காதலியை ஏன் கொன்றேன்? காதலன் வாக்குமூலம்…!!
வயது குறைந்தவன் எனக்கூறி திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை கொன்றதாக காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோதினி (வயது 23). பி.காம் பட்டதாரி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் வீட்டில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், காஞ்சீபுரம் அருகே உள்ள நன்மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த கார்பெண்டர் தமிழ் செல்வனுக்கும் (18) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
தமிழ்செல்வன், காதலியிடம் தான் வயது குறைந்தவர் என்பதை கூறாமல் மறைத்தார். வயது வித்தியாசம் குறித்து வினோதினிக்கு தெரியவந்ததும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர் தமிழ்செல்வனை சந்திப்பதை நிறுத்தினார்.
காதல் விவகாரம் குறித்து தெரிந்ததும் வினோதினியை பாரிமுனை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு உறவினர்கள் அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் உள்ள டெய்லர் கடைக்கு சென்று வருவதாக வினோதினி கூறி சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இதற்கிடையே வணிக வளாகத்தில் உள்ள கழிவறையில் உடலில் காயத்துடன் வினோதினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ், சப்– இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் போலீசார் விரைந்து வந்து வினோதினி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, காதலன் தமிழ்செல்வன் அவரை கொன்று இருப்பது தெரிந்தது.
இதையடுத்து நன்மங்கலத்தில் பதுங்கி இருந்த தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
வினோதினி வேலை பார்த்த நிறுவனத்தில் கார்பெண்டர் வேலைக்கு சென்ற போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் காதலித்தோம். வினோதினியை விட எனக்கு 5 வயது குறைவு. இதனை நான் மறைத்து காதலித்தேன். வயது வித்தியாசம் பற்றி தெரிந்ததும் வினோதினி என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இது குறித்து கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வடக்கு கடற்கரை போலீசிலும், கடந்த வாரம் திருவல்லிக்கேணி மகளிர் போலீசிலும் அவர் புகார் கூறினார். போலீசார் என்னை எச்சரித்து அனுப்பி இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோதினிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அவளிடம் பேச அழைத்த போது வர மறுத்தாள். எனவே நான் வாங்கி கொடுத்த செல்போனை திரும்ப தரும்படி கூறி வரவழைத்தேன்.
வணிக வளாகத்தில் நாங்கள் பேசிக் கொண்டு இருந்த போது என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோதினியிடம் கூறினேன். அவள் மறுத்து வயது வித்தியாசத்தை கூறி திட்டி தாக்கினாள். ஆத்திரம் அடைந்த நான் வினோதினி கழுத்தை நெறித்து கொன்றேன்.
பின்னர் உடலை அங்குள்ள கழிவறையில் வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வினோதினி கொலை செய்யப்பட்டது பற்றி தெரிந்த 6 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளி தமிழ்செல்வனை கைது செய்தனர். இதில் சிறப்பாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பாபுராஜேந்திரபோஸ், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
Average Rating