பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்ட 9 மாணவர்கள் யாழில் கைது…!!
யாழ். இணுவிலில் கோயில் வீதியில் வைத்துப் பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 9 பேரைப் பொலிஸ் விசேட அணி அதிரடியாகத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளது. அத்துடன், நுணுக்கமாக மறைத்து வைத்திருந்த வாள்கள், கைக்கோடரி, இரும்புக் கம்பிகள், செயின் என்பவையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், விசேட பொலிஸ் அணியினர் அதிரடியாகக் களத்தில் இறங்கி இவர்களைத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளனர்.
இதனால் கோயிலில் இடம்பெறவிருந்த பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இணுவிலில் ஓட்டோ ஒன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டோ பிறிதொரு வாள்வெட்டுக் கும்பலினுடையது என்று சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில், இணுவில் முதலி கோயிலின் முன்பக்க வீதியில் பாடசாலை மாணவர்கள் 9 பேர் அடங்கிய வாள்வெட்டுக் கும்பல் நின்றுள்ளது. அங்கு வைத்தே பிறிதொரு சாரார் மீது வாள்வெட்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தநேரம் விசேட பொலிஸ் குழு அவதானிப்புக்காக அந்த இடத்துக்குச் சென்றிருந்தது. அந்தக்குழு பொலிஸ் நிலையம் ஒன்றைச் சேர்ந்த குழு அல்ல. பல பொலிஸ் நிலையங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் அணி.
இந்த விசேட பொலிஸ் அணி குறித்த வாள் வெட்டுக் கும்பலை கைது செய்ய முற்பட்டுள்ளது. அவர்கள் செல்வதனைக் கண்ட வாள்வெட்டுக் குழுவினர், அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால், பொலிஸ் விசேட குழுவினரும் விடவில்லை. நீண்ட தூரத்துக்குத் துரத்திச் சென்று முதலில் 6 பேரைக் கைது செய்தனர். அவர்கள் முதலி கோயில் முன்பாகவுள்ள பெரியதொரு மரத்தின் கீழும், அதற்கு அருகேயுள்ள காணியிலும், அவர்கள் தங்கியிருந்து தமது திட்டங்களைப் போட்டு செயற்படுத்தி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு விசாரணை மற்றும் அவதானிப்பின் போது, அவர்கள் தலைக்கவசங்களை அருகருகே வைத்து நுணுக்கமாக வாள், இரும்புக் கம்பிகள், கைக்கோடரி என்பனவற்றை மறைத்து வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. அத்துடன், மோட்டார் சைக்கிளிலும் நுணுக்கமாக வைக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கும்பலில் மேலும் 3 பேர் வேகமாக ஓடி ஓரிடத்தில் மறைந்திருந்துள்ளனர். அவர்கள் வெளியே வரும் வரைக்கும் பொலிஸ் விசேட குழு மணித்தியாலக் கணக்கில் அப் பகுதியில் மறைந்திருந்துள்ளது. பின்னர் அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பியோடியபோது, அவர்களைப் பாய்ந்து பிடித்துள்ளனர் விசேட பொலிஸ் குழுவினர்.
இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது விசேட பொலிஸ் குழு என்பதனால், அவர்கள் தமக்கு வசதியான பொலிஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை ஒப்படைத்து காலவரையின்றித் தடுத்து வைத்துச் சட்ட நடவடிக்கை எடுக்குமளவுக்கு விசேட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு வைத்து கடும் விசாணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதன்போதே அவர்கள் வாள்வெட்டுக்களில் ஈடுபடும் பெரிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டகள் இணுவில் முதலி கோயிலடி, அதற்கு முன்பாகவுள்ள சேர்ச் லேன், மானிப்பாய், ஆனைக்கோட்டை, சுதுமலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், மானிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமையை இணுவிலிலுள்ள பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 9 பேரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது அவர்களை மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Average Rating