“பகவான்” என்னை கவர்ந்துவிட்டார்: பெண் டாக்டர் “தில்’ பேட்டி * போலி சாமியார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!
“இரண்டு பெண்களை மணந்திருந்தாலும், என்னை கவர்ந்தவர் அவர் தான். அவரை விரும்பி மணந்து கொண்டேன். இதில் எந்த வசியமோ, மந்திரமோ இல்லை. தொடர்ந்து அவருடன் வாழ்வேன்,” என்று போலி சாமியார் விவகாரத்தில் சிக்கியுள்ள பெண் டாக்டர் கூறினார். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் போஜராஜ்; இவரது மகள் திவ்யா (24) ஓமியோபதி மருத்துவம் படித்து வருகிறார். சென்னையை அடுத்துள்ள உள்ளகரம், பாகீரதி நகரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி(48). இவர், அப்பகுதியில் மதுரைவீரன் கோவில் அமைத்து, நள்ளிரவில் பெண்களுக்கு குறி சொல்லி வந்தார். ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்த சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமத்திற்கு, போஜராஜ், குடும்பத்தோடு அடிக்கடி சென்று வந்தார். அவரது மகள் திவ்யாவை மூன்றாவது மனைவியாக பழனிச்சாமி திருமணம் செய்து கொண்டார். திவ்யாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து ஜெ.ஜெ., நகர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையறிந்த போலி சாமியார் பழனிச்சாமி, திவ்யாவுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று பகல் 11.30 மணிக்கு திவ்யா மட்டும் உள்ளகரத்தில் உள்ள போலி சாமியாரின் ஆசிரமத்திற்கு வந்தார். இதையறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு குவிந்தனர். திவ்யாவிடம் வாக்குவாதம் செய்தனர். திவ்யா வந்துள்ள தகவல் கிடைத்ததும் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் ஜெகபர் ஷாலி, இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், வைரவன், சகாதேவன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர்.
நடந்த சம்பவங்கள் குறித்து திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: சாமியார் பழனிச்சாமியைப் பற்றியும், ஆசிரமத்தை பற்றியும் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை. சாமியார் குறி சொல்லும் அறையிலோ, வேறு எங்குமோ சுரங்க அறைகள் இல்லை. பாதாள அறையும் கிடையாது. சாமியாரின் ஆன்மிகப் பணிகள் என்னைக் கவர்ந்தன. அவர் பகவான்; நானே விரும்பி அவரை திருமணம் செய்து கொண்டேன்.
அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருப்பது எனக்கு தெரியும். குழந்தைகள் உள்ளதும் தெரியும். அவர் எந்த பெண்ணின் கற்பையும் சூறையாடியது இல்லை. அவரது இரண்டு மனைவிகளுடன் பழகியிருக்கிறேன். சாமியாரின் முதல் மனைவியிடம் சம்மதம் வாங்கிய பின்னர் தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணம் முடிந்ததும் நாங்கள் தலைமறைவாகவில்லை.
ஆன்மிக சுற்றுலாவாக ரிஷிகேஷ் செல்ல முடிவு செய்து, புறப்பட்டோம். முதலில் டில்லி சென்றோம். அப்போது தான் ஆசிரமம் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதை தெரிந்து கொண்டோம். இதைத் தொடர்ந்து ரிஷிகேஷ் பயணத்தை ரத்து செய்து விட்டு நேற்றிரவு (நேற்று முன்தினம்) 9.30 மணிக்கு சென்னை திரும்பினோம்.
ஆசிரமம் தொடர்பாக வெளிவந்த செய்திகளால் சாமியாரின் மனது புண்பட்டு விட்டது. மன நிம்மதிக்காக அவர் தென்மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுள்ளார். அடுத்த இரண்டு தினங்களில் அவர் திரும்புவார். அவர் புறப்பட்டுச் சென்றதும், மாடம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தேன். இரவு அங்கு தங்கியிருந்தேன். தற்போது ஆசிரமத்திற்கு வந்துள்ளேன். இனிமேல் இங்கு தான் இருப்பேன். சாமியாரை பிடிக்காதவர்கள், அவர் மீது அவதுõறு செய்து வருகின்றனர். அவற்றுக்கெல்லாம் இங்கு இருந்து பதிலடி கொடுப்பேன்.
நான் இங்கு வந்ததில் இருந்து அக்கம் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தகராறு செய்கின்றனர். அவர்கள் என்னை தாக்குவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு தரவேண்டும். சாமியாரை விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இதில் வசியமோ, மந்திரமோ இல்லை.
நான் தொடர்ந்து அவருடன் தான் வாழ்வேன். என்னை அவர் கடத்திச் செல்லவில்லை. இதை பெற்றோருக்கு பலமுறை சொல்லி விட்டேன். எனது வாழ்க்கையை நானே முடிவு செய்து கொண்டேன். இது தொடர்பாக விரிவாக எழுதி போலீஸ் கமிஷனரை சந்திக்க இருக்கிறேன்.இவ்வாறு திவ்யா கூறினார்.
திவ்யா, ஆசிரமத்திற்கு திரும்பியுள்ளதை அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து, அவரையும், ஆசிரமத்தையும் பார்த்துச் சென்றனர். போலி சாமியாரின் லீலைகள் குறித்து பலர் விமர்சனம் செய்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பட்டா நிலத்தில் கட்டப்பட்ட கோவில் : உள்ளகரத்தில் அமைந்துள்ள போலி சாமியார் பழனிச்சாமியின் கோவில் மற்றும் ஆசிரமம் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா, அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதா? என்பதை அறிய, நில அளவை மேற்கொள்ளப்பட்டது. மடிப்பாக்கம் வி.ஏ.ஓ., தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் பலர், ஆசிரமத்தின் நிலத்தை அளந்து பார்த்தனர். 11 சென்ட் இடத்தில் ஆசிரமம் மற்றும் கோவில் அமைந்துள்ளது. அவை பட்டா நிலங்கள் தான் என தெரிய வந்துள்ளது. கோவில் மற்றும் ஆசிரமம் கட்டப்பட்டுள்ள நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாதது கண்டறியப்பட்டுள்ளது என்று வருவாய் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
“குடித்து விட்டு குறி சொல்வார்’ திவ்யாவின் “திடுக்’ தகவல் : திவ்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. “பழனிச்சாமி நல்லவர். அவர் ஆன்மிகப் பணிகளை மட்டுமே செய்து வந்தார்’ என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வந்தார். “அப்படின்னா பிராந்தி, பீர் பாட்டிலுங்க எப்படி வந்துச்சு?’ என போலீசார் மடக்கினர். இந்த கேள்வி கேட்டதும், திவ்யா முழித்தார்.
பிறகு மழுப்பலாக, “சாமியார் பூஜை நடத்திவிட்டு, பக்தர்களுக்கு குறி சொல்லுவார். குறி சொல்லுவதற்கு முன் மது அருந்துவார். அதன் பின்னரே குறி சொல்ல துவங்குவார். நான் அவருடன் பல நாட்கள் இருந்திருக்கிறேன். இது மட்டும் தான் தெரியும். சாமியாரின் தனிப்பட்ட மற்ற பழக்க வழக்கங்கள் குறித்து எனக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால், கண்டிப்பாக சுரங்க அறை எதுவும் இல்லை. ராத்திரியில் தான் அவர் குறி சொல்வார். அதற்காக மட்டுமே பெண்கள் இங்கு வந்து செல்வர். மற்றபடி அவர் எந்த தப்பும் செய்தது கிடையாது’ என்றார் திவ்யா.
மகாலிங்கமலை அருவியில் பெண் பக்தையுடன் குளியல் : திவ்யா ஆசிரமத்துக்கு வரும் போதெல்லாம், போலி சாமியார் அவரை பல இடங்களில் “கிள்ளி’ ஆசி வழங்குவார். இந்த “கிள்ளலில்’ உருகிய திவ்யா, சாமியாரின் தீவிர சிஷ்யையானார். இது போன்று பல பெண்களிடம் அவர் சில்மிஷம் செய்ததாக போலீசாருக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அமாவாசை வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாலிங்கமலைக்கு சாமியார் சென்று விடுவார்.
அங்கு, சித்தர்கள் தங்குவதற்காக குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும். குடிலில் சாமியார் தங்கும் போது இரவில் கொசுவை விரட்டுவதாக கூறி கஞ்சா அடித்து “குபு குபு’வென புகைவிடுவது வழக்கம். அங்குள்ள அருவியில் குளிக்கும் போது, தன்னுடன் சில பெண் பக்தர்களையும் சாமியார் அடிக்கடி அழைத்து வந்துள்ளார். அருவியில் நீண்ட நேரம் பெண் பக்தைகளோடு சேர்ந்து குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இதுபோல, பவுர்ணமிக்கு கொல்லிமலைக்குச் சென்று விடுவார். அப்போதும், சில பெண்களை அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. ஆசிரமத்தில் குறி சொல்லும் போது சில நிமிடங்களில் ஐந்து பாட்டில் முதல் ஏழு பாட்டில்கள் வரை “பீர்’ குடித்து விட்டுத்தான் “குறி’ சொல்வார். ஆசிரமத்தில் மாதத்தின் முதல் நாளில் உடும்பு அறுத்து பலி கொடுப்பார் என விசாரணையில் தெரிந்தது.