற சிலர், அவர்களை உரசிக் கொண்டு சென்றனர். தாமே உரசிவிட்டு, “ஏனடா நம்மீது மோதினீர்கள்? சிலோன்காரன் எண்டால் திமிரு வருமாடா?” என்றனர்.
வாய்த் தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. அதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி அரிவாள்கள், கத்தி, பொல்லுகள் சகிதம் ஒரு கும்பல் வந்தது.
“சிலோன்காரன் எல்லாம் வெளியேவா” என்று கூச்சலிட்டபடி கற்களை வீசினார்கள்.
அப்போது டக்ளஸ் தேவானந்தா வீட்டில் இருக்கவில்லை. கோடம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் இருந்தார்.
சூளைமேட்டில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அவருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டது.
உடனடியாகப் பெறப்பட்டு அவர் சூளைமேட்டுக்கு வருவற்கிடையில் பிரச்சனை பெரிமாகிவிட்டது.
வீட்டுக்கூரைமீது ஏறிய சிலர் கூரையை உடைத்து உள்ளே மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். “வீட்டோடு சேர்த்து எல்லோரையும் கொளுத்துங்கடா” என்று கும்பலில் ஒருவர் கூச்சல் போட்டார்.
இனியும் வீட்டுக்குள் இருந்தால் உயிர் தப்ப முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
கும்பலில் பலர் போதையில் இருந்தமையால் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னரும் அவர்களுக்கு விபரீதம் புரியவில்லை.
சூடு விழுந்தது.
கும்பலில் ஒருவர் காட் போர்ட் மட்டையை மார்புக்கு கவசமாக பிடித்தபடி “எங்கே சுடுங்கடா பார்க்கலாம்” என்று ஓடி வந்தார்.
அந்த நேரம் பார்த்து டக்ளஸ் தேவானந்தா மோட்டார் சைக்கிளில் வந்து இறங்க, கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது.
கும்பலில் இருந்து அவரை மீட்க ஓடி வந்த பாதுகாவலர்களில் ஒருவரது துப்பாக்கயை கும்பலில் இருந்த ஒருவர் பறிக்க முற்பட, வெடி தீர்ந்தது. பறிக்க முற்பட்டவர் சுருண்டு வீழ்ந்தார்.
டக்ளஸ் தேவானந்தாவும், அவரது பாதுகாவலர்களும் அருகிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சென்று நின்று கொண்டனர்.
பொலிஸ் அதிகாரி ஸ்ரீபால் தலைமையில் பொலிசார் வந்தனர். “மொட்டை மாடிக்கு வர வேண்டாம். வந்தால் சுடுவோம்” என்றனர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்கள்.
“பொலிஸ் அதிகாரி தேவாரம் வந்தால் அவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கலாம்” என்றார் டக்ளஸ் தேவானந்தா.
பின்னர் தேவாரம் வந்தார். தனியாக மொட்டை மாடிக்குச் சென்று டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார். அவரிடம் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் இருந்த பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து பத்மநாபா ஓர் அறிக்கையை விடுத்தார்.
“டக்ளஸ் தேவானந்தாவும் அவரோடு இருந்தவர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்” என்று அறிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கு மத்தியில் அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.
பத்மநாபா சொன்னார்: “தமிழக மக்களிடம் அதிருப்தி ஏற்படாமல் இருக்கத்தான் அப்படி அறிவித்தோம். அவர் வெளியே வந்த பின்னர் இயக்கத்தில்தான் இருப்பார்.”
புலிகளின் முடிவு
இதேவேளை, சூளைமேட்டு சம்பவம் பத்மநாபா அணியினரின் தூண்டுதலால் நடைபெற்றது என்று டக்ளஸ் தேவானந்தா அணியினர் சொல்லத் தொடங்கினர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான “சற்றர்டே ரிவீயூ” (ளுயுவுருசுனுயுலு சுநுஏஐநுறு) பத்திரிகையில் “சூளைமேட்டு சம்பவத்தின் சூத்திரதாரி யார்?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
அது ரமேஷால் எழுதப்பட்டு கவிஞர் சேரனால் வெளியிடப்பட்டது.
‘டக்ளஸ் தேவானந்தாவை விடுதலை செய்’ என்று யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. அதனை பத்மநாபா அணியினர் சில பகுதிகளில் கிழித்தனர்.
கிழித்துக் கொண்டிருந்த ஒருவர் டக்ளஸ் தேவானந்தா அணியினரால் தாக்கப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் மோதல் வெளியேயும் தெரியத் தொடங்கியது.
அந்த நேரத்தில் தான் புலிகள் முடிவு செய்தார்கள்.
“ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் தடை செய்ய இதுதான் நேரம்.”
Average Rating