பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும், EPDP டக்ளஸ் தேவானந்தா..!!
நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் எனது தனிநபர் பிரேரணையில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறேன் என ஈபிடிபி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிரிப்பொன்றை உதிர்த்த அவர், யார் எல்லாளன் என இப்போது கூறுவது தமது பிரேரணையை பாதிக்கும் எனவும் பிரேரணை நிறைவேறிய பின்னர் பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்(10) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
1983 ஆம் ஆண்டு கலவரம் உள்ளடங்கலாக இறுதிப் போர் வரையிலான காலப்பகுதிகளில் உயிரிழந்த உறவுகளை ஞாபகப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கான சமயக் கடமைகளைச் செய்வதற்கும் பொதுவான தினம் ஒன்றை பிரகடனம் செய்யவேண்டும் என்பதுடன் குறித்த பிரதேசத்தைப் புனித பிரதேசமாக்கி அங்கு நினைவுத் தூபி ஒன்றையும் அமைக்கும் வகையிலான தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.
கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுடன் அவற்றை சரியாக செயற்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா கிடைக்கப்பெற்றுள்ள புதிய அரசியலமைப்பை உரிய முறையில் தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் புதிய அரசு புதியதொரு வாய்ப்பினை உருவாக்கியுள்ள நிலையில் இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாக செயற்படுத்த பொதுவானதொரு இணக்கப்பாடு எட்டப்படவேண்டும். அது கலந்துரையாடல்களுக்கு ஊடாகத்தான் முன்னெடுக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
புதிய அரசியல் பேரவையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர் கொண்ட செயற்பாட்டுக்குழுவில் நானும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில்இ கடந்த காலங்களில் வெளியில் இருந்துகொண்டு பிரச்சினைகளை கையாண்டுவந்த நிலையில் தற்போது உள்ளிருந்துகொண்டு அவற்றைச் செயற்படுத்தவுள்ளேன்.
தமிழ்க்கட்சிகளின் கூட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையுடனும் பேசுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இக்கூட்டின் நோக்கம் என்னவெனில் அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகளை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக எமது மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க முடியும் என்பதேயாகும். அத்தோடு சிறைக்கைதிகள் விடுவிப்புஇ காணாமல் போனோர் விவகாரம் குறித்து அக்கறை செலுத்துதல் நில மீட்புஇ மீள்குடியேற்றம் குறித்தும் பொது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒன்றுபட்டு குரலெழுப்பி செயலாற்றுவதே இந்தக் கூட்டு முயற்சியின் இலக்காகும்.
65000 வீடமைப்புத்திட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ள போதிலும் இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த அரசைக் கொண்டுவந்தவர்கள் தாமென கூறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசி மாற்றம் செய்திருக்க முடியும். ஆனால் அரசியல் பலமுள்ள அவர்களால் இது தொடர்பில் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு எமது கட்சியின் கொள்கைகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் கூறியிருந்த நிலையில் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இதேபோன்றுதான் ஐக்கிய தேசிய முன்னணியிடமிருந்தும் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனுடனும் நாம் குறித்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு விடயம் தொடர்பாக சகல தரப்பினருடனும் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் இது விடயத்தில் எதையும் தற்போது எதிர்வு கூறமுடியாது.
அத்துடன் சம்பூர் அனல்மின் நிலையம் மட்டுமன்றி இந்திய மீனவர்களின் பிரச்சினை குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்காதது ஏன் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்- அவர்களது குடும்பங்கள் இந்தியாவில் வசிக்கின்றமையே பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா நாம் மட்டுமே மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் நாம் குரல் கொடுப்பது இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
எமது மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை புனரமைப்பு செய்வதனூடாக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது யாழ் மாவட்ட மக்களுக்கும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
நெடுந்தீவில் ஐம்பது மில்லியன் நிதியில் குடிநீர்த்திட்டத்தை செயற்படுத்தி அது தற்போது மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வருகின்றது. அந்தவகையில் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்தினூடாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம் என்றும் தெரிவித்திருந்தார்.
Average Rating